கடின உழைப்பு விடாமுயற்சி இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
பிறந்தநாள் கொண்டாட்டம், காது குத்தல், திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள் என்றாலே எத்தனை தட்டில் சீர் வைப்பது என்ற பேச்சு எழும். அவரவர் தங்களின் வசதிக்கேற்ப சில்வர், பித்தளை தட்டுக்களில் சீர் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இன்று எல்லாமே மார்டனாகிவிட்டது. எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் அதில் புதுமையை புகுத்த வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அப்படித்தான் இப்போது ஆரத்தி மற்றும் சீர்வரிசை தட்டுகளையும் வித்தியாசமாக அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப இதனை அமைத்து தருகிறார் சென்னையை சேர்ந்த கலைவாணி.
தையல் துறை…
சின்ன வயசில் இருந்தே எனக்கு கலை துறை மேல் தனிப்பட்ட ஆர்வமுண்டு. குறிப்பாக தையல் துறை. விதவிதமாக உடைகள் அணிந்து செல்லலாம் என்பதற்காகவே கல்லூரி முடித்தவுடன் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பிளவுஸ் டிசைனிங் போன்றவற்றை கற்றுக்ெகாண்டேன். நான் கற்றது மட்டுமில்லாமல், அதை மற்ற பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். அதுமட்டுமில்லாமல், சிறுவர், சிறுமியருக்கு கைவினைப் பொருட்களான பொம்மை செய்தல், தஞ்சாவூர் ஓவியம் வரைதல், எம்யோசிங் ஆர்ட் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கிறேன்.
ஆரத்தி மற்றும் சீர்வரிசை தட்டு வடிவமைப்பு…
திருமணத்திற்கு முன்பு வரை ஓவியம் மற்றும் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு இருந்தேன். என் நண்பர்கள் கேட்ட போது ஒரு பொழுதுபோக்கிற்காக தான் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதுவே நல்ல வரவேற்பினை கொடுத்தது. நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் மூலமாகவும் பல ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.
ஆனால் அந்த நேரத்தில் என்னால் இதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. குழந்தைகள், குடும்பம் என்று அந்த பொறுப்புகள் இருந்ததால், ஆரத்தி தட்டுகள் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆயிட்டாங்க. அவங்களின் வேலையை அவர்களே செய்து கொள்ள ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் நிறைய நேரம் இருப்பதால், பத்து வருடத்திற்கு பிறகு மறுபடியும் முழு நேரமாக ஆரத்தி மற்றும் சீர்வரிசை தட்டுகளை வடிவமைக்க ஆரம்பிச்சிருக்கேன்.
சந்தித்த சவால்கள்…
ஆரத்தி மற்றும் சீர்வரிசை தட்டு செய்யும் தொழிலை ஆரம்பிக்கும்போது எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கவில்லை. அது ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. காரணம் அப்போது ஆரத்தி தட்டுகள் ஃபேமஸ் எல்லாம் கிடையாது. மேலும் மக்களுக்கும் ஆரத்தி தட்டுகள் விதவித டிசைன்களில் மார்க்கெட்டில் உள்ளது என்பதும் தெரியாது.
ஒரு சிலர் அதற்கு செலவு செய்ய வேண்டுமா என்று கூட யோசித்தார்கள். ஆனால் நான் என்னுடைய முயற்சியை விடவில்லை. ஆறு, ஏழு மாதங்களுக்கு பிறகு தான் ஆர்டர்கள் ஒன்று இரண்டு என வர ஆரம்பித்தது. அதன் பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பல நிகழ்ச்சிக்கு நான் ஆரத்தி தட்டுகள் வடிவமைத்து கொடுத்து இருந்தாலும், நான் முதன் முதலாக ஒரு வளைக்காப்பு விழாவிற்காக வடிவமைத்த தட்டு இன்றும் மறக்க முடியாது. வளையல் வடிவத்தில் சீர்வரிசை தட்டுகளை செய்து கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை மேம்படுத்தும் திட்டம்…
பார்ப்பவர்களின் கண்களை, மனதைக் கவரும் கலையம்சம் கொண்ட எந்த படைப்புக்கும் மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உதவியால் நிறைய ஆர்டர்கள் கிடைத்தது. தற்போது வீட்டில் இருந்தவாறு சிறிய அளவில் செய்து வருகிறேன். எதிர்காலத்தில் தனியாக கடை வைத்து அதில் அனைத்தையும் செய்யும் எண்ணம் உள்ளது.
பெண்களுக்கு ஆலோசனை…
இன்றைய சூழலில், ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைகள் என்ற குடும்ப பொறுப்புகள் மிக மிக முக்கியம். குடும்பநலன், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கினாலும், அதே நேரம் தங்களுக்குப் பிடித்தமான துறையில் சாதிக்க வேண்டுமென்றால், கடின உழைப்பு, ஈடுபாடு மற்றும் இடைவிடாத முயற்சி அவசியம். முக்கியமாக, தனித்திறமையுடன் கூடிய நேர்மை. கண்டிப்பாக இது போல் சுயதொழில் செய்யும் ஒவ்ெவாருவரும் கடைப்பிடிப்பது அவசியம்.
எதிர்கால திட்டம்…
நான் இந்த துறையில் இவ்வளவு ஆண்டு காலம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம் என் பெற்றோர். அவர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து நான் விரும்பிய கலையை செய்ய ஊக்குவித்தார்கள். திருமணத்திற்கு பிறகு என் கணவர் கொடுத்து வந்த ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் காரணமாக தான் என்னால் இந்த துறையில் தொடர்ந்து வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க முடிகிறது.
இவர்கள் இருவர் மட்டுமல்லாமல் என் நெருங்கிய தோழியின் பங்களிப்பும் இன்றும் எனக்கு பக்க பலமாக உள்ளது. நான் கலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், ஃபேஷன் டிசைனிங் மற்றும் எம்பிராய்டிங் செய்வதில் ஆர்வம் அதிகம். என் மனதுக்குப் பிடித்தமான தொழில் அமைந்தது என் அதிர்ஷ்டம். கலையம்சம் நிறைந்த எங்கள் படைப்புகளை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே என் இலக்கு.
Average Rating