குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா?! (மருத்துவம்)
நோய்கள் வராமல் தடுக்கும் நோக்கத்தில்தான் தடுப்பு மருந்துகள் மருத்துவ உலகினரால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக தடுப்பு மருந்துகள் குறித்து சர்ச்சைகளும், சந்தேகங்களும் அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்த தடுப்பு மருந்து வெறுப்பு விகிதம் நகர்ப்புறங்களில் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் 150 பேர் இதில் கலந்துகொண்டனர். குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்த தயக்கம் மற்றும் பெற்றோரின் அணுகுமுறை குறித்து மூன்று பகுதி கேள்வித்தாள்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்தான் நோய்களுக்கான தடுப்பு மருந்து புதிதாக இருக்கிறபோது அல்லது பொதுவானவையாக இல்லை என்கிற சூழலில் நகரத்தில் வசிக்கும் 20 பேரில் ஒரு பெற்றோர் தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்று தெரிய வந்தது.
பெரும்பாலான சுகாதார நடவடிக்கைகளில் சிறந்த குறியீடுகளைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 1998-99-ம் ஆண்டில் 89 சதவீதமாக இருந்த தடுப்பூசி பாதுகாப்பு சார்ந்த குறியீடுகள் 2015-16-ம் ஆண்டில் 69 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல் போன்ற நோய்கள் திடீரென அதிகரிப்பது குறித்து குழந்தை நல மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
‘5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோருக்கு தடுப்பூசிகள் குறித்து அதிகளவில் தயக்கம் இருந்தது.
இதற்கு தொலைக்காட்சியும் அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் தடுப்பூசிக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் குழந்தைகள் உயிரோடும் விளையாடும் ஆபத்தானதாக இருக்கிறது என்கிறார்கள். புதிய தடுப்பூசிகளுக்கு எதிரான சந்தேகம், அதன் பாதுகாப்பு பற்றிய கவலைகள், அதன் மீதுள்ள அச்சம் போன்றவற்றால் அசாதாரண நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் தேவையற்றவை என்கிற உணர்வுதான் பெற்றோரிடம் உள்ள தடுப்பூசி தயக்கத்திற்கான முக்கிய காரணங்களாக இருக்கிறது.
குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அந்த தடுப்பூசிகள் மூலம் பாதகமான பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, சிலருக்கு முரணாக இருக்கலாம். ஆனால் இவை விதிவிலக்குகளே. எனவே, குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோரின் பேச்சுகளுக்கு செவி சாய்க்க வேண்டும். அதோடு பெற்றோரின் சந்தேகங்களை நீக்கி தடுப்பூசியின் நன்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறவும் வேண்டும். தடுப்பூசிகள் குறித்த அறிவும், தகவலும் வழங்குவது மட்டும் போதாது. இதுகுறித்த தலையீடுகள் யாவும் நடத்தை மாற்றத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்கின்றனர் இந்த ஆய்வின் ஆசிரியர்கள்.
அதே நேரத்தில் ‘புதிய தடுப்பூசிகளின் நன்மைகள் மற்றும் பாதகமான விளைவுகள் பற்றி விவாதிக்கக்கூடிய வெளிப்படையான கொள்கைகள் அமைய வேண்டும்’ என்கிறார் டெல்லியைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் ஜேக்கப் எம்.புலியேல். புதிய தடுப்பூசிகள் மற்றும் அதனால் தடுக்கப்படும் நோய்கள் குறித்து மக்களிடம் உள்ள தவறான எண்ணங்களே, தடுப்பூசி திட்டங்களின் மேம்பாட்டிற்கு எதிரான விளைவுகளை உருவாக்குகிறது.
பொதுவாக பிரபலமான தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பரவுகிற தவறான தகவல்கள் தடுப்பூசி தயக்கத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, பொதுமக்களிடையே இன்னும் கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் அது குறித்த மக்களின் அச்சங்களை அகற்றுவதற்கும் உரிய உத்திகளை உருவாக்க வேண்டும் என்கின்றனர் இந்த ஆய்வின் ஆசிரியர்கள். ‘சமூக ஊடகங்களில் பரவுகிற தடுப்பூசி எதிர்ப்பு பிரசாரங்கள் பெற்றோரை பாதிக்கின்றன. அம்மை நோய்க்கான ரூபெல்லா தடுப்பூசியை அறிமுகம் செய்தபோது இதுபோன்ற பிரச்னையை அதிகமாக நாங்கள் எதிர்கொண்டோம். தடுப்பூசி போடாத மாணவர்கள் பள்ளியில் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளி கல்வித்துறை மூலம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே தற்போது தடுப்பூசிகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கட்டுப்படுத்த பொது சுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் எடுப்பதோடு, இது
குறித்த சரியான விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களிடையே அதிகரித்து வருகிறோம்’ என்கிறது பொது சுகாதார இயக்குநரகம். இந்த ஆய்வறிக்கை நவம்பர் மாத Indian Journal of Community Medicine’s இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
Average Rating