சோம்பேறிக் கண்!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 48 Second

குழந்தைகளின் கண்களை பாதிக்கிற பிரச்னைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மிக முக்கியமான பிரச்னையான சோம்பேறிக் கண் பாதிப்புகளைப் பற்றியும் பெற்றோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். சோம்பேறிக் கண்ணா? பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? இந்தப் பிரச்னையும் அப்படி கொஞ்சம் வித்தியாசமானதுதான்!

ஆங்கிலத்தில் இதை Amblyopia அல்லது Lazy eye என்று சொல்கிறோம். பிறந்த குழந்தைகளை பாதிக்கிற இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க தவறினால் பார்வையே பறி போகும் அபாயம் ஏற்படலாம். பிறந்த குழந்தைகளுக்கு பார்வையில் முன்னேற்றம் வர வேண்டுமென்றால் பார்வையில் படுகிற காட்சிகளை துல்லியமாக பார்க்க வேண்டும். பச்சிளங் குழந்தை எதை எப்படி பார்க்கிறது என்பதை மற்றவரால் சொல்ல முடியாது. குழந்தையின் பார்வையில் முன்னேற்றம் ஆரம்பிக்கிற இந்தக் கட்டத்தில் உண்டாகிற பாதிப்புகளால் அதற்கு முழுமையான பார்வையே வராமல் போகலாம்.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்த பார்வை தெளிவின்மையில் ஒரு கண்ணில் மட்டும் பார்வை சரியாக உருவாவதில்லை. அதாவது, ஒரு கண்ணில் தெளிவான பார்வையும் இன்னொரு கண்ணில் குறைவான பார்வையும் இருக்கும். அதனால் இரண்டு கண்களும் ஒன்றாக ஃபோகஸ் ஆகாது. அந்த ஒரு கண்ணை மட்டும் உபயோகிக்கத் தொடங்கும் குழந்தை
மூளையும் அதற்கேற்றபடி ஒரு கண்ணால் மட்டுமே பார்ப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளும். இதுதான் சோம்பேறிக்கண்.

காரணங்கள்…

– ஒரு கண்ணில் தெளிவான பார்வையும், மறு கண்ணில் தெளிவற்ற பார்வையும் ஏற்படும்போது.
– விழி வரிசை அமைப்பு சரியாக இல்லாத போது…
– பார்வை மற்றும் பார்வையுடன் தொடர்புடைய மூளையின் வளர்ச்சிக்கு ஏதாவது தடங்கல் வரும்போது..
– குழந்தையின் ஒரு கண்ணில் கேட்டராக்ட் இருந்தாலோ, கண்ணின் பின் பகுதியில் ரத்தம் கசிந்தாலோ வேறு ஏதேனும் பொருள் இருந்தாலோ இந்தப் பிரச்னை வரலாம்.

கண்டுபிடிக்க முடியுமா?

இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது என்பதால், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். மாறுகண் இருப்பது தெரிந்தால் 2 வருடங்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்தாக வேண்டும். காலம் கடந்த சிகிச்சையால் பார்வை வராமலே போகக் கூடும். குழந்தையின் நடையில் வித்தியாசம் தெரிந்தாலோ மிக அருகில் உட்கார்ந்து டி.வி. பார்த்தாலோ அடிக்கடி தலைவலிப்பதாக சொன்னாலோ, உடனடியாக கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குடும்பத்தில் இந்தப் பிரச்னை இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை தொடங்குவது நலம்.

சிகிச்சைகள் உண்டா?

பார்வைத் திறன் நன்றாக உள்ள கண்ணை தினமும் சிறிது நேரம் மறைத்துக் கொண்டு, பலவீனமான கண்ணால் பார்க்கச் செய்கிற பயிற்சியைக் குழந்தைக்குத் தர வேண்டும். இரண்டு கண்களின் பார்வையும் சமமாக்கச் செய்கிற பயிற்சியை அந்தக் குழந்தைக்கு தினம் 2 மணி நேரமாவது கொடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் மூளையின் பார்வை நரம்புகள் தூண்டப்படும்.

குழந்தை ஒரு கண்ணை மட்டுமே உபயோகிக்கப் பழக்கப்படுத்தப்படுவதால், பலவீனமான இன்னொரு கண், தன் சோம்பேறித் தனத்தை விட்டுவிட்டு, சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும். சில நேரங்களில் மருத்துவர், நன்றாக வேலை செய்கிற கண்ணில் ஒருவித சொட்டு மருந்தை விட்டு, தற்காலிகமாக அந்தக் கண்ணின் பார்வையை மழுங்கச் செய்வார். பார்வைத் திறன் குறைவாக உள்ள கண்ணை அதிகமாகப் பார்க்க வைக்கச் செய்வார். பார்வையை சரி செய்வதற்கான சிகிச்சை இது.

சில குழந்தைகளுக்கு ஒரு கண்ணில் அதிகப் பவரும் மறு கண்ணில் குறைந்த பவரும் இருக்கலாம். இதை கண்டுபிடித்து குறைந்த பவர் உள்ள கண்ணை கண்ணாடி போட்டு உபயோகிக்க செய்ய வேண்டும். குழந்தையின் கண்ணில் கேட்டராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதை அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்ய வேண்டும். விழி வரிசை ஒழுங்கின்மையையும் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்ய வேண்டும்.

ஒரு கண் கீழே இறங்கி இருப்பது தெரிந்தால் அதை தூக்கி சரி செய்கிற அறுவை சிகிச்சை தேவைப்படலாம் பொதுவாக 10 முதல் 12 வயதில் பார்வையின் வளர்ச்சியானது நின்று போய்விடும் எனவே அதன் பிறகு செய்யப்படுகிற சிகிச்சை முழுப் பலனைத் தராது என்பதால் எத்தனை சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகக் கண்டுபிடித்து சிகிச்சையை ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறை கூறுபவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்!! (மகளிர் பக்கம்)
Next post பெண்ணைப் பெற்றவர்களுக்கு… !! (மருத்துவம்)