குழந்தைகளின் மனச்சோர்வு கோளாறுகள் (Childhood Depression)!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 56 Second

தினசரி நாளிதழ்களில், பரீட்சை முடிவு தெரிந்த மாணவன் / மாணவி தற்கொலை, சக மாணவ / மாணவிகளின் கேலிக்கு ஆளான மாணவன் / மாணவி தற்கொலை, காதல் தோல்வியடைந்த மாணவன் / மாணவி தற்கொலை போன்ற செய்திகளை அடிக்கடி பார்க்கலாம். இதற்குப் பின்னே, பெருகி வரும் மனநலப் பிரச்னையான மனச்சோர்வு முக்கிய பங்கு வகிக்கக் கூடும். எல்லா வயதினருக்கும் மனச்சோர்வு ஏற்படும். குழந்தை மற்றும் டீனேஜருக்கு ஏற்படும் மனச்சோர்வு கோளாறு (Depressive Disorder) குறித்து இப்போது பார்க்கலாம்.

குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவருக்கு, 3 வகை மனச்சோர்வு கோளாறுகள் ஏற்படலாம்.

1. தீவிர மனச்சோர்வு கோளாறு (Major Depressive Disorder)
2. தொடர்ந்திருக்கும் மனச்சோர்வு கோளாறு (Persistent Depressive Disorder)
3. சீா்குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder)

1. தீவிர மனச்சோர்வு கோளாறு குழந்தைகள் வளரும் பருவத்தில், குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அவ்வப்போது சோகமாக உணர்வது இயற்கையே. பிரச்னைகள் மற்றும் தோல்விகளை சந்திக்கும் போது கவலையாகவும் கோபமாகவும் உணா்வதும் இயல்பே. நாளாக ஆக, இவ்வித எதிர்மறை உணா்வுகள் மறைந்து போய்விடும். இது எல்லோரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உணா்வுகள்தான். ஆனால், சோகம்/ மனவருத்தம்/ எரிச்சல் மனநிலை பலநாட்கள்/வாரங்கள் தொடா்ந்து நீடித்து, அன்றாட வாழ்க்கை, பள்ளி படிப்பு, நட்பு போன்றவற்றை பாதிக்கும் போது, அது மனச்சோர்வு கோளாறாக இருக்கலாம். குறிப்பாக, ஏற்கெனவே விருப்பப்பட்டு ஈடுபட்ட விஷயங்களில் பிடித்தம் இல்லாமல் போவது ஒரு முக்கிய அறிகுறி.
வேறு முக்கிய அறிகுறிகள்…

1. காரணமின்றி மிகுந்த கவலைஅடைவது
2. சிறு வேலைகளை செய்வதற்குக் கூட தெம்பில்லாமல் சோர்ந்து போவது
3. முன்பு சந்தோஷம் கொடுத்த விஷயங்களை இப்போது ரசிக்க முடியாமல் போவது
4. குடும்பம் / நண்பர்களுடன் ஒட்டாமல் தனித்திருப்பது
5. ஒருவித எரிச்சல் உணா்வுடனே இருப்பது
6. யோசிக்கவோ / கவனமோ செலுத்த முடியாமை
7. குறிப்பிடத்தக்க எடை அதிகரித்தல் / குறைதல் (குழந்தைகள் எதிர்பார்த்த அளவு எடை ஏறாமல் இருப்பது). எ.டு: ஒரு மாத காலத்தில், எடையில் 5 சதவிகிதம் வரை மாறுதல் தெரிவது)
8. சாப்பிடுவதில் மிகக்குறைந்த / அதிக ஆர்வம்
9. தூங்கும் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் (தூக்கம் வருவதிலோ / எழுந்து கொள்வதிலோ பிரச்னை)
10. குற்றவுணர்வு / தாழ்வு மனப்பான்மை (எதற்கும் தகுதியில்லாதது போன்ற உணர்வு)
11. சிகிச்சையளித்தும் பயனளிக்காத உடல்ரீதியான தொந்தரவுகள் / வலிகள்
12. சாவு / தற்கொலை எண்ணங்கள்
13. அழுவது
14. தனிமையாக உணர்வது
15. தொடர் கவலை / நம்பிக்கையற்ற நிலை
16. பள்ளி, குடும்பம், நண்பர்களுடன் எந்த செயல்பாடுகளிலும் திறன்பட செயல்படமுடியாத நிலை.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் 5க்கு மேற்பட்ட அறிகுறிகள் 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்து காணப்பட்டால், அது தீவிர மனச்சோர்வு கோளாறாக இருக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல… சுற்றி இருப்பவர்களுக்கும் கோளாறின் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியும். எ.டு: சோகமாகவே எந்நாளும் இருப்பது/தெம்பில்லாமல், ஆற்றல் குறைந்து காணப்படுவது.

2. தொடர்ந்திருக்கும் மனச்சோர்வு கோளாறு / டிஸ்தைமியா (Dysthymia)

1 அல்லது 2 வருடத்துக்கு மேல், ஒருவருக்கு மனச்சோர்வின் சில அறிகுறிகள் லேசாக – ஆனால், பெரும்பாலான நாட்கள் மற்றும் பெரும்பாலான நேரங்களில் காணப்பட்டால், அது ‘டிஸ்தைமியா’வாக இருக்கலாம். ஒரு வருடத்தில் 2 மாதத்துக்கு மேல் தொடர்ந்து அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், அது டிஸ்தைமியாவாக இருக்க வாய்ப்பில்லை. குழந்தை மற்றும் டீனேஜருக்கு கவலைக்கு பதில் எரிச்சல் (Irritability) அதிகமாக இருக்கும். பின்வரும் அறிகுறிகளில் இரண்டுக்கும் அதிக அறிகுறிகள் இருந்தால், அது ‘டிஸ்தைமியா’ எனக் கூறப்படுகிறது.

1. சாப்பிடுவதில் விருப்பமின்மை / அதிகம் உண்ணுவது
2. தூக்கமின்மை / அதிக தூக்கம்
3. களைப்பு / தெம்பின்மை
4. கவனம் செலுத்த முடியாமை
5. தாழ்வு மனப்பான்மை
6. நம்பிக்கையற்றுப் போவது.

இவற்றில், ‘களைப்பு’ மற்றும் ‘தாழ்வு மனப்பான்மை’, டிஸ்தைமியாவின் முக்கிய அறிகுறிகள். மனச்சோர்வின் அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், புகைப்பிடிக்க ஆரம்பிக்கும் வாய்ப்புள்ளது. படிப்பில் பின்தங்கி, பள்ளிக்குச் செல்லும் ஆர்வம் குறைய ஆரம்பிக்கும்… தோற்றத்திலும் வித்தியாசம் தெரியும்.

காரணிகள்?

இதன் தனிப்பட்ட காரணிகள் இன்னும் சரிவர கண்டுபிடிக்கப்படவில்லை. உடல் நலம், வாழ்க்கை நிகழ்வுகள் (பெற்றோர்/ நெருங்கியவரின் பிரிவு, திடீர் உடல் நலக் குறைவு), குடும்ப வரலாறு, சுற்றுப்புறச் சூழல் (Environment), மரபணு, உயிர்வேதியியல் இடையூறு (Neurotransmitters) போன்ற பல்வேறு காரணங்களால் மனச்சோர்வு கோளாறுகள் ஏற்படும்.

10 வயதுக்குக் கீழே உள்ள ஆண் குழந்தைகளையும், 16 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளையும், மனச்சோர்வு கோளாறு அதிகம் தாக்குகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு, மனச்சோர்வின் ஒரு சில அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகளிலிருந்து தெரிகின்றது. ஒரு முறை தீவிர மனச்சோர்வு கோளாறு (Major Depressive Disorder) தாக்கி விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் தாக்கும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் எவருக்கேனும் மனச்சோர்வு நோய் இருந்தால், அது குழந்தையை பாதிக்கும் வாய்ப்பைக் கூட்டும்.

பெற்றோர் கவனத்துக்கு…

உங்கள் குழந்தைக்கு, மனச்சோர்வு கோளாறு இருக்கலாம் என சந்தேகமிருந்தால், உடனடி சிகிச்சை அவசியம். பொதுவாக பெற்றோர், ‘டீனேஜில் இதெல்லாம் சகஜம், தானாக சரியாகிவிடும்’ என அலட்சியமாக இருந்து விடுகின்றனர். தங்கள் குழந்தையின் நிலைக்கு தாங்களே பொறுப்பென்று எண்ணியும், அவமானம் கருதியும் சிகிச்சை மேற்கொள்ள முன்வருவதில்லை. குழந்தை / டீனேஜரும் தங்களுக்குள் என்ன நடக்கிறதென்றே புரியாமல், உதவி கேட்க மாட்டார்கள்.

மனச்சோர்வு கோளாறு உள்ளவா–்கள் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இருப்பதால், பின்வரும் அறிகுறிகள் தங்கள் குழந்தையிடத்தில் இருக்கிறதா என அதிக விழிப்புணர்வுடன் கண்காணிப்பது அவசியம். பொதுவாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தற்கொலை முயற்சி செய்ய முனைவது அரிது… சில நேரங்களில் சோகமாக / கோபமாக இருக்கும்போது உணா்ச்சிவசப்பட்டு முயற்சி செய்யக்கூடும்.

1. எதிர்மறை விஷயங்களிலேயே கவனம் செலுத்துவது
2. அடிக்கடி விபத்துக்கு உள்ளாவது
3. தங்களுக்கு சொந்தமான பொருட்களை பிறரிடம் கொடுத்து விடுவது
4. அதிக கோபம் மற்றும் நடத்தையில் தீவிரம்
5. அதிக அழுகை / உணா்ச்சியை வெளிக்காட்டாமல் அமைதியாக இருப்பது
6. அதீத மனச்சோர்வின் அறிகுறிகள் (சாப்பிடுவது / தூங்குவதில் மாற்றம்)
7. போதைப் பழக்கம்
8. தனிமையை நாடுவது
9. தற்கொலை குறித்து பேசுவது / விரக்தியாக / ஆதரவில்லாததுபோல் வெறுமையாக உணர்வது
10. சாவு பற்றி அதிகம் பேசுவது
11. ஆபத்து தரக்கூடும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவது.

சிகிச்சை?

குழந்தைகளுக்கு ஏற்படும் ‘தீவிர மனச்சோர்வு’ கோளாறு அத்தியாயம் போல வந்து வந்து போகக் கூடும். தானாகவே சரியாவது போலத் தெரிந்தாலும் ஒருமுறை இதன் பாதிப்பு ஏற்பட்டு விட்டால், திரும்பவும் அது தாக்கும் அபாயம் மிகவும் அதிகம். சிகிச்சையின்றி, இதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்… சாவிலும் கூட முடியும்.

நல்ல செய்தி என்னவெனில், மனச்சோர்வை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். உளவியல் ஆலோசனை (Psychotherapy) மற்றும் மருந்துகள் மூலம் இதற்கு சிகிச்சையளிக்க முடியும். தீவிரமான அறிகுறிகள் இருப்பின் (தூக்கம் வராமல் போவது, உடல் வலிகள், அதீத எரிச்சலுணர்வு…), மருந்துகள் கொடுப்பது நல்லது. குழந்தையின் எதிர்மறை எண்ணங்களை (Negative thoughts) மாற்ற அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (Cognitive-Behavior Therapy) உதவுகிறது. மனச்சோர்வுடன் கூடிய பதற்றத்தையும் இச்சிகிச்சை குறைத்து, பாதிக்கப்பட்டவரை நலம்பெற செய்கிறது. குடும்பத்தினருக்கும் சோ்த்து ஆலோசனை அளிக்கப்படும்.

பெற்றோர் எப்படி சிகிச்சைக்கு உதவலாம்?

குழந்தையின் இந்நிலை குறித்து பெற்றோர் உதவிக்கோரி ஆலோசனை பெற்று தங்களை சரி செய்து கொள்வது, அவா்களுக்கும், குழந்தையின் முன்னேற்றத்துக்கும் உதவும். டிப்ஸ்…

1. மருந்துகளை சரிவர குழந்தையைச் சாப்பிட வைக்க வேண்டும். சத்துள்ள உணவை சாப்பிட பழக்க வேண்டியது மிகவும் அவசியம். இது அவா்களின் மனநிலையை (Mood) மேம்படுத்த உதவும்.

2. குழந்தையை பெரும்பாலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தினசரி செயல்பாடுகளாக ஏதேனும் விளையாட்டு / நடைப்பயிற்சி செய்ய வைக்க வேண்டும்.

3. குழந்தைக்கு மனச்சோர்வு நோய் உள்ளது என்பதை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தினால்தான் சீக்கிரம் எழுந்து கொள்ளவில்லை, வீட்டுப்பாடம் / வேலைகளை செய்வதில்லை என தவறாக நினைக்க கூடாது. குழந்தை அதிகபட்ச முயற்சி செய்யும்போது, அவா்களை மேலும் ஊக்குவித்து பாராட்டி, பரிசும் அளிக்கலாம்.

4. அவா்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் இனிமையாக இல்லை எனினும், எப்போதும் உங்கள் அன்பு மற்றும் ஆதரவைக் குழந்தைக்குக் கொடுத்து, தாங்கள் பேசுவதை கேட்க ஆள் உள்ளது என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் இதை நம்ப மறுத்தாலும், அதைக் கூறுவது மிகவும் முக்கியம். ஏற்கெனவே, தன்னம்பிக்கையற்று, நம்பிக்கையிழந்த சூழ்நிலையிலுள்ள குழந்தைக்கு, ஆதரவான வார்த்தைகள் ஆறுதலளிக்கும்.

5. குழந்தையின் அறிகுறிகள்/நடவடிக்கைகளை விழிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருப்பது குறித்து ஏதேனும் சந்தேகமிருந்தால் உடனடியாக, மனநல நிபுணரை அணுகுவது அவசியம்.மனச்சோர்வு உங்கள் குழந்தைக்கு மட்டுமல்ல… உங்கள் குடும்பத்தாருக்கும் வெறுப்பாகவும் பயமாகவும் இருக்கலாம். சரியான சிகிச்சை மற்றும் உங்கள் ஆதரவினால், குழந்தை தங்கள் வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும். மனச்சோர்வு கோளாறின் மற்றொரு வகையான சீா்குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சீர் குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder)!! (மருத்துவம்)