குழந்தைகளை தாக்குது கொப்புள காய்ச்சல்!! (மருத்துவம்)
வருடந்தோறும் வீசுகிற புயலுக்குப் புதிது புதிதாகப் பெயர் வைப்பது போல, புயலையும் மழையையும் தொடர்ந்து மக்களைத் தாக்கும் நோய்களும் புதுப்புதுப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த வருடத் தொடர்மழையின் விளைவால், புதிய வகை கொப்புள நோய் ஒன்று குழந்தைகளை வேகமாகத் தாக்குவதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்நோய்க்கான காரணங்களுடன், சிகிச்சைகள் மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஜி.பாஸ்கர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக 2 முதல் 3 வயது குழந்தைகளுக்கு கை, கால், வாய் கொப்புள தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் காக்சாக்கி வைரஸ் ஏ டைப் 16’, என்ட்ரோ வைரஸ் 71’ என்ற வைரஸ்கள் காற்றின் மூலம் எளிதில் பரவுகின்றன. இதனால் பெரியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதில்லை.
சிறு குழந்தைகள் ஒருவருக்கொருவர் தொட்டு விளையாடிக் கொள்வதன் மூலம் ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நர்சரி பள்ளிகளில் பயிலும் குழந்தைகள்தான் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கு நோய் பரவ, 2 – 3 நாட்கள் ஆகலாம். 3 நாட்கள் காய்ச்சல் நிலையிலேயே, மற்ற குழந்தைகளுக்குப் பரவக்கூடும். திறந்தவெளிகளில் குழந்தைகளை மலம் கழிக்க வைக்கக்கூடாது. அதன் மூலமும் மற்ற குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும்.
3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல், தும்மல், இருமல் இருப்பதும், அதன்பின் காய்ச்சல் குறைந்து விரல் இடுக்கில், உள்ளங்கை, முழங்கை, முழங்கால், பிட்டப்பகுதி, பாதத்தின் மேற்பகுதி போன்ற பகுதிகளில் கொப்புளங்கள் வருவதும் இதன் அறிகுறிகள். வாய், உதடு, நாக்கின் உட்பகுதியிலும் வெள்ளை புண்கள் தோன்றும். கொப்புளங்கள் உடைந்து அதிலிருந்து வெளிப்படும் நீர் பட்டாலும் மற்ற பகுதிகளுக்கு பரவிவிடும். வாயில் கொப்புளங்கள் ஏற்பட்டு, தொண்டைவலியால் சாப்பிட முடியாமல் குழந்தைகள் அவதிப்படுவார்கள்.
சில குழந்தைகளுக்கு அரிதாக நரம்பு மண்டலப் பாதிப்பும் ஏற்படக்கூடும். மிகவும் சோர்வாகிவிடுவார்கள்.இது அலர்ஜி அல்லது சின்னம்மையாக இருக்குமோ என்று நினைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் தொற்றே இதற்குக் காரணம். நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. 5 நாட்களில் காய்ச்சல் படிப்படியாக குறைந்துவிடும். காய்ச்சலுக்கான பாரசிட்டமால், ஆன்ட்டி ஹிஸ்டமைன் (Anti histamine) மருந்துகள் கொடுத்து, காலமைன்’ லோஷன் தடவினால் போதும். ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை.
டீஹைட்ரேஷன் (Dehydration) ஏற்பட்டு நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதனால் நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.குழந்தைகளின் உடைகளை துவைத்து சுத்தமாக வைக்க வேண்டும். நகங்கள், கை இடுக்குகளில் அழுக்கு சேர விடாமல் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவச் செய்வது முக்கியம். அவர்களின் மலத்தில் இந்த வைரஸ் கிருமிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்து இருக்கும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும்போது காற்று மூலம் மற்ற
குழந்தைகளுக்கும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால் வெளியே செல்லும் போது குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவித்து, வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.”
Average Rating