ஏ.டி.எச்.டி.(ADHD)! (மகளிர் பக்கம்)
ADHD என்னும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு ஒரு குழந்தைக்கு இருக்கிறதா/இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? கீழ்க்காணும் அறிகுறிகளில், அதிகபட்ச அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால், அது ADHDயாக இருக்கலாம். இது தொடர்பாக, உளவியல் நிபுணரிடமோ (Consultant Psychologist) / குழந்தை நல சிறப்பு மருத்துவரிடமோ (Neurodevelopmental Pediatrician) தெளிவு செய்து கொள்வது நல்லது.
கீழ்க்காணும் அறிகுறிகள் 6 மாத காலத்துக்கும் மேலாக, 12 வயது உட்பட்ட குழந்தைகளிடத்தில் காணப்பட்டு, மேலும், அவர்களின் குடும்பம் மற்றும் பள்ளி வாழ்க்கையை பாதிக்கும் போதுதான், அது ADHD ஆக இருக்கக் கூடும். மேலும், இதே அறிகுறிகள், சிறு குழந்தைகளிடையே காணப்பட்டாலும், அது அவர்கள் வயதுக்கு இயல்பானதொன்றே என்பதால் வெளியே தெரியாது. ஆனால், குழந்தைக்கு கிட்டத்தட்ட 5 வயது ஆனபோதும், பள்ளிக்கு போன பின்னரும் அதே செயல்பாடுகள் தொடரும் போதுதான் மருத்துவரின் கவனத்துக்கு பெரும்பாலும் கொண்டு வரப்படுகிறது. மேலும், கவனமின்மை வகையைக் காட்டிலும் அதீத இயக்க வகை ADHDதான் மருத்துவரின் கவனத்துக்கு அதிகம் கொண்டு வரப்படுகிறது. ஏனெனில், இதன் அறிகுறிகள் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.
ADHD உள்ள குழந்தைகளிடத்தில் காணப்படும் பல்வேறு நடத்தை பாதிப்புகள்
1. நடத்தையை மட்டுப்படுத்துதல்
சட்டென்று, சொல்ல வந்ததை கட்டுப்படுத்திக் கொள்வதில் சிரமம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை தடங்கல் செய்தல். எ.டு. மற்றவா் பேசிக் கொண்டிருக்கையில், அடக்கமுடியாமல் இடைமறித்து பேசுவது.
2. நினைவாற்றல்
நிகழ்வுகளை மனதில் தக்கவைத்துக் கொள்வது மற்றும் சிக்கல்களை எதிர்நோக்குவது/சிக்கலான செயல்பாட்டைப் பின்பற்றி செய்து காட்டுவதில் சிரமம்.
3. சுயக்கட்டுப்பாடு
உணா்ச்சி/செயல்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும் ஒரு விஷயத்தை முன்னும் பின்னும் யோசிப்பதில் சிரமம்.
4. இலக்கு வைத்தல்
இலக்கை நிச்சயித்தல் மற்றும் அதை மனதில் தக்க வைத்துக் கொள்வதில் சிரமம்.
5. புரிந்து கொள்ளுதல்
தன் செயல்பாடுகளை, அது தரும் விளைவுகளை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டு எதிர்காலத்தில் செயல்படுத்துவதில் சிரமம்.
இதனால், அடிக்கடி பிரச்னையில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
ADHDயின் விளைவுகள்
ADHD முக்கியமாக குழந்தையின் கல்வித்திறன் மற்றும் சமூகத்திறனை அதிகம் பாதிக்கிறது. மேலும், அக்குடும்பத்துக்கே இது பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. பெரியவர்களுக்கு ADHD இருக்கும்போது, அவர்களின் சமூக நலம், வேலைத்திறன் மற்றும் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. படிப்பை பாதிப்பதால், குழந்தையின் தன்னம்பிக்கையையும் குறைக்கிறது. தன்னால் எதையும் சாதிக்க முடியாது என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.
மேலும், ADHD பிற மனநலப் பிரச்னையுடன் சேர்ந்து பாதிக்கும் போது, அது ஏற்படுத்தும் விளைவுகள் பெரிது. (எ.டு.) ADHDயும், ODDயும்(Oppositional Defiant Disorder) சேர்ந்து காணப்பட்டால், அக்குழந்தை அடிக்கடி சட்டத்தின் பார்வையில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுவிடக் கூடும்.
காரணி மற்றும் சிகிச்சை
பிற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் போலவே, ADHDயின் காரணியும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மரபணுக்கூறு சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள், நியூரோட்ரான்ஸ்மிட்டர்ஸின் (Neurotransmitters) செயல்பாட்டின் அளவு போன்றவை காரணமாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றது.
சிகிச்சை: நடத்தை சிகிச்சை, மருந்துகள் மற்றும் முக்கியமாக பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைக்கு கிடைக்கும் ஆதரவு போன்றவை ஒருங்கிணைத்து சிகிச்சையாக அளிக்கப்படும் போது, ADHDயின் அறிகுறிகளை நன்றாக சமாளிக்கும் திறன் குழந்தையிடம் ஏற்படுகிறது.
பெற்றோர் செய்ய வேண்டியவை
குழந்தை சரியாக “கவனம் செலுத்தும் போதும், விதிகள்/வழிமுறைகளை பின்பற்றும் போதும், உணர்ச்சி வேகத்தில் செயல்படாமல் இருக்கும் போதும்,
பள்ளிப்பாடத்தை கற்க முயலும் போதும், மற்றவரிடம் சரியான முறையில் பழகும் போதும்”, அதை வலுவூட்டும் விதத்தில் அவர்களை சரியான முறையில் வழிகாட்டுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.
ADHD உள்ள பிரபலங்கள்
புகழ்பெற்ற ஜிம் கேரி (ஹாலிவுட் நடிகர்), பாரிஸ் ஹல்டன் (அமெரிக்க தொழிலதிபர்), மைக்கேல் பெல்ப்ஸ் (புகழ்பெற்ற நீச்சல் வீரர்), ரிச்சர்ட் பிரான்சன் (பிரிட்டன் தொழிலதிபர்) போன்ற பலர்ADHD பிரச்னை இருந்தும் வாழ்க்கையில் சாதித்து காட்டியவர்கள். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ADHD இருக்கின்றது என வருத்தப்படாமல், அதை ஆக்கப்பூர்வமாகவும் சவாலாகவும் எடுத்துக் கொண்டு தகுந்த வழிகாட்டலை அளித்தால் மிக்க நல்லது.
கவனமின்மை அறிகுறிகள்
விவரங்களை சரியாக கவனிக்க தவறுதல்.
பள்ளி அல்லது பிற வேலைகளில் கவனக் குறைவாக தவறுகள் செய்தல்.
ஒரு வேலையில் தொடா்ந்து கவனம் செலுத்துவதில் கஷ்டம்.
நேரடியாக அவர்களிடம் பேசும் போதும், அதை அவா்கள் கேட்பது போலவே தெரியாது.
ஒருவா் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்ற முடியாமல் இருத்தல் மற்றும் கொடுத்த பணியை செய்து முடிக்க முடியாத நிலை.
செயல்பாடு மற்றும் பணிகளை ஒழுங்கு பட சீரமைத்து செய்வதில் சிரமம்.
நீடித்த கவனம் தேவைப்படும் விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் / தயக்கம் காட்டுதல்.
ஒரு வேலை செய்து முடிக்க தேவைப்படும் விஷயங்களை கவனமின்றி தொலைப்பது (எ.டு) புத்தகம், பொம்மை, வீட்டுப்பாடம்.
பிற தூண்டுதல்களால் (Any distraction) எளிதில் கவனம் சிதறுதல்.
தினசரி செயல்பாடுகளில் மறதி.
“கவனமின்மை” முதன்மையாக காணப்படும் ADHD வகையைச் சேர்ந்த இக்குறைபாட்டினால் ஏற்படும் விளைவு கள் பல. இவர்கள், வழிமுறைகளை சரியாக பின்பற்ற முடியாத காரணத்தினால், பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கோபத்துக்கு அடிக்கடி ஆளாவார்கள். மேலும், பள்ளியில் செயல்திறன் பாதிப் படைவதுடன் மற்ற குழந்தைகளுடன் அடிக்கடி தகராறு ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
அதீத இயக்க/உணர்ச்சிவேக அறிகுறிகள்
அதீத இயக்கம் கை மற்றும் கால்களை படபடவென பொறுமையின்றி அசைப்பது அல்லது இருக்கையில் நெளிவது. உட்கார சொன்னாலும், இருக்கையை விட்டு நகா்ந்து செல்வது (எ.டு.பள்ளி நேரத்தில் இருக்கையில் அமராமல் நகா்ந்து கொண்டே இருப்பது). சம்பந்தமேயில்லாத சூழ்நிலையில் அதிகமாக நகருவது/ஓடுவது (எ-டு. புது உறவினர் வீடு/ஏதேனும் அமைதியான சூழலிலும் ஓடுவது).
சத்தமின்றி விளையாடுவது மற்றும் ஓய்வெடுப்பதில் சிரமம்.எப்போதுமே இயங்கிக்கொண்டு இருப்பதுபோல் காட்சியளித்தல்.அதிக பேச்சு, உணா்ச்சிவேக செயல்பாடுகள். கேள்வி கேட்டு முடிப்பதற்குள் பதில் சொல்வது. அவா்களின் முறை வரும் வரை காத்திருக்க பொறுமையின்மை.மற்றவர்கள் பேசும்போதோ/
விளையாட்டின்போதோ நாகரிகமின்றி குறுக்கிடுதல்.சுயக்கட்டுப்பாடு இல்லாமை – எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.
இவ்வகை அறிகுறிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளில் காணப்படவேண்டும். எ.டு. குழந்தை வீட்டில் மட்டுமே இங்ஙனம் நடந்து கொண்டு பள்ளியில் இயல்பாக இருந்தால், அது ADHDயாக இருக்காது. எனவே, பள்ளி, வீடு மற்றும் பிற அமைப்புகளிலும் ஒரே மாதிரியாக குழந்தை நடந்து கொண்டால் அது ADHDயாக இருக்கக்கூடும். மேலும், இந்த அறிகுறிகள், வேறு மனநல கோளாறுகளான ஆளுமை கோளாறு, அறிவுத்திறன் குறைபாடு அல்லது மனநோய் (Psychotic disorder) போன்றவற்றால் ஏற்பட்டிருந்தால் அது ADHDயாக இருக்க வாய்ப்பு குறைவு. அதுமட்டுமின்றி, குழந்தைக்கு சமீபத்தில் ஏதேனும் மனஉளைச்சல் தரும் சம்பவம் ஏற்பட்டதா அல்லது தைராய்டு நரம்பியல் கோளாறு, வலிப்பு, தூக்க கோளாறு கள் இருக்கின்றனவா என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது போன்ற பிற பிரச்னைகளும், ADHDயை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.
ADHDயால் ஏற்படும் நல்ல விளைவுகள்
ADHD என்றால் சாபம் என நினைக்கும் சூழலில், அதனால் சில நன்மைகளும் உண்டு என்பதை அறிவது, பெற்றோருக்கு ஒரு சின்ன சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
1. படைப்பாற்றல்
ADHD உள்ள குழந்தைகள் அபாரமாக படைப்பாற்றல் சக்தியுடன் மற்றும் கற்பனைத் திறனுடன் திகழ்வார்கள். பகல்கனவு காணும் இக்குழந்தைகள் ஒரே நேரத்தில் பலவிதமாக சிந்திப்பார்கள். இதனால் இவர்கள் புதிய விஷயத்தை படைக்கும் கலைஞர்களாக ஆகும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, யாரும் கவனிக்காத விஷயத்தையும் கூட இவர்களால் பார்க்க முடியும்.
2. வளைந்து கொடுக்கும் தன்மை
ஒரே நேரத்தில் வெவ்வேறு வழிமுறைகளை இவர்கள் எண்ணிப் பார்ப்பதால், ஒரு தீர்விலேயே ஒன்றிவிடாமல் வித்தியாசமான கருத்துகளையும் ஆர்வமாக ஏற்றுக் கொள்வார்கள்.
3. அதிக உற்சாகம்
எப்போதும் உற்சாகமாகக் காணப்படுவதால், இவர்கள் பழகுவதற்கு, சுவாரஸ்யமானவர்களாக இருப்பார்கள், குறிப்பாக, ஒத்த ஆர்வமுள்ளவர்களு டன்.
4. உந்து சக்தி
இவர்களுக்கு தகுந்த ஊக்கமளித்தால், படிப்பிலும், விளையாட்டிலும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவர். பிடித்த செயல்பாட்டில்/விஷயத்தில் ஈடுபடும்போது, இவா்களை அவ்வளவு எளிதில் திசை திருப்ப முடியாது.
Average Rating