உணவின் முக்கியத்துவம் தெரிந்து சமைக்கணும்!! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 42 Second

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம். ஊட்டச் சத்துக்களை அதிகம் தரும் உணவு எது என்றால், நம் பாரம்பரிய உணவுகள்தான் என்பதை சமீபத்தில் உணர தொடங்கி இருக்கிறோம். அந்தந்த பகுதியின் நிலவளம், மழைவளம் சார்ந்தே முன்னோர்களின் உணவு முறை இருந்திருக்கிறது.

நாம் தான் காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் உடம்புக்கு ஒத்துவராத, துரித உணவுகளின் பக்கம் சாய ஆரம்பித்து அடுத்த தலைமுறைகளையும் அந்த சுவைக்கு அடிமையாக்கி இருக்கிறோம். அதன் பலனையும் இன்று அறுவடை செய்ய தொடங்கிவிட்டோம். இளம் வயது பருவத்தை கடக்கும் முன்னேயே உடல்பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், புற்று நோய் என நோய்களைத் தேடி இழுத்து வலுக்கட்டாயமாக உடம்போடு சேர்த்து வைத்துக்கொள்கிறோம்.

இவைகளில் இருந்து விழிப்போடு இன்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், உணவின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது கடமை என்கிறார் 62 வயது வீரக்குமாரி பாட்டி. ‘‘கிராமத்துசூழலில் சமைக்க ரொம்ப ஆசை. உடலுக்கு மிகவும் நல்லது மண் பானை. அது குறித்தான விழிப்புணர்வு இப்போது வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், இன்னும் இந்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்று ‘என் சமையல்’ என்ற யு டியூப் சேனல் மூலம் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். நாம் மண் தட்டில் சாப்பிடும் போது ரொம்ப வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உணரலாம்.

இன்னும் சொல்லப் போனால் மண் பாத்திரங்களுக்கு உயிர் உண்டு. புது பாத்திரத்தை எடுத்து தண்ணீரில் போட்டால் அது சுவாசம் மாதிரியே பப்புல்ஸ் வருவதை பார்க்கிறோம். அதற்கும் ஓர் உணர்வு இருக்கிறது. அந்த காலங்களில் எல்லாம் மண் பானை வாங்குவதற்கே வளர்பிறை, தேய்பிறை என்று சாஸ்திரம் பார்த்துதான் வாங்கி இருக்காங்க. மண் பானை வாங்கி வீட்டுக்கு கொண்டு வருவதை கூட நல்ல ஒரு வைப்ரேஷனா பார்த்து இருந்திருக்காங்க. இது போன்ற உணவு சார்ந்து பல விஷயங்கள் பற்றி எல்லாம் சொல்லணும்னு தான் ஆசை” என்று கூறும் வீரக்குமாரிக்கு அசைவ உணவுகள் அத்துப்படி.

‘‘நம் ஊர்களில், கிராமங்களில் எப்படி மசாலா செய்யுறோமோ அந்த வகையில் தான் இந்த சமையல்களில் சேர்க்கிறேன். சொல்லியும் தருகிறேன். எண்ணையும் செக்கில் ஆட்டியதுதான். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்… அதையும் எப்படி காய வைத்து ஆட்டுகிறோம் என்பதையும் சொல்கிறேன்.

சமையலை ஈடுபாடோடு செய்தால் தான் அதில் கிடைக்கிற சக்திகள் நம் பிள்ளைகளுக்கோ அல்லது நமக்கோ போய் சேர்ந்து நல்ல வைப்ரேஷன் உண்டாகும். ஏனோ தானோனு சமைக்கக் கூடாது. கஞ்சி கொடுத்தாலும் கூட ஒரு மன நிறைவோடு ஊத்தணும். சமையல் செய்யும் நமக்குள் இருக்கும் வைப்ரேஷன், அந்த உணவிலும் வெளிப்படும்” என்று கூறும் வீரக்குமாரி, கர்ப்பிணி பெண்களுக்கும், கைக்குழந்தையோடு இருக்கும் பெண்களுக்கும் திருக்கை மீன், சுரா மீன் ரொம்ப அவசியமான உணவு என்கிறார்.

“திருக்கை மீன், சுரா மீன்களில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பாலூட்டும் பெண்கள் இந்த மீனை சாப்பிட்டு வந்தால், பால் நன்றாக சுரக்கும். இது செய்வதும் எளிது. அரை கிலோ திருக்கையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். அரை ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள். கொஞ்சம் மிளகு. ஒரு பூண்டு. இரண்டே இரண்டு கீத்து தேங்காய். இதனோடு இரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கணும்.

இதை நன்றாக அரைத்து மீனில் கலக்கணும். அடுத்து எலுமிச்சை அளவு புளி, ஒரு தக்காளி, சின்ன வெங்காயம், நல்லெண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம் பொரிந்த பின் சின்ன வெங்காயம், தக்காளி நல்லா வதக்கி, கரைச்சு வச்ச புளி சேர்த்து கொதிக்கவிட்டு, மீனை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். சாதம், இட்லி தோசைக்கு சுவையா இருக்கும். கட்டாயம் மகப்பேறு பெண்கள் திருக்கை மீன் சாப்பிடணும்” என்று அன்பு கட்டளையிடும் வீரக்குமாரி, சங்கில் வளையலும் செய்கிறார்.

‘‘ஒவ்வொரு அணிகலனுமே பெண்களுக்கு முக்கியம். இது அக்குபங்சர் மாதிரி தானே. சங்கு வளையல் வட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் தாலி மாதிரி முக்கியத்துவம் வாய்ந்தது. சங்கு குளிர்ச்சியான பொருள். பொதுவாக பெண்களுக்கு ஹீட் பாடியாக இருக்கும் போது, சங்கு வளையல் அணிகையில் அந்த சூட்டை தணிக்கும் தன்மை கொண்டதா இருக்கிறது. இந்த சங்கு வளையலை எப்போது வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்” என்கிறார் வீரக்குமாரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post CT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்! (கட்டுரை)
Next post தாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய் இருந்தா 365 நாளும் சாப்பிடுவேன்!! (மகளிர் பக்கம்)