தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… !! (மகளிர் பக்கம்)

Read Time:21 Minute, 56 Second

‘‘எந்தப் பெற்றோர் தன் மகனுக்கு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணை மனைவியாக்க சம்மதிப்பாங்க. ஆனால் என் மாமியாரும் மாமனாரும் சம்மதிச்சாங்க.. என்னை அவர்கள் மகனுக்கு மனைவியாக்க முழு மனசோடு சம்மதிச்சாங்க’’… என்ற பிரியங்கா ஒரு மாற்றுத்திறனாளி பெண்.

‘‘நம்ம குலதெய்வம் நொண்டிகருப்பன் சாமி தானேம்மா… அதுனால அந்த தெய்வமே நம்ம வீட்டுக்கு மருமகளா வருது”, இப்படித்தான் மாமா அத்தையிடம் சொல்ல.. அத்தையும் சம்மதிக்க.. அவர்கள் இருவருமாக என் பெற்றோரிடத்தில் பேசி, இருவீட்டார் ஆசீர்வாதத்தில்.. சுற்றமும் நட்பும் சூழ நடந்ததே எங்கள் திருமணம் என மேலும் பேச ஆரம்பித்த பிரியங்கா ஒரு வீல்சேர் யூசர் என்பதையும் தாண்டி, மிகச் சமீபத்தில்தான் தினகரன் என்கிற தினாவை காதலோடு கரம் பிடித்திருக்கிறார்.

‘‘எனக்கெல்லாம் கல்யாணம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. பிறக்கும்போது நான் நார்மல். 5 வயது இருக்கும்போது, விளையாட்டு ஆர்வத்தில் சுற்றுச்சுவரில்லாத மாடியின் மேல்தளத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில், கோமாவிற்குச் சென்றேன். 10 நாட்களுக்குப் பிறகே நினைவு திரும்பியது. அதன் பிறகே எனக்கு ஸ்பைனல் இஞ்சுரி என மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஸ்பைனல் கார்டில் உள்ள டி6 எலும்பு உடைந்ததில் இடுப்புக்குக் கீழ் உணர்ச்சிகள் இல்லாமல் போனதோடு, இயற்கை உபாதைக்கான உணர்வுகளையும் இழந்தேன். என்னால் நிரந்தரமாக நடக்க முடியாமல் போனது.

அதன் பிறகு அப்பாவும் அம்மாவும் என்னை கண்ணுக்குள் வைத்து பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள். அப்பா தினமும் டூவீலரில் அழைத்துச்சென்று, பள்ளி வகுப்பறையில் என்னை உட்கார வைத்துவிட்டுச் செல்வார். அதுவரை ஹோம் டியூசன் எடுத்துக்கொண்டிருந்த அம்மா, பிறகு எனக்காகவே நான் படித்த தொடக்கப் பள்ளியில் ஆசிரியராய் சேர்ந்தார். ஐந்தாம் வகுப்புவரை அம்மாவின் கண்காணிப்பில் அதே பள்ளியில் படித்தேன். 6ம் வகுப்பில் இருந்து வேறு பள்ளி.

அங்கே என் வகுப்பு மூன்றாம் தளத்தில் இருந்தது. அப்பா தினமும் என்னை மாடிவரை தூக்கிச்சென்று வீல் சேரில் உட்கார வைத்துவிட்டு வேலைக்குப் போய்விடுவார். அம்மா பள்ளியின் வாசலிலே எனக்காக தவம் கிடப்பார். 860 மதிப்பெண்கள் எடுத்து, 10ம் வகுப்பை முடித்த நிலையில், என் முதுகுத்தண்டுவடம் அதிகமாக வளையத் தொடங்கி இருந்தது. தொடர்ந்து பிஸியோ தெரபி, அறுவை சிகிச்சை என அவஸ்தைகள் தொடர, ஒரு வருடம் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதில் படிப்பு ஓராண்டு தடைபட்டது.

பிறகு +1ல் இணைய முயற்சித்தபோது, எந்தப் பள்ளியும் என்னை அவர்கள் மாணவியாக ஏற்கத் தயாராக இல்லை. என் பெற்றோர்களோ, கல்விதான் என் பிள்ளைக்கு நாங்கள் தரும் மிகப் பெரிய சொத்து. அதை எப்படியாவது கொடுத்தே தீருவோம் எனப் போராடி, நான் மேலே படிக்க ரொம்பவே முயற்சித்தார்கள். இந்த இடைவெளியில் அம்மாவின் அறிவுரையில், நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூன்று மாத கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் டிப்ளமோ படிப்பை அஞ்சல் வழியே படித்தேன். படித்து முடிக்கும்வரை புத்தகத்தை அம்மா அவர் கைகளில் பிடித்துக்கொண்டே என் முன்னால் அமர்ந்திருப்பார்.

பள்ளிகளில் எனக்கு இடம் கிடைக்காததால், டுட்டோரியலில் என்னைச் சேர்த்து, நேரடியாக +2 படிக்க வைத்தனர். ஹோம் டீயூஷன் மூலம் வீட்டில் இருந்து படித்தேன். +2 இறுதித் தேர்வின்போது, பெரியம்மை வேறு எனக்கு போட்டது. வெளியில் போகக் கூடாதென சுற்றி இருப்பவர்கள் சொல்ல, அம்மாவோ. ‘என் பொண்ணு ரொம்ப நல்லா படிச்சுருக்கா. விட்டால் தேர்வை சிறப்பா எழுதுவாள்’ என என்மீது நம்பிக்கைவைத்து, ஒரு வெள்ளை காட்டன் துணியால் என் முகம் மட்டும் தெரிய, மேலே சுற்றி என்னை அப்படியே தூக்கிச் சென்று தேர்வு அறையில் தனியாக அமர வைத்து தேர்வை எழுத வைத்தார். 8 பாடத்தையும் இதே நிலையில்தான் எழுதி, +2 பொதுத் தேர்வில் 1003 மதிப்பெண்கள் பெற்றேன்.

பிறகு கல்லூரியில் படிக்கும் ஆசையும்வர, பாரதியார் பல்கலைக் கழகம் மூலம் தொலைதூரக் கல்வியில் பி.எஸ்.ஸி. ஐ.டி. படித்து முடித்தேன். எம்.எஸ்.ஸி. ரெகுலர் கல்லூரியில் படிக்கும் விருப்பத்தில், பல கல்லூரிகளை அணுகியதில், ஐ.டி வகுப்புக்கான வகுப்பறை ஒரு பக்கத்திலும், லேப் வேறு ஒரு பக்கமும் இருந்ததால், என்னால் அதை எதிர்கொள்ள முடியாத சூழல் இருந்தது. ரெகுலர் கல்லூரியில் படிக்கும் கனவு நழுவியது. இதற்கு நடுவில் அரசு தேர்வு மற்றும் வங்கித் தேர்வுகளை தொடர்ந்து எழுதியதில், பாரதியார் பல்கலைக் கழகத்திலே அசிஸ்டென்ட் டெக்னிக்கல் அலுவலர் (ATO) வேலை கிடைக்க, அதே பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.ஸி. ஐடி படித்துக்கொண்டே பணியாற்றத் தொடங்கினேன்.

இந்த நிலையில்தான் கோவை கங்கா மருத்துவமனையில் நடந்த டிசம்பர்-3 மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தேன். அங்குதான் தினகரன் என்னை கவனித்திருக்கிறார். டி-3 நண்பர்கள் இணைந்து வாட்சப் குரூப் ஒன்றை தொடங்கினோம். அதில் இருந்த என் எண்களைத் தேடிக் கண்டுபிடித்து என்னிடம் குறுஞ் செய்தியில் அவர் பேச, முதலில் நட்பாக ஆரம்பித்து, கொஞ்ச நாளில் அவரின் விருப்பத்தை என்னிடத்தில் தெரிவித்தார்.

கண்டிப்பாக இது நடக்க வாய்ப்பில்லை என சுத்தமாக மறுத்துவிட்டேன். தொடர்ந்து அவர் என்னை வலியுறுத்த, இருவீட்டு பெற்றோர் சம்மதமின்றி நடப்பதற்கான சாத்தியமில்லை என ஒதுங்கினேன். ஆனால் தினகரன் என்னை விடவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியவர், முதலில் அவரின் பெற்றோர் சம்மதத்தைப் பெற்று, அவரின் பெற்றோர் மூலமாகவே எனது பெற்றோரிடத்திலும் பேசினார்.

அதன் பிறகே எல்லா பெண்களைப்போல நார்மல் மண வாழ்க்கையை என்னால் எதிர்கொள்ளமுடியுமா? என்ற சந்தேகத்தில் என் பெற்றோர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் என்னை முழுமையாகப் பரிசோதித்தார்கள். இடுப்புக்கு கீழ் மட்டுமே பிரியங்காவிற்கு சென்சேஷன் இல்லை. மற்றபடி எல்லாப் பெண்களைப்போல் அவர் நார்மல்தான்.

கண்டிப்பாக அவரால் மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியும் என என் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அதன் பிறகே தினகரனை மணம் முடிக்க என் பெற்றோர் சம்மதித்தார்கள். இத்தனையும் எப்படி நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரே வாரத்தில் எங்கள் நிச்சயதார்த்தம்.. பிறகு திருமணம் என கொரோனா நேர குளறுபடிகளையும் தாண்டி, எதிர்பாராத பல திருப்பங்கள் என் வாழ்க்கையில் நடந்து முடிந்தது.

அன்புதானே வாழ்க்கை. அதுதானே இந்த உலகத்தில் எல்லாம். அன்புதானே வாழ்க்கையை அர்த்தப்படுத்தும், அழகாக்கும்.. என்றவர், படித்து முடிக்கும்வரை பெற்றோரைச் சுற்றியே வாழ்ந்தேன். படிப்பு முடிந்த நிலையில், வேலை, வீடு என ஒரே மாதிரியாக நகர்ந்த என் வாழ்க்கையில்.. ஏதோ ஒரு இடைவெளியை நான் உணரத் தொடங்கியபோது, அதை என் பெற்றோரிடத்தில் வெளிப்படுத்தவும் எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் அது என்னை ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஃபுல்லாக மாற்றியது. இந்த நிலையில்தான் தினகரன் என் வாழ்க்கையில் நுழைந்தார்.

எனக்கு இப்போது இரண்டு அம்மா இரண்டு அப்பா. அத்தையும் மாமாவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார்கள். முகமெல்லாம் பூரிக்கிறார் பிரியங்கா… என்னைப்போல் வீட்டுக்குள் முடங்கிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இப்படியொரு மணவாழ்க்கை, அன்பான கணவர், அரவணைக்கும் மாமனார், மாமியார், கூடப்பிறந்த பிறப்பு மாதிரி அன்பான அவரின் சகோதர, சகோதரி உறவுகள்..

இத்தனையும் நினைச்சுப் பார்த்தா ஒரு மேஜிக் மாதிரி இருக்கு. இந்த நிமிஷம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியிருக்கு. கூடவே நிறைய மாற்றங்களும். அம்மாவும் அப்பாவும் எனக்காக செய்த தியாகங்களை இப்போது தினகரன் எனக்காகச் செய்கிறார். ஆனால் அதில் காதல் நிறைஞ்சிருக்கு’’ என்ற பிரியங்கா தன் கணவர் தினகரனை காதலோடு பார்க்கிறார்.

பிரியங்காவைத் தொடர்ந்து பேசிய தினகரன்.. ‘‘என் சொந்த ஊர் சிவகாசி. வீட்டில் நான்தான் மூத்தவன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. சென்னை சாஸ்தா பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் படித்த நிலையில், வேலைதேடி கோவை சென்றேன். அங்கு ஜெகதீஸ் என்கிற மாற்றுத்திறனாளி நண்பனை சந்திக்க நேர்ந்தது. அவனைப் பார்க்கும்வரை, நான் வீல்சேரில்கூட யாரையும் நேரில் பார்த்ததில்லை. அதுவும் தன்னால் சுயமாக நகரவே முடியாத, கை, கால்களை அசைக்க முடியாமல், படுக்கையிலே நிரந்தர மாற்றுத்திறனாளியாய், என் வயதில் ஒருவனை பார்த்தபோது.. என் மனசு என்னவோ செய்தது.

என்னடா இது வாழ்க்கை.. இப்படியும் ஒரு அவஸ்தை.. இது மாதிரி வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களும்.. அவர்களுக்கான உறவுகளும் நம்மோடு இருக்கிறார்களே என்ற நிதர்சனம் என் மனதை என்னவோ செய்தது. தொடர்ந்த நாட்களில் நண்பன் ஜெகதீஸ் உடனான என் நட்பு நெருக்கமாகிப் பலப்பட, அவனின் பெற்றோர், நண்பர்கள் என பலரும் எனக்கும் நட்பானார்கள். தினமும் அவனைச் சந்திக்கவும், வார இறுதியில் அவனை வீல்சேரில் அமர்த்தி ஊர் சுற்றவும் தொடங்கினேன். எனக்கென யாருமற்ற கோவையில், ஜெகதீஸால் என் நட்பு வட்டம் மேலும் மேலும் விரிவடைந்தது.

கோவை கங்கா மருத்துவமனையில் டிசம்பர்-3 மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சிக்கு நண்பன் ஜெகதீசுடன் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் பலரும் மேடையில் தங்களை அறிமுகப்படுத்தி, எவ்வாறு தனக்கு இந்த நிலை வந்தது என்பதை வெளிப்படுத்தும்போது, பலரும் கண்கலங்கி அழுதார்கள். அப்போதுதான் பிரியங்காவும் வீல்சேரில் மேடையேறினார்.

அவருக்கு நேர்ந்த விபத்தை.. அவர் கடந்த வலிகளை.. முகம் மாறாத புன்னகையுடன் சிரித்தவாறே அவர் வெளிப்படுத்த, பூ போன்ற அவரின் குழந்தை முகம் அன்று முழுவதும் என் நினைவை விட்டு நீங்கவில்லை. என் மண்டைக்குள் மணி அடிக்க.. மனசு பிரியங்காவை சுற்றியது. மீண்டும் ஒரு மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சியில் பிரியங்காவைப் பார்க்கிறேன். ஆனால் பிரியங்கா பெரும் கூட்டத்திற்கு நடுவே நிச்சயமாக என்னை கவனிக்கவில்லைதான். நானோ, குணா படத்தில் வந்த கமலாக ஒரு பக்தனாய் மாறி, ‘பார்த்தவிழி பார்த்தபடி’ நின்றேன்.

பொது நிகழ்ச்சிகளில் நான் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு தொடர்ந்து உதவிவருவதை பிரியங்காவும் கவனித்திருக்கிறார். வாட்ஸ்ஆப் குழு மூலமாக அவரின் எண்களை கண்டுபிடித்து என் விருப்பத்தை சொன்னபோது, ஆரம்பத்தில் சுத்தமாக மறுத்து ஒதுங்கினார். அவரோடு எப்போதும் அவர் பெற்றோர் உடனிருப்பார்கள் என்பதால், பிரியங்காவிடத்தில் பேசும் வாய்ப்பே எனக்குக் கிடைக்காது. பார்வையால் பார்த்து, குறுச்செய்திகளில் மட்டுமே எனது அன்பை அவருக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.

இந்தநிலையில், பிரியங்காவின் பெற்றோரையும் அணுகியும் எனது விருப்பத்தை தெரிவிக்க, அவர்களோ, எங்கள் மகளின் உடல்ரீதியான பிரச்சனை உனக்கு தெரியாது தம்பி. உன்னால் கடைசிவரை அவளைப் பார்த்துக்கொள்வது என்பது கடினம். அவசரப்பட்டு எதையும் யோசிக்காதே எனச் சொல்லி மறுத்தார்கள்.

பிரியங்கா மாற்றுத்திறனாளியாக மாறிய நொடிமுதல்.. தங்கள் மகளை கண்ணுக்குள் வைத்து பார்த்தவர்கள் அவர்கள். பிரியங்கா பெற்றோர் சம்மதத்துடனே அவரைக் கரம்பிடிக்க வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தேன். நானும் பிரியங்காவை நன்றாகப் பார்த்துக்கொள்வேன் எனும் நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டுமெனில், அதை என் பெற்றோர் மூலமாகத்தான் சொல்ல முடியும் என்பதில் உறுதியானேன்.

என் அப்பா எனக்கு எப்போதும் ஒரு நண்பன் மாதிரி. என் அம்மாவும் அப்படித்தான். எங்கள் குடும்பத்தில் எந்த விசயத்தையும் நாங்கள் வெளிப்படையாக ஜாலியாகவே பேசிப் பகிர்ந்துகொள்வோம். இருந்தாலும் அம்மாவைவிட அப்பா எந்த விசயத்தையும் மிக எளிமையாக எதார்த்தமாகப் புரிந்துகொள்வார். அப்பாவிடத்தில் இதை தெரிவிப்பதில் எனக்குத் தயக்கமில்லை. எனவே முதலில் என் விருப்பத்தை அப்பாவிடம் சொல்லி, பிரியங்காவால் நடக்க முடியாது என்பதையும் தெரிவித்தேன்.

‘சுத்தமாக அந்தப் பெண்ணால் நடக்க முடியாதா’ என்று மட்டும்தான் அப்பா கேட்டார். வேறு எதுவும் என்னைக் கேட்கவில்லை. பிரியங்காவுக்கு ஏற்பட்ட நிலை குறித்த முழு விவரத்தையும் அவரிடத்தில் நான் தெரிவித்தேன். ‘சரி பார்த்துக்கலாம் விடு’ என்று மட்டுமே அப்பா அப்போது சொன்னார். தொடர்ந்த நாட்களில், என் உறுதியை பார்த்து, பிரியங்காவின் எண்களைக் கேட்டு வாங்கினார். பிரியங்காவிடமும் தொலைபேசியில் பேசியவர், அவரது விருப்பத்தையும் கேட்டுள்ளார்.

‘அம்மா, அப்பா சம்மதித்தால் எனக்கும் சம்மதம்’ என பிரியங்கா சொல்ல.. அந்த நொடி.. என் வாழ்க்கையில் நான் அத்தனை மகிழ்ச்சியை பார்த்ததில்லை. இந்த பிரபஞ்சம் மொத்தமும் எனக்காகவே தோன்றியதுமாதிரி.. என் மனசு ஜிவ்வென உயர உயர பறக்க.. நான் அடைந்த அந்த மகிழ்ச்சியை இங்கே வெளிப்படுத்த எனக்குத் தெரியவில்லை என்கிறார் அந்த நொடிகளின் நினைவுகளில் மூழ்கி.

அப்பா இந்த விசயத்தை என் அம்மாவிடம் அப்போதுவரை சொல்லவில்லை. ‘பெண்ணால் நடக்க முடியாது என்பதை சமயம் பார்த்து நானே அம்மாவிடம் சொல்கிறேன்’ என்று மட்டும் என்னிடத்தில் தெரிவித்தார். அப்பா மூலமாகவே மெல்ல மெல்ல விசயம் அம்மாவுக்கும் தெரிய, முதலில் தயங்கினாலும், பிறகு என் விருப்பத்தை மதித்து அம்மாவும் அங்கீகரித்தார். ‘கடைசிவரை அந்தப் பெண்ணை நீ பத்திரமா பார்த்துக்கணும் சாமி’ என்று மட்டுமே அம்மா என்னிடத்தில் அழுத்தமாய் சொன்னார் என்ற தினகரன், தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்ல, ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே’ என்ற பாடலே நம் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

நினைத்தது போலவே, என் பெற்றோர் சம்மதித்த பிறகே பிரியங்கா வீட்டின் சம்மதத்திற்காகவும் காத்திருந்தேன். பிரியங்காவின் பெற்றோரை நேரில் சந்தித்த என் பெற்றோர். எங்கள் திருமணம் தொடர்பாகப் பேசி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க, எங்களின் திருமணம் முடிவானது. திருமணத்திற்குப்பின் எங்கள் இருவரின் தனிக் குடித்தனம் மிகவும் சிறப்பாகப் போகிறது.

காலையில் எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து.. பிரியங்காவையும் தயார்படுத்தி.. அவரின் அலுவலகத்தில் அவரை விட்டபிறகு என் வேலைக்கு நான் செல்கிறேன் என்றவர், வாழ்க்கை ரொம்பவே அர்த்தத்தோடு நகர்கிறது என முடித்தார்.

தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை மதிக்கும் ஆகச் சிறந்த பெற்றோர்களும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அந்த நொண்டிக் கருப்பன் சாமியை விட உயர்ந்தவர்கள்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” !! (அவ்வப்போது கிளாமர்)
Next post அக்கா கடை – இந்தக் கடை தான் எங்களின் வாழ்வாதாரமே! (மகளிர் பக்கம்)