அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability)!! (மருத்துவம்)
அறிவுத்திறன் குறைபாடு என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் அதிகமாக காணப்படும் ஒன்று. குழந்தை பிறந்தவுடனோ, வளர் மைல்கற்களில் தாமதம் ஏற்படும் போதோ, பள்ளி செல்லும் போதோ, இது பொதுவாக அறியப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து, வளர்ந்து வரும் போதே, பல்வேறு திறன்களான பேச்சுத்திறன், சமூகத்திறன், இயக்கத்திறன், அறிவுத்திறன் போன்றவற்றில் தன் வயதொத்த குழந்தைகளைவிட பின்தங்கி காணப்படுவார்கள்.
உதாரணம்: 10 வயதாகும் போதுகூட5 வயது குழந்தை போல பேசுவது. வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கும் இக்குறைபாடு, முன்பெல்லாம் ‘மூளை வளர்ச்சி குறைபாடு’ (Mental Retardation) என அழைக்கப்பட்டது. இப்போது, குழந்தைகளின் நலன் கருதி,‘அறிவுத்திறன் குறைபாடு’ (Intellectual Disability) என பெயர் மாற்றி அழைக்கப் படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மூளை சரியாக வளர்ச்சி அடையாமலோ, இயல்பாக செயல்படாமலோ போய்விடும்.
குழந்தையின் அறிவுத்திறன் (Intelligence), வாழத் தேவையான திறன்கள் மற்றும் செயல்பாடுகள் (Adaptive functioning) இரண்டுமே பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்தான், ஒருவருக்கு அறிவுத்திறன் குறைபாடு என கூறப்படுகிறது. பகுத்தறிதல், திட்டமிடல், கற்கும் திறன், சிந்தனை, பிரச்னை தீர்க்கும் திறன், அனுபவங்கள் மூலம் கற்றல், முடிவெடுக்கும் திறன் ஆகியவையே அறிவுத்திறன் எனக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வுலகில் தனித்து, யாரையும் சாராமல் வாழத் தேவையான திறன்கள் என்பவை, ஒருவரின் பேச்சுத் திறன், சமூகத்திறன், தன்னைத் தானே பராமரித்துக் கொள்வது (குளிப்பது, ஆடையணிவது, உண்பது…) மற்றும் தினசரி நடவடிக்கைகளான கடைக்குச் செல்வது, மற்றவரிடம் பேசுவது, பேருந்தில் பயணிப்பது போன்றவற்றை பிறரின் வழிகாட்டல் இன்றி செய்வது, பள்ளியில் எல்லோரையும் போல புது விஷயத்தைக் கற்றுக் கொண்டு, அதை வாழ்வில் பயன்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியவை. இவ்வகை திறன்பாடுகளில், வயதொத்த குழந்தைகளைவிட பின்தங்கியிருந்து மேலும் அறிவுத்திறனும் குறைவாக இருந்து, குழந்தைப் பருவத்திலோ, டீன் ஏஜ் பருவத்திலோ (18 வயதுக்கு முன்) தென்பட்டால் அது அறிவுத்திறன் குறைபாடாக இருக்கலாம்.
பாதிக்கப்பட்டவரின் ஐ.க்யூ. மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் திறன்களின் குறைபாடை அடிப்படையாகக் கொண்டு, அறிவுத்திறன் குறைபாடை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. லேசான அறிவுத்திறன் குறைபாடு (50-55 முதல் 70 வரை)
2. மிதமான அறிவுத்திறன் குறைபாடு (35-40 முதல் 50-55 வரை)
3. கடுமையான அறிவுத்திறன் குறைபாடு (20-25 முதல் 35-40 வரை)
4. ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடு (20 முதல் 25 வரை)
இதில் லேசான அறிவுத்திறன் குறைபாடுதான் பரவலாகக் காணப்படுகிறது. கடுமையான/ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடுகள் பாதிப்பு சற்று அரிதுதான். குழந்தை பிறக்கும் போதே கடுமையான ஆழ்ந்த/அறிவுத்திறன் குறைபாடுகள் எளிதாக கண்டறியப்பட்டுவிடும். லேசான அறிவுத்திறன் குறைபாடானது, குழந்தை பள்ளிக்கு சென்ற பின்னரே கண்டறியப்படுகிறது. அறிவுத்திறன் குறைபாடின் தீவிரத்தைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளும் திறன்களும் வேறுபட்டிருக்கும். அவை…
1. லேசான அறிவுத்திறன் குறைபாடு
5-6ம் வகுப்பு வரை பயில முடியும். பேசுவதற்கு நாளாகும்… ஆனால், கற்றுக் கொடுத்தால் பேசத் தெரியும். தன்னைத் தானே முழுமையாக பராமரிக்க முடியும். படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம் இருக்கும். எல்லோருடனும் ஒன்றி பழகத் தெரியாது.
திருமணம்/குழந்தை வளர்க்கும் பொறுப்பு களை சமாளிக்க முடியாது. சிறப்பு கல்வித்திட்டம் மூலம் பயனடையலாம். ஆட்டிஸம், வலிப்பு நோய் அல்லது உடல் ரீதியான பாதிப்பு / ஊனம் இருக்கலாம்.
2. மிதமான அறிவுத்திறன் குறைபாடு
இரண்டாம் வகுப்பு வரை கற்க முடியும். மொழியைப் புரிந்து கொள்வதிலும், அதைப் பயன்படுத்துவதிலும் மந்தம். ஓரளவுக்குத்தான் பேச முடியும். படிப்பது, எழுதுவது, எண்ணுவது போன்றவற்றை அடிப்படை / தேவையான அளவுக்கு கற்றுக் கொள்ள முடியும். கற்கும் திறனிலும் / புரிந்து கொள்வதிலும் மந்தம். தனித்து வாழ்வது முடியாது. ஓரளவு இடங்களுக்கு போய் வர முடியும்.
3. கடுமையான அறிவுத்திறன் குறைபாடு
தனித்து வாழ்வது என்பது சாத்தியமில்லை. பலருக்கு பேச்சிலும், இயங்குவதிலும் அதிக பாதிப்பு இருக்கும். பாதுகாப்பான வாழும் சூழ்நிலை மற்றும் மருத்துவ கவனிப்பும் தேவைப்படலாம். மிக முக்கியமான 2-3 வார்த்தைகளை பயிற்றுவித்தால் புரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. உதாரணம்… ‘நில்’, ‘ஆண்’, ‘பெண்’… கவனமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பட்டறையில் வேலை பார்க்கலாம்.
4. ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடு
மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாது. பலருக்கு மூளையில் பாதிப்பு மற்றும் குறிப்பிட்ட நரம்பியல் கோளாறு இருக்கும். தனித்து வாழ முடியாது… நகரவும் கூட முடியாத நிலை… அடிப்படையான சுய தேவைகளைக் கூட கவனிக்க முடியாது.முழுவதுமாக பிறரை சார்ந்திருக்கும் நிலை… எப்போதும் மற்றவரின் உதவி மற்றும் கண்காணிப்பு அவசியம். பல்வேறு உடல் / மனநலக் கோளாறுகளும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு. மிகவும் அடிப்படையான உடல் மொழியை (Body language) மட்டும் உபயோகிக்க முடியும். அறிவுத்திறன் குறைபாடின் அறிகுறிகள் நோயின் தீவிரத்தைப் பொறுத்து வேறுபடும். ஒருவரின் தோற்றத்தை வைத்துக் கூட அறிவுத்திறன் குறைபாடு உள்ளது என சில நேரங்களில் சொல்லிவிட முடியும்.
எப்படிக் கண்டுபிடிக்கப்படுகிறது?
பொதுவாக, குழந்தை வளரும் பருவத்தில், மொத்த திறன்களான இயக்கத்திறன், சமூகத்திறன், பேச்சு/மொழித்திறன் மற்றும் அறிவுத்திறன் சம்பந்தப்பட்ட வளர் மைல் கற்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் வளர் மைல்கற்களை அடையாவிட்டால், குழந்தையை மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்வது நல்லது. குழந்தையின் இவ்வித அறிகுறிகளுக்கு வேறு காரணங்கள் (காதுகேளாமை, சில நரம்பியல் கோளாறுகள்) இருக்கிறதா என தெரிந்து கொள்வதும் முக்கியம்.
குழந்தைக்கு உடல் சார்ந்த கோளாறும் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அது மரபணு/வளர்சிதை கோளாறு காரணியினாலா என உறுதிப்படுத்த சில மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பிறகு குழந்தைக்கு சில உளவியல் பரிசோதனைகளான அறிவாற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கை திறன் மற்றும் சமூகத்திறன்களும் மதிப்பிடப்பட்டு, வயதொத்த குழந்தைகளுடன் ஒப்பிடப்படும் (IQ – Adaptive Tests). ஐ.க்யூ டெஸ்ட்டை மேற்கொள்ள குழந்தைக்கு 5-6 வயது ஆகி இருப்பது அவசியம். சில நேரங்களில் குழந்தைக்கு உடல் ரீதியான மற்றும் புலன்களில் கோளாறும் சேர்ந்து இருந்தால் ஐ.க்யூ. சோதனையை மேற்கொள்ள முடியாமலும் போய்விடலாம். அப்போது, இக்குறைபாடு, ‘குறிப்பிடப்படாத அறிவுத்திறன் குறைபாடு’ என வகைப்படுத்தப்படும்.
எல்லா சோதனைகளுக்கும் பின்னர், சராசரிக்கு குறைவான அறிவாற்றலும் (IQ<70) வாழத் தேவையான ஆற்றல்/திறன் குறைபாடு களும் இருப்பின், அது அறிவுத்திறன் குறைபாடு என மருத்துவரால் நிர்ணயிக்கப்படுகிறது. காரணி 1. மரபணு மரபணுக் கோளாறு, அசாதாரண மரபணுக்கள், மரபணு பிறழ்வு போன்றக் காரணத்தினால் அறிவுத்திறன் குறைபாடு ஏற்படலாம். எ.டு: டவுன்ஸ் சிண்ட்ரோம், ப்ரிஜைல் ‘X’ சிண்ட்ரோம் மற்றும் பிணைல்கிடோனோரியா (Phenylketonuria). 2. கர்ப்ப கால பிரச்னைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் நோய் தொற்று (தட்டம்மை, எச்.ஐ.வி.), தாயின் குடிப்பழக்கம், (எ.டு. கரு மது நோய் - Fetal Alcoholic Syndrome), சத்துப் பற்றாக்குறை போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சி யைப் பாதித்து அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தலாம். குறை மாத குழந்தை, பிரசவ வலியின் போது ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களாலும் ஏற்படலாம். 3. உடல் நலப் பிரச்னைகள் பிறந்த பின்னர், குழந்தைக்கு ஏற்படும் கக்குவான் இருமல், மூளைக் காய்ச்சல், அம்மை போன்ற நோய்களும் அறிவுத்திறன் குறைபாடை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்தின்மை, தகுந்த மருத்துவ உதவியின்மை, காரீயம் / பாதரசம் போன்ற நச்சுப் பொருள் பாதிப்பு, குறைந்த அறிவுத்திறன் மற்றும் படிக்காத பெற்றோர் போன்றவற்றாலும் ஏற்படலாம். அறிவுத்திறன் குறைபாடும் பிற பிரச்னைகளும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களின் கற்கும் திறன், பேச்சுத்திறன், சமூகத்திறன், வாழ்வியல் திறன் போன்றவை அதிகமாக பாதிக்கப்படுவதால், பிறரின் உதவியின்றி சகஜமாக வாழ்வது சிரமம். பல நேரங்களில், அறிவுத்திறன் குறைபாடுடன், வேறு பிரச்னைகளான பெருமூளை வாதம் (Cerebral Palsy), வலிப்பு நோய், பார்வைக் கோளாறு, காது கேளாமை, பேச்சு/ மொழி பிரச்னை போன்றவையும் சேர்ந்தே காணப்படும். கடுமையான மற்றும் ஆழ்ந்த அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உடல் ஊனம், ஆட்டிஸம், மனச்சோர்வு, ஆளுமை கோளாறு போன்ற பல மனநலப் பிரச்னைகளும் சேர்ந்து இருக்கும். அறிவுத்திறன் குறைபாடை எப்படி வராமல் தடுக்கலாம் மற்றும் இதற்குரிய சிகிச்சை என்னவென்பதைக் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம். பொதுவான அறிகுறிகள் 1. குப்புறப்படுத்தல், உட்காருதல், தவழுதல் மற்றும் நடப்பதில் தாமதம். 2. பேசுவதில் தாமதம் / சிரமம். 3. உடையணிவது, உண்பது போன்றவற்றை புரிந்து செய்வதில் மந்த நிலை. 4. குறைந்த ஞாபக சக்தி. 5. ஒரு செயல்பாட்டின் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாத நிலை. 6. பிரச்னையை சமாளிப்பதில் சிரமம். 7. சமுதாய விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் சிரமம். 8. அர்த்தமுள்ள சிந்தனை செய்ய இயலாமை. 9. கற்றுக் கொள்வதில் சிரமம். 10. ஆர்வமின்மை. 11. இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள இயலாமை (உதாரணம்... பேச முடியாத நிலை, தன்னைத் தானே பார்த்துக் கொள்ள இயலாமை). 12. குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும் சிறுகுழந்தையைப் போன்ற செயல்பாடுகள்... அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு பின்வரும் உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னைகளும் இருக்கும் வாய்ப்பு அதிகம். 1. ஆக்ரோஷம் (Aggression) 2. சார்பு மனப்பான்மை (Dependence) 3. சமூகத் தொடர்பிலிருந்து விலகுதல் 4. கவனத்தை எதிர்நோக்கும் நடத்தை 5. டீன் ஏஜ் போது காணப்படும் மனச்சோர்வு (Depression) 6. உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாமை 7. மந்தநிலை 8. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல் 9. பிடிவாதம் 10. தாழ்வு மனப்பான்மை 11. குறைந்த சகிப்புத்தன்மை 12. கவனம் செலுத்துவதில் சிரமம்.
Average Rating