குறும்புத்தனமா? குறைபாடா? குழந்தைகளை பாதிக்கும் புதிய பிரச்னை! (மருத்துவம்)
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பிரதான நோயாக புற்றுநோய் மட்டுமே காட்டப்பட்டு வந்தது. புற்றுநோய்க்கு ஆளானவர்கள் இறந்து விடுவார்கள் என்பதை மட்டுமே அவை திரும்பத் திரும்பச் சொல்லி வந்தன. அதன் பின்னர் விரிவடைந்த பார்வையில் புதிய புதிய நோய்கள் மற்றும் அதன் தன்மைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்கள் ஒரு விழிப்புணர்வாகவும் அமைகின்றன.
குழந்தைகளுக்கு ஏற்படும் டிஸ்லெக்சியா எனும் கற்றல் திறன் குறைபாட்டை மையப்படுத்தி அமீர்கான் இயக்கிய `தாரே ஜமீன்பர்’ படம் மேற்சொன்னதற்கு அற்புதமான ஓர் உதாரணம். அது போலவே குழந்தைகளுக்கு ஏற்படும் ‘Attention Deficit Hyper Activity Disorder’ (ADHD) எனும் கவனித்தல் திறன் குறைபாடு மற்றும் அதீத இயக்கப் பிரச்னையை மையப்படுத்தி வெளியாகிறது பசங்க 2’.
குழந்தைகள் சந்திக்கும் மன நலப் பிரச்னைகளில் பிரதானமாக இருக்கும் இந்த ADHD பற்றி விளக்குகிறார் மன நல மருத்துவர் ஜெயக்குமார். குழந்தையென்றால் குறும்புத்தனங்களுடன் துறுதுறுவென இருக்க வேண்டும் என்பது இயல்புதான். இருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைக் கடந்து விட்டால் பிரச்னைதான். உங்கள் குழந்தை சொன்ன பேச்சைக் கேட்கவில்லையா? கால் ஒரு இடத்தில் நிற்காமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதா? எந்த வேலையிலும் கவனம் செலுத்துவதில்லையா? ஒரு வேலையை முடிக்காமலேயே அடுத்த வேலையை செய்ய ஆரம்பித்து விடுகிறதா? குழந்தையை அடிப்பதற்கும், திட்டுவதற்கும் முன் ஏன் உங்கள் குழந்தை இவ்வாறாக நடந்து கொள்கிறது என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டும்.
குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்’ என்று ஆறுதலடைந்து விடக்கூடாது. இது ADHDன் அறிகுறியாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. Attention deficit என்றால் கவனித்தல் திறன் குறைபாடு. சொல்வதை உள்வாங்காமல் அவர்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். Hyper Activity என்றால் எந்நேரமும் துறுதுறுவென இயங்கிக் கொண்டிருப்பது. சூட்டிப்பு என்பதைத் தாண்டியும் அதீதமாக இயங்குவது. இப்படியான அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே ADHDஐ உறுதி செய்ய முடியும். குழந்தையின் 3-6 வயதில்தான் இதற்கான அறிகுறிகள் தெரிய வரும்.
ADHD பிரச்னைக்கு ஆளாகியுள்ள குழந்தைகள் மூன்று வகைக்குள் அடங்குவார்கள். முதலாவது கவனித்தல் திறன் குறைபாடு (Attention Deficit) மட்டும் இருத்தல். இரண்டாவது ஒரு நிலையில் இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் அதீத இயக்கம் (Hyper Activity) மட்டும் இருத்தல், இவை இரண்டும் ஒருசேர இருப்பது மூன்றாவது வகை. பெரும்பாலானவர்கள் மூன்றாவது வகை பாதிப்புக்குள்ளானவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது.
கரு உருவாகும்போது மூளை உருவாக்கத்தில் ஏற்படும் கோளாறுதான் இப்பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். கருவுற்ற பிறகு ஆல்கஹால், சிகரெட் பயன்படுத்தினாலும் இப்பிரச்னை ஏற்படும். மரபியல் ரீதியாகவும் இப்பிரச்னை வரலாம். சுற்றுப்புற சூழ்நிலைகள் கூட காரணமாகலாம். குழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்து தாயின் அரவணைப்பில் இருக்கும்போதும் தாய் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும்.
பெற்றோர்களுக்கு இடையேயான சண்டை, போதுமான கவனிப்பின்மை ஆகியவை குழந்தையை மனோரீதியாக பாதிக்கும். மூளையில் நிகழும் ரசாயன மாற்றம் மற்றும் டோபமைன் எனும் ரசாயனம் குறைவதாலும் இப்பிரச்னை ஏற்படலாம். மேலும் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தை மற்றும் குறை மாதக் குழந்தைகளுக்கு இப்பிரச்னை வரலாம். உணவுகளில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் மற்றும் சாக்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளாலும் இப்பிரச்னை ஏற்படலாம். இதற்கான முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
கவனித்தல் திறன் குறைபாடு காரணமாக யார் பேசுவதையும் உள்வாங்க மாட்டார்கள். விளையாட்டின் போது கூட தனக்கான சுற்றுக்காக காத்திருக்காமல் முந்திக் கொண்டு விளையாடுவார்கள். இதனால் நண்பர்கள் கிடைக்காமல் சக வயதினரால் புறக்கணிக்கப்படலாம். இப்பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு கூடவே வேறு சில மன நலம் தொடர்பான பிரச்னைகள் இருக்கலாம். அதனால் திருடுதல், பொய் சொல்லுதல், வன்முறைகளில் ஈடுபடுதல் என தவறான பாதைக்குச் செல்வார்கள். ஆரம்பத்திலேயே இப்பிரச்னையை கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் தவறான பாதையில் பயணிக்க நேரிடும். இக்குழந்தைகளுக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.
இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தும் சைக்கோ தெரபி மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வது அவசியம். குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தார் குழந்தையை எப்படி வழிநடத்த வேண்டும் என்பன சைக்கோ தெரபி மூலம் கற்றுத் தரப்படும்.
இப்பிரச்னையை முறையாகக் கையாண்டு குணப்படுத்த வேண்டும். இல்லையெனில் வளர்ந்து பெரியவர்களானாலும் இந்நிலை தொடரும் அபாயம் இருக்கிறது. இதை குணப்படுத்தி விட்டால், இவர்களுக்கு இருக்கும் Hyper Activity எனும் அதீத இயக்கத் திறன் காரணமாக இவர்களால் பல துறைகளில் கோலோச்ச முடியும்’’ என்கிறார் ஜெயக்குமார்.
Average Rating