10 சதவிகிதம் கூட நல்ல பலன் தரும்! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 18 Second

என்ன பேசினாலும் துணையை மாற்ற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருதரப்பிலிருந்தும் வருவதுண்டு. துணைதான் எப்போதும் தவறு செய்கிறவர் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருப்பதுண்டு. `எவ்வளவோ முயற்சி செய்தும், துணையைத் திருத்த முடியவில்லை…’ விவாகரத்து முடிவில் இருக்கும் பலரும் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளைப் பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி.திருமணமான தம்பதியரிடம் கேட்டுப் பாருங்களேன். தன் துணையை மாற்றவே முடியவில்லை.. உலகத்திலேயே மாற்ற முடியாத ஒரே நபர் தன் வாழ்க்கைத்துணை என்பார்கள்.

ஏன் இப்படி?

எல்லா தம்பதியருக்குமே தன் விருப்பப்படி தன் துணையை மாற்றி விட வேண்டும் என்பதே ஆசை. தன் துணை சரியில்லை என்பதே அவர்களது வாதமாக இருக்கும். மற்றவரைகுறை சொல்கிற இந்த பிளேமிங் கேமை (Blaming Game) நாம் சிறு வயதிலிருந்தே பழகுகிறோம். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களில் நம் பங்கு எதுவும் இல்லை என நம்புகிறோம். இருவர் தரப்பிலுமே பிரச்னைகள் இருப்பதுதான் உண்மை. மாற வேண்டியவர்கள் இருவரும்தான். கணவர் அல்லது மனைவிக்கு மனரீதியான பிரச்னை இருப்பதாகவும் அவர்தான் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் மிகவும் தவறு.

அடுத்தவர் மாற வேண்டும் என எதிர்பார்க்காமல், நாம் மாறுவோமே என சுய மாற்றத்துக்குத் தயாரானாலே இருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய அதிசயங்கள் நிகழும். துணையின் மீது தான் வைக்கிற குற்றச்சாட்டுகளை ஒரு கட்டத்தில் துணையையே நம்பவும் வைத்துவிடுவார்கள். உதாரணத்துக்கு… ‘உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ எதுக்கும் லாயக்கில்லை’ என்று மனைவியை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள் சில கணவர்கள்.

இதைக் கேட்டுக்கேட்டுப் பழகும் மனைவிக்கு ஒரு கட்டத்தில் தான் உண்மையிலேயே அப்படித்தான் என்கிற எண்ணம் வந்துவிடும். தான் உபயோகமற்றவர் என்றே நம்ப ஆரம்பித்துவிடுவார். இந்த விஷயத்தில் கணவன்- மனைவி இருவருக்குமே சிகிச்சைகள் தேவை. இருவருமே மனமுதிர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். கணவன்-மனைவி இருவரில் ஒருவர் சம்பாதிக்கிறவராக இருக்கிற பட்சத்தில் சம்பாதிக்கிறவருக்கு சம்பாதிக்காத தன் துணை அனாவசிய செலவுகளைச் செய்வதாகத் தோன்றும்.

ஆனால், சம்பாதிக்காதவருக்கோ தன் துணை அநியாயத்துக்கு கருமியாக இருப்பதாகத் தோன்றும். பணத்தை எப்படிக் கையாள
வேண்டும் என இருவருக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதுதான் இதில் தீர்வாக அமையும்.சில தம்பதியர் துணையுடன் பேசும் போதே வெறுப்புடனும் கோபத்துடனும் பேசுவார்கள். துணை தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒரு கோபம் உள்ளுக்குள் இருக்கும். இதே போன்ற பேச்சைத் தொடரும் பட்சத்தில் இருவராலும் அவர்களது உறவை பாசிட்டிவான தளத்துக்குள் கொண்டு செல்வதென்பது இயலாததாகி விடும்.

உணர்வுரீதியான இந்த வெறுப்பை இருவரில் ஒருவர் நினைத்தால்கூட குறைத்துக் கொள்ள முடியும். மாறுவதென முடிவெடுத்த பிறகு, தன் துணையை வற்புறுத்தியோ, இம்சித்தோ `நான் மாறுகிறேன்… நீயும் மாறு’ என துன்புறுத்தக்கூடாது.பெரும்பாலான தம்பதியர் பிரச்னைகளின் ஆரம்பத்திலேயே மாற்றங்களைப் பற்றி யோசிப்பதில்லை. உறவானது விவாகரத்து வரை போன பிறகுதான் மாற்றத்தைப் பற்றி நினைப்பார்கள். அதற்குள் விஷயம் விபரீதமாகி இருக்கும். இன்னும் சிலர் துணையை விவாகரத்து செய்து விடுவேன் என மிரட்டிக் கொண்டே இருப்பார்கள். இது எதிராளிக்கு பாதுகாப்பில்லாத உணர்வைத் தருவதுடன் நெருக்கத்தையும் சிதைக்கும். ஒரு கட்டத்தில் மிரட்டப்படுகிற துணையும் அந்த முடிவை நோக்கி மனரீதியாகத் தயாராகி விடுவார்.

சண்டை போடத்தான் இரண்டு நபர்கள் தேவை. மாறுவதற்கு ஒருவர் போதும். எனவே, பிரச்னைகள் இல்லாத தாம்பத்திய வாழ்க்கையை விரும்பினால் இருவரில் ஒருவர் மாற நினைத்தாலே போதும். அந்த எண்ணத்தில் உறுதியாக நிற்கவும் வேண்டும். சேர்ந்து வாழ நினைப்பவர்களுக்கு மாற்றங்களுக்கு உடன்படுவதும் சுலபம். மாறுவதென முடிவெடுத்த நபர், ‘நாம் ரொம்பவும் அதிகமாக விட்டுக் கொடுத்துவிட்டோமோ… முட்டாளாக்கப்பட்டோமோ… இப்படியே இருந்தால் ஏமாந்து போய் நிற்போமோ’ என்றெல்லாம் நினைக்கக்கூடும்.

அதற்காகவே மாற்றத்தை செயல்படுத்த பயப்படுவார்கள். துணையை மாற்ற நினைப்பதைவிட, தான் மாறுவதென்கிற முடிவு உண்மையில் விரைவானதும் சுலபமானதும் ஆகும். அந்த எண்ணம் ஒருவரை பலவீனமானவராக மாற்றுவதற்குப் பதில் மனதைரியம் மிக்கவராகவே மாற்றும். எதையும் நம்மால் சகித்துக் கொண்டு வாழ முடியும் என்கிற எண்ணத்தைக் கொடுக்கும். துணையுடனான சண்டையின் போது ஏற்படுகிற பயம், பதற்றம் போன்றவை இருக்காது. இந்த உணர்வுகள் எல்லாம் முதலில் புரியாது. மாறுவதென்கிற முடிவுக்கு அதிகபட்ச சுயக்கட்டுப்பாடு அவசியம். மாற ஆரம்பித்ததும் வழக்கமான சூழலே மாறிப் போகும்.

அது இருவருக்குமே அதிர்ச்சியைத் தரும். துணை நம்மை எப்படி வேண்டுமானாலும் நடத்திவிட்டுப் போகட்டும்… நாம் சரியாகவும் பக்குவத்துடனும் நடந்து கொள்வோம் என்கிற உறுதியுடன் மாற்றத்தைத் தொடர வேண்டும். ஒருவர் மாறியதும், இன்னொருவருக்கு ஒரு சிக்கல் வரும். தானும் மாறியே ஆக வேண்டுமென நினைக்கலாம் அல்லது துணையின் மீதான கோபம் முன்னைவிட இன்னும் அதிகமாகலாம். இப்படியொரு ரிஸ்க் இருந்தாலுமே சுய மாற்றத்துக்குத் தயாராவதே சிறந்த வழி. காலப்போக்கில் இது இருவரையும் உணர்வுரீதியாக வளரவும் பக்குவப்படவும் செய்யும்.

சரி, எவ்வளவு மாற வேண்டும் என்கிற கேள்வியும் காலம் முழுக்க நான் மட்டுமே மாறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்கிற
கேள்வியும் வரலாம்.வெறும் 10 சதவிகித மாற்றமே போதுமானது. மேஜிக் மாதிரி ஒருவரை 100 சதவிகிதம் மாற்றிவிடலாம் என நினைக்கக்கூடாது. அது அவசியமும் இல்லை. வெறும் 10 சதவிகித மாற்றமே அவர்களது உறவில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காட்டும்.சிலர் மாறவே முடியாமல் இருக்கக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் கோபம். நான் ஏன் மாற வேண்டும் என்கிற கேள்வியைத் தவிர்த்து மாறினால் என்ன என யோசித்தாலே பெரிய மாற்றங்களை உணர்வார்கள்.

பரஸ்பர பாராட்டு என்பதும் இங்கே மிக முக்கியமான விஷயமாகிறது. மிக மிக நல்ல தம்பதியர்கூட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டே இருக்க மாட்டார்கள். இது அவங்க வேலைதானே… இதுல என்ன பாராட்டு வேண்டியிருக்கு என நினைப்பார்கள். அந்த மனோபாவம் தவிர்த்து துணையை சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பாராட்டக் கற்றுக் கொள்வது காதல் வளர்க்கும்.அடுத்தது விட்டுக் கொடுத்தல். அற்ப விஷயங்களாக இருக்கும். ஆனாலும் அதை விட்டுக் கொடுக்க மனமின்றி சண்டை போடுவார்கள். சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள் இருவரது வாழ்க்கையையும் அழகாக்கும் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்லிக் கொள்வது அடுத்த தவறு. எந்த ஒரு சின்ன விஷயமும் தவறு எனத் தோன்றினால் உடனே துணையின் மீது புகார் செய்கிற மனோபாவம் பலருக்கும் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்து… துணை பேசும் போது எதிர்த்து சண்டைக்கு நிற்காமல் பேச்சை முழுமையாக கவனிப்பது, துணையிடம் காணப்படுகிற நல்ல தன்மைகளை சப்போர்ட் செய்து ஊக்கப்படுத்துவது, உன்னால் முடியும் என நம்பிக்கை தருவது போன்ற அணுகுமுறைகள் உதவும். துணை தானாக விரும்பிக் கேட்காத வரை எந்தப் பிரச்னைக்கும் தீர்வு சொல்வதைத் தவிர்க்க வேண்டும். பல நேரங்களில் தன் துணை தான் பேசுவதைக் கேட்டால் போதும் என்றும் தீர்வு சொல்லத் தேவையில்லை என்றுமே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

இவற்றை எல்லாம் பின்பற்றினாலும் உறவில் பெரிய மாற்றம் வந்துவிடாது. ஏற்கனவே மோசமான நிலைக்குப் போன உறவை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. இருவர் தரப்பிலும் நிறைய கோபம், வெறுப்பு, எரிச்சல் எல்லாம் இருக்கும். இருவரில் ஒருவருக்கு அப்படி இருந்தால் சில நேரங்களில் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதுகூட பயனளிக்கும். மூளையை மனதோடு சம்பந்தப்பட்ட உறுப்பாக மட்டும் பார்க்காமல், அதை உடலின் ஒரு அங்கமாக நினைத்து, மருந்துகள் தேவைப்பட்டால் கொடுத்து சரியாக்குவதன் மூலம் தம்பதியரிடையே நம்பமுடியாத மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

வாழ்க்கை என்பதே ஒரு மாற்றம்தான். அதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். சில திருமணங்களில் அந்த மாற்றங்கள் வேகமாகவும் சிலதில் மெதுவாகவும் நிகழும். அமைதியாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் கட்டளையிடாமல் பணிவுடன் அணுகும் போது அந்த மாற்றங்கள் சிறப்பாக அமையும். `நீ இப்படி நடந்து கொள்’ எனச் சொல்வதற்குப் பதில் `நான் எப்படி நடந்து கொள்கிறேன்’ எனக் காட்டுவதே மாற்றத்துக்கான முதல் படி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையும் நேரமும்!! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)