கண்டிப்பா? சுதந்திரமா? எந்த வழி சிறந்த வழி? (மருத்துவம்)

Read Time:9 Minute, 8 Second

‘அடித்து வளர்க்காத குழந்தையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய்விடும்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். ‘எங்களைச் சுதந்திரமாக விடவில்லை’ என்று குழந்தைகள் தரப்பில் குற்றம் சாட்டுவதையும் பார்க்கிறோம். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய கண்டிக்க வேண்டுமா? சுதந்திரமாக விட்டுவிடலாமா? குழந்தைகள் நல மருத்துவரான ஜெயந்தியிடம் இந்தக் கேள்வியை முன் வைத்தோம்.

‘‘அடம்பிடிப்பதன் மூலம் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை குழந்தை எப்படியோ கற்றுக்கொண்டு விடுகிறது. இதை ஆரம்பத்தில் பெற்றோரும் ரசித்தாலும், நாளடைவில் குழந்தையின் பிடிவாதங்கள் கோபத்தை உண்டாக்கிவிடும். இதனால்தான் திட்டுவது, அடிப்பது என்று கண்டிக்க வேண்டிய நிலைக்கு பெற்றோர் ஆளாகிறார்கள். இவை எல்லாம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி பெற்றோர் கவலைப்படுவதன் அடையாளம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், இந்தக் கண்டிப்பு சில நேரங்களில் பலன் தந்தாலும், பல நேரங்களில் தேவையற்ற எதிர்விளைவுகளை உண்டாக்கி விடும் அபாயம் உண்டு. அதிக கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் அனுசரித்துப் போக மாட்டார்கள். தங்களுடைய உணர்வுகளை யாரிடம் பகிர்ந்துகொள்வது எனத் தெரியாமல் திண்டாடுவார்கள். ஒரு கட்டத்தில் அடக்கி வைக்கப்பட்ட இந்த உணர்வுகள் ஆங்காரமாகிவிடும்.

எதிர்பாராத நேரத்தில் மற்றவர்கள் மீது வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். வளர் இளம் பருவமாக இருந்தால் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களையும் கற்றுக் கொள்வார்கள். இதனால் 20 வயதுகளிலேயே ரத்த அழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்கள் வரவும் வாய்ப்பு உண்டு’’ என்கிற டாக்டர் ஜெயந்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதற்கான வழிகளையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து கூறுகிறார்.

‘‘சில குழந்தைகள் எந்நேரமும் அழுதுகொண்டே இருப்பார்கள். விரல் சூப்புவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இதோடு, பசியின்மை அல்லது அதிக பசி ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. பசியின்மை இருந்தால் சோர்வடைதல், எடை குறைதல், அடிக்கடி நோய்வாய்ப்படுதல், தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். அதிக பசி காரணமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடலாம். இதனால் எடை அதிகரித்தல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

இதற்கு எளிமையான தீர்வு, குழந்தைகளை எந்த விஷயத்துக்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாது. குறிப்பாக, தங்களுடைய ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க ஒரு மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை இளம்வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி வயிறு சுத்தமாகும். செரிமான குறைபாடு நீங்கி மலச்சிக்கல் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகி, அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ரத்தம் செல்லும். குழந்தைகள் தவறு செய்யும்போது பெற்றோரில் ஒருவர் கண்டித்தால், அடுத்தவர் தலையிடக்கூடாது’’ என்கிறார் டாக்டர் ஜெயந்தி.

குழந்தைகள் மன நல மருத்துவர் ஜெயந்தினி, மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் கூறுகிறார். ‘‘பொதுவாக 3 வயது வரை குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோர் ஏன் சொல்கிறார்கள் என்ற காரணத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 4 வயதுக்குப் பிறகு பெரியவர்கள் கோபப்படுவதையும், அருகில் உள்ளவர்களை அடிப்பதையும் தானும் கற்றுக் கொள்வார்கள். இதனால் நாளடைவில் முரட்டுத்தனம் உடைய குழந்தைகளாக மாறுவதோடு, பிடிவாதமும் அதிகரிக்கும்.

இதை பெற்றோர் அல்லது ஆசிரியர் கண்டிக்கும்போது மன அழுத்தம் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். தன்னம்பிக்கை குறையும். உணர்ச்சிப்பூர்வமான குழந்தைகளாக இருந்தால் கோபம், அழுகை, பிடிவாதம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகமாக ஏற்படும். சராசரியாக 20 சதவிகிதம் குழந்தைகள் இதுபோல பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கண்டிப்புகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
அடித்தல், சூடு வைத்தல், பட்டினி போடுதல் என உடல்ரீதியாக தண்டிக்கும்போது பாதிப்புகளை யாரிடம் சொல்வது எனப் புரியாமல், அவர்களின் மன அழுத்தமானது (Stress), ஒருவகை துயரமாக (Distress) மாறும்.

இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பதிலாக, எந்நேரமும் அழுத்தத்துடன் காணப்படுவார்கள். மன அழுத்தம் காரணமாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால் எளிதில் உடல்நலக்குறைவு ஏற்படும். முன்னரே நோய்கள் இருந்தால் அவற்றின் தீவிரம் அதிகமாகும். தக்க மருந்துகள் கொடுத்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அடுத்து Cortisol, Norepinephrine போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்.

இதனால் பயம், பதற்றம், அழுகை, கோபம், கவனமின்மை, தூக்கமின்மை, படிப்பில் பின் தங்குதல், வீட்டில் இருந்து வெளியேற முயற்சித்தல், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல், திருப்பி அடித்தல், தற்கொலை முயற்சி போன்ற வேண்டாத விளைவுகள் ஏற்படும். குழந்தைகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தாங்களே முடிவு செய்யும் அதிகாரத்தை சில பெற்றோர் எடுத்துக் கொள்வார்கள். சில பெற்றோர் குழந்தைகளை தன்னிச்சையாக முடிவு எடுக்க விட்டுவிடுவார்கள்.

இந்த இரண்டுமே தவறுதான். ஒரு விஷயத்தைச் செய்யக் கூடாது என்று சொல்வதைவிட, ஏன் செய்யக் கூடாது என்பதை குழந்தைகளிடம் பக்குவமாக அதன் விளைவுகளைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். ஒரு முடிவு எடுக்கும்போது குழந்தைகளிடம் அதுபற்றி விவாதிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்து கண்காணிக்கவும் வேண்டும். ‘பெற்றோர் நம்மை நம்புகிறார்கள், நம்மை மதிக்கிறார்கள்’ என்ற எண்ணத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தி விட்டால் குழந்தைகள் தவறு செய்யும் வாய்ப்பு குறையும். அளவுக்கு அதிகமான கண்டிப்பும் பயன் தராது… அளவுக்கு அதிகமான சுதந்திரமும் பயன் தராது!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குட் டச்… பேட் டச்…!! (மருத்துவம்)
Next post “இப்ப வசதி இருக்கு. ஆனா சந்தோஷம் இல்ல!”! (வீடியோ)