தூக்க-விழிப்புக் கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 59 Second

நல்ல உறக்கம் எல்லோருக்கும் மிகவும் அவசியம். அதுவும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது பெற்றோருக்குத் தெரிந்த ஒன்றே. பெரும்பாலான குழந்தைகள் அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கோ, வழக்கமாகவே சரியான, நிம்மதியான தூக்கமின்றி தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இவ்வாறு, குழந்தையின் தூக்க நேரத்தையும் தரத்தையும் பாதித்து அவர்களின் ஆரோக்கியத்தையும் செயல்பாடுகளையும் முடக்கினால், அது தூக்க-விழிப்புக் கோளாறுகளாக இருக்கலாம். இதில் பல வகைகள் உள்ளன.

சரியான தூக்கம் இல்லாமையால் ஏற்படக் கூடும் விளைவுகள் குறித்துப் பார்ப்போம்.
களைப்பு / சோர்வு
பள்ளியில் ஏதேனும் ஒரு வேலையில்
கவனம் செலுத்த முடியாமல் போவது
ஏதேனும் செயலைச் செய்யும் போதே
தூங்கி விடுவது
அடிக்கடி மாறும் மனோநிலை (Mood swings )
அதிக எரிச்சல், கோபம்
நடத்தைக் கோளாறுகள் (Behavioural problem)
அடிக்கடி பகலில் தூங்குவது
காலையில் எவ்வளவு எழுப்பியும்
விழித்துக்கொள்ள முடியாதது.

தூக்கம் சரியாக இல்லாமலிருந்தால், அது குழந்தையின் பகல் பொழுது செயல் திறனை நேரடியாகப் பாதித்து, பள்ளிப் படிப்பையும் பாதிக்கக் கூடும். அதோடு, குழந்தையின் சமூகத்திறன், எடை, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தையும் பாதித்து விடும். உறக்கக் கோளாறு குழந்தைக்கு இருந்தால், அது எதிர்காலத்தில் மனநலப் பிரச்னை ஏற்படுவதற்கு சாத்தியக் கூறாக அமைவது மட்டுமின்றி, அதுவே பல மனநல மற்றும் உடல்நலப் பிரச்னையின் முக்கிய அறிகுறியாகவும் இருக்கிறது.

குழந்தைக்கு தூங்குவதில் பிரச்னை இருக்குமெனில், அதற்கு வேறு உடல்நலப் பிரச்னையோ (நுரையீரல் பிரச்னை, நரம்பியல் பிரச்னைகள்…) அல்லது மனப் பிரச்னையோ (எ.டு. மனச்சோர்வு, போதைப் பொருள் அடிமை) காரணமாக இருக்கக் கூடும்.
இப்போது குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும் 5 முக்கிய பிரச்னைகள் குறித்துப் பார்ப்போம்.

போதிய தூக்கமின்மை ஒவ்வொரு வயதினருக்கும் அவா்களின் மரபணுக்கேற்ப உறங்கும் நேரம் மாறுபடும். பொதுவாக, மழலையருக்கு 11-13 மணிநேரத் தூக்கமும், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு 10-11 மணிநேரத் தூக்கமும் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் உரைக்கின்றனர். இப்போதைய டீனேஜினர், பல்வேறு காரணங்களினால் (கணினி, இரவுநேர பார்ட்டி, இணையதளம்) தங்கள் தூக்கத்தை இழக்கின்றனர் என்பது கவலைக்குரிய விஷயம்.

இரவில் கண் விழித்தல்

எல்லாக் குழந்தைகளும் பிறந்து ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அக மற்றும் புற தூண்டுதலை அதிகம் உணரக் கூடும். இதனால், இரவு திடீரென விழித்து அழக் கூடும். தன்னைத் தானே சமாதானம் செய்யத் தெரியாததால், திரும்பவும் தூங்க வைக்க பெற்றோரின் உதவி தேவைப்படுகிறது. இது, அடிக்கடி இரவு ஏற்படுவதாலும் தூக்கம் கெடுகிறது.

பிரிவைக் குறித்த பதற்றம்

பொதுவாக 5 மாதக் குழந்தையாக இருக்கும் போதும், பின்னர் 2-3 வயதிலும், பிரிவைக் குறித்த பயம் அதிகம் இருக்கும். இதனால் இவர்கள் பதற்றமாகி, பெற்றோர் கூட இல்லையெனில் தூங்க இயலாமல் போவதுண்டு.

தூங்குவதற்கு அடம் பிடித்தல்

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லாமல், குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் பிடிப்பதுண்டு. இங்ஙனம் எதிர்ப்பது இயல்பே. பெற்றோர் அதற்கு வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து தூங்க வைத்தால், இப்பிரச்னை தானாக சரியாகிவிடும்.

பராசோம்னியா (Parasomnia)

தூங்கிய பின்னர், தூக்கத்தைத் தொந்தரவு செய்யும் விதமாக இருக்கும் மனநலப் பிரச்னைதான் பராசோம்னியா.குழந்தைகளைப் பாதிக்கும் முக்கிய தூக்க-விழிப்புக் கோளாறுகள் குறித்துப் பார்ப்போம். தூக்கமே வராத பிரச்னை, அதிக தூக்கம்முதல் தூக்கத்தின் போது இடையூறாக இருக்கும் கெட்ட கனவு என எல்லாமே தூக்க-விழிப்பு கோளாறுகள்தான்.

தூக்கமின்மை (Insomnia)

தூங்குவதிலும், தொடர்ந்து தூங்குவதிலும் பிரச்னை மற்றும் விடியற்காலையிலேயே விழித்துக் கொள்வது போன்ற தொந்தரவுகள் பல வாரங்களாக தொடர்ந்து இருந்தால், அது தூக்கமின்மை கோளாறாக இருக்கலாம். குழந்தைகளிடையே காணப்படும் தூக்கமின்மை நோய், பெரியவர்களுக்கு காணப்படும் தூக்கமின்மை நோயிலிருந்து வேறுபட்டிருக்கும்.

இரு வயதினருக்கும் தூக்கமின்மைதான் முக்கிய அறிகுறி எனினும், இது ஏற்படுவதற்கான காரணிகள் வித்தியாசப்படும். குழந்தைக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பின், அதை மருந்துகள் கொடுத்து சரி செய்வதைக் காட்டிலும் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ற சிகிச்சை அளிப்பது முக்கியம். பொதுவாக இக்கோளாறு, தொடர் மனஉளைச்சல் ஏற்படுத்தும் நிகழ்விகள் (கூடுதல் வீட்டுப்பாடம், நண்பர்களுடன் பிரச்னை, ஆசிரியர் அடித்தது, புதுவீடு மாறுதல்…), வலி, தூக்கத்தை குறித்த பதற்றம் மற்றும் மனநலப்பிரச்னையினாலும் ஏற்படலாம்.

அறிகுறிகள்?

எரிச்சல், அடிக்கடி கோபப்படுவது, அதீத செயல்பாடு (Hyperactivity),

சோர்வான மனநிலை…

தூக்கமின்மை மனநோயின் அறிகுறிகளும், ஏ.டி.எச்.டி-யின் அறிகுறிகளும் ஒரே மாதிரி இருப்பதால், சில நேரங்களில் குழந்தைக்கு ஏ.டி.எச்.டி. உள்ளது என தவறாகவும் கணிக்கப்படலாம். நடத்தை பிரச்னையோ, ஏ.டி.எச்.டி. அறிகுறிகளும் காணப்பட்டால், குழந்தைக்கு ஏதேனும் தூக்கக் கோளாறுகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். சிகிச்சையளிக்கப்படாத தூக்கமின்மை கோளாறினால், மனஉளைச்சலும் மனச்சோர்வும் ஏற்படக் கூடும்.

அதீதத் தூக்கம் (Hypersomnia)

11 மணி நேரத்திற்கும் அதிகமான தூக்கம், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்புவதில் கஷ்டம், பகலில் களைப்பு, அடிக்கடி கட்டாயமாக, தகாத இடத்தில் கூட தூங்கி விடுவது, இதன் அறிகுறிகளாகும். இது குழந்தைளுக்குக் காணப்படுவது சற்று அரிது.

துயில் மயக்க நோய் (Narcolepsy)

இக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென தூங்கி விடுவார்கள். இப்படிப்பட்ட தூக்கம், சில நொடிகள் முதல் பல நிமிடங்கள் வரை நீடிக்கக் கூடும். இது வலிப்பு/மயக்கம் சார்ந்த வகை பிரச்னை கிடையாது. மூளை, தூக்க-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதால் இக்கோளாறு ஏற்படுகிறது. இதுவும் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களிடையில் அதிகம் காணப்படுகிறது.

அறிகுறிகள்?

அடக்க முடியாத அதீத பகல் நேரம் தூக்கம், அதீத சோர்வு, திடீரென தசைகள் தளர்ந்து போய்விடும், வாய் குழறுதல். உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில் இப்படி ஏற்படக்கூடும் (எ.டு. சிரிப்பது).தற்காலிகமாக ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு பேச முடியாமல் / அசைய முடியாமல் போய்விடும். இது தூங்க முற்படும் போதோ / விழிக்கும் தருணத்திலோ ஏற்படும் (Sleep Paralysis) பயமுறுத்தும் தெளிவான மாயத்தோற்றம் (Hallcinations), ஆழ்தூக்கத்தில் ஏற்படும்.

சுவாச சம்பந்தப்பட்ட உறக்கக் கோளாறுகள் (Breathing-related Sleep Disorders) தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் கோளாறு (Sleep Apnea) குழந்தைகளைப் பாதிக்கும் மிகவும் கடுமையான உறக்கக்கோளாறாகும். இக்கோளாறினால், குழந்தை மூச்சுவிட சிரமப்படுவதோடு, மூச்சு நின்று போவதற்கும் வாய்ப்புள்ளது. குழந்தையின் மேல் சுவாசப் பாதையை, மூக்கின் / நாக்கின் அடிச்சதை (Adenoids/Tonsils), தடங்கல் செய்வதால், இவ்வகை தூக்கக் கோளாறு ஏற்படுகிறது. சில நேரங்களில் பருமனாக இருப்பதாலும் இக்கோளாறு ஏற்படலாம்.

குழந்தைகள் குறட்டை விடுவது சகஜம். அதையும் மீறி, அவர்கள் தூங்கும் போது மூச்சுவிடத் திணறும் சத்தம் (Choking) அதிகம் கேட்டால், பெற்றோர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது முக்கியம். இப்படி ஏற்படும்போது, மூளைக்கு மற்றும் இதயத்திற்கு செல்லும் பிராண வாயு குறைந்து, உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.

அறிகுறிகள்?

குறட்டை, அமைதியற்ற நிலை, விட்டு, விட்டு மூச்சுவிடுவது, அடிக்கடி இரவு விழித்துக் கொள்வது, பகலில் தூங்குவது, சோர்வாகக் காணப்படுவது.இக்கோளாறுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை எனில், இரவு நேரத்தில் சிறுநீர் கழித்தல் (Enuresis), கவனக் குறைவு கோளாறு (Attention-Deficit disorder)/ஏ.டி.எச்.டி. (ADHD) நடத்தைப் பிரச்னைகள், பள்ளிப் படிப்பில் பின்னடைவு, இதயக் கோளாறு ஆகியவை ஏற்படக் கூடும். எடை குறைவு, டான்சிலை அகற்றும் சிகிச்சை அல்லது இடைவிடாமல் குழந்தையை சுவாசிக்க வைக்கும் மருத்துவ உத்திகள் இதற்கு நல்ல பலன் அளிக்கும்.

தாமதமாக தூங்கும் கோளாறு (Delayed sleep phase syndrome)

இக்கோளாறு, அதிகம் டீனேஜரைப் பாதிக்கின்றது. பொதுவாக எல்லோரும் தூங்கும் நேரத்திலிருந்து குறைந்தது 2 மணி நேரமாவது இவா்களுக்கு தூக்கம் வராது. காலையில் எழுந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள், மேலும் பகலில் அதிகம் தூங்குவார்கள். தூக்க பற்றாக்குறையால், இவர்களின் சிந்தனைகள், தீர்மானம் செய்யும் திறன் போன்றவை பாதிக்கப்படுகிறது. அடுத்த இதழில், தூக்க-விழிப்புக் கோளாறுகளின் பிற வகைகள், அவற்றின் காரணி, சிகிச்சை மற்றும் அதை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோருக்கு 20 விஷயங்கள்!! (மருத்துவம்)
Next post திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)