குழந்தைகளை விட்டு பிடியுங்கள்…!! (மருத்துவம்)
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும்’என்று நினைக்கிறார்களே தவிர, அவனை நல்ல மனிதனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சில பெற்றோர், குழந்தையின் ஒவ்வொரு அடியையும் தங்கள் விருப்பப்படியே நிகழ்த்துவார்கள். சிலரோ, சுதந்திரம் என்ற பெயரில் கண்காணிப்பை விட்டு விடுவார்கள். இந்த இரண்டு அணுகு முறைகளுமே தவறு. அளவான சுதந்திரமும், அவசியமான கண்டிப்பும் இணையும் போது தான், குழந்தையை நல்ல விதமாக வளர்த்தெடுக்க முடியும்.
ஒரு குழந்தையின் ஆர்வத்தையும், திறனையும் கவனிக்காமல், அதில் தொடர்ந்து ஊக்குவிக்காமல்… டாக்டர், இன்ஜினீயர் என்று பொருளீட்டுவதை முன்னிலைப்படுத்தி தான் அதன் எதிர்காலத்தை தயார் செய்ய நினைக்கிறார்கள் பல பெற்றோர்கள்.
இதுகுறித்து மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில்,‘‘சமீபத்தில் என்னிடம் ஒரு மூன்று வயதுக் குழந்தையை அழைத்து வந்தார்கள். அந்தக் குழந்தை எதற்கெடுத்தாலும் பொய் சொல்வதாகச் சொன்னார்கள். அதனிடம் தனியாகப் பேசிய போது, பொய் அதன் இயல்பாகி விட்டது புரிந்தது.
அதற்குக் காரணம் தேடியபோது, அதன் குடும்பமே விடையாக இருந்தது. வீட்டுப் பெரியவர்கள் குழந்தை முன் பொய் பேசியது ஒரு காரணம்.‘தண்ணியைக் கீழே கொட்டினியா?’என்ற அதட்டலுக்கு,‘நான் இல்லம்மா.அப்பா கொத்தித்தாங்க’என்று அது மழலையில் பொய் சொன்ன போது,‘எவ்ளோ சாமர்த்தியமா பேசுது பாருங்க!’என்று அதன் பொய்யை வீடே கொண்டாட, அதுக்குப் பொய் பிடித்துப் போய்விட்டது. எனவே, குழந்தைகளின் தவறுகளை ஒரு போதும் ரசிக்காதீர்கள்; கண்டியுங்கள்’’என்றார்.
குழந்தைகளின் முதல் ரோல் மாடல் பெற்றோர்கள்தான். எனவே, அவர்கள் முன் நல்ல பெற்றோராக, நல்ல மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள்.‘குழந்தைகளுக்கு முன் பேசக்கூடாதவற்றை பேசாதீர்கள். செய்யக்கூடாதவற்றை செய்யாதீர்கள். குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். பென்சில், பாக்ஸ், ஷூ என்று அதற்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிகொடுக்கும் போதும், அந்தப் பொருளின் விலை, அதை உருவாக்கத் தேவைப்படும் உழைப்பு என்று அதன் மதிப்பை உணர வையுங்கள்.
இன்றைய குழந்தைகளிடம் தலைமுறை இடைவெளி காரணமாக, ஒரு அதிகப் பிரசங்கித்தனம் இருக்கிறது. அதனால், நேரம் ஒதுக்கி, குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் சுதந்திரமாக விளையாட அனுமதியுங்கள். கல், மண், செடி என்று இயற்கையின் மடியில் இளைப்பாறவிடுங்கள்.‘அழுக்காயிடும், இன்ஃபெக்ஷனாயிடும்’என்று பொத்திப் பொத்தி வளர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி எங்கிருந்து கிடைக்கும்? நாளை உங்கள் குழந்தை இந்த உலகத்தை, இந்த மண்ணை, இந்தக்காற்றை, இந்த தூசை எல்லாம் தான் சந்திக்க விருக்கிறது, இதையெல்லாம் தாண்டி தான் சாதிக்கவிருக்கிறது… மறவாதீர்கள்.
கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியாகவாழும் கலையை உங்கள் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளின் அடம், பிடிவாதத்தை முளையிலேயே கிள்ளுங்கள். படிப்பு என்ற பெயரில் குழந்தைகளைச் சித்ரவதை செய்யாதீர்கள். நல்லொழுக்கத்தின் ஒரு பகுதியாகதான் படிப்பு இருக்க வேண்டுமே தவிர, படிப்புடன் ஒரு பகுதியாக நல்லொழுக்கத்தை பார்க்காதீர்கள்.
குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கும், திறமைக்கும், தேடலுக்கும், நல்லொழுக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதோடு படிப்பையும் கற்றுத் தரும் பள்ளியைத் தேர்ந்தெடுங்கள். குழந்தையைப் பற்றி,‘சட்டையை கழட்டி அங்கே போடுறான்’,‘பேக்கை தூக்கி வீசுறான்’என்று புகார் சொல்லாமல்… கொஞ்சம் அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்களின் நல்ல எதிர்காலத்தை கைதட்டி மகிழ்ச்சியோடு ரசிக்கலாம்!
Average Rating