உங்களை நேசியுங்கள்… வாழ்க்கை அழகாக தெரியும்!! (மகளிர் பக்கம்)
அப்புக்குட்டி வந்துட்டா… அங்க பாரு டிரம் உருண்டு வரா… அரிசி மூட்டை… இப்படியான பட்டப் பெயர்களை குண்டாக இருப்பவர்களில் பலர் கடந்து வந்திருப்பார்கள். உருவத்தைக் கொண்டு கேலி செய்பவர்களை எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு கிண்டலாக பார்க்கப்பட்ட தன் உருவத்தைக் கொண்டே அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துள்ளார் திவ்யா. ‘ஸ்னாசி தமிழச்சி’ என்ற பெயரில் முகநூல், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளங்களில் இவரின் க்யூட் நடனங்கள் பல வரவேற்பினை பெற்றுள்ளது. யூடியூபராகத் திவ்யா டிரான்ஸ்பார்ம் ஆனதற்கு பின்னால் ஒளிந்துள்ளது வலிகளும், கேலிகளும்… பல.
‘‘நான் திருச்சி பொண்ணு. பிறக்கும்போதே 4 கிலோ எடை இருந்ததாக அம்மா சொல்வாங்க. அதனால சிறுவயதிலிருந்தே நல்லா பப்ளியா இருப்பேன். திருச்சியில் தான் பள்ளி, கல்லூரி முடிச்சேன். கல்லூரி கேட்டிலிருந்து வகுப்பறைக்கு செல்ல ஒரு நீண்ட பாதை இருக்கும். அதை கடந்து தான் போகணும். அப்படி நடந்து போகும் போது ஒவ்வொரு நாளும் தவறாமல் என் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்வாங்க. நானும் அவங்க கிண்டலுக்கு பயந்து ஒதுங்கி போயிடு வேன்.
ஆனால் அதையே அவங்க அட்வான்டேஜா எடுக்க ஆரம்பிச்ச போதுதான், நாம ஏன் இவங்களுக்கு பயப்படணும்ன்னு துணிந்து எதிர்க்க ஆரம்பிச்சேன். உடல் எடை அதிகரிக்க சாப்பாடு மட்டுமே காரணம்ன்னு சொல்ல முடியாது. உடல் ரீதியாக குறிப்பாக பெண்கள் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். அதனாலும் உடல் எடை அதிகரிக்கும். இது புரியாமல் அவர்கள் கிண்டல் செய்யும்போது, மனசுக்கு கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது.
அதே சமயம் இவர்களுக்காக நாம உடல் எடையை குறைச்சாலும் வேற ஏதாவது சொல்லி கிண்டல் செய்து கொண்டு தான் இருப்பார்கள். இவர்களை மாற்ற முடியாது. நம்முடைய உருவ அமைப்பு எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும்… நாம ஆரோக்கியமா இருக்கோமா? அது தான் முக்கியம். ஃபிட்னஸ் உடலைச் சார்ந்ததில்லை. மனசும் உற்சாகமாக இருக்கணும். அந்த வகையில் நான் அவங்கள விட ரொம்பவே ஃபிட்டாக இருக்கேன்’’ என்ற திவ்யாவிற்கு ஒரு யூடியூபராக வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்துள்ளது.
‘‘வீட்டு சூழல்… அதனால் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதே சமயம் என்னுடைய யூடியூப் கனவையும் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். வேலைக்கு சென்றாலும் கிடைக்கிற நேரத்தில் டிக் டாக்கில் நடன வீடியோக்களை பதிவு செய்தேன். அதைப் பார்த்து பலர் பாராட்டினார்கள். இதற்கிடையில் கல்யாணமாகி சென்னையில் செட்டிலானோம். நானும் கர்ப்பமானேன்.
பலர் என்னுடைய எடையை குறைச்சொல்லி குழந்தை குறை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளதுன்னு சொன்னாங்க. ஆனால் அவள் ஆரோக்கியமா அதுவும் சுகப்பிரசவத்தில் பிறந்தாள். கல்யாணம் ஆகாதுனு சொன்னாங்க. கல்யாணமாச்சு. குழந்தை பிறப்பதில் சிக்கல்ன்னு சொன்னாங்க… அதுவும் இல்லை. இது போன்ற நெகட்டிவிட்டியை தட்டிவிட்டு விட்டு போயிட்டே இருக்க கத்துக்கிட்டேன். குழந்தை பிறந்த அப்புறம் நான் வேலைக்கு போகலை. அந்த சமயத்தில் தான் கொரோனா லாக்டவுன்னு அறிவிச்சாங்க’’ என்றவர் அதன் பிறகு முழுமையாக யூடியூபராக மாறியுள்ளார்.
‘‘லாக்டவுன் பலருக்கு நன்மை பயக்கவில்லை என்றாலும் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த நேரத்தில் தான் ‘ஸ்னாசிதமிழச்சி’ என்ற பெயரில் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கமும் துவங்கினேன். சின்னவயதில் கற்றுக்கொண்ட பரதம் இப்போது எனக்கு கைகொடுத்தது. என்னுடைய பரதம் மட்டுமில்லாமல் மற்ற நடன வீடியோக்களை பதிவு செய்தேன். மேலும் திவ்யாவின் ப்யூட்டி கேர், குக்கிங் வீடியோ, பாடி ஷேமிங் மற்றும் உத்வேக பேச்சுகள்னு வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறேன்.
சமூகத்தில் நாம் எந்த விஷயம் செய்தாலும், பாசிடிவ் மற்றும் நெகடிவ் கமென்ட்ஸ் வரத்தான் செய்யும். அந்த நேரத்தில் என்னுடைய முழுபலமே என் கணவர் தான். நான் நடனம் ஆடும் போது அவர் தான் ஷூட் செய்வார். இப்போது, இன்ஸ்டாவில் பிளஸ் சைஸ் பெண்களுக்குரிய ஆடைகள், அழகு சாதனங்கள் விளம்பரம் செய்து வருகிறேன். மாடலிங் செய்யத் துவங்கியுள்ளேன்.
என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணும் இந்த 5 விஷயங்களை கடைப்பிடிக்கணும். உங்களை நீங்களே நேசியுங்கள், எதிர்மறை எண்ணங்களை புறக்கணியுங்கள், விரும்பிய செயலை செய்ய தயங்காதீர்கள், தாழ்வு மனப்பான்மையை அழித்திடுங்கள், உங்களை மதிப்பவர்களுக்கு செவி கொடுங்கள்’’ என்றார் திவ்யா.
Average Rating