பேபி ஃபேக்டரி!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 29 Second

நான் தோழியோட வாசகி சண்முகப்ரியா பேசறேன்… தோழியோட முதல் இதழ்லேருந்து தவறாமப் படிக்கிறேன். நான் சோர்ந்து, துவண்டு போன பல நேரங்கள்ல, தோழியில வர்ற பெண்களோட தன்னம்பிக்கைக் கதைகளும், அனுபவங்களும்தான் எனக்கு தைரியம் கொடுத்திருக்கு. மத்தவங்களோட அனுபவங்கள் மூலமா ஆறுதல் தேடிக்கிட்ட நான், முதல் முறையா என்னோட கதையை தோழி வாசகிகளோட பகிர்ந்துக்க நினைக்கிறேன். என்னோட அறியாமை மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருந்தா சந்தோஷம்…’’ பதற்றமற்ற குரலில் தொலைபேசியில் அறிமுகம் செய்து கொண்டவர், சில நொடி அமைதிக்குப் பிறகு
தன் கதையைப் பகிர்ந்து கொண்டார். அது அவரது வார்த்தைகளிலேயே….

எனக்குப் பூர்வீகம் நாகப்பட்டினம். 22 வயசுல கல்யாணமாச்சு. கணவர் பலசரக்குக் கடை வச்சிருந்தார். கல்யாணமான அடுத்த மாசத்துலேருந்தே விசேஷமா?’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வருஷம் வரை அந்தக் கேள்வி பெரிசா படலை. ஒரு வருஷத்துக்குப் பிறகு அதே கேள்வியை வேற மாதிரி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புருஷன்-பொண்டாட்டி அன்னியோன்யத்தைக் கிண்டலடிக்கிற மாதிரியான கேள்விகள் அவை. மூணு வருஷம் பொறுத்துக்கிட்டேன். அப்புறம் குழந்தை இல்லாதது எனக்கே ஒரு உறுத்தலா தோண ஆரம்பிச்சது. கணவருக்குத் தெரியாம டாக்டரை போய் பார்த்தேன். `25 வயசுதான் ஆச்சு. உனக்கு ஒரு குறையும் இல்லை.

இன்னும் ஒண்ணு, ரெண்டு வருஷம் வெயிட் பண்ணலாம்’னு சொன்னாங்க. `உன்கிட்ட குறை இல்லாம இருக்கலாம்… உன் வீட்டுக்காரர்கிட்ட இருந்தா… வெயிட் பண்ணி என்ன பலன்? அவரைப் போய் டாக்டரை பார்க்க சொல்லு’ன்னாங்க எங்கம்மா. சரிம்மா… பார்த்துட்டா போச்சு’னு அடுத்த நாளே அவரும் டாக்டரை பார்த்தார். எந்தப் பிரச்னையும் இல்லை… கட்டாயம் குழந்தை பிறக்கும்னு சொன்னாங்க டாக்டர். மாசம் தவறாம டெஸ்ட்டுகள் எடுத்திருக்கோம். ஆயிரக்கணக்குல மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டிருக்கோம். பலன் மட்டும் இல்லை.

இப்படியே இன்னும் சில வருஷங்கள் ஓடினது. இதுக்கிடையில அக்கம் பக்கம், சொந்தக்காரங்க வீடுகள்ல எந்த விசேஷம் நடந்தாலும் குழந்தையில்லாதவனு சொல்லி என்னைக் கூப்பிடறதைத் தவிர்த்தாங்க. இதையெல்லாம் கேள்விப்பட்டதும் என் கணவருக்கு குடிப்பழக்கம் வந்திருச்சு. தினமும் கடையிலேருந்து வீட்டுக்கு வரும் போது போதையில வர ஆரம்பிச்சார். ஒரு கட்டத்துல கடையைக் கூடத் திறக்காம, எந்நேரமும் குடியே கதியா மாறினார்.

ஒரு பிரச்னையும் இல்லை… உங்களுக்குக் குழந்தை பிறக்கும்’னு சொன்ன அதே டாக்டர், ‘உங்க ரத்தத்துல ஆல்கஹால் அளவுக்கு மீறி கலந்திருக்கு. குழந்தை பிறக்கிறது கஷ்டம்’னு கையை விரிச்சாங்க. அதைக் கேட்டாவது குடியை நிறுத்துவார்னு பார்த்தா, இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சார். குழந்தை வேணும்னு கோயில், குளங்களுக்கு ஏறி, இறங்கி, வாரத்துல நாலு நாள் விரதம் இருந்த நான், என் புருஷன் குடியிலேருந்து வெளியில வந்தா போதும்கிற மனநிலைக்கு வந்தேன்.

தினமும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற மனுஷன், அன்னிக்குத் தெளிவா, போதை இல்லாம வந்தார். நாம ஏன் ஒரு குழந்தையை தத்தெடுக்கக்கூடாது?’னு கேட்டார். அத்தனை நாளா அப்படியொரு எண்ணம் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருந்தாலும், அதைச் சொன்னா, எப்படி எடுத்துப்பாரோங்கிற பயத்துலயே நான் கேட்கத் தயங்கிட்டிருந்தேன். அவரா கேட்டதும் எனக்கு கையில குழந்தையே வந்துட்ட மாதிரி ஒரு சந்தோஷம்… அவரோட அக்கா ஒருத்தங்களுக்கு 10 வருஷ இடைவெளியில ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவங்க அந்தக் குழந்தையை எங்களுக்கு தத்துக் கொடுக்கத் தயாரா இருந்தாங்க.

நாங்க பண்ணின ஒரே தப்பு… சொந்தம்தானே… ஒண்ணுக்குள்ள ஒண்ணு… எதுக்கு சட்டப்படி தத்து எடுக்கணும்னு அப்படியே வளர்க்க ஆரம்பிச்சிட்டோம். என் கணவர் குடிப்பழக்கத்துலேருந்து கொஞ்சம் கொஞ்சமா மீள ஆரம்பிச்சார். வாழ்க்கையில இழந்த நம்பிக்கை எல்லாம் மறுபடி துளிர்க்க ஆரம்பிச்சது. எல்லாம் நல்லா போயிட்டிருந்த நேரம், என் கணவருக்கு திடீர்னு உடம்புக்கு முடியாமப் போச்சு. குழந்தைக்கு 15 வயசிருக்கும்போது அவர் திடீர்னு இறந்துட்டார்.

மனசை தேத்திக்கோ… உனக்கென்ன ஆம்புளப் புள்ளை இருக்கான். கடைசி வரை தாங்குவான். தைரியமா இரு’னு எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க. வீட்டுக்காரரை என்கிட்டருந்து பறிச்சிக்கிறதுக்காகத்தான் புள்ளையை முன்னாடியே கொடுத்துட்டார் போல கடவுள்னு நான்கூட நினைச்சுக்கிட்டேன். ஆனா, கடவுளோட கணக்கு வேறயா இருந்தது. என் புருஷன் செத்து சரியா ஒரு வருஷம் முடிஞ்சதும் அவங்க அக்கா வந்து `என் புள்ளையை என்கிட்ட கொடுத்துடு’ன்னாங்க. என் தலையில இடி விழுந்த மாதிரி இருந்தது. 16 வருஷம் வளர்த்துட்டேன்… அவன் தத்துப் பிள்ளைங்கிறதே மறந்துகூடப் போச்சு.. புருஷனும் போய் சேர்ந்துட்டார்… இப்ப ஒரே ஆறுதலா இருக்கிற மகனையும் கேட்கறீங்களே… நியாயமானு கேட்டு கதறினேன்… கெஞ்சினேன்…

நாளைக்கு உனக்கும் ஏதாவது ஆயிட்டா என் புள்ளை நடுத்தெருவுல நிக்கணுமா? அதுக்கு முன்னாடி நானே கூட்டிட்டுப் போயிட
றேன்’னு கட்டாயப்படுத்திக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. `புள்ளையைப் பார்க்கற சாக்குல வீட்டுப் பக்கம் வந்துடாதே…’னு சொல்லிட்டுப் போனாங்க. இந்தப் பிரச்னையை சட்டப்படி சந்திக்க என்கிட்ட எந்த ஆதாரங்களும் இல்லை. எனக்கு ஆதரவா நிக்க என் பக்கத்துல மனுஷங்களும் இல்லை.இது நடந்து 2 வருஷம் ஆச்சு.

இன்னும் என்னால அந்த அதிர்ச்சியிலேருந்து வெளியில வர முடியலை. புருஷனையும் இழந்து, கிடைக்காமக் கிடைச்ச புள்ளையையும் இழந்து இன்னிக்கு தனிமரமா நிக்கறேன். ரெண்டு வீட்ல சமையல் வேலை பார்த்துதான் என் பிழைப்பு ஓடுது. தத்தெடுத்த நான், அதை சட்டப்படி பண்ணியிருந்தா, இன்னிக்கு இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பேனா?ரெண்டு பேர்கிட்டயும் ஒரு குறையும் இல்லைனு சொல்ற டாக்டர்ஸ், பிறகு எதுக்கு எல்லா டெஸ்ட்டுகளையும் எடுக்க வச்சு, மருந்து, மாத்திரைகளையும் கொடுக்கறாங்க? குறையே இல்லைன்னா எனக்கு ஏன் குழந்தையே பிறக்கலை? டாக்டரை பார்த்த முதல் டைமே உங்களுக்குக் குழந்தையே பிறக்க வாய்ப்பில்லைனு சொல்லியிருந்தா, நாலு காசாவது மிச்சமாகியிருக்குமில்லையா? 60 வயசுலகூட குழந்தை பிறக்க வைக்கிற டாக்டருங்களால எனக்கு ஏன் ஒண்ணும் பண்ண முடியலை? இதுக்கெல்லாம் எனக்கு விடைகள் கிடைக்குமா?’’

அமைதியாக ஆரம்பித்து, அழுகையில் முடித்தார் சண்முகப்ரியா. காலம்தான் அவரது காயங்களுக்கெல்லாம் மருந்து. இது ஒரு சண்முகப்ரியாவின் கதை மட்டுமில்லை… குழந்தை வேண்டிக் காத்திருக்கிற லட்சக்கணக்கான பெண்களின் நிலையும்கூட. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் குழந்தையின்மைப் பிரச்னை 20 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். குழந்தை உண்டாக்கித் தருவதாகச் சொல்லப்படுகிற பேபி ஃபேக்டரி பிசினஸ்தான் இன்று மருத்துவர்களுக்கு பணம் கொட்டும் துறை என்பதையும் மறுப்பதற்கில்லை.

முந்தைய தலைமுறைகளில் இல்லாத அளவுக்கு இன்று குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்ன? குழந்தையின்மை என்பது தீர்க்கவே முடியாத குறைபாடா? இதற்கான சிகிச்சைகளின் பின்னணியில் என்னதான் நடக்கிறது? ஒரு பக்கம் அஜீத் மாதிரி கலர், விஜய் மாதிரி பர்சனாலிட்டி, சூர்யா மாதிரி சிரிப்பு எனப் பார்த்துப் பார்த்து டிசைனர் பேபிக்களை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட மருத்துவத் துறை… இன்னொரு பக்கம் வசதி, வாய்ப்புகளற்ற தம்பதியருக்கு குழந்தைப் பேற்றை உருவாக்கித் தர முடியாமல் கையை விரிப்பதேன்? எல்லாவற்றையும் அலசுவோம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பது யார்? (கட்டுரை)
Next post சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா? (மருத்துவம்)