என் திருமணத்தின் நிலை என்ன? (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 57 Second

நான் படித்த பட்டதாரிப் பெண். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். 32 வயது. திருமணம் ஆகவில்லை. தோழி ஒருவர் அவருடைய குடும்ப நண்பர் என்று விவாகரத்து ஆன ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்களுக்குள் நட்பு வளர்ந்து, அது காதலாக மலர்ந்து, திருமணம் செய்ய விரும்பினோம். என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவருக்கு பெற்றோர் இல்லை.

ஒரு சகோதரி மட்டுமே. என் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக, நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு முன் விவாகரத்து ஆன நீதிமன்ற உத்தரவை என்னிடம் காட்டினார். அதில் நீதிமன்றம் அவர் மனைவி கோரியதுபோல விவாகரத்து அருளியதாக தீர்ப்பு இருந்தது. எனக்கு அவரைப் பிடித்திருந்ததால்தான் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆனதிலிருந்து, என்னை பாலியல் ரீதியாக மட்டுமின்றி, உடலளவிலும் மனதளவிலும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தி வருகிறார்.

இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துகிறார். அதை எதிர்த்து நான் கேள்வி கேட்டவுடன், ‘நீ என் சட்ட ரீதியான மனைவியே இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நான் மேல்முறையீடு செய்திருக்கிறேன். அதனால் நீ என் மீது ஒரு மனைவியாக நீதிமன்றத்தில் எந்தவிதமான வழக்கும் தொடர முடியாது’ என்று கூறுகிறார். அவருடைய வார்த்தைகள் உண்மையா என்பது புரியவில்லை. எவ்வாறு அறிந்துகொள்வது?

ஆரம்பத்தில் குடும்பச் செலவுக்கு பணம் கொடுத்து வந்தவர் இப்போது சரிவர கொடுப்பதில்லை. அது பற்றிக் கேட்டாலும், அடி, உதை, கெட்ட வார்த்தைகளால் திட்டுவதோடு, பலவாறாக என்னை வேதனைப்படுத்துகிறார். எனக்குத் தெரிந்து, விவாகரத்து பெற்றவரை திருமணம் செய்து கொண்ட பலர் எந்தப் பிரச்னையுமின்றி நிம்மதியாக வாழும்போது, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? திருமணத்துக்கு முன் அவர் என்னிடம் கொடுத்த நீதிமன்ற விவாகரத்து தீர்ப்பு மேல் முறையீட்டில் இருந்தால் என் திருமணத்தின் நிலை என்ன? இன்று நான் அனுபவிக்கும் கொடுமைக்கு

சட்ட ரீதியான தீர்வு உண்டா?

என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி…நம் சமூகத்தில் இன்றைய நிலையில் பல திருமணங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக விவாகரத்தில் முடியக் கூடிய நிலையில் இருக்கிறது. ஒரு திருமணம் முடிவை நோக்கி செல்லும்போது இரு தரப்பும் மனமொத்து கொடுக்கக்கூடிய விவாகரத்தாக இருக்கும் பட்சத்தில், அதற்கு மேல் முறையீடு கிடையாது.

இருதரப்பும் எதிர் எதிர் துருவங்களாக நின்று வழக்கு நடத்தும் நேரங்களில் கொடுக்கப்படக் கூடிய தீர்ப்புகளில் மேல் முறையீடுக்கு செல்லக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். ஒருதலைப்பட்சமாகக் கொடுக்கப்படக்கூடிய தீர்ப்புகளிலும், அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மனு தாக்கல் செய்யக்கூடிய சாத்தியக்கூறு உண்டு. எந்த ஒரு நீதிமன்றம் கொடுக்கக்கூடிய விவாகரத்து தீர்ப்பும் இறுதியானதா அல்லது மேல்முறையீட்டுக்கு வாய்ப்புள்ளதா என்பதை தீர ஆராய்ந்து, திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பது நம்முடைய கடமை.

உங்களது திருமண பந்தம் சட்ட ரீதியாக செல்லக்கூடிய பந்தமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கிறது. எனினும், நீங்கள் அவருடன் மனைவிக்கு இணையான நிலையிலும், அவரும் தங்களுடன் கணவருக்கு இணையான நிலையிலும் வாழ்ந்து வந்த காரணத்தால், அந்த நபர் உங்களுக்குக் கொடுத்த உடல் ரீதியான, மனரீதியான, பாலியல் ரீதியான வன்முறைக்கு 2005ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்ட’த்தின் கீழ் தீர்வு உள்ளது.

அச்சட்டத்தின் படி உங்கள் எல்லைக்கு உட்பட்ட சமூக நல ஆணையத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அலுவலரிடம் மனு தாக்கல் செய்து, உங்கள் மேல் வன்முறை நிகழ்த்தியதற்கும், நஷ்டஈடும், பொருளாதார இழப்பை ஈடுசெய்வதற்கு நிவாரணமும் கோரலாம்.

பாதுகாப்பு அலுவலர் மனுவை ஏற்றுக்கொண்டு, நீங்கள் கோரிய நிவாரணம் கிடைக்க, இவ்வழக்கினை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தகுந்த தீர்ப்பினை பெற்றுத் தர இயலும். ஒரு பெண்ணின் மீதான உரிமை மீறலும் மனித உரிமை மீறலே. அன்புத் தோழி… மனம் தளராதீர்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டவராக இருந்தாலும், சட்டம் உங்களைப் போல நிலையிலுள்ள பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வழிவகை செய்துள்ளது. உடனே சட்டத்தின் உதவியை நாடி தகுந்த தீர்வைப் பெற்றுக் கொள்ளவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. !! (அவ்வப்போது கிளாமர்)