பெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்!! (மருத்துவம்)
‘பெற்றோர் மன அழுத்தத்தில் இருந்தால் பிள்ளைகளின் மனப்பதற்றம் அதிகரிக்கும். அவர்கள் எப்போதும் வருத்தத்துடன் காணப்படுவார்கள். நடத்தைக் கோளாறுகள் தென்படலாம். உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படிப்பிலும் மந்தமாவார்கள்’ என்கிறது ஸ்வீடனில் நடத்தப்பட்ட லேட்டஸ்ட் ஆய்வு. எப்போதும் எல்லா விஷயங்களுக்கும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நம்மூர் பெற்றோருக்கு இது மிகவும் பொருத்தமானது என்கிறார் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மனநல
ஆலோசகர் பி.பரமேஷ்வரி…
பெற்றோருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குடும்பச்சூழல், சுற்றுச்சூழல், அலுவலகச் சூழல் எல்லாமே இதில் அடங்கி இருக்கிறது. தம்பதிகள் இருவருமே வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில், நேரமின்மை, போதிய தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோரில் யாராவது ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால் கூட, அது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும்… குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கும்.
மாநகரங்களில் தனிக்குடும்பமாக வசித்து வரும் தம்பதிகளின் குழந்தைகளில் 100ல் ஒரு குழந்தை இவ்விதம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் பேச, அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க போதிய நேரத்தை பெற்றோரால் ஒதுக்க முடிவதில்லை. இது குழந்தைகளுக்கு ஒருவித ஏக்கத்தை கொண்டு வந்து படிப்பையும் பாதிக்கிறது.
வீட்டில் நேரம் ஒதுக்கி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாதவர்கள் டியூசனுக்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நாள் என விடுமுறை நாட்களில் கூட டியூசனுக்கு அனுப்பப்படுகிறார்கள். எல்லா டியூசனிலும் எல்லா குழந்தைகளுக்கும் சிரத்தை எடுத்து சொல்லிக் கொடுப்பதில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
மதிப்பெண்களும் சற்று குறைவாக எடுக்க ஆரம்பிக்கிறார்கள். இப்போது பெரும்பாலான ஆங்கில பள்ளிகளில் Grade System பயன்படுத்தப்படுகிறது. A, B, C என 3 கிரேடுகளாக தரவரிசைப் படுத்துகிறார்கள். 5 சதவிகித மதிப்பெண் குறைந்தால் கூட A கிரேடில் இருந்து B கிரேடுக்கு வந்துவிடும். இதனால் சரியாக படிப்பதில்லை என பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்புவார்கள்.
படிக்கும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் உருவாக இதுவும் ஒரு காரணம்.சிங்கிள் பேரன்டிங் முறையிலும் இவ்வித மன அழுத்தம் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில், குழந்தையுடன் அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர்தான் இருப்பார்கள். உதாரணமாக தாயுடன் வசிக்கிறது எனில் தாயின் வருமானத்தால் தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். இதனால் குழந்தையை தனது மேற்பார்வையில் வளர்க்க முடியாமல் ஹாஸ்டலில் விடுவார்கள். ஏற்கனவே அப்பா இல்லாமல் வளரும் குழந்தை இப்போது அம்மாவும் வளர்க்கவில்லை என எண்ணி சோர்ந்துவிடும்.
மனப்பதிப்பு உண்டாகும். படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும். குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை பெற்றோரின் நேரடி பார்வையில் வளர்ப்பதே நல்லது. 1984-1994 காலகட்டத்தில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மற்ற பிள்ளைகளை விட மன அழுத்தம் உடைய பெற்றோரின் பிள்ளைகள் 4.5 சதவிகிதம் மதிப்பெண் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. பார்க்கும் போது சிறிய அளவாக தெரிந்தாலும் பெரியவர்களாக மாறும் போது இன்றைய போட்டி உலகில் அரை சதவிகிதம் குறைந்தால் கூட, மருத்துவ சீட்டையோ அல்லது இன்ஜினியரிங் சீட்டையோ இழக்க நேரிடுமே. அதனால்தான் கிரேடு குறைந்தால் கூட இன்றைய பெற்றோர் பெருமளவு கவலைப்படுகிறார்கள்.
பெற்றோர் மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை மேற்கொள்ளலாம். அவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீண்டாலே அவர்களின் பிள்ளைகளும் அதிலிருந்து வெளிவந்துவிடுவார்கள். அப்படியும் வெளிவரவில்லை எனில், மனநல ஆலோசகரின் உதவியுடன் குழந்தைக்கும், பெற்றோருக்கும் கலந்தாலோசனை அளித்தால் இந்தப் பிரச்னையில் இருந்து விரைவாக வெளிவரமுடியும். முக்கியமாக தங்கள் பிள்ளைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம்…’’
Average Rating