அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)!! (மருத்துவம்)
தடுப்பு மற்றும் சிகிச்சை அறிவுத்திறன் குறைபாடு ஒருவருக்கு வராமல் காக்கும் முயற்சி மற்றும் அறிவுத்திறன் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சியை மூன்று கட்டமாக வகைப்படுத்தலாம்.
1. முதல் கட்ட நடவடிக்கை (வரும் முன் காப்பது…)
குடும்பத்தில், ஏற்கெனவே மரபணு குறைபாடுகள் பிரச்னை இருப்பின், குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கும் பெற்றோர்/கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், மரபணு ஆலோசனைக்கு (Genetic Counseling) செல்வது அவசியம். கர்ப்பத்தின் ஆரம்ப நிலையிலேயே, சில மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கருவிற்கு மரபணு பிரச்னை இருக்கலாம் என சந்தேகம் இருந்தால், அது குறித்து என்ன முடிவு எடுக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்படும்.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, தாய், தன் சேயின் நலன் கருதி தன் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டியது மிக அவசியம். தகுந்த, சத்து மாத்திரைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மற்றும் மது அருந்தாமல் இருப்பது போன்ற விஷயங்களைக் கடைப்பிடித்தால் அறிவுத்திறன் குறைபாடுடன் குழந்தைப் பிறக்கும் ஆபத்து குறையும்.
நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது முக்கியம். ஏற்கெனவே நீரிழிவு மற்றும் பினைல் கீட்டோனூரியா (Phenylketonuria) உள்ள தாய் கர்ப்பத்தின் போது சரியான உணவு பழக்கத்தைக் (Strict diet) கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தைக்குப் பாதகம் விளைவதைத் தடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் சரியாக பார்த்துக் கொள்வது மூலம், குறைப்பிரசவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய அறிவுத்திறன் குறைபாட்டையும் தடுக்க முடியும். குழந்தை பிறந்தவுடன் தகுந்த தடுப்பூசிகள் போடுவது மூலம் மூளைக்காய்ச்சல், அம்மை போன்ற மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கலாம்.
2. இரண்டாம் கட்ட நடவடிக்கை (தகுந்த சிகிச்சையின் மூலமாக பாதிக்கப்பட்டவரை, நோயின் கடும் விளைவிலிருந்து காப்பது…)
சில நேரங்களில் அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தும் கோளாறுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணம்… பினைல் கீட்டோனூரியா பாதித்த குழந்தைகளை பிறந்தவுடனே சில மருத்துவ சோதனை மூலம் கண்டுபிடித்தால், தகுந்த உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் மூளைக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும்.
3. மூன்றாம் கட்ட நடவடிக்கை (பாதிக்கப்பட்டவரை அவரவர் ஆற்றலுக்கேற்ப நிறைவாக வாழ வைக்க உதவும் முயற்சி…)
அறிவுத்திறன் குறைபாட்டை பூரணமாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், குறைபாட்டின் தன்மைக்கேற்ப, அவரவர் முழுத் திறமையை உபயோகித்து செயல்பட வைப்பதற்கு சிறப்புப் பயிற்சி (Special education) பெருமளவு உதவும். இதன் மூலம் டவுன்ஸ் சிண்ட்ரோம், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் பலரும் நன்மை அடையும் வாய்ப்புகள் அதிகம்.
ஆரம்ப கால சிகிச்சை
ஏழ்மை மிகுந்த சமுதாயத்தில் வாழும் குழந்தைகளுக்கு லேசான அறிவுத்திறன் குறைபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. அறிவுத்திறன் குறைபாடு ஆபத்திலிருக்கும் இவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே, இவர்களின் அறிவுத்திறனைக் கூட்டும் பயிற்சிகள் கொடுப்பதன் மூலமாக, பெரியவர்களான பின், மற்றவர் போல இயல்பாக, பள்ளியில் சிறப்பாகக் கற்று நல்ல வேலையும் செய்ய முடியும்.
குழந்தையின் தேவைக்கேற்ற, பேச்சுப் பயிற்சி (Speech therapy), வேலைப் பயிற்சி (Occupational therapy), உடற்பயிற்சி, குடும்ப ஆலோசனை, தகுந்த ஊட்டச்சத்து போன்ற ஆரம்ப கால சிகிச்சை மூலம் குழந்தையின் அறிவித்திறனைப் பேண முடியும்.
சிறப்புக் கல்வி
அறிவுத்திறன் குறைபாடுள்ளவர்கள், அதன் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு விஷயங்களைக் கற்க முடியும். குறிப்பாக அதிகம் காணப்படும் லேசான அறிவுத் திறன் குறைபாடு உள்ளவர்கள் கற்கவே முடியாது எனக் கூற முடியாது. அவர்களால் நிச்சயம் புது விஷயங்களையும் திறன்களையும் கற்க முடியும். சராசரி மனிதர்களைக் காட்டிலும் சற்று மெதுவாக கற்க முடியும். பாதிக்கப்பட்டவரின் நிறை குறை அறிந்து, அவரவரின் தேவைக்கேற்ப பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, சிறப்புப் பள்ளியில் (Special school) பயிற்சி அளிக்கப்படுகிறது.
சரியான உதவி, ஆதரவு மற்றும் சிறப்புக் கல்வி மூலம் இவர்கள் யாரையும் சாராமல் தனித்து, வெற்றிகரமாக வாழவும் முடியும். அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் அவரவரின் அறிவுத்திறனை (பலம், பலவீனம் அறிந்து) முழுமையாக பயன்படுத்த சரியாக வழிகாட்டினால், அவர்களால் ஓரளவு நிறைவான வாழ்வை வாழ முடியும்.
வேலை மற்றும் சமூகத்திறன் பயிற்சி
வேலை செய்யவும், அதை தக்க வைத்துக் கொள்வதற்கும் தேவையான வாழ்வியல் திறன் (Life Skills) மற்றும் சமூகத்திறன் பயிற்சியும் மிகவும் அவசியம். உதாரணம்… வேலையின் போது ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது மற்றும் கோபத்தை எப்படி சமாளித்தல் போன்றவை.
தங்களின் பாலினத்தூண்டுதல் குறித்து எது சரி, தவறு என இவர்களால் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்துடன் ஒன்றி வாழும் போது, இவர்களின் அறியாமையால், பண ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அலைக்கழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இவற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாப்பது என்பது குறித்த பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை
அறிவுத்திறன் குறைபாடு உள்ள பெரும்பாலானவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் மற்றும் உணர்ச்சி/ நடத்தை பிரச்னைகளும் அதிகம் பாதித்து இருக்கும். அதற்கும் சேர்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இக்குழந்தைகளின் எதிர்காலம் நல்லவிதத்தில் அமைவதற்கு பெற்றோரின் பங்கும் மிகவும் அவசியம்.
பெற்றோர் செய்ய வேண்டியவை அறிவுத்திறன் குறைபாட்டைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவும். அப்போதுதான் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளைப் புரிந்து அவா்களுக்கு உதவ முடியும்.
1. குழந்தை சுதந்திரமாக இருக்க ஊக்குவியுங்கள். புது விஷயங்களை உங்கள் குழந்தை கற்கும் போது, சரியாக வழிகாட்டி உற்சாகப்படுத்துங்கள். இது அவர்கள் திறமையை வளர்க்க உதவும். அவர்கள், தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள உதவியாக இருங்கள். உதாரணம்… குளிக்க, உண்ண, உடை உடுத்த…
2. வேறு பல வகுப்புகளில் உங்கள் குழந்தையை சேர்த்து விடுங்கள் (ஓவிய வகுப்பு, ஏதாவது விளையாட்டு). இது அவர்களின் சமூகத் திறன் மற்றும் உற்சாகத்தை வளர்க்க உதவும்.
3. குழந்தையின் ஆசிரியரிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது மூலம் குழந்தையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்க முடியும். பள்ளியில் பயின்றதை வீட்டில் பழகி பார்க்க உதவலாம் (உதாரணம்… பணத்தைப் பற்றி பள்ளியில் பயின்றால், அன்றைக்கே கடைக்கு அழைத்துச் சென்று, அதன் உபயோகத்தைப் புரிய வைக்கலாம்).
4. அறிவுத்திறன் குறைபாடுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோரைத் தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாகவும் ஆதரவாகவும் இருக்கும்.
5. குழந்தையின் திறமை மற்றும் ஆர்வத்துக்கேற்ப, அவர்கள் மேலே என்ன படிக்கலாம் மற்றும் என்ன வேலை செய்யலாம் என தேர்ந்தெடுக்க நல்ல வழிகாட்டியாக இருங்கள்.
6. பொறுமையாகவும் நம்பிக்கையோடும் இருப்பது மிகவும் அவசியம். பெற்றோர் கவலையோ, கோபமோ பட்டால், அது குழந்தையின் தன்னம்பிக்கையையே பாதிக்கும்.
7. குழந்தையின் வயது, திறனுக்கேற்ப, சிறுசிறு வேலைகளைச் செய்யச் செய்யலாம். பெரிய வேலையாக இருந்தால், அதை பகுதியாக பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக, பொறுமையாக அவர்களை தயார் செய்யலாம். செய்ய வேண்டிய வேலையை எப்படி செய்ய வேண்டும் என அவர்களுக்கு செய்து காட்டி, தேவைப்படும்போது உதவலாம்.
8. எல்லாவற்றுக்கும் மேலாக… உங்கள் குழந்தை உங்களின் அரிய பொக்கிஷம். அவர்களை கடவுளின் குழந்தை என பாவித்து சொத்து போல பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமைதானே!
அதிர்ச்சி மற்றும் மன உளைச்சல் விளைவிக்கும் சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகள் (Trauma and Stressor-related disorders) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.
கமலா ஏன் கவனிப்பதில்லை?
கமலாவை 3 வயதில் பள்ளியில் சேர்த்தனர். அப்போது அவளுக்கு சில வார்த்தைகள் மட்டுமே பேசத் தெரிந்திருந்தது. சக மாணவர்களைப் போல, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாததும் தெரிய வந்தது. அவளால் குறைந்த நேரம் கூட எதைக் குறித்தும் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, தாமதமானாலும், நன்றாக புரிந்துகொண்டாள்.
எவ்வளவு முயற்சித்தும், அவளால் ஓரளவுக்கு மேல் கற்க இயலவில்லை. அவள் வளர வளர அவளைக் குறித்த கவலையும் வளர்ந்தது. அவள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு போக வேண்டும் என்ற பிரச்னையும் இப்போது சேர்ந்து கொண்டது. பொதுவாக யார் என்ன கேட்டாலும் கமலாவுக்கு ‘முடியாது’ என்றே கூற தெரியாது. இதனாலேயே, அவளில் இந்த வெகுளித்தனத்தை, அவளை சுற்றி இருப்பவர் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.
கமலாவின் இந்த நிலை சுற்றத்தாருக்கு தெரிந்தால் அவமானம் என கருதி அவளை எங்குமே அழைத்துச் செல்வதில்லை. இதனால், கமலாவுக்கு எப்படி மற்றவரிடம் பழக வேண்டுமென சுத்தமாகத் தெரியவில்லை. ஆலோசனைக்கு வந்த கமலாவின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவளின் அறிவுத்திறன் குறைபாடு பிரச்னை பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னே கமலாவிடம் தங்கள் அணுகுமுறையை மாற்றி, பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர்.
வீட்டிலும் அவளின் தனித்துவத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவளின் ஆர்வத்தைக் கண்டுபிடித்து, சிறுசிறு வெற்றிகளை ஊக்குவித்து, முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் பொறுமையும் நம்பிக்கையும் வீண்போகாவண்ணம், கமலா இப்போது தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி ஒரு வேலையில் நிலைத்து, மன நிறைவோடு வாழ்கிறாள்!
Average Rating