ட்வின்ஸ்!! (மருத்துவம்)

Read Time:15 Minute, 33 Second

இரட்டைக் குழந்தைகளை சுமப்பதிலிருந்து, பெற்று வளர்ப்பது வரையிலான சவால்களையும் சிரமங்களையும் போதும் போதும் என்கிற அளவுக்குப் பேசி விட்டோம். குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் வருடப் போராட்டத்தில், `என் எதிரிக்குக்கூட ட்வின்ஸ் பிறக்கக் கூடாது…’ என நினைக்க வைத்த நாட்கள் உண்டு. இதுவும் கடந்து போகும் என்பதையே எனக்கான மந்திரமாக சொல்லிக் கொண்டேன். கடந்து போனது. அடுத்தடுத்து வந்த, வளர்ந்த நாட்கள் இரட்டைக் குழந்தைகளுடனான வாழ்க்கை வரம் என போதித்தவை.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்பது எட்ட நின்று ரோஜாத் தோட்டத்தை ரசிக்கிற மாதிரியானது அல்ல. ஒவ்வொரு நிமிடத்தையும் நகர்த்துவதே வாழ்வின் மிகப் பெரிய சவாலாக நினைக்க வைத்த நாட்களுக்கும் அழுகைக்கும் சண்டைக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இத்தனைக்குப் பிறகும் இரட்டையரை வளர்ப்பது ரசனையானது.இரட்டையரைப் பெற்று வளர்க்கும் அனுபவம் ஏன் இனிமையானது என்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கும் எல்லா அம்மாக்களிடமும். என்னிடமும் உண்டு அப்படி நிறைய…

பிறந்த புதிதில் வீட்டில் பார்த்துக் கொள்ள ஆளில்லாத நாட்களில் இருவரும் ஒரே நேரத்தில் பசியால் அலறுவார்கள். தலைகூட நிற்காத இருவரையும் தூக்குவதா? பால் கரைப்பதா? எதுவும் புரியாமல் நானும் சேர்ந்து அழுதிருக்கிறேன். இப்போது வேலை முடிந்து களைப்பாக வீட்டினுள் நுழையும் போது, கோணலான தோசையுடனும் சூடே இல்லாத காபியுடனும் `ஸாரிம்மா… தோசை இந்தியா மேப் மாதிரி வந்திருச்சு…’ என ஒருவனும், `நான் சூடாதான் வச்சிருந்தேன். நீதான் லேட்’ என இன்னொருவனும் காரணங்களுடன் எனக்காகக் காத்திருப்பதைப் பார்க்கையில் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கிறேன்.

பத்து நிமிடங்கள் யாராவது பார்த்துக் கொண்டால், கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளலாம் என நிமிடங்களுக்கு ஏங்கிய காலம் உண்டு. இன்று, அவர்கள் அருகில் இல்லாத நொடிகள்தான் தனிமைச் சுமை ஏற்றுகின்றன.அம்மாவோ, அப்பாவோ, கணவரோ அருகில் இல்லாமல் நான் மட்டுமே இரண்டு கைக்குழந்தைகளை சமாளித்த தருணங்கள் மிரட்சியானவை. இன்றோ எங்கள் மூவரின் உலகில் சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் குறைவே இல்லை. நாங்கள் மூவர் மட்டுமே அறிந்த ரகசியங்கள், அடிக்கிற ரகளைகள், அடித்துப் பிடித்து உருள்கிற சண்டைகள் என அது அழகான உலகம்!

ஒரு குழந்தை பிறந்து, 3வது வயதில்தான் அதற்கு சமூக உணர்வே வருமாம். அதுவரை அந்தக் குழந்தை, தன்னை மட்டுமே இந்த உலகம் சுற்றி வருவதாக நினைத்துக் கொண்டிருக்குமாம். இரட்டையராகப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வு வருவதில்லை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். தனக்கொரு தங்கை/தம்பி இருப்பதை பிறப்பதற்கு முன்பிலிருந்தே அது உணரத் தொடங்குவதன் விளைவு, பிறப்புக்குப் பிறகும் இருவரிடமும் அந்த இணக்கமும் நெருக்கமும் சிறப்பாகஇருக்குமாம்.

ஆட்கள் இருக்கும்போது, `நீ ஏண்டா என் கூட வந்து பிறந்தே… வேற வீட்ல பிறந்திருக்கலாம்ல’ என்கிற ரேஞ்சில் அடித்து மாய்கிற என் இரட்டையரின் (சாஹித், ஹாமித்) உண்மையான பாசத்தை ஆட்களற்ற சூழலில் பார்த்து பிரமித்திருக்கிறேன். இன்று வரையிலும் அந்த ஒற்றுமையை ரகசியமாக மட்டுமே ரசித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரே ஒரு குழந்தையைப் பெற்றவர்கள், அந்தக் குழந்தைக்குத் துணையின்றித் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். அம்மா, அப்பாவோ, பெரியவர்களோ வீட்டில் இல்லாத நேரங்களில் ஒற்றைக் குழந்தை தனிமையில் கழிக்கிற பொழுதுகள் கலக்கமானவை.

இரட்டையருக்கு அந்தப் பிரச்னை இல்லை. நிழல் போல எப்போதும் ஒரு துணையுடன் இருப்பது அவர்களுக்கும் அவர்களைப் பெற்றவர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதல்.இருவராகத் தொடங்கிய குடும்பம், திடீரென நால்வராவதைப் போல, வாழ்க்கையின் சுவாரஸ்யங்களும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்கூட இரண்டிரண்டாகவே கிடைக்கும். இரண்டிரண்டு முத்தங்கள், இரண்டிரண்டு கட்டிப்பிடிப்புகள் என எல்லாம் அடக்கம்!

இப்போது சொல்கிறேன்… என் இனிமைக்குரிய எல்லோருக்கும் இரட்டையரே பிறக்க வேண்டும். நான் பெற்ற இன்பத்தை அவர்களும் பெற வேண்டும். வாழ்தல் இனிதென்றால், இரட்டைக் குழந்தைகளுடன் வாழ்தல் இனிதினும் இனிது!

மிஸ் பண்ணக்கூடாத இரட்டை வரம்!

இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் இழந்ததன் அருமை. அப்படியொரு அனுபவத்தைக் கடந்து வந்திருக்கிறார் ரத்னா. குழந்தைக்காக ஏங்கித் தவித்த நாட்கள், ஏமாற்றம் தந்த கர்ப்ப அனுபவம், எதிர்பார்க்காமல் கிடைத்த இரட்டை வரம் என ரத்னாவின் வாழ்க்கை சென்ட்டிமென்ட்டல் சினிமா!

கல்யாணமாகி முதல் 3 வருஷங்கள் குழந்தையை எதிர்பார்த்து ஏமாற்றமே தொடர்ந்தது. ஆஸ்பத்திரி களுக்கும் கோயில், குளங்களுக்குமா போயிட்டிருந்தோம். நிறைய டாக்டர்ஸை பார்த்தும் பலனில்லை. 2007 டிசம்பர் 31ம் தேதி ஒரு முடிவோட டாக்டரை பார்க்கப் போனேன். `இந்த வருஷக் கடைசிக்குள்ள எனக்கு குழந்தை வேணும்.. உங்களைத்தான் நம்பியிருக்கேன்’னு அவங்கக்கிட்ட கதறி அழுதேன். `உனக்கொண்ணும் பிரச்னையில்லைம்மா… சீக்கிரமே குழந்தை பிறக்கும். கவலைப்படாம இரு’னு அவங்க சொன்ன வார்த்தைகள் எனக்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது. ஐ.வி.எஃப். வரைக்கும் போகாம, சாதாரண மருந்து, மாத்தி ரைகளே போதும்னு சொன்னாங்க.

நான் வேண்டிக்கிட்டது போலவே அந்த வருஷக் கடைசியில கர்ப்பமானேன். பீரியட்ஸ் தள்ளிப் போயிருந்தது. கல்யாணமான முதல் வருஷம் அப்படித்தான் ஒருமுறை பீரியட்ஸ் தள்ளிப் போனது. யூரின் டெஸ்ட்டும் பாசிட்டிவ்னு காட்டுச்சு. ஒரு டாக்டர் டெஸ்ட் பண்ணிட்டு கர்ப்பம்னு சொன்னாங்க. என் கணவருக்கு சந்தோஷம் தாங்காம ஊரெல்லாம் சொல்லிட்டார். அப்புறம் ‘அது கர்ப்பம் இல்லை… டிலேடு பீரியட்ஸ்’னு சொன்னதும் பயங்கர ஏமாற்றமா போச்சு. இந்த முறையும் அப்படி இருக்குமோங்கிற பயத்துல நான் நம்பவே இல்லை.

கர்ப்பத்துக்கான எந்த அறிகுறிகளும் தெரியலை. கர்ப்பமானதே தெரியாம சாதாரணமா தான் டாக்டர்கிட்ட டெஸ்ட்டுக்கு போனேன். ஸ்கேன் பண்ணின டாக்டர், ‘பாப்பா நல்லாருக்கும்மா’னு சொன்னதும் எனக்கு பயங்கர ஷாக். அப்போ நான் கர்ப்பமாயிட்டேனா’னு கேட்டேன். `நல்லா கேட்டே… குழந்தை உண்டாகி 6 வாரமாச்சு… கர்ப்பமானு கேட்கறியே’ன்னாங்க. அப்படியா குழந்தை எப்படியிருக்கு டாக்டர்’னு கேட்டேன். ரெண்டு பாப்பாவும் சூப்பரா இருக்காங்க’னு அடுத்த ஷாக் கொடுத்தாங்க. எனக்கு சந்தோஷத்துல அழுகை அழுகையா வந்தது. என் கணவர் ஆஸ்பத்திரி வாசல்ல உள்ள ஒரு கோயில்ல உட்கார்ந்திருந்தார்.

நான் அழுதுக்கிட்டே வர்றதைப் பார்த்துட்டு, `பரவால்லம்மா… விடு… இந்த முறை சக்சஸ் ஆகலைனா அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். நான் எவ்வளவு செலவானாலும் ஐவிஎஃப் பண்ணியாவது குழந்தை பிறக்க ஏற்பாடு பண்றேன்’னு என்னை சமாதானப்படுத்தினார். அப்புறம்தான் அவர்கிட்ட நடந்ததை எல்லாம் சொன்னேன். `ஒண்ணுக்கு ரெண்டுனு சொல்லிட்டாங்க…’னு மறுபடி அழுதேன். ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் கர்ப்ப காலத்தைக் கடந்தேன். எல்லா அம்மாக்களுக்கும் வயித்துல உள்ள குழந்தைங்களோட அசைவு தெரியும். என் விஷயத்துல ரெண்டு குழந்தைங்களும் வயித்துக்குள்ள துள்ளி விளையாடறதை எதிர்ல உள்ளவங்களே பார்க்கிற அளவுக்கு இருந்தது.

எப்போதும் என் வயிறு துள்ளிக்கிட்டே இருக்கும். ரொம்ப ரொம்ப கவனமா பார்த்துக்கிட்டேன். சிசேரியன் ஆனதும் ஒரு பையன், ஒரு பொண்ணுனு சொன்னதும் இன்னும் சந்தோஷம் தாங்கலை. பிரசவமான பிறகும் எனக்கு கஷ்டங்கள் குறையலை. முதல்ல பெண் குழந்தையை மட்டும் கொடுத்தாங்க. பையன் எடை கம்மினு அடுத்தநாள் ராத்திரிதான் கொடுத்தாங்க. ரெண்டு குழந்தைங்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கிறதுல எனக்கு பெரிய சிக்கல் இருந்தது. அது ஒரு பெரிய போராட்டமா இருந்தது. கர்ப்பமானதோ, பெத்தெடுத்ததோகூட பெரிசா தெரியலை. என் ரெண்டு குழந்தைங்களையும் கையில ஏந்தி, என் மனசுக்கு நிறைவா தாய்ப்பால் கொடுத்த அந்த நிமிஷம்தான் தாய்மைன்னா என்னனு முழுமையா உணர்ந்தேன்.

குழந்தைங்க பிறந்த முதல் ஒரு வருஷம் கிட்டத்தட்ட நரக வேதனைனே சொல்லலாம். எனக்கு உதவிக்கு ஆள் இல்லை. ரெண்டு குழந்தைங்களும் மாத்தி மாத்தி அழும். அவங்களைப் பார்த்து பால் கொடுத்து தூங்கவைக்கிறதுலயே ராத்திரி பொழுது ஓடிடும். விடிய விடிய தூக்கமே இல்லாததால ஒரு கட்டத்துல எனக்கு கண் தெரியாமப் போயிடுச்சு. பயந்து போய் டாக்டரை பார்த்ததுல, ‘தூக்கம் இல்லாததுதான் பிரச்னை… ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்’னு சொன்னாங்க. அப்புறம் என் கணவரும் குழந்தைங்களை பார்த்துக்க ஆரம்பிச்சார். கொஞ்சம் நிலைமை சரியாச்சு.

சின்ன வயசுலேருந்தே அவங்களே சாப்பிடறது அவங்கவங்க வேலைகளை பார்த்துக்கிறதுனு குழந்தைங்களை பழக்கிட்டேன். இப்ப விஸ்வஜித், அஷ்மிதா ரெண்டு பேருக்கும் 6 வயசாச்சு. ரெண்டாவது படிக்கிறாங்க. யாராவது ட்வின்ஸானு கேட்கறப்ப கொஞ்சம் கர்வமாகூட இருக்கு. அவங்களை இன்னும் நல்லா பார்த்திட்டிருக்கலாமோங்கிற வருத்தம் எனக்கு நிறைய உண்டு. ரொம்ப கண்டிப்பா நடந்துக்கிட்டேன். கொஞ்சினதில்லை. உட்காருன்னா உட்காரணும்…

தூங்குன்னா தூங்கணும்னு எல்லாம் ஸ்ட்ரிக்ட்டா நடக்கணும்னு எதிர்பார்த்தேன். அந்த அணுகுமுறை தப்புனு இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியலை. அவங்களையும் பார்த்துக்கணும்… என் வேலையையும் பார்க்கணும். என்னோட மன அழுத்தங்களை குழந்தைங்க மேல திணிச்ச தப்பை உணர்ந்து இப்ப மாத்திக்கிட்டேன். இனிமே அவங்களுக்கான நேரத்தை ஒரு நிமிஷம்கூட மிஸ் பண்ண மாட்டேன்!’’ டைட்டில் கார்டு மெசேஜுடன் முடிகிற சினிமா மாதிரி, தனக்கான அட்வைஸையே மெசேஜாக சொல்லி முடிக்கிறார் ரத்னா.

ரத்னாவின் டிப்ஸ்

எல்லாரும் ட்வின்ஸ் பிறக்காதானு ஏங்கிட்டிருக்கிறப்ப நானோ ஒரு குழந்தை பெத்தவங்களைப் பார்த்து பொறாமையே பட்டிருக்கேன். பயங்கரமான ஸ்ட்ரெஸை அனுபவிச்சிருக்கேன். பணபலமும் ஆள் பலமும் இருந்திருந்தா நான் அப்படி நினைச்சிருக்க மாட்டேன். ட்வின்ஸ் பிறக்கிறதுங்கிறது ஒரு வரம். அது எல்லாருக்கும் கிடைக்கிறதில்லை. என்னை மாதிரி மன அழுத்தத்துல சிக்காம ரெட்டைக் குழந்தைங்களோட வரவை முழுமையான சந்தோஷத்தோட ஏத்துக்கணும்னா, கொஞ்சம் பணத்தையும் உதவிக்கு ஆட்களையும் ஏற்பாடு பண்ணிக்கோங்க.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)