யாரையும் நம்பி நான் இல்லை! (மகளிர் பக்கம்)
சிறு மனத் தடையோ, மன உளைச்சலோ அல்லது வாழ்வின் பிடியிலிருந்து ஏதோ ஒரு வகையில் சற்று விலகினாலோ… உலகமே இருண்டு விட்டது போன்ற மாய தோற்றத்திற்குள் நுழையும் பலருக்கு மத்தியில், அந்த இருளிலிருந்து வெளிச்சத்தைக் கண்டிருக்கிறார் கோவை கண்ணமநாயக்கனூரைச் சேர்ந்த ‘ஆம்னி’ கிருஷ்ணவேணி.
“எங்க வீட்டுக்காரு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. எங்களுக்குள்ள சண்டையெல்லாம் கிடையாது. குழந்தை இல்லாததுதான் காரணம். அவர் கல்யாணம் செய்துகிட்டது பத்தி எல்லாம் நான் பெருசா எடுத்துக்கல. அவங்க அவங்க விருப்பம். அதுல நம்ம தலையிடக் கூடாது. அவருக்குன்னு ஒரு குடும்பன்னு போயிட்டாரு. நான் அப்படியே தனியா வந்துட்டேன்.
அவர் போயிட்டார் என்கிறதால நாம வாழாம இருந்திட முடியுமா? ரொம்பவே கஷ்டப்பட்டேன் தான். காட்டு வேலை, கட்டட வேலைனு நிறைய வேலை செஞ்சேன். அவர் கூட இருக்கும் போது உழவர் சந்தைக்கு நானும் அவருடன் வருவேன். ஆனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் ேபானது. டாக்டரிடம் பார்த்த போது இருதய பிரச்னை இருப்பதால், உடனடியா அறுவை சிகிச்சை செய்யணும்ன்னு சொல்லிட்டாங்க. அதே சமயம் அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிக வெயிட் தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால என் கணவர் அப்போது, ‘நீ வெயிட்டெல்லாம் தூக்கக்கூடாது, அதனால உழவர் சந்தைக்கு போக வேண்டாம்’ன்னு ரொம்ப ஸ்ட்ரிட்டா சொல்லிட்டார். அவர் என்னுடன் வாழ்ந்த காலம் வரைக்கும் ஐந்து வருஷம் போகாம இருந்தேன்.
இவரு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால நானும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன். வேலையும் சரியா அமையல. மில்லுக்கு போனேன். என்னுடைய உடம்பு இருக்கிற நிலையில் அதுவும் செய்ய முடியல. உழவர் சந்தைக்கான அடையாள அட்டையும் தொலைச்சிட்டேன். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து அந்த நேரத்துல எங்க அப்பா, அம்மா என் பெயருக்கு ஒரு ஏக்கர் காடு எழுதி கொடுத்தாங்க. அவங்க கொடுத்த காட்டில் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அதில் விளையும் காய்கறிகளை விற்க மறபடியும் புதிய அடையாள அட்டை வாங்கி உழவர் சந்தைக்கு வர ஆரம்பிச்சேன். 15 வருஷம் ஓடிடுச்சு” என்று கூறும் கிருஷ்ணவேணி எப்படி ‘ஆம்னி’ கிருஷ்ணவேணி ஆனார் என்பதை பகிர்ந்தார்.
“எங்க ஊர்ல இருந்து உழவர் சந்தைக்கு காய்கறிகளை எடுத்துட்டு போக நேரத்துக்கு பஸ் கிடையாது. வண்டி வச்சு கொண்டு போகணும். அதுக்கு வாடகை கொடுத்து கட்டுப்படி ஆகல. அதனால சொந்தமா ஒரு ஆட்டோவாவது வாங்கிட்டா வாடகை பணம் மிச்சமாகும்ன்னு டிரைவிங் பள்ளியில் ஆட்டோ ஓட்ட கத்துக்க போனேன். அங்க ரொம்ப கஷ்டமா இருந்தது. அதனால, ‘தம்பி இது நமக்கு சரிப்பட்டு வராது. நான் நின்னுக்கிறேன்’னு டிரைவிங் கத்துக் கொடுத்த தம்பிக்கிட்ட சொன்னேன். ஆனால் அந்த தம்பிதான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.
‘உங்களால கண்டிப்பா ஓட்ட முடியும்’ன்னு எனக்கு ரொம்பவே பொறுமையா சொல்லிக் கொடுத்தார். 47 வயதில் கார் ஓட்ட கத்துக்கிட்டேன். சரி ஆட்டோ எடுக்கலாம்ன்னு பயிற்சி அளிச்ச தம்பிக்கிட்ட சொன்ன போது, அந்த தம்பி தான் ‘ஆட்டோ வேண்டாம், ஆம்னி வண்டி எடுத்துக்கோங்க. உங்க வேலைக்கு இது சரியா இருக்கும்’னு ஐடியா கொடுத்தாங்க.
என்னுடைய கஷ்டம் எல்லாம் அவங்களுக்கு நல்லாவே தெரியும். மேலும் எனக்குன்னு நல்லது கெட்டது சொல்லவும் ஆள் இல்லை. அந்த தம்பி சொன்னத வச்ச ஆம்னி கார் வண்டி எடுத்தேன். ஆரம்பத்தில் ஆறு மாசம் டிரைவர் வச்சுதான் ஓட்டினேன். ஆனால் சரியான வருமானம் இல்லாத காரணத்தால, கடனாயிடுச்சு. டிரைவருக்கு சம்பளம் கொடுக்க கூட வியாபாரம் இல்லை. ஆனாலும் கடன் வாங்கி, பைனான்ஸ்ல எடுத்து சம்பளம் கொடுத்து பண்ணிட்டு இருந்தேன்.
ஒரு கட்டத்தில் ரொம்பவே நெருக்கடியானது. அதனால் டிரைவரை நிறுத்திட்டேன். நானே வண்டி ஓட்ட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கடனை எல்லாம் அடைச்சேன். இப்ப எந்த பிரச்னையும் இல்லாம இருக்கேன். சைக்கிள் கூட எனக்கு ஓட்ட தெரியாது. முதல்ல ஸ்கூட்டி ஓட்டி பழகுனேன். இப்ப ஆம்னி வண்டி ஓட்டுறேன். வண்டி எடுத்து இப்ப மூன்று வருஷம் ஆச்சு. கடவுள் புண்ணியத்தில் இப்ப நல்லாவே இருக்கேன். எந்த அளவு கஷ்டப்பட்டேனோ அந்த அளவுக்கு நல்லா இருக்கேன். யாருடைய உதவியும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. தனியா வண்டி எடுத்துட்டு போறேன். தனியா வரேன்.
மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவ நான். எழுத படிக்க தெரியலினாலும், கணக்கு போடுவதில் நான் புலி. ஆனால், எல்லாம் தெரிஞ்ச பொண்ணுங்க ஒரு சின்ன விஷயத்தைக் கூட தைரியமா சந்திக்க முடியாம திணறுறாங்க. புருஷனே தப்பு செய்தால், முதலில் திருத்த பார்க்கணும். அப்படியும் திருந்தலைன்னா, உங்க வாழ்க்கையை தைரியமா வாழ கத்துக்கோங்க’’ என்கிறார் ‘ஆம்னி’ கிருஷ்ணவேணி.
Average Rating