பெற்றோரின் தூக்கத்தை கெடுக்கும் குழந்தைகள்!! (மருத்துவம்)
‘‘விஸ்வரூபமெடுத்து வரும் தூக்கமின்மை பிரச்னைக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் நாம் நினைத்தே பார்த்திராத ஒரு காரணம் குழந்தைகள். காரணம், குழந்தைகளின் மீதுள்ள அன்பு காரணமாக இரவில் தூக்கம் கெடுவதை நாம் ஒரு பிரச்னையாகவே எடுத்துக் கொள்வதில்லை.ஆனால், அந்த தூக்கமின்மை கொஞ்சம் கொஞ்சமாக மனதிலும், உடலிலும் தளர்வை உண்டாக்கி பல்வேறு மோசமான விளைவுகளை உண்டாக்கும் அபாயம் கொண்டது. அதனால், குழந்தைகளால் ஏற்படும் தூக்கமின்மையை ஒரு சீரியஸான பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார் தூக்கத்துக்கான சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன்.
பெற்றோரின் தூக்கமின்மைக்கு குழந்தைகள் எப்படியெல்லாம் காரணமாகிறார்கள்?
‘‘பிறந்த கைக்குழந்தைகள் தங்களுடைய முதல் 6 வாரத்தில் 18 மணி நேரத்தைத் தூக்கத்திலேயே கழிக்கின்றனர். பெரும்பாலும் இந்த காலக்கட்டத்தில் பெற்றோருக்கு தூக்கம் அவ்வளவாக கெடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் முதல் 2 மாத காலம்வரை பெற்றோருக்கு அதிகம் தொல்லை இல்லை. ஆனால், குழந்தை தன்னுடைய மூன்றாம் மாதத்தைத் தொடுவதில் இருந்து, 2 வயது வரையிலான காலங்களில் குழந்தைகளால் பெற்றோருக்கு அதிகளவில் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக பசி, சிறுநீர் கழிப்பது, வயிற்றுவலி, திடீர் திடீரென அழுவது போன்ற காரணங்களால் கைக்குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு இரவில் பெரும்பாலும் தூக்கம் கெடும். 3 அல்லது 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இரவில் நீண்ட நேரம் உறக்கம் வராமலும் தாமதமாக உறங்குவதாலும் பெற்றோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுடன் இரவில் தாமதமாகத் தூங்கி, மறுநாள் காலையில் விரைவாக எழுந்திருக்க வேண்டிய அவசியம் தாய்மார்களுக்கு உள்ளதால் அவர்களுக்குப் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை.’’
இந்தப் பிரச்னையை எப்படி தவிர்ப்பது?
‘‘ஷிஃப்ட் முறையில் வேலை செய்பவர்கள் வேலையின் முக்கியத்துவம் காரணமாக, மீதி உள்ள ஓய்வு நேரத்தில் தூங்கப் பழகிக் கொள்வார்கள். இதே வழிமுறையைப் பெற்றோரும் கையாளலாம். குழந்தை இரவில் அழும், தாய்ப்பால் அருந்தும் என்பது உள்பட பல காரணங்களால் இரவில் தூக்கம் கெடும் என்பது பெற்றோருக்கே நன்கு தெரியும்.எனவே, அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களின் தூக்க நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தாய்மார்கள் இந்த வழியைக் கையாள்வது பயன் தரும். குழந்தைகள் தூங்கும் நேரத்திலேயே அவர்களும் அதற்கேற்றார்போல் தூங்கி, அவர்கள் எழும் நேரத்துக்கே எழுந்தால் தூக்கமின்மை பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம்.
குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு, அவர்களின் தூக்க நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைக்கலாம். குறிப்பாக, மாலை 6 மணிக்கே அவர்களை தூங்க வைக்கக் கூடாது. மாலையில் சீக்கிரமே குழந்தைக்குத் தூக்கம் வருவது போன்று இருந்தால் அவர்களுடன் பேசுவது, விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அவர்களின் தூக்கம் கலைந்து இரவு சீக்கிரமே உறங்கிவிடுவார்கள். அவர்களின் தூக்க நேரத்தையும் மாற்றி அமைக்க
முயற்சிக்கலாம்.’’
பெற்றோரின் தூக்கம் பாதிக்காத அளவு, குழந்தைகளை எப்படி கையாள வேண்டும்?
‘‘இரவில் தூக்கம் வராமல் இருக்கும் குழந்தைகள் எனில் அவர்களை பெற்றோரில் ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக் கொள்வது நல்லது. ஒருவர் விழித்திருக்கும்போது இன்னொருவர் உறங்கலாம் அல்லது வீட்டில் பெரியவர்கள் இருப்பின் அவர்கள் சிறிது நேரம் குழந்தைகளை வைத்திருக்கச் செய்யலாம்.
இதனால், குழந்தைகள் விழித்திருக்கும்போது பெற்றோர் இருவரும் விழித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இருவரின் தூக்கமும் கெடாமலும் இருக்கும். நாளடைவில் குழந்தைகளும் பெரியவர்கள் போல் இரவில் தூங்கி காலை விழித்தெழும் பழக்கத்துக்கு வந்துவிடுவார்கள் என்பதால் இந்த தூக்கமின்மை பிரச்னையை நிரந்தரமானது என்று கவலைப்படவும் வேண்டியதில்லை.’’குழந்தைகளைத் தனியே தூங்க வைப்பதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்யலாமா?‘‘மேலை நாடுகளைப் பொறுத்தவரை பிறந்த குழந்தை முதலே அவர்களை தனியே தூங்க வைக்கின்றனர். பெற்றோருடன் தூங்க வைப்பதில்லை. கைக்குழந்தையாக இருந்தாலும்கூட அவர்களை தனி கட்டிலில் படுக்க வைத்தே பழக்கப்படுத்துகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.
குழந்தைகள் பெற்றோருடன் தூங்கும்போது அதன் பாதிப்பு பல வழிகளில் இருக்கும். தூக்கமின்மை மட்டும் அல்லாமல் பெற்றோரின் தாம்பத்திய வாழ்க்கை, இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், தனிப்பட்ட பேச்சுவார்த்தை போன்றவை குழந்தைகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. தூக்கம் வராமல் குழந்தைகள் விழித்துக் கொண்டிருந்தால் அவர்களுடன் பெற்றோரும் விழித்திருக்கவும் வேண்டியிருக்கும். அதேநேரத்தில், குழந்தைகளை தனியே தூங்க வைக்கப் பழக்கும்போது, அவர்கள் விழித்திருந்தாலும் பெற்றோரின் தூக்கமோ, தனிப்பட்ட விஷயங்களோ பாதிக்காமல்சமாளித்துக் கொள்ளலாம்.’’
எத்தனை வயதுக்குப் பிறகு தனியாகத் தூங்க வைப்பது நல்லது?
‘‘பிறந்து 6 மாதத்துக்கு மேலே குழந்தைகளை தனியே தூங்க வைத்துப் பழக்கப்படுத்துவது நல்லது. குழந்தைகளை தனி அறையில் படுக்க வைக்காவிட்டாலும், தனி கட்டிலிலாவது படுக்க வைத்துப் பழக்கலாம்.ஆனால், பாச உணர்வின் காரணமாக பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைத் தனியே படுக்க வைப்பதால் ஒருவித குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று தேவையில்லாத பயமும் ஏற்படுகிறது. குழந்தைகளை தனியே படுக்க வைத்தால் அவர்களுக்கு பெற்றோரின் மேல் உள்ள பாசம் குறைந்துவிடும் என்றும் நினைப்பதுண்டு. ஆனால், இவையெல்லாமே மூட நம்பிக்கைகள்தான்.தனியாகத் தூங்கப் பழகும் குழந்தைகள் தைரியமுடையவர்களாக வளர்கின்றனர். அதனால், ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளை தனி அறையிலோ அல்லது தனி கட்டிலிலோ படுக்க வைத்துப் பழக்கலாம். இதனால் பெற்றோர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கெடாமல் பார்த்துக் கொள்ளலாம்.’’
Average Rating