முஸ்லிம் மக்கள் செய்யும் தவறு !! (கட்டுரை)
அரசறிவியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் டி. பிராண்டிஸ் என்பவர், “அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்ற மக்கள், தாமாகத் திருந்தாத வரை, அரசியல்வாதிகளை ஒருபோதும் திருத்த முடியாது” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கூறிவைத்துள்ளார்.
இதே விடயத்தை, இஸ்லாமிய மார்க்கமும் ‘ஒரு சமூகம், தானாகத் திருந்த நினைக்காத வரை, இறைவன் அவர்களைத் திருத்த மாட்டான்’ என்று வழிகாட்டுகின்றது. வேறு மதங்களின் அறிவுரைகளும், ‘பொதுமக்கள் திருந்தினால், தலைமை தானாகத் திருந்தும்’ என்றே அமையப்பெற்றிருக்கின்றன. .
இலங்கை அரசியல் சூழலில், முஸ்லிம் சமூகத்துக்கு அநியாயம் இழைக்கப்படுகின்ற போது, நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது, முஸ்லிம் மக்கள், தமது தலைவர்களையும் ஏனைய மக்கள் பிரதிநிதிகளையும் குற்றம் சொல்கின்றனர். அரசியல்வாதிகளோ, அரசாங்கத்தைக் குற்றம் சொல்கின்றனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகள், தம்மை நோக்கி வருகின்ற குற்றச்சாட்டுகளை, ‘பந்தைக் கைமாற்றுவது போல’, திசைதிருப்பி விட்டு, தம்மில் எந்தத் தவறும் இல்லை எனக் காண்பிக்க முயன்று, அடிக்கடி தோற்றுப் போகின்றனர். வெட்கமே இல்லாமல், இவ்வாறு செயற்படுகின்ற அவர்களைப் பார்க்கும் போது, இப்போதெல்லாம் எந்த ஆச்சரியமும் ஏற்படுவதில்லை.
உணர்ச்சி அரசியல் செய்வதிலும், பதவி, பட்டங்களுக்காக ‘நக்குண்டு நாவிழப்பதிலும்’ அரைவாசிக் காலம் போகின்றது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதிலும் ஒப்பாரி வைத்து, கழிவிரக்கம் கொள்வதிலும் மீதிக் காலமும் போய்க் கொண்டிருக்கின்றது. அப்படியென்றால் தவறு எங்கே நடக்கின்றது?
முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் (அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குபவர்கள் அல்லர்), பல்கலைக்கழக சமூகம், ஜம்மியத்துல் உலமா சபை உள்ளடங்கலாக பிறை பார்ப்பதற்காக கூடுகின்ற அமைப்புகள், தாமே பணத்தைக் கொடுத்து கௌரவ கலாநிதிப் பட்டங்களைக் கொள்வனவு செய்வோர், பொன்னாடைகளுக்காக அலையும் கூட்டம் ஆகியோர் இது பற்றிச் சிந்தித்ததுண்டா?
சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளின் இணைப்பதிகாரிகள், அமைப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு அலையும் கூட்டம், மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாமல் முகநூலில் கிறுக்கும் ‘பேஸ்புக் போராளிகள்’, முஸ்லிம் தலைவர்களுக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் ஒட்டுண்ணிகள், புதுப்புது மார்க்கக் கொள்கைகள் என்ற பெயரில் சமூகத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முகவர்கள் என, யாராவது இந்த நிலைமைக்கான காரணங்களைத் தேடியதுண்டா?
இல்லை; இல்லவே இல்லை!
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, ஒரு சிறிய முயற்சியைக் கூட செய்யாமல், ஒரு மக்கள் கூட்டம் இருப்பார்களேயானால், அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே, ‘மந்திரத்தால் மாங்காய் விழும்’ என்று சொல்வதை விட முட்டாள்தனமானதாகும்.
உலக அரசியலில் பெரும்பகுதி, முஸ்லிம்களை பலிக்கடாவாக்கியே நடந்து கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையானது. பற்றியெரியும் பலஸ்தீனமும் அங்கு கொல்லப்படும் முஸ்லிம்களின் அலறலும் இதற்கு மிகப் பிந்திய உதாரணங்களாகும்.
இந்த வரிசையில், இலங்கையில் தமிழர்களை வைத்து அரசியல் செய்தது போல, முஸ்லிம்களே இப்போது மிக முக்கிய ‘கருவி’யாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற நெருக்கடிகளுக்குப் பின்னால், சர்வதேச அரசியல், ‘இஸ்லாபோபியா’, பல்வகைப்பட்ட இனவாதங்கள், பெருந்தேசியக் கட்சிகள், அரசாங்கங்களின் அரசியல் இலாபம், முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்களின் அரசியல் நகர்வுகள், பயங்கரவாத கூலிப்படைகள், புதுமையான மார்க்க இயக்கங்களின் முட்டாள்தனமான செயற்பாடுகள் எனப் பல விடயங்களும் காரணமாக உள்ளன எனச் சொல்லலாம்.
ஆனால், இவற்றின் பெரும்பாலான பிரச்சினைகளைப் பலமான ஓர் அரசியல், சமூகக் கட்டமைப்பின் ஊடாகக் காத்திரமான அடிப்படையில் எதிர்கொள்ள முடியும். முஸ்லிம் அரசியல் என்பது, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலாக இருக்குமானால், நிலைமைகளை ஓரளவுக்குச் சமாளிக்கலாம். இந்தளவுக்கு சிக்கல்களும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டிருக்காது.
அந்தவகையில், எல்லாக் கட்சிகளிலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறானவர்கள் என்றால், அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள், அதைவிடப் பெரிய தவறை இழைத்து இருக்கின்றார்கள். ஆனால், இந்த நிதர்சனத்தை சாதாரண மக்கள் உணர்ந்து செயற்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழர் அரசியல், போராட்ட வழி வந்ததாகும். எனவே, தமிழர்கள் உரிமை சார்ந்த அடிப்படையில், அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளனர். முஸ்லிம் அரசியலும் அவ்வாறான ஒரு பின்புலத்துடனேயே 90களில் வீறுகொண்டெழுந்தது. ஆனால், பின்னாளில் அது, அபிவிருத்தி சார்ந்த அரசியல்மயப்படுத்தலாக மாறிவிட்டது. உரிமை அரசியல் என்பது, தேர்தல் போதையில் தொட்டுக் கொள்கின்ற ஊறுகாய் போல மாறியிருக்கின்றது.
இப்போதிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 20 வருடங்களுக்குள் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால். இதில் 99 சதவீதமானவர்கள் சுயநலவாதிகளும் ஏமாற்றுப் பேர்வழிகளும் என்பதைக் கண்டு கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.
உரிமை அரசியலைப் பேசி, மக்களை உசுப்பேற்றி வாக்குகளைப் பெற்றுவிட்டு, சமூகத்தை ‘அம்போ’ எனக் கைவிட்டுவிட்டுத் தமக்குச் சௌகரியமான முகாம்களுக்குள் ஒளிந்து கொள்கின்ற பேர்வழிகளையே, முஸ்லிம் சமூகம் வாக்களித்தும், தேசிய பட்டியல் ஊடாகவும் பிரதிநிதிகளாக்கி உள்ளது.
தேர்தல் மேடைகளில் பெரிய வீரர்கள் போலவும் முஸ்லிம் சமூகத்தின் காவலர்கள் போலவும் பேசுகின்ற ‘காட்போட்’ தலைவர்கள், சமூகத்துக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, களத்தில் காணாமல் போய் விடுகின்றார்கள். ‘எமக்கு வாக்களித்தால் உரிமை காப்போம்’ என்று முழங்கியவர்கள், சலுகைகளுக்குப் பின்னால் போன கதைகள் ஏராளம் உண்டு.
முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்களின் நிலைமை இதுவென்றால், நேரடியாகப் பெரும்பான்மையினக் கட்சிகளில் தெரிவாகும் முஸ்லிம் எம்.பிக்களும், தமது கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதில் ஓரிருவர் மட்டும், விதிவிலக்காகத் தெரிகின்றனர்.
தேர்தல் எனும் ஆற்றைக் கடந்தவுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தைக் கைவிட்டுவிடுவதைப் பல தடவை கண்டிருக்கின்றோம். வாக்குக் கேட்டு வரும் போது, ‘எங்கவீட்டுப் பிள்ளை’யாக இருப்பவர்கள், வெற்றிபெற்று விட்டால் அல்லது பதவி பறிபோய்விட்டால், ‘நீ யாரோ, நான் யாரோ’ என்ற நிலைக்கு வந்து விடுகின்றார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலர், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. மக்களைச் சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைக் கண்டறிவதற்கான எந்தப் பொறிமுறையையும் முஸ்லிம் எம்.பி எவரும் நடைமுறைப்படுத்தவில்லை. தம்மைச் சுற்றி இருக்கின்ற ‘ஆமா சாமி’களையே ‘மக்கள்’ என்று அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மற்றப்படி, தங்களது அபிப்பிராயங்களை, மக்கள் மீது திணிக்கின்ற அரசியலையே இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆனாலும், இதுபோன்ற பேர்வழிகளுக்கே, முஸ்லிம்கள் மாறி மாறி வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். சமூகம் சார்ந்த அரசியலுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமற்றவர்கள் என்று தெரிந்திருந்தும், சுயநலவாதிகள், பணத்துக்கு விலை போகக் கூடியவர்கள், பதவி ஆசை பிடித்தவர்கள், மதுவுக்கும் மாதுவுக்கும் பலவீனமானவர்கள் எனப் பல ரகமானோருக்கும் வாக்குகள் அளிக்கப்படுகின்றன.
வீராப்புப் பேச்சை நம்பியும் பணத்துக்காகவும் நமது ஊர்க்காரர், தொழில் தருவார் என்பதற்காகவும் இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற நினைப்பிலும் ஊருக்கு எம்.பி வேண்டும் என்பதற்காக…. என உப்புச்சப்பற்ற காரணங்களுக்காகவே கணிசமான முஸ்லிம்கள் ஒருவருக்கு வாக்கு அளிக்கின்றனர். இதைத்தாண்டி, சமூக சிந்தனையாளர்கள், முற்போக்காளர்கள், நல்லவர்களை எல்லாம், ‘இவர்கள் அரசியலுக்குச் சரிப்பட்டு வரமாட்டார்கள்’ என்ற வகைக்குள் உள்ளடக்கி, ஒதுக்கிவிடுவதைக் காண முடிகின்றது.
கடந்த தேர்தலில் கூட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்கள், தற்போது அரசாங்கத்துடன் திரைமறைவில் கைகோர்த்துள்ளனர். வாக்களித்த மக்கள், நடுத்தெருவில் கைவிடப்பட்டு உள்ளனர். பெரமுனவுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் அரசியல்வாதிகளும், இப்போது சமூகத்தைக் கண்டுகொள்வதில்லை.
இந்த நிலைக்கு, அடிப்படையில் காரணமானவர்கள் மக்கள்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வாகனத்துக்கு, சீனத் தயாரிப்பான போலி உதிரிப்பாகங்களைப் பொருத்திவிட்டு, அது அசல் (ஒரிஜினல்) ஜப்பான் உதிரிப்பாகங்கள் போல செயற்படும் என்று நம்ப முடியாது.
அதுபோல, பிழையான பிரதிநிதித்துவங்களைத் திரும்பத் திரும்ப தெரிவு செய்கின்ற ஒரு மக்கள் கூட்டம், அவர்கள் சரியாக, சமூக சிந்தனையோடு செயற்படுவார்கள் என்று நம்பி இருப்பதில் ஏதேனும் நியாயம் இருக்கின்றதா?
இந்தப் பத்தியைப் படிக்கும்போது, ‘சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து, இவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்’ என்று முஸ்லிம் மக்களுக்கு எழுகின்ற உணர்வும் உத்வேகமும், தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளைக் கண்டதும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் யதார்த்தம்.
Average Rating