பேசுங்கள்!! (மருத்துவம்)
மது…. மயக்கம்… என்ன?: டாக்டர் ஷாம்
போருக்குத் தங்கள் குழந்தையை அனுப்பியது போல பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் அடைகின்றன, குழந்தை குடிப்பதை அறியும் குடும்பங்கள்!
பெற்றோரோடு நெருக்கமாக உணரும் குழந்தைகள் குடிப்பழக்கத்துக்குள் நுழைவதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு. மற்ற மனநலப் பிரச்னைகளைப் போலவே, குழந்தைகளின் மதுப்பழக்கத்தைத் தடுக்கவும் பெற்றோரின் ஆதரவே அவசியம். பெற்றோருக்கும் டீன் ஏஜ் குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பின் வலுவைப் பொருத்தே, சகல பிரச்னைகளும் அமைகின்றன. ஒருவேளை அவர்களுக்குள் மிகுந்த இடைவெளி இருக்குமெனில், மிக எளிதாக குடிப்பழக்கத்துக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்படக்கூடும்.
குழந்தைகளோடு ஏன் மது பற்றிப் பேச வேண்டும்?
குடிக்கிற குழந்தையோ, குடிக்காத குழந்தையோ – இன்றைய சமூகச் சூழலில் மது பற்றி அவர்களிடம் பேசுவதை தவிர்க்கவே முடியாது. ஏன் இது பற்றி பேச வேண்டும் என்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
உங்கள் குழந்தை மது அருந்துவது நல்லதல்ல.
உங்கள் குழந்தை சுயமதிப்புடன் வாழவேண்டும்.
குழந்தைகள் குடிப்பது சட்டப்படியும் தவறு.
இளம்வயதில் குடிப்பது மிகமிக ஆபத்தானது.
இவை மட்டுமல்ல… குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மது அருந்துபவராக இருந்தாலும், அதன் தாக்கம் குழந்தையின் மீது ஏதோ ஒரு விதத்தில் படியும்.
உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்…
டீன் ஏஜ் அல்லது கல்லூரி செல்லும் குழந்தைகளிடம் வெளிப்படையாக அன்பை வெளிப்படுத்துவது என்பது பல பெற்றோர்களுக்குத் தயக்கமான, சிக்கலான செயலாகவே இருக்கும். ஆனால், நம் குழந்தைக்கு எத்தனை வயதானாலும் நம் குழந்தைதானே? அதனால் அன்பைப் பகிர்வதில் வெட்கம் வேண்டாம்.தினமும் ஒரு மணி நேரமாவது அவர்களோடு நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரம் முழுக்க முழுக்க குழந்தைக்காகச் செலவிடப்பட வேண்டும். வேறு எந்த கவன ஈர்ப்பும் இருக்கக்கூடாது. இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை.
உதாரணமாக… வாக்கிங் அழைத்துச் செல்லலாம்… பைக் ரைடு போகலாம்… சேர்ந்து சமைக்கலாம்… டின்னருக்கு வெளியே அழைத்துச் செல்லலாம். குழந்தையோடு நேரம் செலவழிக்கும்போது, மொபைல் போன், டி.வி. போன்றவற்றைத் தவிர்ப்பது முக்கியம்.இந்தச் செயல்பாடுகள், நீங்கள் எந்த அளவு அவர்களை உங்கள் வாழ்வின் மையப்புள்ளியாகக் கருதுகிறீர்கள்
என்பதை அவர்களுக்கும் புரிய வைக்கும்.
மனக்கோடு போடுங்கள்…
குழந்தையின் நடவடிக்கைகளுக்கு ஒரு மனக்கோடு அவசியம். ஆனால், அது அதீத எதிர்பார்ப்பாகவோ, யதார்த்தத்துக்குப் புறம்பானதாகவோ இருக்க வேண்டாம். அதீத செல்லமும் ஆகாது… அநாவசியக் கண்டிப்பும் ஒவ்வாது. அங்கீகாரம் அவசியம் குழந்தையின் முயற்சிகளையும் திறமைகளையும் மனம் திறந்து பாராட்டுங்கள். தேவையற்ற விமர்சனமும், புண்படுத்தக்கூடிய பேச்சும் வேண்டாம். வளர்வதை ஏற்றுக்கொள்ளுங்கள் தேவையான விஷயங்களில் பெற்றோரின் வழிகாட்டுதல் தேவை.
அதே போல, அவர்கள் வளர்வதையும், அவர்களுக்கும் சுதந்திரமும் பிரைவசியும் உண்டு என்பதையும் தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபிள்ளையாகவே நடத்தப்படுவதை குழந்தைகளின் மனம் விரும்புவதில்லை என்பதையும் நினைவில் கொள்க.
குழந்தையிடம் எப்படிப் பேசுவது?
வெளிப்படையான நம்பிக்கையான பேச்சு பல பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரும். இது மதுத் தடுப்புக்கும் பொருந்தும். உங்களோடு பேசுவதில் எவ்விதத் தயக்கத்தையும் குழந்தை உணராத போது, இவ்விஷயம் இன்னும் எளிதாகும். இது குறித்து நல்ல முடிவெடுக்கவும் வசதியாக இருக்கும்.
காது கொடுத்து கேளுங்கள்…
குழந்தை ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு விளக்கவோ, கற்றுத்தரவோ வரும்போது, உற்சாகமாகக் கேளுங்கள்… கற்றுக் கொள்ளுங்கள். இதுபோன்ற சூழல்கள் உருவானால்தான், எந்த விஷயம் பற்றியும் நம் அம்மா-அப்பாவிடம் பேசலாம் என்கிற நம்பிக்கை பிறக்கும்.
திறந்த மனம் வேண்டும்…
ஒரு விஷயம் குறித்துப் பேசுகையில், இது பற்றி குழந்தை என்ன நினைக்கிறது என்பதையும் மறக்காமல் கேளுங்கள். பேச்சு என்பது ஒருவழிப்பாதை அல்ல.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்…
நீங்கள் விரும்பாத ஒரு விஷயத்தை அறிய நேர்ந்தாலும், உடனே கோபப்பட்டு கத்தி தீர்க்க வேண்டாம். கொஞ்சம் பெருமூச்சு விட்டு, ரிலாக்ஸ் செய்துகொண்டு, ஆக்கப்பூர்வமாக அந்தப் பிரச்னையை ஆராயுங்கள்.
இரு தரப்புக்கும் வெற்றி
எப்படியாவது நம் தரப்பை நிறுவி விட வேண்டும் என உரைகள் நிகழ்த்த வேண்டாம். அப்படிச் செய்தால், ‘ரொம்ப மொக்கை போடாதீங்க’ என்று சொல்லி, குழந்தை கவனத்தைத் திருப்பி விடும். மாறாக, அவர்கள் தரப்பு விஷயங்களையும் கருத்தில் கொண்டு, பொறுமையாகக் கேட்டு, பதில் அளித்து, இருதரப்புக்குமே ‘வின் – வின்’ என்ற சூழல் ஏற்படும்படி செய்ய வேண்டும். இனி மது பற்றி அவர்களிடம் பேசலாம்… ஆனால், எப்படித் தொடங்குவது? எப்படித் தொடர்வது? அடுத்த இதழில் பேசுவோம்!
அதிர்ச்சி டேட்டா
இந்தியாவில் போதை தற்கொலைகள் 2014ல் போதைப் பழக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள்: 3,647 பேர்.
கடந்த மூன்றாண்டுகளில் (2012-2014) தற்கொலை செய்துகொண்ட போதை அடிமைகள்: 12,246 பேர்.
Average Rating