பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்!! (மகளிர் பக்கம்)
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகின்றது. வீட்டு நபர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு ஏகத்துக்கும் வேலைகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ‘வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளையும்’ சில பெண்கள் செய்ய வேண்டும். மேலும் கோடை காலம் வேறு. இத்தகைய காரணங்களால் பலவிதமான எண்ண அலைபாயல்கள் (mood swings) வருவது இயல்பு. இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் கோபப்படுவது, எளிதில் சிறு விஷயங்களுக்கும் எரிச்சல் அடைவது, தினம் செய்யும் வேலைகளில் சலிப்பு வருவது, சிலநேரம் குழந்தைகளை அடிக்கக்கூட செய்வோம்.
ஆனால், இப்போது இருக்கும் இந்த பெருந்தொற்று முற்றிலும் சரியாக இன்னும் சில மாதங்களாவது ஆகும் என்பதால், பொறுமையை கடைப்பிடித்து மகிழ்வுடன் இருந்தும், மற்றவர்களை மகிழ்வுடனும் வைத்திருக்க ‘டென்சன்’ இல்லாமல் நாட்களைக் கடந்து செல்வது மட்டுமே நம்முன் இருக்கும் ஒரேவழி. எனவே இதுபோன்ற எண்ண அலைப்பாயல்களைத் தடுக்க உடற்பயிற்சி செய்வதன் மூலம் தீர்வு காணலாம். கொரோனா தொற்று நோய் வராமல் தடுக்க கைகள் மற்றும் முகம் கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, சத்தான உணவு உண்பது மட்டும் போதாது. அவற்றோடு சேர்த்து உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.
அதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நல்ல உணவு வகைகளுடன் கூடிய போதுமான உடற்பயிற்சியும், அளவான தூக்கமும் கட்டாயம் தேவை என்பதனை உணர்த்தவே இந்தக் கட்டுரை. நாம் இப்போதிருக்கும் இந்தக் கொரோனா பெருந்தொற்றினால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். எனினும், பெண்கள் ஆகிய நாமும் உடற்பயிற்சி செய்வதனால் பலவிதமான பலன்கள் கிடைப்பதை முதலில் உணர வேண்டும். குழந்தைகள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தும், கையில் அலைபேசி வைத்துக் கொண்டும், உடன் கட்டுப்பாடு இல்லாமல் நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டும் இருப்பார்கள். அப்படி இல்லையெனில், ‘ஆன்லைன் வகுப்புகளில்’ நேரம் சரியாகிவிடும்.
நாம் உடற்பயிற்சி செய்யும்போது குழந்தைகளையும் உடன் சேர்த்துக்கொள்வதால் அவர்களுக்கும் அது ‘ஆரோக்கியமான பொழுதுபோக்காக’ இருக்கும். மேலும் பின்னாளில் அது ஒரு நல்ல பழக்கமாகவும் மாறும். ஏற்கனவே உடற்பயிற்சிக் கூடம் சென்றுகொண்டிருந்த பெண்கள் மீண்டும் வீட்டிலிருந்தே அதேப் பயிற்சிகளைத் தொடரலாம். உடற்பயிற்சி செய்வதற்கு பெரிய இடங்களோ, அதிநவீன உடற்பயிற்சிக்கூட உபகரணங்களோ தேவையில்லை. சாதாரண நடைப்பயிற்சி செய்வதாய் இருந்தாலும் கூட, கட்டாயம் warm up மற்றும் cool down செய்ய வேண்டும். அதாவது, நடைப்பயிற்சி செய்வதற்கு முன் சில ‘stretches’ம், பின் நடைபயிற்சி செய்த பின் சில ‘stretches’ம் செய்ய வேண்டியது அவசியம்.
அப்படி செய்வதால் கிடைக்கும் பலன்கள்
உடற்பயிற்சி செய்வதினால் பொதுவாகக் கிடைக்கும் நன்மைகள் ஒருபக்கம் இருந்தாலும், இந்த பெருந்தொற்றிற்கும், ஊரடங்கிற்கும் பொருத்தமானப் பலன்கள் இருப்பதனால், இதனை தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக பின்பற்றவேண்டியது அவசியமாகிறது. அப்படிப் பின்பற்றுவதால்…
* கோபத்தையும், எரிச்சலையும் குறைத்து, எண்ண அலைப்பாயல்களை கட்டுப்படுத்தலாம்.
* உடல் சோர்வைக் குறைத்து, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கலாம்.
* தொடர் உடற்பயிற்சி மூலம் சுவாசப்பை சுத்தமாகி, அதிகப் பிராணவாயுவை எடுத்துக்கொள்ள உதவும். மேலும், cardiac endurance என்று சொல்லப்
படும் ‘தாங்கும் ஆற்றல்’ அதிகரிக்கும். அதனால், கொரொனா தொற்றுநோயின் முக்கிய அறிகுறியான மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் அதை மேலும் மோசமான நிலையை எட்டவிடாமல் தடுக்கலாம்.
* எப்போதும் ஓய்வு இல்லாமல் அலுவலகம் சென்ற நாட்களில் பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களால் தேகப்பயிற்சி செய்ய முடியாமல் இருந்திருக்கும். ஆனால் இப்போது அதிக நேரம் இருப்பதால் தேகப்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
* குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.
* திருமணமான பெண்கள் கணவருடன் இணைந்து ‘couple’s workouts’ செய்யலாம். அப்படி செய்வதால் கூடுதல் உற்சாகமும், உத்வேகமும் கிடைக்கும்.
* மேலும், தொடர்ந்து ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் செய்து ‘போர்’ அடித்தால், zumba போன்று நடனப்பயிற்சியும் செய்யலாம். அப்படி செய்வதால் கூடுதலான குதூகலமும், மன அமைதியும் கிடைக்கும்.
இப்படி வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சி செய்யும்போது ஏதேனும் வலி ஏற்பட்டால் அல்லது புது பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் ஒருமுறை உங்கள் குடும்ப இயன்முறை மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவேண்டியது மிக முக்கியம். எனவே, பெண்கள் ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்து, மன இறுக்கத்தைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்துடன் இந்த பெருந்தொற்றுக் காலத்தை இன்னும் தைரியத்தோடு எதிர்கொண்டு வெல்லலாம்.
Average Rating