இலங்கையில் முதலாவது ஆயுதப் போராட்டம்: 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் ஜே.வி.பி கிளர்ச்சி !! (கட்டுரை)
இலங்கையில், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, அரசுக்கு எதிராகப் போராடும் முன்னரே, தெற்கில் சிங்கள இளைஞர்கள், அரச எதிர்ப்புக் கிளர்ச்சியில் முதலில் ஈடுபட்டனர்.
வடக்கில், முதலாவது அரச எதிர்ப்பு வேட்டு, 1975ஆம் ஆண்டே தீர்க்கப்பட்டது. அதன் போது, யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார். தெற்கில் ஆயுதப் பேராட்டம், 1971ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
அந்த ஆயுதப் போராட்டத்துக்கு, நேற்று முன்தினம் (05) ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகியது. மக்கள் விடுதலை முன்னணியே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியது. அது, வடக்கு – கிழக்கில் இடம்பெற்றதைப் போல், சிறிது சிறிதாகத் தீவிரமடைந்த ஆயுதப் போராட்டம் அல்ல. ஒரே இரவில், அதாவது, 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி, நாட்டில் பல பொலிஸ் நிலையங்களைத் தாக்கியே, அந்தக் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
நீண்ட காலமாக, அஹிம்சை வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழர்களை, ஆயுதம் ஏந்தத் தூண்டிய உந்து சக்தி, நாட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற அந்தக் கிளர்ச்சியே என, சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சிலர், இரண்டு ஆயுதப் போராட்டங்களுக்கும் இடையே அவ்வாறானதொரு தொடர்பு இல்லை என்றும் வாதிடுகின்றனர்.
1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை, தமிழ்க் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக ஒரு பெறுமதி இருந்தது. அக்கட்சிகளின் ஆதரவைத் தெற்கில் இருந்த பிரதான கட்சிகளும் நாடி வந்தமையால், அக்கட்சிகளுக்குப் பேரம் பேசும் சக்தி இருந்தது. ஆயினும், 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றதை அடுத்து இந்த நிலைமை மாறியது.
ஐக்கிய முன்னணி இவ்வாறான மாபெரும் பலத்தை பெற்றதை அடுத்து, ஆளும் கட்சிக்கோ எதிர்க்கட்சிக்கோ தமிழ் கட்சிகளின் ஆதரவு தேவைப்படவில்லை. எனவே, தாமும் மதிக்கத்தக்க சக்தி என்பதை, தெற்கே உள்ள பிரதான கட்சிகளுக்குக் காட்ட ஏதாவது ஒரு வழி, தமிழ் கட்சிகளுக்கு தேவைப்பட்டது என்றும் அதன் விளைவே பிரிவினைவாதம் என்றும் சீனா சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து காலஞ்சென்ற ந. சண்முகதாசன் கூறியிருந்தார்.
1971ஆம் ஆண்டு கிளர்ச்சி, தமிழ் ஆயுதப் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்ததோ இல்லையோ, அக்கிளர்ச்சியானது இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாகியது.
கிளர்ச்சி என்று கூறப்பட்ட போதிலும் 1971 ஆம் ஆண்டு அரச எதிர்ப்பு ஆயதப் போராட்டமானது தமிழர்களின் ஆயுதப் போராட்த்தோடு ஒப்பிடும் போது, சிறு பிள்ளைகளின் விளையாட்டு போன்றது. அக்காலத்தில் இலங்கையில் பொலிஸ் படையோ, முப்படைகளோ பெரியளவில் இருக்கவில்லை. அக்கால முப்படைகள், அரச விழாக்களின் போது, அணிவகுப்புகளில் ஈடுபடுத்தப்பட்ட படைகளேயல்லாது, சண்டைகளில் ஈடுபட்ட படைகளல்ல.
தமிழ் ஆயுதப் போராட்டம், பல்குழல் பீரங்கிகளாலும் கண்ணி வெடிகளாலும் தற்கொலை குண்டுதாரிகளாலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும். ஆனால், 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியானது, அக்கால அரச அணிவகுப்புப் படைகளால், சுமார் இரண்டு வாரங்களில் முறியடிக்கப்பட்டது.
எனினும், சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியும் வரலாற்றுக் காரணங்களின் விளைவேயல்லாது, தனிநபரின் மனதில் உதித்த குழப்பக்கார எண்ணத்தின் விளைவல்ல.
1960களில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மக்கள் வெகுவாகப் பதிக்கப்பட்டனர். இன்று போலவே அக்காலத்தில் இருந்த பிரதான இரண்டு கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிடமோ ஐக்கிய தேசிய கட்சியிடமோ, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்கவில்லை.
ஆனால், இடதுசாரிகளிடம் ஒரு தீர்வு இருந்தது. அது தான் சோஷலிஸம். நடைமுறையில் சாத்தியமோ இல்லையோ, அது தர்க்க ரீதியாகவும் இருந்தது. அதற்காக எடுத்துக் காட்ட ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் சோஷலிஸத்தின் உதயம், கியூபா புரட்சி போன்றவை இருந்தன.
ரஷ்யா, சீனப் புரட்சிகள் மூலம் மிகவும் பின்தங்கிய நிலப் பிரபுத்துவ நாடுகள் விண்வெளியையும் வெற்றி கொண்டு, அமெரிக்காவையும் கதி கலங்கச் செய்த நவீன உலக சக்திகளாக மாறி இருந்தன. இவற்றால் உந்தப்பட்ட இலங்கையின் இடது சாரிகளுக்கு, இலங்கையில் சரியான தலைமை இருக்கவில்லை. போதாக்குறைக்கு 1964 ஆம் ஆண்டு, இலங்கையின் இடதுசாரி இயக்கம் பாரியதொரு சரிவை எதிர்நோக்கியது.
ஏறத்தாழ சகல இடதுசாரி கட்சிகளும் ஒன்று சேர்ந்து, இடதுசாரி ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கி, 21 கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்கப் போராட்டமொன்றுக்குத் தயாராகின. அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கத்துடன், அப்போதும் பதவியில் இருந்த சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கம், சமசமாஜ கட்சியின் தலைவர்களான கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அரசாங்கத்துடன் சேர்த்துக் கொண்டது; போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் தான், புதியதோர் இடதுசாரி சக்தி அவசியமாகியது. அக்காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் சண்முகதாசனின் சீன கொம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்து, தீவிரப் போக்கின் காரணமாக அக்கட்சிகளிலிருந்து நீக்கப்பட்ட ரோஹண விஜேவீரவின் தலைமையில், 1965 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உருவாகியது.
அம்முன்னணி ஆரம்பத்திலிருந்தே இரகசிய இயக்கமாகச் செயற்பட்டது. இதன் காரணமாக, அரசாங்கத்தின் அடக்குமுறை மிக விரைவாக அதன் மீது பாய்ந்தது. அடக்குமுறையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, இயக்கத்தின் வளர்ச்சியோ, ஆயுதப் போராட்ட ஆயத்தங்களோ எவ்வகையிலும் போதுமானதாக இருக்கவில்லை. திருடப்பட்ட சில துப்பாக்கிகளும் பால் டப்பாவால் தயாரிக்கப்பட்ட சில குண்டுகளுமே அவர்களிடம் இருந்தன. ஆனால், கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சில நாள்களில், அரச படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை, 14 நாடுகள் வழங்கின.
மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலிருந்தே சித்தாந்த ரீதியிலும் நடைமுறையிலும் பாரிய பிழைகளை விட்டு இருந்தது. ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய அதன் தலைவர்களின் நோக்கு, ஆழமற்றதாக இருந்தது. ஒரே இரவில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்றதோர் எண்ணத்தை, அதன் தலைவர்கள் தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் மனதில் ஊட்டியிருந்தனர்.
ஆனால், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் பாரியது. தனிப்பட்ட நலன்களுக்காகவோ, பெற்றோர் பின்பற்றிய கொள்கை என்பதற்காகவோ அன்றி, அரசியல் அறிவோடு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்து, அதற்கான கல்வித் திட்டமொன்றையும் அக்கட்சி நடைமுறையில் முன்வைத்தது. அரசியல் வரலாறு, பொருளியல், மாக்சிய தத்துவம் போன்றவை அந்தக் கல்வித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்தன.
அதேவேளை, அரசியலை உணர்வுபூர்வமாகவும் தியாகத்தோடும் மேற்கொள்ளும் ஒரு புதிய கலாசாரத்தை, மக்கள் விடுதலை முன்னணி அறிமுகப்படுத்தியது. கட்சியின் முழுநேர ஊழியர்கள், சம்பளமின்றி ஆதரவாளர்கள் தரும் உணவிலும் உடையிலும் தங்கி அரசியல் கல்வித் திட்டத்தை பரப்பப் பாடுபட்டனர். நல்ல சம்பளத்தோடு தொழில் செய்தவர்களும் அத்தொழில்களை இராஜினாமாச் செய்துவிட்டு, இவ்வாறு கட்சியின் முழுநேரத் தொண்டர்களாக மாறினர்.
இன்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தாம் பெறும் சம்பளம் உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளையும் கட்சியின் நிதியத்துக்கு வழங்கி, கட்சி வழங்கும் கொடுப்பனவொன்றின் மூலம், தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இது போன்ற தியாகத்தை, இலங்கையில் புலிகள் உள்ளிட்ட சில தமிழ் இயக்கங்களில் மட்டுமே கண்டோம்.
சிறிய கட்சியாயினும் மக்கள் விடுதலை முன்னணி, இலங்கையில் பல பாரிய மாற்றங்களுக்கு காரணமாகியது. இலங்கையின் சுதந்திரம் என்பது, பூரண சுதந்திரமல்ல என்று 1970ஆம் ஆண்டுக்கு முன்னர் அக்கட்சி மேற்கொண்ட பிரசாரத்தின் தாக்கத்தின் காரணமாகவே, 1972 ஆம் ஆண்டு, இலங்கை குடியரசாக மாறியது. நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கைக் குறைக்க, 2001 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தைக் கொண்டு வரவும் அக்கட்சியே காரணமாகியது. இன்றும் ஊழல்களுக்கு எதிராககப் பலமான குரல் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்தே வௌிப்படுகின்றது.
ஆனால், பல தசாப்தங்களாகப் பிரதான கட்சிகளால் ஏமாற்றப்பட்ட மக்கள், அக் கட்சியையும் நம்புவதில்லை. அதேவேளை, ஒரு கட்சி பதவிக்கு வரும் என்றதொரு சாயல் இருந்தால் மட்டுமே, மக்கள் அக் கட்சியை ஆதரிப்பார்கள். அந்த அலையும் காணக்கூடியதாக இல்லை. எனவே, மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது.
Average Rating