‘டெஸர்ட் டேபிள்’… இது குழந்தைகளுக்கான டேபிள்! (மகளிர் பக்கம்)
‘‘ஓர் ஆரோக்கியமான உணவு, விரைவிலேயே கெட்டுப்போக வேண்டும். அதிலும் குறிப்பாக கேக் வகைகள் இரண்டு நாட்களுக்குள் கெட்டுப்போக வேண்டும். அப்படியில்லை எனில், அது கெட்டுப்போகாமல் இருக்கப் பதப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொருள். நம் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு பதப்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நாம் அறிந்ததே. அதனால் என் கேக்குகள் பதனச்சரக்குகள் எதுவும் சேர்க்காமல், இயற்கையாகவே இரண்டு நாட்களில் பாழாகிவிடும்படி தான் தயாராகுகின்றன’’ என்கிறார் கீர்த்தி ஞானசேகரன்.
பிறந்தது காரைக்குடி, படித்து வளர்ந்தது – விழுப்புரம், புதுச்சேரி. இப்போது செட்டிலாகி இருப்பது சென்னையில். கடந்த ஆறு வருடங்களாக செல்ஃப்-மேட் பேக்கராக இருக்கும் கீர்த்தி, கேக், சாக்லெட், கப்-கேக், டெஸர்ட் ஜார் என அனைத்தையுமே தாமாக கற்றுக்கொண்டு, சுயமாக புதிய சுவைகளை உருவாக்கி வருகிறார்.
இவரின் அப்பாவும் உறவினர்களும் கடலைமிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளனர். அப்போதிலிருந்தே கீர்த்திக்கு இனிப்பு வகைகள் பிடிக்கும். திருமணமாகி சென்னை வந்ததும், மகள் விரும்பி சாப்பிடும் ஒரே உணவு வகை, கப் கேக்குகள் என்பதால், அதை ஆரோக்கியமாக அவரே வீட்டில் தயாரிக்க முடிவு செய்தார்.
அப்படி முதலில் தன் மகளுக்காக மட்டுமே கேக் தயாரிக்க ஆரம்பித்து பின், நண்பர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தார். வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயாராவதால் பலரும் ஆர்டரின் பேரில் கேக் மற்றும் சாக்லெட்டுகளை வாங்க முன் வந்தனர். அப்படியே தொழிலாக வளர்ந்து, இன்று நட்சத்திர விடுதிகளில் நடக்கும் விழாக்களுக்கும் கேக் சப்ளை செய்கிறார். மகளால் ஆரம்பித்த தொழில் என்பதால், அவளது பெயரிலேயே ‘Vishru’s Cute Cakes’ என ஆரம்பித்துவிட்டார்.
இவர் தயாரிக்கும் கேக்குகளில் முட்டை சேர்ப்பதேயில்லை. “கேக்குகளில் முட்டை சேர்க்கும் போது இரு விதமான வாடை வரும். அது பலருக்கும் பிடிக்காது. இப்போதிருக்கும் கேக் தயாரிக்கும் சாதனங்களைக் கொண்டு, முட்டை இல்லாமலே மிருதுவான சாஃப்ட் கேக்குகளை தயாரிக்க முடியும். அதனால் என் கேக்குகள் அனைத்துமே முட்டை சேர்க்காத, ப்யூர் எக்லெஸ் கேக் வகைகள்தான்” என்கிறார்.
இவருடைய கேக் சுவையைப் போலவே, வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்திருப்பது டெஸர்ட் டேபிள் கான்செப்ட் தான். ‘‘வெளிநாட்டில் வசிக்கும் என் தோழி, அவர் மகளின் பிறந்தநாள் விழாவில் டெஸர்ட் டேபிள் உருவாக்கி அலங்காரம் செய்திருந்தார். அந்த படங்கள், வீடியோக்களை எனக்கு அனுப்பி, நான் கேக் தயாரிப்பு துறையில் இருப்பதால், அதை இங்கேயும் முயற்சி செய்ய சொன்னார்.
பொதுவாகவே பிறந்தநாள் விழாக்களில் குழந்தைகள் ஆவலுடன் எதிர்பார்ப்பது கேக்கைதான். அந்த குழந்தைகளிடமிருந்து அந்த கேக்கை காப்பாற்றுவதே பெரும் வேலையாக இருக்கும். அழகாக அலங்கரித்திருக்கும் கேக்கை பார்த்ததும் குழந்தைகள் உடனே அதைத் தொட்டு ஒரு சிறிய துண்டை எடுத்துக்கொள்வார்கள். இதனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே அலங்கரிக்கப்பட்டிருக்கும் கேக் பழாகிவிடும்.
இதைத் தடுக்க, வெளிநாடுகளில் டெஸர்ட் டேபிள் என்ற கான்செப்ட் பிரபலமாக உள்ளது. ஒரு மேஜையை அழகாக அலங்கரித்து, அதில் சிறிய கேக் வகைகள், கப் கேக்குகள், சாக்லெட் வகைகள் என அடுக்கி வைப்பார்கள். விழாவிற்கு வரும் குழந்தைகள் அந்த டெஸர்ட் டேபிளில் இருக்கும் உணவை அவர்கள் விருப்பத்திற்கு உண்ணலாம்.
பாங்காக்கில் வசிக்கும் என் தோழி ஒருவரிடம் அதற்கான அலங்காரப் பொருட்களை எல்லாம் வாங்கினேன். சிலர் வெறும் அந்த அலங்காரப் பொருட்களை மட்டும் கேட்பார்கள். அவர்களுக்கு இதை வாடகைக்கும் கொடுத்து வருகிறேன். இது பிறந்தநாள் விழா மட்டுமில்லாமல், திருமண கொண்டாட்டங்கள் முதல் கார்பரேட் கம்பெனி மீட்டிங் வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பிரபலமாகி வருகிறது” என்கிறார்.
இவர் தயாரிக்கும் கேக்-பாப் வகைகளும், குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. “பொதுவாக கேக் செய்து அதை அழகாக வடிவமைக்கும் போது, சில கேக் துண்டுகள் மிஞ்சிவிடும். அதைத் தூக்கிப் போட மனமில்லாமல், லாலி பாப் சாப்பிடும் குச்சியில், கேக்கை அழகாக வைத்து, அதன் மீது சாக்லெட் ஊற்றித் தயாரிக்கப்பட்டதுதான் கேக்-பாப். இந்த ஐடியாவிற்கு என் மகள் தான் காரணம். அவள் எப்போதுமே லாலி-பாப் சாக்லெட்டை, கேக்-பாப்ன்னு தவறா குறிப்பிடுவாள். அதிலிருந்து உருவானதுதான் இந்த யோசனை.
கேக் தயாரிப்பு நானே கத்துக்கிட்டதுதான். முதலில் கப் கேக் வகைகளில்தான் ஆரம்பித்தேன். கப் கேக் தயாரிக்க அதிக பொருட்கள் தேவைப்படாது. சுவையாக இல்லாவிட்டாலும், பெரிய அளவில் வீணாகாது. அதனால் முதலில் கப்-கேக்குகளில் தொடங்கி, இப்போது 15 கிலோ கேக்குகள் வரை தயாரிக்கிறேன்’’ என்றவரின், ட்ரேட்மார்க் கேக் வகைகள் பட்டர்ஸ்காட்சும், சாகோ ட்ரஃபுலும்தான்.
ஊரடங்கினால் தன் தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறும் கீர்த்தி, ‘‘கொரோனா காலத்தில்தான் அதிக வியாபாரம் நடந்தது. பலராலும் வெளியே சென்று பிடித்த உணவைச் சாப்பிட முடியவில்லை. பல கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கிற்குப் பின்னும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் வீட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான உணவையே விரும்பினர். அதனால், ஊரடங்கின் போது அதிக ஆர்டர்கள் வந்தன. அந்த ஆர்டர்களை டெலிவரி செய்வதுதான் பெரும் சவாலாக இருந்தது” என்றவர் வாடிக்கையாளரின் அலர்ஜி, சுவைக்கு ஏற்ப கேக்குகளைத் தயார் செய்கிறார்.
ஒரு முறை என்னிடம் வந்த வாடிக்கையாளருக்கு நட்ஸ் அலர்ஜி இருந்தது. அவர் நட்ஸ் ஏதும் இல்லாமல் கேக் வேண்டும் என்று கேட்க… மாதுளைப்பழம் கொண்டு ஒரு கேக்கை தயாரித்தேன். அவருக்கு பிடித்து போக, அதை மற்றவர்களும் வாங்க ஆரம்பித்தனர். கேக்குகளை சமூகவலைத்தளம் மற்றும் தொலைபேசி மூலம் ஆர்டர் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஆர்டர் கொடுத்தால் போதும். சில ஸ்பெஷல் கேக்குகளுக்கு மட்டும் மூன்று நாட்களுக்கு முன் ஆர்டர் கொடுக்கணும்’’ என்கிறார் கீர்த்தி ஞானசேகரன்.
Average Rating