செத்த நாக்கு !! (கட்டுரை)
குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாளன்று மன்னாரை பாராட்டி ஒளவையார் பாடியவை பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும். நமது நாடு உட்பட பல நாடுகளில் மன்னராட்சி இல்லை எனினும், ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆட்சிகளே இருக்கின்றன.
ஒளவையாயின் அந்தப் பாராட்டு வரிகளில், விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மக்கள் வறுமையின்றி எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவார் என்பதே விளக்கமாகும்.
ஆக, ஆட்சியொன்று இருப்பதற்கு மக்களே முக்கியம். அவ்வாட்சியையும் மக்களை களைத்துவிடுவர், எமது நாட்டை பொறுத்தவரையில் மக்களின் உயிருக்கு உத்தரவாதமே இல்லை, இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் 78.6 ஆண்டுகள் எனவும், ஆண்களின் ஆயுள்காலம் 72 ஆண்டுகளெனவும் இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆயுள்காலம் மதிப்பிடுவதற்கு, உணவு பழக்கவழக்கங்கள் மிகமுக்கிய கூறுகளில் ஒன்றாகும். “நாங்கள் எல்லாம், பலாக் காயையும், மரவள்ளிக்கிழங்கையும் சாப்பிட்டுத்தான், இப்படியிருக்கிறோம்” என, 70-80 வயதிகளில், அதற்கு மேற்பட்ட வயதினரும் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்
தற்போது, வெறுமனே நஞ்சு கலந்த உணவுப்பொருள்களே உட்கொள்கின்றீர்கள், இதனால் நாக்கு செத்துபோய்விட்டது என்றும் கூறுகின்றனர். உண்மையில், உடலுக்கு நேரடியாகத் தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருள்களே அன்றாட பயன்பாட்டில் இருக்கின்றது.
ஒரு பொறியல் இருந்தாலே போதும், எல்லாத்தையும் சாப்பிட்டுவிடுவார்கள் என்றும் பலரும் கூறுவர், அதுவும் தேங்காய் எண்ணெயில் பொறிக்கவேண்டும். வறுவலும் அப்படிதான் எனக் கூறுகையில் பலருக்கும் நாவில் எச்சில் சொரியும். அதனால்தான் என்னவோ, தள்ளுவண்டி பொறித்த உணவுகளின் மீது பலருக்கும் நாட்டம் ஏற்படுகின்றது.
பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டுமொரு தடவை பயன்படுத்தினால், அவ்வாறான சுவை நாவை சுண்டியிழுக்குமென பலரும் கூறுகின்றனர். ஆனால், வீட்டுப்பாவனைக்கு தேங்காய் எண்ணெயை வாங்குவதா? இல்லையா? என பலரும் விழிப்பிதுங்கி நின்றனர்.
தமிழ்- சிங்களப் புத்தாண்டுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. பலகாரங்களை வகை, வகையாக சுட்டு இம்முறையாவது மகிழ்ச்சியாக கொண்டாடுவேமென பலரும் நினைத்திருக்கையில், அடுப்பில்வைத்த தேங்காய் எண்ணெய் தாச்சி அப்படியே கவிந்து காலில் விழுந்துவிட்டதைப்போல, பயங்கரமான கதைகள் உலாவுகின்றன.
அவற்றைக் கேட்கும் போதுதான், எச்சிலில் ஈரமாய் இருந்த நாக்கு, செத்துவிட்டதைப் போன்ற உணர்வொன்று ஏற்படும். பலரும் மாற்று எண்ணெய்க்கு மாறிவிட்டனர். இன்னும் சிலர், மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது விழிப்பிதுங்கி நின்கின்றனர்.
சுத்திகரிக்கப்படாது இறக்குமதிச் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில், புற்றுநோயை உருவாக்கும் பதார்த்தங்கள் அடங்கியுள்ளனவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது வயிற்றை புளியைக் கரைத்துள்ளது.
இரண்டாவது கொரோனா அலையுடன், மஞ்சளுக்கு தட்டுபாடு, புளியின் விலை அதிகரிப்பு, உளுந்தின் விலையேற்றம் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு தள்ளிவிட்டப்பட்ட நாம், அதிலிருந்து எழும்புவதற்குள், தேங்காய் எண்ணெய் விடயம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
உணவுப்பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்களையும் தனியார் நிறுவனங்களே பொதுவாகவே இறக்குமதி செய்யும். அவற்றின் தரம், பாவனைக்கு உகந்ததா என ஆராய்வதற்கு அரசாங்கத்தின் 2 நிறுவனங்களின் பொறுப்பாகும்.
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள 3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை பரிசோதித்த சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு, அவ்வெண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எபலடொக்சின் என்ற பதார்த்தம் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தி மார்ச் 4ஆம் திகதி முதலில் அறிவித்தது. .
அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு, தர நிர்ணய நிறுவனத்தால் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அவற்றின் மாதிரியை பரிசாதனை செய்ய குறித்த 2 நிறுவனங்களுக்கும் இரண்டாவது தடவையாகவும் உரிமையுள்ளதால், அதற்கும் அனுமதியளிக்கப்பட்டது. அதிலும், புற்றுநோயை உருவாக்கும் பதார்த்தம் காணப்பட்டதால், மீள் ஏற்றுமதிக்கு பணிக்கப்பட்டது.
அந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்தே அனைவரும் விழிப்படைந்தனர். பரிசோதனை அறிக்கைகள் கிடைப்பதற்கு முன்னரே, குறித்த கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து ஏன் விடுவிக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுக்கிறது. ஆனால், களஞ்சியசாலையில் போதிய இடவசதிகள் இன்மையால், கொள்களன்கள் விடுவிக்கப்பட்டவே தவிர, அதனை சந்தைக்கு விற்பனை செய்வதற்கு விடுவிக்கப்படவில்லை என ஆளும் தரப்பினர் பதிலளித்துள்ளது. இது, கிளியைப் பிடித்து பூனையிடம் கொடுத்து, காவல் காக்க சொன்னதற்கு சமமான பதிலாகும்.
என்னதான் பதிலளிக்கப்பட்டாலும் தேங்காய் எண்ணெய் மீது ஏற்பட்ட அச்சம் , தேங்காய் எண்ணெயை இனிமேலும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டுமா என சிந்திக்க வைத்துள்ளது.
இதேவேளை பல்வேறு நாடுகள் தமது நாட்டு மக்களின் பாவனைக்கு உசிதமற்ற பொருள்களை அதாவது கழிவுகளை கொட்டும் குப்பை மேடாக இலங்கையைக் கருதுகின்றதா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கின்றது.
மருத்துவ கழிவுப் பொருள்கள் அடங்கிய கொள்கலன்கள் சில இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே மீளேற்றுமதி செய்யப்பட்டன.
சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என அரசாங்கம் பதிலளித்தாலும், 27 ஆயிரத்து 500 லீற்றர் அடங்கிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் பௌசர்கள் இரண்டு, தங்கொட்டுவ நகரத்துக்கு அண்மையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்படியாயின், ஏதேவொரு வழியில், சந்தைக்கு எண்ணெய் கசிந்துள்ளது. அவ்வெண்ணெய் எதுவரை கொன்றதென கொல்லும் வரையிலும்தான் தெரியும். அதற்கு முன்னரே நாக்கு செத்துவிடும்.
Average Rating