லெட் மீ சே… ஒரு குட்டி ஸ்டோரி…!! (மகளிர் பக்கம்)
ஈரோட்டைச் சேர்ந்த பூங்குழலி சுந்தரம், பொறியியல் முடித்து தன் ஐ.ஏ.எஸ் கனவிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே வாய்ஸ் ஓவர், எம்.சி போன்றவற்றை ஆர்வமுடன் கலந்துகொண்டு கல்லூரி இறுதியாண்டில் தன்னுடைய பாட்காஸ்ட் (podcast) சேனலை தொடங்கியுள்ளார். தமிழ் மீதிருந்த ஆர்வம், பேச்சுத்திறன், மற்றவரின் மனமறிந்து பரிவுடன் பேசுதல் போன்ற குணமும் திறனும் இருந்ததால், சேனல் ஆரம்பித்த ஒன்றரை வருடத்திலேயே பத்தாயிரத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களை சம்பாதித்துள்ளார்.
ரேடியோவின் அடுத்த பரிமாணம்தான் பாட்காஸ்ட். இது ஆன்லைனில் உருவாக்கப்படும் ஆடியோ சேனல்கள். இது சீனா, அமெரிக்காவில் பல ரசிகர்களுடன் பிரபலமாகி, இப்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. யுடியூப் சேனல் தொடங்குவது போல, யார் வேண்டுமானாலும் பாட்காஸ்ட்களை தொடங்கலாம். தங்களுக்கு விருப்பமான மக்களை கவரும் நிகழ்ச்சிகளை உருவாக்கி பதிவேற்றலாம். மக்கள் தங்களுக்குப் பிடித்த சேனல்களை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனிலும், டவுன்லோட் செய்தும் கேட்கமுடியும். பூங்குழலியின்- ‘Yours Positively’ பாட்காஸ்ட் 2019ல் தொடங்கப்பட்டது. அது பற்றி அவரே விவரிக்கிறார்…
“பாட்காஸ்டில் பேசும் போது ஒருவர் நேரடியாக நம்மிடம் பேசுவது போல இருக்கும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் மனதை லேசாக்கி உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமான நிகழ்ச்சியை தர விரும்பினேன்” என்றவர் ஒரு குட்டி ஸ்டோரியும் சொல்ல தொடங்கினார்.
‘‘உங்களுக்கு ரொம்ப பிடிச்ச டீ-கப் கீழ விழுந்து ஒடஞ்சிருது. அதை பயன்படுத்த முடியாது. ஒரு அஞ்சு நிமிஷம் ஃபீல் பண்ணிட்டு உடைஞ்ச டீ-கப்பை ஓரமா எடுத்து வெச்சிட்டு, அடுத்த வேலைய பாக்க போயிடுவோம். ஆனா நம்ம கதையோட ஹீரோ அப்படி பண்ணல. அவருதான் ஆஷிகாகா யோஷிமாசா. கிட்டத்தட்ட 300-400 வருடங்களுக்கு முன்னாடி ஜப்பானில் வாழ்ந்தவர். அவருக்கு ரொம்ப புடிச்ச டீ-கப் சல்லி சல்லியா நொறுங்கிடுச்சு.
அதை சரி பண்ணியே தீருவேன்னு கப் தயாரிப்பவரிடம் கொடுக்கிறார். அவரும், சரி செய்து கொடுக்கிறார். ஆனா ஹீரோவுக்கு புடிக்கல. இதை நாமே சரிசெய்யலாம் என ஹீரோ எதேச்சையாக செய்த ஒரு விஷயம்தான் இன்னிக்கு ஜப்பானில் ஒரு கலையாவே வளர்ந்திருக்கு. அக்கலையின் பெயர் கின்ட்சுகி (kintsugi). அதாவது தங்கத்தால் ஒட்ட வைப்பது. உடைந்த ஒரு பொருளை சாதாரணமாக ஒட்ட வைக்காமல், உருஷி என்ற மரத்திலிருந்து கிடைக்கும் பசையில் தங்கப்பொடி கலந்து ஒட்டுவார்கள். அப்படி செய்யும்போது ஒட்டப்பட்ட இடங்கள் ஜொலிக்கும்.
கின்ட்சுகியின் நோக்கம் உடைந்த பொருளை புதுசு போல மாற்றுவது இல்லை. ஒட்டவைத்த பொருளின் விரிசல்களை மறைக்காமல், அதற்கு ஒரு புது மதிப்பைத் தருவதுதான். இது வெறும் கலையாக மட்டுமே இல்லாமல் வாழ்க்கைக்குப் பல நல்ல விஷயங்களையும் கற்றுத்தருகிறது. பல நேரம் நாம் உடைந்து போன மனிதர்களாகவே வாழ்கிறோம். அப்படியே உடைந்த துண்டுகளை ஒட்டவைத்தாலும், நாம் அந்த விரிசல்களால் குறையுள்ள மனிதனாகவே பார்க்கப்
படுகிறோம். உண்மையில் நமக்குள் இருக்கும் அந்த சின்ன சின்ன விரிசல்கள் விலைமதிப்பற்றவை. நமக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும், ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தந்து அடுத்து வரப்போகும் காயங்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பலத்தையும் தருகிறது.
அந்த காயத்தை – தழும்பை நாம் ஏன் வெறுக்க வேண்டும்? வாழ்க்கைக்கு மதிப்பூட்டும் விஷயமாகத்தான் விரிசல்களை பார்க்க வேண்டும். குறையே இல்லாத மனிதர்களிடமும் சின்ன சின்ன விரிசல்களும் தங்கத்தால் ஒட்டப்பட்டுள்ளன. அதுதான் அவர்களை ஜொலிக்கவும் வைக்கிறது. விரிசல்களை அவமானமாகவோ, கெளரவக் குறைச்சலாகவோ பார்க்காமல் உங்களுக்கு கிடைத்த நல்ல அனுபவமாகவோ, வாழ்க்கையை கட்டமைக்கும் தங்கக் கோடுகளாகவும் நினைத்தால் உங்க கடந்த காலங்களில் ஏற்பட்ட சுய வெறுப்புகள் மறைந்து, முழுமையாக ஜொலிக்க முடியும்” என ஒவ்வொரு கதையிலும் எளிமையான பாடங்களுடன்
முடிக்கிறார்.
இப்படி கதைகளுடன் பல தத்துவங்களையும் கொடுத்து ஒவ்வொரு எபிசோடையும் சுவாரஸ்யமாக தன் ரசிகர்களுக்கு வழங்குகிறார். ‘‘yours positively’யின் நோக்கம், உளவியல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதுதான். வாழ்க்கை முறையில் நாம் செய்யக்கூடிய எளிய மாற்றங்கள் நமக்கான நீண்டகால மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும்” என்றவர், மகிழ்ச்சியுடன் இருக்க ஒரு டிப்ஸையும் கொடுக்கிறார், “தினமும் வேலை, படிப்பு என கடமைக்காக பல விஷயங்களை செய்கிறோம். ஆனால் அந்த கடமைகளை எல்லாம் முடித்த பின்னர் தினமும் நமக்கு பிடித்ததை செய்ய ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இரவு நமக்கு பிடித்த டின்னரை சாப்பிட, அந்த நாள் முழுக்க காத்திருப்போம்.
இதுமாதிரியான சிறிய சந்தோஷங்களைபழக்கமாக்கிக் கொண்டால் ஒவ்வொரு நாளும் சலிப்பில்லாமல், வித்தியாசமாக வாழமுடியும். என் பாட்காஸ்டை தொடர்ந்து கேட்கும் நேயர் ஒருவர், தனக்கு தற்கொலை எண்ணம் அடிக்கடி தோன்றுவதாக கூறினார். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். அவருக்கு என்னால் பெரிய உதவி செய்ய முடியாமல் போனாலும், அவர் பேசுவதை பொறுமையாக கேட்பேன். நம் உயிரைவிட எதுவுமே பெரியதில்லை என்பதை ஒவ்வொரு முறையும் அழுத்தமாக கூறி, அவர் குடும்பத்தினரிடம் பேச சொன்னேன். இப்படி மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு, அவர் சொல்வதைக் கேட்க ஒரு காது வேண்டும்.
அது இருந்துவிட்டாலே பல தற்கொலைகள் நடக்காமல் தடுக்கலாம்” என பரிவுடன் இருத்தலின் முக்கியத்துவத்தை பகிர்கிறார். கொரோனா லாக்டவுனில் இந்தியாவில் பாட்காஸ்ட் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல பாட்காஸ்ட் சானல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. தமிழில் மட்டும் இதுவரை ஐநூறு பாட்காஸ்ட் சேனல்கள் உருவாகியுள்ளன. போட்டிகள் பல வந்தாலும், புதன்தோறும், புது கதைகளத்துடன் பூங்குழலி நேயர்களிடம் உரையாடுகிறார். இவரது பாட்காஸ்ட்டுக்கு இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். ஸ்பாடிஃபை எனப்படும் பாட்காஸ்ட் தளத்தில் டாப் -100ல் பூங்குழலியின் சேனல் இடம்பிடித்துள்ளது. அதே போல இந்தியாவில் இருக்கும் உளவியல் ஆரோக்கியம் சார்ந்த பாட்காஸ்டில், முதல் பத்தில் இவரது சேனல் இடம்பெற்றுள்ளது.
Average Rating