என்னைவிட அவருக்கு 6 வயசு கம்மி!! (மகளிர் பக்கம்)
அன்புத் தோழி, எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. என் கடிதத்தை படித்தால் என்னை தவறாக நினைப்பீர்களா? ஆனாலும் பயம், பிரச்னைகள் என்னை எழுத வைக்கிறது. பிள்ளைகளும் அவரும் சென்றபின் தான் சாப்பிடுவேன். அதற்கு பிறகு துடைப்பது துவைப்பது என வீட்டு வேலைகள் என்னை ஆக்கிரமிக்கும். எல்லாம் ஓய்ந்த பிறகு டிவித் தொடர்கள் என்னை அரவணைக்கும். இதுதான் எனது தினசரி வாழ்க்கை.
சமீபத்தில் என் பிறந்த நாளுக்கு புது செல்போனை வாங்கித் தந்தார் எனது கணவர். அதுவரை சாதாரண போன்தான் வைத்திருந்தேன். அதன் பிறகு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என்று நாட்கள் சுறுசுறுப்பாகின. டிவியை ஆன் செய்து விட்டு நான் செல்போனுடன் ஒன்றியிருப்பேன்.
சமூக ஊடகங்கள் மூலமாக புதிய அறிமுகங்கள், நட்புகள் கிடைத்தன.
அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஒருநாள் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்து பேசினேன். அது ஒரு அறிமுகமில்லாத ஆள். ‘ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் இருக்கிறாரா’ என்று கேட்டார். நான் ‘அப்படி யாரும் இல்லை’ என்றேன்.
பிறகு ‘நீங்கள் யார்’ என்றார். ‘எதற்கு கேட்கிறீர்கள்’ என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டேன். பிறகு 2 நாட்கள் கழித்து அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். ‘முதலில் மன்னிப்பு கேட்டவர், தனது நண்பர் தவறான எண்ணை தந்து விட்டார். அதனால்தான் பிரச்னை, தவறாக நினைக்க வேண்டாம்’ என்றவர், ‘நீங்கள் கோபக்காரரா?’ என்று கேட்டார்.
‘இல்லை. எதற்கு கேட்கிறீர்கள்’ என்றேன். ‘யார் என்று கேட்டதற்கு உடனே போனை வைத்து விட்டீர்களே’ என்றார். ‘யார் என்று தெரியாதவரிடம் என்ன பேசுவது அதனால்தான் கட் பண்ணிவிட்டேன்’ என்றேன்.பிறகு அவர் பெயரையும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், திருமணம் ஆகவில்லை என்பதையும் கூறினார்.
‘என்னைப் பார்க்க வேண்டும் என்றால் என் வாட்ஸ்ஆப் புரபைல் பிக்சரை பாருங்கள்’ என்றார்.‘பரவாயில்லை நான் போனை வைக்கிறேன்’ என்று கூறி கட் பண்ணிவிட்டேன். ஆனாலும் அந்த எண்ணை சேமித்து வாட்ஸ் ஆப்பில் அவரது புரபைல் பிக்சரை பார்த்தேன். அழகாக இருந்தார். அடிக்கடி எடுத்து பார்த்தேன். அடுத்தநாள் அதே எண்ணில் அழைப்பு.
‘வாட்ஸ்ஆப்பில் என் படம் பார்த்தீர்களா இனி நான் உங்களுக்கு தெரிந்தவன் தானே’ என்றார். என்னை அறியாமல் ‘ ஆமாம்’ என்று சொல்லிவிட்டேன். பிறகு என்னைப்பற்றி கேட்டார். எனக்கு திருமணம் ஆனதையும் 2 பிள்ளைகள் இருப்பதையும் சொன்னேன்.
அதற்கு அவர் ‘உங்கள் குரலை கேட்டால் இனிமையாக இருக்கிறது’ என்றார். பிறகு எனது படத்தை வாட்ஸ்ஆப் புரபைல் பிக்சராக வைக்கச் சொன்னார். நான் மறுத்தேன். தினமும் பேசி வலியுறுத்தினார். நானும் குழந்தைகள் படத்தை மாற்றிவிட்டு என் படத்தை வைத்தேன்.
அதை பார்த்து விட்டு அவர், ‘நீங்கள் திருமணமாகி விட்டது என்று பொய்தானே சொல்கிறீர்கள். நீங்கள் கல்லூரியில்தானே படிக்கிறீர்கள்’ என்றார். உடனே, ‘ நான் எனக்கு திருமணமாகிவிட்டது’ என்று எனது கல்யாண போட்டோவை அனுப்பினேன். உடனே அவர் ‘நீங்கள் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள் அதனால் தான் நீங்கள் திருமணமானவர் என்பதை நம்ப முடியாமல் கேட்டேன்’ என்று கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்ததுஇப்படி தொடர்ந்த பேச்சுகளால் நெருக்கமானோம். அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம்.
தினமும் அவருடைய அழைப்பு எப்போது வரும் என்று காத்திருப்பேன். வீடியோ அழைப்பிலும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேசுவோம். காதலர்களை போல் பேச ஆரம்பித்த நாங்கள் போனிலேயே கணவன், மனைவி போல் வாழ்கிறோம். அவரது பிறந்தநாளுக்கு என்னை பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
அவர் பிறந்த தேதியை கேட்டேன். அப்போதுதான் அவர் என்னை விட 6 வயது சிறியவர் என்று தெரிந்தது. என்னை விட சிறியவரிடம் இப்படி நடந்து கொண்டோமே என்ற உறுத்தல் ஏற்பட்டுவிட்டது. அதை நினைக்க வெட்கமாகவும் இருக்கிறது. என் நெருக்கமான தோழியிடம் வேறு ஒருவரின் பெண்ணின் பிரச்னையை சொல்வது போல் என் பிரச்னையை சொன்னேன். அவளோ, ‘அவங்களை உஷாராக இருக்கச் சொல். சின்னப் பசங்க இதுபோல்தான் ஆன்டிகளிடம் பேசி பிளாக் மெயில் செய்கிறார்கள், பணம் பறிக்கிறார்கள்’ என்று பயமுறுத்துகிறாள். அதனால் அவரிடம் பேச தயக்கமாக இருக்கிறது. ஆனால் பேசாமலும் இருக்க முடியவில்லை.
இப்போது விஷயம் வெளியில் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது. என் வீட்டுக்காரர் என்மீது பாசமாக நடந்து கொள்கிறார். இதுவரை எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை. அதனால் கணவருக்கு தெரிந்தால் என்னை விட்டு விலகி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என்னால் என் பிள்ளைகளுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? நான் என்ன செய்வது தோழி?
இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,இந்தக் காலத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுகின்றன. அதில் ஒன்றுதான் உங்கள் பிரச்னை. உங்கள் புது நண்பர் நல்லவராகவே இருக்கலாம் அல்லது திட்டம் போட்டு உங்களை மாற்றத் தெரிந்த சாமர்த்தியசாலியாகவும் இருக்கலாம்.ஆக அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்களுக்கு வந்திருக்கும் பயம் நியாயமானது. சரியான நேரத்தில் தவறான பாதையில் செல்கிறோம் என்ற விழப்புணர்வு வந்திருப்பது நல்ல விஷயம்தான்.
அதிக வயதோ, குறைந்த வயதோ இதுவரை நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் இந்த நட்பு தொடர்ந்தால் உங்கள் உறவு நாளை எந்த மாதிரியாக மாறும் என்பது தெரியாது. அதனால் கவனம் தேவை.அவரிடம் பேச வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்பது சரிதான். ஆனால் பேசாமல் இருக்க முடியவில்லை என்று உங்கள் நிலைமையை சொல்லியிருக்கிறீர்கள். அதனால் சில யோசனைகள் சொல்கிறேன்.
உங்கள் செல்போன் எண்ணை மாற்றி விடுங்கள். புதிய எண்ணை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் கொடுங்கள். கொஞ்சநாள் பேசாமல் இருங்கள். அவரே உங்களை மறந்து வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவார்.போன் எண்ணை மாற்றாமல் பேசாமல் இருக்கலாம் என்பது சாத்தியமில்லை. அவரது அழைப்பு வந்தால் உங்களால் பேசாமல் இருக்க முடியாது. அதனால் புதிய எண்ணுக்கு மாறுவதுதான் நல்லது.
ஆனால் திடீரென போன் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் உங்கள் கணவரிடம் காரணத்தை சொல்ல வேண்டும். எனவே நீங்கள் போன் வைத்திருக்கும் நிறுவனம் தவிர்த்து மற்ற நிறுவனங்களின் சேவைகளின் சிறப்புகள், கட்டண வேறுபாடுகள், சிக்னல் பிரச்னைகளை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கணவரிடம் இந்த காரணங்களை சொல்லி வேறு எண்ணை வாங்கித் தரச் சொல்லலாம்.
உங்கள் புதிய எண்ணை புதிய நபருக்கு சொல்லாதீர்கள். அதேபோல் அவருடன் பகிர்ந்து கொண்ட விவரங்களை மட்டுமல்ல அவரது எண்ணையும் டெலிட் செய்து விடுங்கள்,தப்பித்தவறிக் கூட அவரது எண்ணை எங்கேயும் குறித்து வைக்காதீர்கள். திடீரென சலனப்பட்டு பேச ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் அவரது எண்ணை எங்கேயும் எழுதி வைத்திருந்தால் அழித்து விடுங்கள்.
கொஞ்சநாளைக்கு சிரமமாகத்தான் இருக்கும். இதுபோன்ற உறவுகள் உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் அது நிரந்தரமல்ல. அந்த நெருக்கத்தால் வரும் பிரச்னைகள் நிரந்தரம். இல்லாவிட்டால் ‘வேலியில் போற ஓணானை…’ என்ற பழமொழிக்கு உதாரணமாகிவிடும் உங்கள் வாழ்க்கைஉங்களுக்கு அன்பான கணவர், நிறைவான வாழ்க்கை. எனவே சலனப்படாதீர்கள். வாழ்க்கை தடம் புரண்டால் சரிசெய்வது சிரமம். எனவே கவனமாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.
அதிலும் நீங்கள் பிரச்னையில் சிக்குவதற்கு முன்பே எச்சரிக்கை வந்து விட்டது. எனவே தப்பித்தோம் என்று மகிழ்ச்சி அடையுங்கள்.இதுபோன்ற அந்தரங்க பிரச்னையை தயங்காமல் வெளியில் சொல்லி தீர்வு காண நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு என பாராட்டுகள். கவலை வேண்டாம் எல்லாம் சரியாகும்.
Average Rating