கலை மூலம் மக்களுக்கு நல்லது செய்யணும்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 15 Second

ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதையும், ஏழையாக இருந்தவன் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாக மாறுவதையும் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம். அதே சினிமாவில் ஒரு பாடல் பாடியதன் மூலமாகவும் அல்லது ஒரு காட்சியில் இடம் பெற்றதன் மூலமாகவும் சிலரது வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சந்தன மேரி…’ பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றுள்ளார் நஞ்சியம்மா.

இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தப் பாடலுக்குப்பிறகு பல திரைப்படங்களுக்கும், ஆல்பம் பாடல்களுக்கும் பாடி வருவதோடு சில படங்களில் நடித்தும் வருகிறார்.

“13 வயதிலிருந்தே ஆட்டம் பாட்டம் மேல் பெரிய ஆசை. எங்க ஊரில் இழவுக்கும், கோயில் திருவிழாவுக்கும் என எல்லா நல்லது கெட்டதுக்கும் ஆடுவோம். அப்படி ஆட வரும் பெரிய, பெரிய ஆட்களை எல்லாம் போய் பார்ப்பேன். அவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் என் மனசுக்குள்ள வச்சுக்குவேன். அப்படித்தான் ‘சந்தன மேரி’ பாட்டைக் கண்டுபிடிச்சேன். அந்தப் பாட்டின் வரிகள் கல்யாணமான பிறகும் மறக்காம மனசிலேயே வச்சிருந்தேன்.

என் ஆசையை கணவரிடம் சொன்னபோது ‘இப்படி ஒரு ஆசைன்னா… நீ ஆடு போ’னு என் வீட்டுக்காரர் சொல்ல… நாங்க இரண்டு பேரும் ஆடுவோம்; பாடுவோம். எங்களுக்கு பத்து வருஷம் கழிச்சுதான் இரண்டு குழந்தைங்க பிறந்தாங்க. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், அவர், ‘நீ இங்கிருப்பதைவிட வெளியில போய் பத்து பேரோட ஆடி பாடி வா… அப்பதான் ஆளுங்களோட பலமாவ’ அப்படினு எங்க வீட்டுக்காரரு சொல்வார்.

குழந்தைகளை, ஆடு, மாடு, வீட்டை எல்லாம் அவங்க தான் கவனிச்சுகிட்டாங்க. வெளியூர் எல்லாம் போனா பத்து, பதினைந்து நாள் ஆகும். இப்படிதான் நாங்க ஒரு 24 பேர் குரூப்பாகி நாடகம், பாட்டுனு போயிட்டு இருக்கோம். அந்த சமயத்தில் அரசு விளம்பரங்கள், விழிப்புணர்வு பாடல்கள் பாட சொல்லி கேரளா அரசு மூலமாக வாய்ப்பு வந்தது. நாங்களும் ‘சாராயம் குடிக்க கூடாது’, ‘எல்லோரும் படிக்கணும்’னு… சமூக சிந்தனை நாடகங்கள் போட்டு இருக்கோம்.

அப்பதான் எங்க ஊர் பையன் ஒருத்தர்கிட்ட சச்சு சார் இந்த மாதிரி ஒரு அம்மா வேணும்னு கேட்டு இருக்காங்க. அந்த பையன் சொல்லி என்னைப் பார்க்க வந்தாங்க. அவருக்கு என் பாட்டு பிடித்து போக, சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்தார். நாடகத்தில் மைக் பிடிச்சு பாடி பழகியதால், எங்க பாடினாலும் பயமோ கூச்சமோ இருக்காது.

என் மனசில் பல ஆண்டுகளாக பதிந்து போன பாட்டை பாடினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த படத்திற்கு பிறகு சீனிவாசன் சார் படத்தில் பாடி இருக்கேன். இப்ப விஜிஷ் படம். நடிக்க கூப்டுறாங்க. அதில் விருப்பமில்லை. கலை மூலமா மக்களுக்கு நல்லது சொல்லிட்டே இருக்கணும்…” என்றார் அசல் புன்னகையோடு நஞ்சியம்மா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை தாக்குது கொப்புள காய்ச்சல்!! (மருத்துவம்)
Next post யாரையும் நம்பி நான் இல்லை! (மகளிர் பக்கம்)