என் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 41 Second

சென்னை மயிலாப்பூர் கபாலி கோயிலை சுற்றி பல உணவு கடைகள் உள்ளன. அதில் மிகவும் முக்கிய அடையாளம் சாந்தி அக்கா பஜ்ஜி கடை. மயிலாப்பூரில் காலம் காலமாக வசித்து வருபவர்களுக்கு சாந்தி அக்காவை தெரியாமல் இருக்காது. நெற்றி நிறைய பொட்டு, வாய் நிறைய சிரிப்புடன் வாடிக்கையாளர்களை இவர் வரவேற்கும் விதம்தான் இந்த 24 ஆண்டு காலமாக இவரை தனித்து காட்டியுள்ளது. கபாலி கோயில் தேர் நிற்கும் இடத்தில் அமைந்திருக்கும் இவரின் பஜ்ஜி கடையில் எப்போது போனாலும் சூடான பஜ்ஜி, வடை கிடைப்பதுதான் கூடுதல் ஸ்பெஷாலிட்டி.

‘‘நான் பிறந்து வளர்ந்தது ஏன் வாக்கப்பட்டது கூட மயிலாப்பூர்தான். அப்பா பி.டி.சியில் போர் மேனாக வேலைப்பார்த்தார். நான் பெரிய அளவில் எல்லாம் படிக்கல. எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். 18 வயசானதும் எங்க வீட்டில் எனக்கு கல்யாணம் செய்து வச்சிட்டாங்க. கணவருக்கு டிரைவர் வேலை. கார் மற்றும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

எனக்கு மூணு பெண் குழந்தைகள். 18 வயசில் கல்யாணமானதால், 22 வயதிற்குள் மூணு குழந்தைகளும் பிறந்துட்டாங்க. குடும்பம் பெரிதானதும் என் கணவர் ஒருவரின் வருமானம் போதவில்லை. நானும் பெரிசா படிக்கல, அதனால் ஒரு நிறுவனத்திற்கு சென்று வேலைப் பார்க்க முடியாது. மேலும் பசங்க எல்லாம் சின்ன வயசு என்பதால், அவர்களை நாள் முழுக்க விட்டுவிட்டு போக முடியாது.

ஆனால் என் மூலமாக ஏதாவது ஒரு சம்பாத்தியம் வேண்டும்ன்னு நினைச்சேன். அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை செய்யலாம்ன்னு முடிவு செய்து, துணி பிசினஸ் செய்ய ஆரம்பிச்சேன். கடையில் மொத்த விலைக்கு பிளவுஸ் மற்றும் பாவாடை எல்லாம் வாங்கி வந்து எங்க ஏரியாவில் விற்க ஆரம்பிச்சேன். அப்புறம் வீட்டிலேயே காலையில் டிபன் கடை போடலாம்ன்னு நினைச்சேன்.

அதனால் வீட்டில் காலை மட்டும் இட்லி தோசை சட்னி சாம்பார்ன்னு சிறிய அளவில் ஆரம்பிச்சேன். அப்ப கேஸ் அடுப்பு எல்லாம் கிடையாது. விறகு அடுப்பு தான். அதில் தான் இட்லி தோசை எல்லாம் செய்வேன். இதனால ஒரு வருமானம் கிடைச்சது, பசங்களையும் பார்த்துக் கொள்ள முடிந்தது’’ என்றவர் பஜ்ஜி கடை போட்டதற்கான காரணத்தை விவரித்தார். ‘‘எங்க சொந்தக்காரங்க அண்ணன் ஒருவர் மாலை மட்டும் பஜ்ஜி கடை போடுவார்.

ஆனா அவர் தினமும் போடமாட்டார். கோயில் விசேஷம் மற்றும் திருவிழா அல்லது எப்போது நல்லா விற்பனையாகும் அன்று மட்டும் தான் கடை போடுவார். அவரிடம் நான் பஜ்ஜிக்கு சட்னி அரைத்து தரேன், கடையிலும் சின்ன சின்ன உதவி செய்றேன், எனக்கு சிறிய அளவில் சம்பளம் மாதிரி கொடுங்கன்னு கேட்டேன். அவரும் சரின்னு சொல்ல அப்படித்தான் எனக்கும் பஜ்ஜி கடைக்குமான உறவு ஆரம்பமானது. ஆனால் ஒரு வாரத்தில் இரண்டு நாள் போட்டா ஐந்து நாட்கள் போடமாட்டார். அதனால எனக்கு அதில் பெரிய அளவில் சம்பாத்தியம் கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில் தான், அவர் போடாத மற்ற நாட்களில் நாம் ஏன் போடக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அவரிடம் என் விருப்பத்தை சொன்னேன். நீங்க போடாத நாட்களில் நான் கடைப் போடுறேன்… அதன் மூலம் எனக்கு ஒரு வருமானம் கிடைக்கும்ன்னு சொன்னேன். அவரும் சம்மதித்தார். நாளடைவில் அவர் திருமணமாகி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அவருக்கு பிறகு நானே அந்த கடையை எடுத்து நடத்த ஆரம்பிச்சேன்.

அப்படித்தான் என்னுடைய பஜ்ஜி கடை ஆரம்பமாச்சு. அப்ப என்னுடைய மூணாவது பொண்ணு ஐந்து மாச கைக்குழந்தை. அவளை வீட்டில் விட்டுவிட்டு நான் மாலையில் கடை போட ஆரம்பிச்சேன். இப்ப அவளுக்கு 24 வயசாகுது. திருமணமாயிடுச்சு’’ என்றார். ‘‘இப்பதான் இந்த வண்டி எல்லாம். ஆரம்பத்தில் ரோட்டில் தான் அடுப்பு வச்சு உட்கார்ந்து பஜ்ஜி போடுவேன். அதுவும் கபாலி கோயில் தேர் நிற்கும் இடத்தில் தான் போட்டு வந்தேன். அந்த அண்ணனோட கடையில் இருந்த போது எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியல.

ஆனா தனியா போடும் போது, முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் பயந்தா வியாபாரம் செய்ய முடியாது. வீட்டில் சமைக்கிறோம்… இதுவும் அதே போலத் தான்னு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடையை ஆரம்பிச்சேன். கபாலி, கற்பகாம்பாள் புண்ணியத்தில் வியாபாரம் நல்லபடியா நடந்தது. எல்லாரும் விரும்பி சாப்பிட்டாங்க. கடைக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் எல்லாம் அந்த அண்ணன் அப்படியே எனக்கு கொடுத்திட்டாங்க. பஜ்ஜி மற்றும் வடைக்கான மாவு மட்டும் தான் நான் அரைப்பேன்.

மாவு அரைக்கும் பதம் மற்றும் வெங்காயம், வாழைக்காய் நறுக்குவது எல்லாம் அந்த அண்ணனோட இருந்த போது கற்றுக் கொண்டேன். என் கடையில் சாப்பிட வராங்கன்னா என்னுடைய பொருள் தரமா இருக்கும். எல்லாவற்றையும் விட அவங்க கேட்கும் போது சூடா போட்டு தருவேன். நான் மொத்தமா மாவு கரைச்சு வச்சுக்கமாட்டேன். காரணம் மொத்தமா கரைச்சு வச்சிட்டா, வியாபாரம் ஆகலைன்னா அவ்வளவு மாவும் வீணாகத்தான் போகும்.

அதனால பஜ்ஜி தீர தீரத்தான் மாவினை கரைத்துக் கொள்வேன். அதே போல் பஜ்ஜியோ வடையோ ஏற்கனவே போட்டுவைக்க மாட்டேன். கேட்கும் போது தான் சூடா போட்டுத்தருவேன். என் கடைக்கு வரவங்க ‘சூடா போட்டு கொடுங்க, நாங்க இருந்து சாப்பிட்டு போறோம்ன்னு’ சொல்லி காத்திருந்து வாங்கி சாப்பிட்டு போவாங்க. ஆன்டி, அக்கா, அம்மான்னு அவங்க வாய் நிறைய கூப்பிடும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.

எவ்வளவு கவலை மனசில் இருந்தாலும், அந்த ஒரு சொல் எல்லாத்தையும் மறக்க செய்திடும். மேலும் இந்த நிமிஷம் வரை யாரும் என்னை மரியாதைக் குறைவா நடத்தியது இல்லை. என்ன… மழை காலத்தில் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். எப்ப மழை வரும்ன்னு தெரியாது. எண்ணெய் சட்டியில் ஒரு சிறு துளி தண்ணீர தெளித்தாவே… சடசடன்னு வெடிக்கும். மழை தண்ணீர் தெளித்தா… பல நாட்கள் அப்படி நடந்து இருக்கு.

பொருட்கள் எல்லாம் மழையில் நனைந்து வீணாகி போய்டும். அதனால மழைத்தண்ணீர் எண்ணெய் சட்டியில் விழாம இருக்க, அதற்கு மட்டும் ஒரு பெரிய குடை மாதிரி கட்டிக் கொள்வேன்’’ என்றவர் தற்போது ஒரு சிறு வண்டியில் கடையினை நடத்தி வருகிறார். ‘‘கீழே உட்கார்ந்து கடையை போட முடியல, மேலும் கோயில் தேரின் ஷட்டர் கொஞ்சம் பழசானதால… அங்க உட்கார கொஞ்சம் பயமா இருந்தது.

அதனால, அதற்கு எதிரே உள்ள இடத்தில் கடையை போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா அங்க பிளாட்பார்ம் இருப்பதால், சாலையில் உட்கார்ந்து கடையை போட முடியாது. ஒரு சின்ன வண்டி தயார் செய்தேன். ஒரு ஆட்டோவை கடனில் வாங்கி அதை டிபன் கடையா மாத்தினேன். எல்லாம் நல்லபடியா தான் போச்சு. வண்டி தயாரான நேரத்தில், கொரோனா… லாக்டவுன்னு சொல்லிட்டாங்க. கடையே போட முடியல.

இதை நம்பி தான் நான் கடனே வாங்கினேன். வண்டிக்கான கடன் ஒரு பக்கம்… என் பொண்ணுங்க கல்யாணத்திற்காக வாங்கிய கடன் மறுபக்கம்ன்னு என்னை ரொம்பவே அழுத்த ஆரம்பிச்சது. எப்படி இதை சரி செய்றதுன்னு ரொம்பவே திணறிட்டேன். இதை பத்தி நினைச்சு நினைச்சு… எனக்கு பிரஷர் அதிகமாகி உடல் நிலை சரியில்லாமல் போனது. அதில் இருந்து மீண்டு இப்பத்தான் மறுபடியும் கடையை போட ஆரம்பிச்சு இருக்கேன். இரவு ஏழு மணி வரை கடை போடலாம்ன்னு சொன்ன பிறகு தான் மறுபடியும் கடையை போட ஆரம்பிச்சேன்.

இப்ப ஒன்பதரை மணி வரை கடை இருக்கும். நடுவில் டிபனும் போட்டேன். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை… அதனால் இப்ப பஜ்ஜி, வடை, சுண்டல் மட்டுமே போடுறேன். ஒரு வருஷமா பெரிய அளவில் வியாபாரம் இல்லை… இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வியாபாரம் நல்லபடியா போகுது’’ என்றவர் தனி ஒரு மனுஷியாக இந்த கடையினை நடத்தி வருகிறார். ‘‘நான் ஆரம்பித்த போது நான் மட்டுமே கடையை நடத்தி வந்தேன். என் பொண்ணுங்க கொஞ்சம் பெரிசானதும், அவங்க உதவி செய்தாங்க. முதல் இரண்டு ெபண்களும் வீட்டு வேலை பார்த்துப்பாங்க.

என் மூணாவது பொண்ணுதான் என் கூடவே கடையில் இருப்பா. கடைக்கு செல்வது முதல், கடையில் பஜ்ஜி போடுறதுன்னு எல்லாமே அவள் செய்வாள். இப்ப மூணு பேருக்கும் கல்யாணமாயிடுச்சு. அவங்க குடும்பம் குழுந்தைங்கன்னு செட்டிலாயிட்டாங்க. கடைசி பொண்ணு மயிலாப்பூர் என்பதால்… அவதான் இப்பவும் நேரம் கிடைக்கும் போது, உதவியா இருக்கா. கடையில் ஒரு பையன மட்டும் உதவிக்கு வச்சிருக்கேன்.

அவங்களும் நிரந்தரமா இருப்பதில்லை. விலைவாசி அதிகமானதால… சம்பளமும் அதிகமா கேட்கிறாங்க. ஆனாலும் என்னால் முடிந்த வரை என் உடம்பில் தெம்பு இருக்கும் வரை இந்தக் கடையை நடத்துவேன். இந்த கடை தான் என்னுடை சந்தோஷம் எல்லாமே’’ என்றார் அதே புன்னகை மாறாமல் சாந்தி அக்கா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசாந்த் கொடுத்த ஷாக்…பரபரப்பு பின்னணி!! (வீடியோ)
Next post கடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்! (மகளிர் பக்கம்)