தொலைந்த கனவுகள் -_ Lost In Translation!! (மகளிர் பக்கம்)
நம்மைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும்போது நம் மனதின் அமைதியைக் குலைக்கின்ற விஷயங்களை அதிகமாக நமக்குள் அனுமதிக்க மாட்டோம்.
– பாப் ஹாரீஸ்
ஓர் இளம் பெண்ணின் தனிமையை, அவள் மென்மையான உணர்வுகளை, தவிப்புகளை ஆழமாகச் சித்தரிக்கிறது ‘Lost in Translation’.
ஓர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்தவள் சார்லெட். அதற்காகவே தத்துவத்தை முதன்மை பாடமாக எடுத்து கல்லூரியில் படித்தாள். படிப்பு முடிந்த சில மாதங்களில் பிரபலங்களைப் புகைப்படமெடுக்கும் கலைஞன் ஒருவனுடன் அவளுக்குத் திருமணமாகிறது. இரண்டு ஆண்டுகள் வேகமாக ஓடுகிறது. அவளுக்குக் குழந்தையில்லை.
கணவனுக்கு ஜப்பானில் ஒரு புரொஜெக்ட் கிடைக்கிறது. அதனால் சார்லெட்டும் கணவனுடன் டோக்கியோவுக்கு வந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறாள். வேலை விஷயமாக வெளியே செல்லும் கணவன் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தான் ஹோட்டல் அறைக்கு வருகிறான். அதனால் சார்லெட்டிற்கு நாள் முழுவதும் ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை.
பக்கத்தில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் உடன் வர அவளுக்குத் துணையில்லை. அவளின் நிமிடங்கள் எறும்பை விட மெதுவாக ஊர்ந்து செல்கிறது. தனிமை அவளை புரட்டி எடுக்கிறது. ஜன்னலின் விளிம்பில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கைப் பார்ப்பதில் சார்லெட்டின் நாட்கள் நகர்கிறது. தொலைபேசி மணி ஒலித்தால் கணவனாக இருப்பானோ என்று ஓடிப்போய் எடுக்கிறாள்.
ஆனால், மறுமுனையில் வேறு யாரோ இருக்க ஏமாந்து போகிறாள். பகல் நேரம் இப்படியென்றால் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறாள். நான்கு நாட்கள் கழித்து கணவன் வந்தாலும் அவனுடைய வேலைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான். ஒரேயொரு நாள் இரவில் சார்லெட்டுடன் தங்குகிறான். அவனின் குறட்டைச் சத்தத்தில் சார்லெட்டின் சில நிமிட தூக்கம் பறிபோவதுதான் மிச்சம்.
தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை, கனவைத் தொலைத்ததைப் போல உணர்கிறாள் அவள். ஏக்கமும் பரிதவிப்பும் அவளின் முகமெங்கும் அப்பிக்கொள்கிறது. இந்தச் சூழலில் சார்லெட் தங்கியிருக்கும் அதே ஹோட்டலுக்கு ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க நடிகர் பாப் ஹாரீஸ் வருகிறார். அவரது ஒவ்வொரு நிமிட நடவடிக்கையையும் கவனித்துக்கொண்டிருப்பது அவரின் மனைவியின் வழக்கம்.
அதனால் தனது சுதந்திரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் அவரால் சரியாக கவனம் செலுத்த முடிவதில்லை. அமெரிக்காவில் அவரின் புகழ் மங்கியபோதும் ஜப்பானில் உள்ள ஒரு மதுபான நிறுவனம் அவரை தனது புரொடக்ட் விளம்பரத்தில் நடிக்கக் கேட்கிறது. அதற்காக மில்லியன் டாலரில் சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது.
அந்த விளம்பரத்தில் நடிக்கவே அவர் டோக்கியோ வந்திருக்கிறார். ஆனாலும் அவரின் மனைவி தொலைபேசி மற்றும் ஃபேக்ஸ் மூலம் தொல்லைப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தவிர, குழந்தைகள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று அவரை வேலையில் ஈடுபட முடியாமல் செய்கிறார். இதனால் விளம்பர படத்தில் சரியாக நடிக்க முடியாமல் திணறுகிறார்.
அதனால் அவமானத்துக்கு உள்ளாகிறார். மனைவியின் இடைவிடாத தொல்லை, சரியாக நடிக்க முடியாத இயலாமையால் வருந்தும் பாப்பாலும் சரியாகத் தூங்க முடிவதில்லை. இரவானதும் ஹோட்டலில் இருக்கும் மது விடுதியில் தஞ்சமடைகிறார். அதிகாலை வரை மதுவில் மூழ்கிவிடுகிறார்.
தனிமை, தூக்கமின்மை, அலுப்பு என்ற புள்ளியில் சார்லெட்டும் பாப் ஹாரீஸும் இணைகிறார்கள்.
இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதால் அடிக்கடி நேரில் பார்த்துக்கொள்கின்றனர். அறிமுகம் இல்லை என்பதால் பேசிக்கொள்வதில்லை. ஒரு நாள் மது விடுதியில் பார் ஹாரீஸ் இருக்கும்போது அங்கே சார்லெட் வருகிறாள். அவளாகவே போய் பாப்பிடம் பேசுகிறாள். இருவரும் விரைவிலேயே நண்பர்களாகிவிடுகிறார்கள்.
பாப்பை அழைத்துக்கொண்டு தன் நண்பர்களைக் காணச் செல்கிறாள் சார்லெட். சார்லெட்டை விட பாப் முப்பது வயது மூத்தவர் என்றாலும் பள்ளிக் குழந்தைகளைப் போல இருவரும் அன்பில் திளைக்கின்றனர். அந்த அன்பு, நட்பு என்ற எல்லையை மீறாமல் அழகாகச் செல்கிறது.
சார்லெட் தான் இழந்ததை எல்லாம் பாப் மூலம் பெறுகிறாள்.
பாப்பும் தான் இழந்ததை எல்லாம் சார்லெட் மூலம் பெறுகிறார். சில சமயம் தூக்கம் வராமல் பாப்பின் அறைக்கு வந்து அவரிடம் விடிய விடிய பேசுகிறாள். சார்லெட்டை எழுதச் சொல்கிறார் பாப். அவளுக்குள் நம்பிக்கை பிறக்கிறது. இந்நிலையில் பாப்பின் ஷூட்டிங் முடிகிறது. அவரது மனைவி வீட்டிற்கு வரச்சொல்லி ஃபேக்ஸ் அனுப்பிக்கொண்டே இருக்கிறாள்.
சார்லெட்டிடம் கண்ணீருடன் பிரியா விடைபெற்று அமெரிக்காவுக்குக் கிளம்புகிறார் பாப். மீண்டும் தீராத தனிமையில் விடப்படுகிறாள் சார்லெட். படம் முடிகிறது. நவீன காலத்தில் பெண்கள் அடைந்து வரும் தனிமை, தூக்கமின்மை, வாழ்வின் மீதான அலுப்பை இப்படம் அழகாகச்
சித்தரிக்கிறது.
பாப்பாகவும், சார்லெட்டாகவும் நடித்தவர்களின் நடிப்பு அருமை. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஷோஃபியா கப்போலா.
Average Rating