பெண்களின் வெளிச்சமாக திகழும் திருநெல்வேலி தம்பதியினர்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 34 Second

கிராமத்தில் திருவிழா முதல் வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும், முதலில் புக் செய்யப்படுவது ஆடியோ மற்றும் சீரியல் பல்ப் செட்தான். இந்த அலங்கார விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டாலே போதும் கோயிலில் திருவிழா அல்லது வீட்டில் விசேஷம் என்று தெரிந்துகொள்ளலாம். கோயில் திருவிழா முதல் திருமண அழைப்புக்கான டெகரேஷன் விளக்குகள் வரை நாம் விரும்பும் டிசைன்களில் செய்து கொடுத்து வருகிறார்கள் திருநெல்வேலியை சேர்ந்த தனலட்சுமி மற்றும் அசோக்குமார் தம்பதியினர். கணவர் டிசைன் செய்ய தனலட்சுமி அதற்கு வண்ண பல்புகளை கட்டி அலங்கரிக்கிறார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள பல பெண்களுக்கும் வழிகாட்டியாக இந்த தம்பதியினர் உள்ளனர்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலியில் உள்ள அரசனார்குளம் என்ற கிராமம். அம்மா பள்ளியில் சத்துணவு ஆயாவாக வேலைப் பார்த்தாங்க. அப்பா விவசாயம் பார்த்துக் கொண்டார். எனக்கு ஒரு தம்பி. அரசுப் பள்ளியில் தான் 12ம் வகுப்பு வரை படிச்சேன். எங்க கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல சரியான பஸ் வசதி எல்லாம் கிடையாது. எட்டாம் வகுப்புவரை நடந்தே தான் பள்ளிக்கு போவேன். அப்புறம் சைக்கிளில் போக ஆரம்பிச்சேன்.

+2 முடிச்சதும் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அந்த இடைவேளையில் தையல் பயிற்சி எடுத்தேன். பிறகு அந்த பயிற்சி நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு கல்யாணமும் ஆச்சு. என் கணவர் சீரியல் வண்ண லைட்டுகளை கட்டும் வேலை செய்து வந்தார். இரண்டு பெண் குழந்தைகள். இப்ப அவங்களும் கல்யாணமாகி செட்டிலாயிட்டாங்க. நான் ஏழு வருஷமா தையல் வேலையில் இருந்தேன். அதன் பிறகு என்னால் அந்த வேலையில் ஈடுபடமுடியவில்லை. வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கல.

அப்பதான் என் கணவர் ‘நீ சீரியல் லைட் எப்படி கட்டணும்னு கத்துக்கோ… நான் சொல்லித்தரேன். ஆர்டர் வரும் போது நீயும் சேர்ந்து செய்யலாம்’ என்றார். எனக்கும் அது சரின்னு பட்டது. என் கணவருக்கு இது தான் தொழில். சின்ன வயசில் இதை கற்றுக் கொண்டு இப்போது தனியாக செய்து வருகிறார். சின்ன சைஸ் படங்கள் முதல் ஆளுயர படங்கள் வரை கட்டுவார்.

மறைந்த தலைவர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதா என அனைவரின் படங்களையும் கட்டி இருக்கார். இப்போது லேட்டஸ்டாக டி.டி.வி. தினகரனுக்கு கட்டினோம். எந்த படமாக இருந்தாலும் முதலில் சாக்பீசில் அதை அப்படியே வரைந்திடுவார். அதன் பிறகு அதை ஒரு அவுட்லைனாக வைத்து மூங்கில் குச்சிகளை கட்டுவார். கண்கள், புருவம், உதடு எல்லாமே மூங்கில் குச்சியால் தான் கட்டுவார். நான் வண்ண வண்ண பல்புகளை அதில் இணைப்பேன்’’ என்றவர் அதன் பிறகு தன் கிராமத்து பெண்களையும் இந்த தொழிலில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளார்.

‘‘எங்க கிராமத்தில் பெண்கள் எல்லாரும் விவசாய வேலைக்கு தான் போவாங்க. வெயிலில் இருந்து வேலை செய்வதற்கு பதில் இந்த வேலைக்கு வரீங்களான்னு கேட்ட போது மறுப்பேதும் சொல்லாமல் வந்தாங்க. காலை வீட்டு வேலை செய்து பசங்கள பள்ளிக்கு அனுப்பிட்டு கணவர் வேலைக்கு போனதும் வருவாங்க. மாலை ஐந்து மணிக்கு போயிடுவாங்க.

ஆர்டர் அதிகமாக முதலில் இரண்டு பெண்களை தான் வேலைக்கு சேர்த்தோம். அவர்களை தொடர்ந்து மற்ற பெண்களும் வர ஆரம்பிச்சாங்க. இப்ப 40 பேர் ஆண், பெண் என எங்களிடம் வேலை செய்றாங்க. திருவிழான்னா சாமி படங்கள் கட்டுவோம், கட்சி தொடர்பான மீட்டிங் என்றால் அந்த கட்சி தலைவரின் படம் செய்ய ெசால்லி கேட்பாங்க. இது தவிர திருமண விழாக்களில் ‘நல்வரவு’, மயில், அன்னம் மற்றும் வாசலில் லைட் அலங்காரம் எல்லாம் செய்து தருகிறோம்’’ என்றார் தனலட்சுமி.

‘‘என் கணவர் ஆரம்பத்தில் இருந்து செய்து வந்தாலும், அவர் மட்டுமே தனிநபரா செய்தார். அதுவும் குறிப்பிட்ட விசேஷங்களுக்கு தான் செய்து வந்தார். நான் அவருடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்த பிறகு முதலில் ஒரு விசிட்டிங் அட்டை அடிச்சோம். நாங்க லைட் கட்டும் இடத்தில் விசாரிக்கும் போது இந்த அட்டையை கொடுப்போம். அது மட்டுமில்லை, எங்களிடம் வேலைக்கு சேர்ந்த பெண்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் திருநெல்வேலி மட்டுமில்லாம மும்பை, கேரளா, சென்னையில் இருந்து கூட ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது.

முதலில் அவங்களுக்கு என்ன டிசைன் வேணும்ன்னு சொல்லிடுவாங்க. சிவராத்திரி பூஜை… சிவனும் பார்வதியும் சேர்ந்து இருப்பது போல் படம் வேணும்னு கேட்பாங்க. ஒரு படம் வரைந்து லைட் கட்ட இரண்டு வாரங்கள் ஆகும். என்ன படம் கட்டுகிறோமோ அதற்கு ஏற்பதான் வண்ண லைட்டுகளை பொருத்துவோம். பார்வதி அல்லது அம்மன் படமாக இருந்தால், புடவை நிறத்திற்கு ஏற்ப வண்ண விளக்குகளை கட்டுவோம். அதன் பிறகு வாடிக்கையாளர் குறிப்பிட்ட நாளில் கொண்டு சேர்த்திடுவோம்’’ என்றவர் இப்போது தனக்கென்று ஒரு குழு அமைத்து அதன் மூலம் இந்த தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.

‘‘டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூகப் பிரிவான சீனிவாசன் சர்வீஸ் டிரஸ்ட் குழுவினர் என்னை அணுகி இந்த தொழிலை சுயஉதவிக் குழுவாக செயல்பட்டால் நல்ல வருமானம் பார்க்க முடியும் என்றனர். அது மட்டுமில்லாமல்… என்னுடைய தொழில் மேலும் விரிவடைய வங்கி கடனை குறைந்த வட்டியில் பெற்றுத் தர உதவுவதாக கூறினார்கள்.

அவர்களின் ஆலோசனை படி 20 பெண்களை கொண்டு காந்தி நகர் பெண்கள் சுய உதவிக்குழுவினை அமைத்தேன். வங்கியில் கடனும் வாங்கிக் கொடுத்தாங்க. அதன் மூலம் நிறைய பேருக்கு சீரியல் பல்ப் கட்டுவது எப்படின்னு சொல்லிக் கொடுத்தோம். இப்ப இவங்க எல்லாரும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்து வராங்க.

ஆரம்பத்தில் நானும் சேர்ந்து என் கணவருடன் இணைந்த போது, எங்களிடம் போதிய வருமானம் எல்லாம் கிடையாது. நகையை அடமானம் வைத்தும், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி தான் இந்த நிறுவனத்தை துவங்கினோம். இப்ப எல்லா கடனையும் அடைச்சிட்ம். சந்தோஷமா இருக்கோம். எல்லாவற்றையும் விட இந்த சந்தோஷத்துக்கு காரணம் என் கணவர்தான். வெளியுலகமே தெரியாமல் சின்ன கிராமத்தில் வளர்ந்த என்னை ஒரு தொழில் செய்யும் அளவுக்கு வளர்த்துவிட்டவர் அவர்தான். என்னைக்கேட்டால் கிராமமோ நகரமோ எதுவாக இருந்தாலும் பெண்கள் அவர்களுக்கு என ஒரு சுய தொழில் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் தனலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏ ஃபார் ஆப்பிள்!! (மருத்துவம்)
Next post மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்! (மகளிர் பக்கம்)