ஃபேஷன் A – Z …!! (மகளிர் பக்கம்)
மாற்றங்கள் தொடர்ந்து நிகழக்கூடியது! அதே போல் ஃபேஷனும் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இது பெரும்பாலான நேரங்களில் நாம் அணியும் உடைகள் மற்றும் ஆபரணங்களுடன் தொடர்புடையது. மக்கள் தலை முதல் கால் வரை அன்றாடம் அணியும் உடைகள் மட்டுமில்லாமல் அணிகலன்கள், காலணிகள்… கைப்பைகள் உட்பட அனைத்துடனும் ஃபேஷனை தொடர்பு படுத்துகிறார்கள்.
ஃபேஷன் கடல் போல் பரந்து விரிந்து இருந்தாலும், இன்றைய நவீன காலங்களுக்கு ஏற்ப துணி, ஆடை மற்றும் ஆபரணங்களுக்கு ஏற்ப குறுகிவிட்டது என்றே சொல்லலாம். ஃபேஷன்… மாறிவரும் டிரண்ட் குறித்து கடந்த இதழில் மிகவும் விரிவாக பார்த்தோம். ஆனால் ஃபேஷன் என்பது ஒரு பொதுவான கருத்தினை கொண்டுள்ளது. அதாவது ஃபேஷன் என்பது எதுவாக இருந்தாலும் ஒருவரின் தோற்றம் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும். நாகரீகமாக இருப்பது, ஒருவரின் நம்பிக்கையை மேம்படுத்தும். அதன் மூலம் ஒருவர் மனதில் அவரை பற்றிய சரியான எண்ணத்தை உருவாக்க ஃபேஷன் உதவுகிறது.
ஃபேஷன் குறித்த வரலாற்றினை பின்னோக்கி பார்த்தால், அது பலவித சோதனைகளில் உட்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் ஃபேஷனாக கருதப்பட்ட அனைத்து விஷயங்களும் இன்றைய நாகரீக தலைமுறையினருக்கு இது எல்லாம் ஃபேஷனா என்று கிண்டல் செய்யத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால், தற்போதுள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் நிலவி வரும் ஃபேஷன் எதிர்கால சகாப்தத்தினர்களுக்கு கேலியாக கூட மாற வாய்ப்புள்ளது. அந்தந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் அனைத்தின் தாக்கம்தான் ஃபேஷனாக உருமாறி வருகிறது.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கு ஏற்ப ஆடை மற்றும் ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தியாகிறது. அதுவே அந்த பகுதியின் ஃபேஷனாகிறது. மக்களும் அவர்கள் வாழும் இடத்தில் நிலவும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ப ஆடைகள் இருந்தால் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறார்கள். எப்படி, கத்தாரில் மினி ஸ்கர்ட் அணிந்த பெண்களை காண முடியாதோ அதே போல் அமெரிக்கா பெண்களை புர்கா அணிந்து பார்க்க முடியாது. மேற்கத்திய ஆடைகள் உலக ஃபேஷன் சந்தையில் பெரிய அளவில் இடம்பிடித்து இருக்கலாம். ஆனாலும் ஒவ்ெவாரு நாடும், மாநிலங்களும் தங்களின் பாரம்பரிய உடையுடன் இருக்கும் தொடர்பினை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ப புதிய ஃபேஷன்களை அறிமுகம் செய்வார்களே தவிர மேற்கத்திய நாடுகளில் நிலவும் உடைகளை அப்படியே பின்பற்ற மாட்டார்கள்.
தென்னிந்தியாவில், ஒரு பெண்ணை திருமணத்திற்கு முன்பு வேறுபடுத்துகின்ற பாரம்பரிய உடை லங்கா தாவணி அல்லது பட்டுப் பாவாடை அல்லது பாவாடை தாவணி அல்லது லங்காவோணி. இன்றைய மார்டன் பெண்கள் அணியும் லெஹெங்கா வகைகளில் ஒன்றானதுதான் பாவாடை தாவணி. வயசுக்கு வந்த அனைத்து டீன் ஏஜ் பெண்களால் அணியப்படும் உடை. பொதுவாக பாவாடை தாவணியை பெண்கள் அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த உடை அணிந்திருக்கும் பெண்கள் திருமணமாகாதவர்கள் என்ற அடையாளத்தை குறிக்கும். இந்த உடை மூன்று பகுதியாக வரும். தாவணி, பாவாடை அல்லது ஸ்கர்ட் மற்றும் ஜாக்கெட். இரண்டரை மீட்டர் நீளமான தாவணி ஜாக்கெட் மீது குறுக்காக போடப்பட்டு இருக்கும். இந்த உடை பொதுவாக பட்டுத் துணியில்தான் வரும் என்பதால், பெண்களை மேலும் மெருகூட்டும். தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலும், இந்த பாரம்பரிய உடை பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் லங்கா தாவணி, ஆந்திராவில் லங்காவோணி, தமிழ்நாட்டில் பட்டுப்பாவாடை என்று இதற்கு பெயர்.
பெண் குழந்தைகள் பருவம் அடைவதற்கு முன் பாவாடை சட்டை அணிவது தான் பழங்கால வழக்கமாக இருந்து வந்தது. திராவிட கலாச்சாரத்திற்கு முன் இந்த உடைகள் பழக்கத்தில் இல்லை என்பதால், பாவாடை சட்டைகளின் தோற்றத்தின் பின்னணி யில் திராவிட பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மரபுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. பட்டு மற்றும் புடவைகளின் வரலாற்றைக் கொண்டு தான் பட்டுப்பாவாடைகளும் புழக்கத்தில் வர ஆரம்பித்தன. இது கிட்டத்தட்ட புடவையின் சாயலைக் கொண்ட உடை. பாவாடைகளின் பார்டர் பகுதி புடவை போன்றே வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதே போல் ஜாக்கெட்டிலும் பாவாடையின் பார்டர்களில் உள்ள டிசைன்கள் இருக்கும்.
கண்களை கவரும் வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் இந்த பாவாடைகள் வடிவமைக்கப்படுவதால் தென்னிந்தியா மாநிலங்களின் பாரம்பரியம் மற்றும் ஆடம்பரமான உடையாக இன்றும் கருதப்படுகிறது. இந்த உடையின் அழகை மேலும் மேம்படுத்துவது, அதன் மாறுபட்ட பார்டர் டிசைன்கள் மற்றும் பட்டுத் துணிதான். பல வண்ணங்கள் மற்றும் டிசைனகள் கொண்டு நம் கற்பனைக்கு ஏற்ப விளையாடக்கூடிய அழகான உடையானது இந்த பாவாடை தாவணி.
பொதுவாக பட்டுப்பாவாடைகளில் கட்டங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் போன்ற ஜியாமெட்ரிக்கல் டிசைன்கள் மற்றும் நம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களை பாவாடை தாவணியில் பெரும்பாலும் பார்க்கலாம். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் துணிக்கு சாயமிடுதல்கள் மற்றும் ஸ்டைல்கள் எல்லாம் இந்த உடைக்கு பெரிய மாற்றம் மற்றும் புதிய கண்ணோட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப நாட்களில் பாவாடை தாவணி பெண்கள் அணியும் சாதாரண உடையாகத்தான் இருந்தது. பெரும்பாலும் பட்டுகளில் இந்த உடைகள் வருவதால், பாரம்பரியம் மாறாமல், கண்களை பறிக்கும் பிரகாச வண்ணங்கள் மற்றும் அணியும் பெண்களை அழகாக எடுத்துக் காட்டும். சில நாடுகளில், பாவாடைகளில் மணி, கண்ணாடி, கற்கள், ஜர்தோசி, எம்பிராய்டரி போன்ற வேலைப்பாடுகள் உள்ளது. காஞ்சிபுரம் தூய பட்டு, தர்மாவரம் பட்டு, போச்சம்பள்ளி பட்டு, இகாட் பட்டு, பனாரசி சில்க், படோலா சில்க், ஆரணி பட்டு, கோயம்புத்தூர் மென்மையான பட்டு, செட்டிநாடு பருத்தி, கைத்தனை பருத்தி, கசவு பாவாடை என பல்வேறு பாரம்பரிய இந்திய முறைகளில் இந்த பாவாடைகள் வடிவமைக்கப்படுகிறது. பட்டுப்பாவாடைகளின் இன்றைய லேட்டெஸ்ட் வர்ஷன் லெஹங்கா… அதைப் பற்றி அடுத்த இதழ்களில் தெரிந்து கொள்ளலாம்..
Average Rating