ஏமாத்தினால் அது நிலைக்காது!! (மகளிர் பக்கம்)
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் வழி. மாலை ஐந்து மணிக்கு அந்த வழியில் கடந்து போவது கொஞ்சம் சிரமம் தான். வரிசையாக இரண்டு சக்கர வாகனங்கள் அங்கு நின்று கொண்டு இருக்கும். காரில் பயணம் செய்பவர்களும் ஒரு ஐந்து நிமிடம் அந்தக் கடையின் வாசலில் நின்று விட்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
நடந்து செல்பவர்களும் ஒரு நிமிடம் அந்தக் கடையில் இருந்து வெளியேறும் வாசனையை முகர்ந்து கொண்டே கடப்பார்கள். இத்தனைக்கும் அந்த உணவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டோ, ஏசி அறைகள் கொண்டதோ கிடையாது. சாதாரண எல்ஈடி விளக்குகளின் வெளிச்சத்தில், கரி அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தார் கடையின் உரிமையாளர் அப்துல் காதர். இவர் கடந்த எட்டு வருஷமா இங்கு பார்பெக்யு உணவினை வழங்கி வருகிறார்.
‘‘நான் சென்னைவாசி தான். பெரிசா படிக்கல. பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். அதனால் சரியான வேலையும் இல்ல. குடும்பத்தை கவனிக்கனும். குடும்ப நண்பர் மூலமாக சவுதியில் லேபர் வேலை இருப்பதாகவும், அதற்கு ஆட்கள் எடுப்பதாக சொன்னாங்க. நானும் அதற்கு விண்ணப்பிச்சேன். வேலையும் கிடைச்சது. சவுதிக்கு பறந்தேன்.
சில நாள் லேபர் வேலை பார்த்த எனக்கு, வேறு வேலைக்கு மாறலாம்னு நினைச்சேன். சமையல் சார்ந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள். துருக்கியில் ஷவர்மா மற்றும் பார்பெக்யு உணவுகள் ஃபேமஸ். அடுப்புக் கரியில் உணவினை சமைத்து தருவார்கள்.
அந்த உணவின் சுவை நாம கேஸ் அடுப்பில் சமைத்தாலும் வராது. மேலும் சீக்கிரம் வெந்திடும். மாமிசமாக இருந்தாலும் பஞ்சு போல் வெந்திடும். அவங்களிடம் தான் பார்பெக்யு மற்றும் இதர அரேபிய உணவுகளை சமைக்க கற்றுக் கொண்டு சமைக்கவும் செய்தேன். கிட்டத்தட்ட 15 வருடம் சமைக்கும் வேலையில் தான் இருந்தேன்’’ என்றவர் அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்துட்டார்.
‘‘நான் சவுதிக்கு போக முக்கிய காரணம் என் பசங்களை நல்லா படிக்க வைக்கணும் என்பது தான். நான் படிக்கல… அதன் கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டம் அவங்களும் படக்கூடாது. அவங்க என்னை மாதிரி இல்லாமல் வயிட் காலர் வேலை பார்க்கணும்னு விரும்பினேன். 30 வருஷம் கடுமையா உழைச்சேன். எனக்கு ஒரு மகன், மகள். இருவரும் நல்லா படிச்சாங்க. இப்ப ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறாங்க. கடவுள் புண்ணியத்தில் நான் நல்லாவே இருக்கேன்’’ என்றவர் இங்கு பார்பெக்யு உணவகம் ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.
‘‘நான் உணவுத் துறையில் இருந்ததால் வார இறுதி நாட்களில் நல்ல உணவகங்களை தேடி குடும்பத்துடன் சாப்பிட செல்வது வழக்கம். அங்கு பார்பெக்யு உணவுகளை சாப்பிடும் போது… எனக்கு திருப்தியாக இருக்காது. ஆனா, பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. நல்லா இல்லைன்னு சொன்னா… எப்போதும் குறை சொல்றீங்கன்னு பசங்க கிண்டல் செய்வாங்க. அப்படித்தான் ஒரு நாள் குறை சொன்ன போது, என் மகன்… ‘அப்ப நீங்க செய்து தாங்க… நாங்க சாப்பிட்டு நல்லா இருக்கா இல்லையான்னு சொல்றோம்’ன்னு சொன்னான்.
அவனுக்காகவே நானே மசாலா தயாரித்து செய்து கொடுத்தேன். சாப்பிட்ட இருவரும், இந்த மாதிரி சுவையில் நாங்க சாப்பிட்டதே இல்லைன்னாங்க… என் மனைவிதான் அப்போது… ‘நீங்க நல்லா சமைக்கிறீங்க… இதை மட்டுமே ஏன் தொழிலா செய்யக்கூடாது’ன்னு கேட்டாங்க. எனக்கும் சரின்னு பட்டது. அப்படித்தான் பெரும்பாக்கத்தில் துவங்கினேன். ஆரம்பித்த நாள் முதல் நல்ல வருமானம் வந்தது. கூட்டமும் வர ஆரம்பிச்சது.
வேலை விட்டு போறவங்க… வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போக ஆரம்பிச்சாங்க. சிலர் சாப்பிடவே வருவாங்க. ஆனால் அங்கு பார்க்கிங் சரியா இல்லை, மேலும் உரிமையாளர் பிரச்னை இருந்ததால், இங்க ஆரம்பிச்சேன். சைதாப்பேட்டையிலும் ஒரு கிளை இருக்கு. அதை என் நண்பர் பார்த்துக் கொள்கிறார்’’ என்றவர் இதன் தயாரிக்கும் முறையை விளக்கினார்.
‘‘காலை ஏழு மணிக்கெல்லாம் கடைக்கு போய் சிக்கன் வாங்கிடுவேன். பிறகு அதை ஹலால் செய்து, நன்கு சுத்தம் செய்வேன். அதற்கு பசங்க இருக்காங்க. அதுவும் மினரல் தண்ணீரில் தான் கழுவுவேன். அதன் பிறகு நன்கு துடைச்சு மசாலா தடவி மேரினேட் செய்து வச்சிடுவேன். சிக்கன் மசாலாவில் நன்கு ஊரினாதான் சுவையா இருக்கும். மசாலா எல்லாம் என் மனைவி தயார் செய்திடுவாங்க. சில்லி மற்றும் பெப்பர் சிக்கன் பார்பெக்யு என இரண்டு ஃபிளேவர் தருகிறேன். அதே போல் ஷவர்மாவில் மூன்று வகை இருக்கு.
சாதாரண ஷவர்மா இதில் சிக்கனுடன் கொஞ்சம் கோஸ் சேர்ப்பேன். ஸ்பெஷலில் சிக்கன் மட்டும் இருக்கும். மெக்சிகன் சில்லி பவுடர் சேர்ப்பேன். மேலும் இந்த மசாலாக்கள் எல்லாம் வீட்டில் தயாரிப்பதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது. அதே போல் சிக்கனும் அன்று வாங்கி அன்றே விற்பனையாயிடும். அதற்கு ஏற்பதான் சிக்கன் வாங்குவேன்.
ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் எல்லாம் கொடுப்பதில்லை. அரபிக் உணவுகள் நிறைய இருக்கு. ஆனால் அதை நம்ம மக்கள் விரும்ப மாட்டாங்க. இந்த இரண்டு உணவுகளைதான் விரும்பி சாப்பிடுவாங்க. அதனால் தான் இதை மட்டுமே நான் செய்து வருகிறேன். இது சிறிய அளவில் இருக்கு. சென்னை சிட்டிக்குள் பெரிய அளவில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றார் அதே புன்னகை மாறாமல் அப்துல் காதர்.
Average Rating