நீர்வை பொன்னையன் குறித்து ந. இரவீந்திரனின் மனப்பதிவு !! (கட்டுரை)
நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது.
அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பற்றிய மதிப்பீடுகள் பலவடிவங்களில் வெளிப்பட்டன. அவரது இறுக்கமான கருத்தியல் நிலைப்பாடு காரணமாக அவரைப் பலரும் நெருங்க இயலாதவரெனக் கண்டபோதிலும் சமூக நலநாட்டம்மிக்க பக்கத்தில் எவ்வகையிலும் புறக்கணித்துவிட முடியாதவர் என்ற வகையில் நீர்வை கவனிப்புக்கு உரியவராக இருந்து வந்தார்; ‘இலங்கா இரத்தினா’ விருது வரை அவர் அடையாளப்படுத்தபட வேண்டியவராக இருந்துள்ளார்.
தனக்கான அரசியல் இலக்கியத் தளத்தில் சமரசத்துக்கு இடமளிக்காதவர் என்ற ரீதியில் நானும் கூட, அவருக்கு மாறுபட்ட அணிக்கு உரியவன் தான்; என்னுடனும் அதிகம் நெருங்க மாட்டார் என்ற நினைப்பு எனக்கு இருந்ததுண்டு.
ஊரில் இருந்தவரை நான், யாழ். ஸ்ரான்லி வீதியில் உள்ள யாழ்ப்பாணம் அச்சகத்தில் ‘தொழிலாளி’, ‘செம்பதாகை’ ஆகிய பத்திரிகைகள் அச்சிடப்படும் பொழுது, உதவிபுரிகிற வேலைகளில் இருப்பேன். அருகேயுள்ள யாழ்ப்பாணம் புத்தகசாலைக்கு, நீர்வை வந்து நின்று உரையாடுவதைக் கண்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்ததில்லை. இரு நிறுவனங்களும், ஒரே கட்சிக்கு உரியனவாக இருந்த காலத்தில் நான் அங்கு செல்லவில்லை. இருவேறு கட்சிகளாகப் பிளவுபட்ட பின்னர், இரண்டும் எதிர் தரப்பினருக்கானவை என இயங்கத் தொடங்கிய பின்னரே, நான் அங்கு செல்லும் நிலை இருந்தது.
பிளவுபட்ட இரு தரப்பினரும், மற்ற அணியினரைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிற நிலை! உள் நாட்டு யுத்தம் தீவிரப்பட்டிருந்த புதிய மிலேனியத்தின் தொடக்க கட்டத்தில் நீர்வையைக் கொழும்பில் சந்திக்க நேர்ந்தது.
வெள்ளவத்தைக் கடற்கரையில் அவர் நடைப்பயிற்சியில் வேகமாக நடந்துவந்த போது, எதிர் பக்கமாக அவரைக் கடந்து செல்ல இருக்கிறேன். ஒரு முன்னோடி முற்போக்கு இலக்கிய கர்த்தா என்ற வகையில், ஒரு சிரிப்புடன் கடந்துவிட நினைப்பு. மாறாக, அவர் நின்று என்னுடன் உரையாடத் தொடங்கினார். குடும்ப நிலைவரங்கள் பற்றிய உசாவல்; எனது மனைவியைச் சிறுவயதில் நன்கு அறிந்தவர். தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் குடும்பத்துடன் அப்போதெல்லாம் மிக நெருக்கமான உறவு அவருக்கு இருந்தது. அவர்களது மூத்த மகன், இவர் வீட்டில் குழந்தையாக வளர்ந்தவர். கட்சி பிளவடைந்த பின்னர், அத்தகைய உறவுகள் எப்படிக் காணாமலாகின என்ற ஏக்கத்தை அக்குடும்பம் உணர்வலைகளாக வெளியிட்டு வரக் கண்டிருக்கிறேன்.
முதற்றடவையாக, தாம் நடத்தும் கருத்தரங்கு நிகழ்வில் கே. டானியல் படைப்புகள் பற்றி உரையாற்ற அழைப்பு விடுத்தார். எனது கட்சியிடம் அதற்கான அனுமதியைக் கோரிய போது, கட்சியும் அவ்வாறு பங்குபற்றுவதை அனுமதித்திருந்தது.
பின்னர், பல உரைகளை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் நிகழ்த்தினேன். அவற்றில் சில கட்டுரைகளாக்கப்பட்டு, அந்த அமைப்பு வெளியிட்டிருந்த தொகுப்பு நூல்களில் இடம்பெற்றிருந்தன. ‘முற்போக்கு இலக்கியத்துக்குக் கைலாசபதியின் பங்களிப்பு’, ‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’ ஆகிய தனி நூல்களையும் எழுதவைத்து, அந்த அமைப்பு வாயிலாக வெளியிட்டார் நீர்வை பொன்னையன்.
எந்தவொரு கூட்டத்திலும் எனது உரைகளில், அவர்களது அமைப்பின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்டு, நான் சார்ந்த கட்சி நிலைப்பாட்டையே தொடர்ந்து வலியுறுத்த நான் தவறியதில்லை. இருப்பினும், நீர்வை எப்போதும் அதை மறுத்துரைக்காமல் தொடர்ந்து என்னுடனான தொடர்பை விருத்தித் திசையிலேயே வளர்த்து வந்தார். இந்த அம்சம் சார்ந்து, இங்கு வலியுறுத்திப் பேச அவசியம் உள்ளது.
முற்போக்கு கலை இலக்கிய மன்றமும் சரி, நீர்வை பொன்னையனும் சரி, நான் செயலாளராக இயங்கிய தேசிய கலை இலக்கியப் பேரவையை அங்கிகரித்ததில்லை. அதேவேளை, எனது பேச்சிலும் அவர்கள் வெளியிட்ட நூல்களிலும் தே.க.இ.பே குறித்து, நான் எழுதுவதில் எந்தக் குறுக்கீட்டையும் அவர்கள் செய்ததில்லை. எனது கருத்தியல் நிலைப்பாட்டை அவர்களால் ஏற்கவியலாது இருந்த பொழுதிலும், அவற்றை வெளியிடவும் விருத்தி செய்யவும் தொடர்ந்து களம் அமைத்துத் தந்தனர்.
எனது அரசியல் – இலக்கிய – கருத்தியல் நிலைப்பாடுகளை, எனது அணி ஏற்கவியலாமல் என்னை வெளியேற்றிய பின்னரும், தொடர்ந்து நீர்வை எனது கருத்து நிலையை வெளிப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் களம் அமைத்துத்தர மறுக்கவில்லை.
உண்மையில் நீர்வை உட்பட அவரது அமைப்பைச் சேர்ந்த எவரும், எனது கருத்துகள் அனைத்துடனும் உடன்பட்டிருக்கவில்லை; எனது அமைப்பினருக்கு இருந்த அதே நிலைப்பட்ட ஏற்கவியலாத் தன்மைகள் எல்லோரிடமும் இருந்தன. இரட்டைத் தேசியம், திணை அரசியல், ஆன்மீக நாத்திகம் என்பவற்றில் ஒவ்வொருவர் ஒருசில நிலைகளை ஏற்ற போதிலும், அவற்றுடன் முழுதாக உடன்பட்டுவிட இயலாத தயக்கம் எல்லோருக்கும் இருக்கிறது.
மார்க்ஸ், லெனின் ஆகியோர் மார்க்சியத்தின் அடிப்படை என வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துவர்; இனிப் பாட்டாளி வர்க்கம், ஆட்சியை வென்றெடுத்துப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகிப்பதனூடாக வர்க்கங்கள் அற்ற பொதுவுடமை சாத்தியப்படும் என்பதை ஏற்காத ஒருவர், மார்க்சியராக மாட்டார் எனவும் கூறியுள்ளனர்.
வர்க்கப் போராட்டத்தின் வாயிலாக மட்டும் வரலாறு இயங்கவில்லை; முழுச் சமூக சக்திகளாக இயங்கும் சாதி, தேசங்கள் எனும் திணைகள் இடையேயான போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தினின்றும் முற்றிலும் வேறுபட்ட இயக்க முறை உடையன எனச் சொல்லும் எனது நிலைப்பாடு, அவர்களால் அப்படியே ஏற்றுவிட இயலாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இனியொரு பாட்டாளி வர்க்கப் புரட்சி, எழுச்சி ஏற்படுவதாக அன்றி, விடுதலைத் தேசிய முன்னெடுப்பு மூலமாகவே, சோசலிசக் கட்டுமானம் சாத்தியமாகும் வகையில் வரலாற்றுச் செல்நெறி மாற்றம் ஏற்பட்டுள்ளமையை, அதற்குரிய பரிமாணத்துடன் வேறு எவருமே முன்வைக்காதுள்ளனர்.
இன்றைய உலகில் மார்க்சியர்கள் தீர்மானகரமான சக்தியாக இயங்கவியலாது இருப்பதற்கான காரணம் இத்தகைய அடிப்படையான (பண்பு ரீதியிலான) வேறுபட்ட வரலாற்று முன்னெடுப்புக்குத் தலைமை ஏற்றாக வேண்டும் எனக் கூறி எந்தவொரு நாட்டுக்குமுரிய கொம்யூனிஸ்ட் கட்சியும் இயங்க முன்வரவில்லை என்பதில் அடங்கியுள்ளது. அதிகாரத்தில் இருக்கும் எந்தக் கட்சியும் இத்தகைய வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தை அங்கிகரிக்கவும் இல்லை.
அவ்வாறு முழுமையாக ஏற்கவியலாத கருத்துகளுடன் இருந்த அதேவேளை, தனது கருத்து நிலைக்கு மாறாகத் தன்னால் எதிர் தரப்பென அடையாளப்படுத்தப்படுகிற கே.ஏ. சுப்பிரமணியத்தின் நிலைப்பாடுகளைச் சரியெனத் தனது அரங்குகளிலேயே வலியுறுத்துகிற ஒருவனான என்னை நீர்வை எக்காரணம் கொண்டு ஏற்றார் என்பது கவனிப்புக்கு உரியது.
தேசிய கலை இலக்கியப் பேரவையிலிருந்து நான் வெளியேறிய பின்னரும் அவரது முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் சேர்ந்து இயங்க உடன்பட்டிருக்கவில்லை. அவ்வாறு தனித்து இருக்க வேண்டாமெனப் பலரும் வலியுறுத்தியபொழுது, தனியோர் அமைப்பு என்றில்லாமல் வெவ்வேறு அமைப்பினரும் சுதந்திரமாக கருத்தாடலை முன்னெடுக்கும் அரங்காக ‘புதிய பண்பாட்டுத் தளம்’ என்பதை உருவாக்குவோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் ஹட்டனில் நடைபெற்றது. பயணத்துக்குச் சிரம மாக இருந்த பொழுதிலும் ஹட்டன் வந்து அக்கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை நீர்வை ஏற்று, மிகச் சிறப்பாக அந்த நிகழ்வை நிறைவாக்கித் தந்தார். அந்த அமைப்பின் சஞ்சிகையான ‘புதிய தளம்’ முதல் இதழ், அவரது தலைமையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியர் குழுக் கூட்டங்களுக்கு வெள்ளவத்தையிலிருந்து கல்கிசைக்கு அவர் வந்து கலந்துகொண்டு, முன்வைத்த கருத்துகள் வலுமிக்கன. அந்தச் சஞ்சிகையின் நோக்கத்தை வலியுறுத்தித் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.
அறுபதாம், எழுபதாம் ஆண்டுகளில் இயங்கிய இடதுசாரிச் செயற்பாட்டாளர்களது செவ்விகள், தொடர்ந்து இடம்பெற வேண்டுமென ஆசிரியர் குழு கருதியிருந்தது. முதல் இதழில் வெளிவந்த மறைந்த ம.பா.சி அவர்களது செவ்வி பெரு வரவேற்பைப் பெற்றிருந்தது.
இரண்டாவது இதழுக்கு, தோழர் எம்.ஏ.சி. இக்பால் இடமிருந்து நேர்காணலைப் பெற்றிருந்தோம். அதனை ஆசிரியர் குழுவில் விவாதித்த போது, ஒரு விடயத்தை நீக்க வேண்டுமென நீர்வை வலியுறுத்தினார். “மு. கார்த்திகேசன், வி.ஏ. கந்தசாமி, கே.ஏ. சுப்பிரமணியம் போன்றோர் துரோகமிழைத்துக் கட்சியைப் பிளவுபடுத்திப் போனதால் சண் ஆதரவுக்குழு என்ற நிலையை இறுதியில் வந்தடைந்தோம்” என்பதாக இக்பால் கூறியிருந்தார். அந்த வசனத்தை மட்டும் நீக்கிவிட்டு செவ்வியை வெளியிடலாமென நீர்வை சொன்னார்.
வெவ்வேறு கருத்துடைய பலரது செவ்விகளையும் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம்; இந்தக் கருத்தின் தவறை வெளிப்படுத்துகிற பேட்டிகள் தொடர்ந்து வரும் என்ற வகையில், இக்பாலின் அபிப்பிராயத்தை அப்படியே வெளியிடுவோம் எனக் கேட்டுக்கொண்டேன். ஏனைய தோழர்களும் அக்கருத்தை வலியுறுத்தியமையால் நீர்வை முழுதாக மனமொப்பாத போதிலும் இறுதியில் உடனபாட்டைத் தெரிவித்தார். காலையிலிருந்து மதியம் வரை அந்த அமர்வு இடம்பெற்றிருந்தது. பொழுதுபட்ட வேளையில் நீர்வை தொலைபேசியில் தொடர்புகொண்டார். “நான் ‘கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுக்குழுத்’ தலைவராக இருக்கிறேன். அவரால் வழிப்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். என்னை ஆசிரியர் குழுவில் ஒருவராக கொண்டிருக்கிற சஞ்சிகையில் அவரைத் துரோகமிழைத்ததாகச் சொல்கிற வசனம் வெளிவருவது நல்லதல்ல. எனக்கு அதில் உடன்பாடில்லாத அதேநேரம், நான் அங்கம் வகிக்கிற ஏனைய அமைப்புகளுக்கும் அதனால் நெருக்கடி. தயவுசெய்து அந்த வசனத்தை நீக்கிவிடுங்கள்”என்று நீர்வை பொன்னையன் கேட்டுக்கொண்டார். “எவரும் தமது கருத்தைச் சுதந்திரமாக வெளியிட இடமளிக்கும் தளம் என்று கூறிச் செவ்வியைப் பெற்றிருக்கிறோம். அந்த வசனத்தை நீக்குவது சரியல்ல, உங்களது அணிக்குரிய கார்த்திகேசன், வி.ஏ. கந்தசாமி ஆகியோரது பெயரை எடுத்துவிடுவோம். ‘மணியம் கட்சியைப் பிளவுபடுத்திய பின்னர்…’ என்பதாக அந்த வசனத்தை விட்டுவைக்கலாம்” என்று சொன்னேன். “இல்லையில்லை, அப்படி இருவரது பெயர்களை மட்டும் நீக்குவது சரியல்ல; முழுதாக வரட்டும். மூன்றாவது இதழில் மறுபக்கத்தை வெளிப்படுதலாம்” என்று நீர்வை அமைதிகொண்டார்.
மூன்றாவது இதழ் வெளிவர முடியாமல் போகிற அளவில் அந்தப் பிரச்சினை பெரிதாகிப் போனது. ‘புதிய பண்பாட்டுத் தளம்’ அதனது செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேறுபல காரணங்களும் இருந்தனவாயினும் இந்தப் பிரச்சினையும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இருந்தது.
நாங்கள் முகங்கொண்ட நெருக்குவாரங்களைவிட நீர்வை அதிகம் சிரமத்துக்காளானார். அவருக்கே உடன்பாடின்றி, இடதுசாரி இயக்க வீச்சினை வெளிப்படுத்தும் வகையில் அதற்குப் பங்களித்த பல்வேறு கருத்து நிலைப்பட்ட ஆளுமைகளைப் பதிவிடுவது என்ற நிலைப்பாட்டில் அந்தச் செவ்வி வெளிவந்தது என்பதைக் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் ஆதரவாளர்களில் பலரால் ஏற்க இயலாமல் போனது. வேறெந்த ஆளுமைகளை விடவும் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மீது நீர்வை மிகமிக அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ளார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகுகிற எவரும் புரிந்துகொள்வர். அதனை மேவி ‘புதிய தளம்’ மீது அவருக்கு நாட்டம் வருவதான சந்தேகம் எப்படி ஏற்பட இயலுமாயிற்று என்பது புரியாத புதிர்!
தோழர் கார்த்திகேசன் நூற்றாண்டை நினைவுக்குழு ஏற்பாட்டில் காத்திரமான ஆய்வுரைகளுடன் கொழும்பில் நடத்த வேண்டுமென நீர்வை திட்டமிட்டிருந்தார். என்னையும் ஆய்வுரை ஒன்றைத் தயாரித்து சமர்ப்பிக்கத் தயாராக இருக்கப் பணித்திருந்தார். அவ்வாறு செய்ய இயலாமல் போன நிலையில் கூட, ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருந்தார் என்பதை மறந்துவிட இயலாது.
முன்னதாக, ‘நினைவலைகள்’ என்ற தன் வரலாற்று நூலில், தோழர் கார்த்திகேசன் தன்னைச் செப்பனிட்டிருந்தார் என்ற அம்சத்தைப் பெரிதும் வலியுறுத்திக் காட்டியிருந்தார். அவர்கள் பிளவடைந்து, 1972 இல் ‘இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)’ என இயங்கத் தொடங்கிய போது, தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் தம்முடன் சேர்ந்து இயங்க வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறில்லாமல் தோழர் சண்முகதாசன் தலைமையில் தொடர்ந்து இயங்கியது தொடர்பில் கடும் கோபம் நீர்வைக்கும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்தது. பின்னர் 1978 இல் கே.ஏ. சுப்பிரமணியம் பிளவடைந்தபோது, கார்த்திகேசன் அணியினர் முன்வைத்த காரணங்களையும் உட்படுத்தி இருந்தார்.
அந்தக் காரணங்களை முன்னிறுத்தி 1972 இல் வெளியேறாமல் போனதற்கு கட்சிக்கான ஸ்தாபன ஒழுங்கமைப்புப் பேணப்படவில்லை என்பதனையே கே.ஏ. சுப்பிரமணியம் வலியுறுத்துவார். அந்த விடயத்தில் கோட்பாட்டை அவர் முன்னிறுத்தத் தவறினார் என்ற குற்றச்சாட்டு நீர்வைக்கு இருந்தது.
குறுங்குழு வாத நிலைப்பாட்டைக் கைவிட்டு வெகுஜன மார்க்கத்தை முன்னெடுக்க வேண்டும், அதற்குரிய வகையில் ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பன இரு பிளவுகளிலும் முன்வைக்கப்பட்ட காரணங்கள். ஸ்தாபனக் கட்டுக்கோப்பு பின்பற்றப்பட வேண்டும் என்பது மேலதிகமாக கே.ஏ. சுப்பிரமணியம் வலியுறுத்திய அம்சம்.
இந்த மேலதிக விடயத்தில் நீர்வைக்கு உடன்பாடு இல்லாமல் இல்லை. என்னுடன் அவர் தொடர்பை வளர்த்ததில் அந்தத் தோழர்கள் இடையே ஊடாடியிருந்த அந்த உடன்பாட்டு அம்சங்களை இணைப்பதும் காரணியாக இருந்தது.
அப்படியிருந்தும், தனது ‘நினைவலைகள்’ நூலில் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் பற்றி மிகத் தவறான விடயங்களை அவர் வெளிப்படுத்தி இருந்தார். ஏற்கெனவே முற்போக்கு கலை இலக்கிய மன்றக் கருத்தரங்குகளில் அந்த விடயங்கள் பேசுபொருளாக இருந்து, அவை ஒவ்வொன்றையும் ஆதாரங்களுடன் நான் மறுத்துரைத்திருக்கிறேன். அவ்வாறிருந்தும் அவற்றை மீண்டும் கூறிய ‘நினைவலைகள்’ நூலை ஒப்பு நோக்குவதற்கு என்னிடம் நீர்வை தந்தார். எனக்கு பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் இருந்த போதிலும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்தேனே அன்றிக் கருத்துப் பிழைகளைப் பற்றிப் பிரஷ்தாபிக்கவில்லை; ஏற்கனவே பல தடவைகள் சொன்ன பின்னரும் எழுதியிருப்பதால் அதனைக்கூறி ஆகவேண்டும் எனக் கருதுகிறார் என எண்ணியிருந்தேன்.
நூல் வந்த பின்னர், இந்த விடயம் பேசுபொருளாயிற்று. கே.ஏ. சுப்பிரமணியம் அங்கம் வகித்த கட்சிப் பத்திரிகை நான் மெய்ப்புப் பார்த்த நூலில் அவர் பற்றி மோசமாக எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டி நீர்வை மீதும் என்மீதும் தாக்குலைத் தொடுத்திருந்தது. அந்த இதழ் வந்த ஓரிரு நாள்களில் நீர்வை வீட்டுக்கு வந்திருந்தார்.
“பல தடவைகள் நான் சொன்ன பின்னரும் தவறான குற்றச்சாட்டுகளை நீங்கள் சொல்லியிருந்தமையாலேயே இவ்வாறு நேர்ந்திருக்கிறது” என்றேன். அந்த நிலைமைக்காக அவர் பெரிதும் வருந்தினார். “அந்த நூல் நீங்கள் கூட்டங்களில் வந்து பேசுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்டு வந்தது. பின்னர் எழுதியவற்றில் அவை சொல்ல நேர்ந்திருக்காது. உங்களிடம் புரூஃவ் பார்க்கத் தந்ததே வெறும் எழுத்துப் பிழைகளை நீங்கள் பார்க்காமல் இதுபோன்ற கருத்துப் பிழைகளைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். நானும் திரும்ப எல்லாவற்றையும் மீட்டுப் பார்க்கத் தவறிவிட்டேன். இனி ஒரு பதிப்புக் கொண்டு வருவேன். இரண்டு பகுதிகளைத் தனித்தனி நூலாக்குவேன். அப்போது இந்தத் தவறைத் திருத்த முடியும்” என்று நீர்வை கூறியிருந்தார். அவ்வாறு புதிய பதிப்பு ஒன்று வரவில்லை என்பது துரதிர்ஷ்டம்!
இருப்பினும், அந்த இரு தோழர்களதும் கோட்பாட்டு உறுதி, ஸ்தாபனக் கட்டுக்கோப்புக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குதல் என்ற பண்பின் வெளிப்பாடாகவே நீர்வை என்னுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார் எனப் புரிந்து கொள்வதில் சிரம மேதும் இருக்க இயலாது.
இதன்பொருள் கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மீதான ஈர்ப்பை, நீர்வை குறைத்துக் கொண்டார் என்பதல்ல. என்னுடைய கருத்துகள் அனைத்துடனும் நீர்வை உடன்பட்டதாக கொள்ள இயலாது என்றேன்.
கே.ஏ. சுப்பிரமணியம் இன்றிருந்தாலும், அதே போன்று சிலபல விவகாரங்களில் ஒவ்வாமையை வெளிப்படுத்த இடமுண்டு. வர்க்கக் கோட்பாடு என்பது அத்தகைய வலுப்பட்ட ஓரம்சம். திணை அரசியல் என்பது அடையாள அரசியலில் இருந்து வேறுபட்டிருப்பதே வர்க்கப் போராட்டத்தை இன்னொரு வடிவில் ஏற்பதனால் என்றபோதிலும், இதுவும் அடையாள அரசியல் தான் எனக் குற்றஞ்சாட்டுபவர்கள் இருந்தபடிதான்!
ஆயினும் திணை அரசியல் எனது கண்டு பிடிப்பல்ல. அது தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்துடையதுதான். நான் கட்சிக்கு வந்த போது, சாதி அமைப்புக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் வரலாற்றெழுத்து முயற்சியூடாக பலவற்றைக் கற்றேன். அவற்றை விட அதிகளவில் தோழரிடம் உடனிருந்து கேட்டறிந்த விடயங்கள் பற்பல.
தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தைக் கண்டடைந்த 1974 முதல் அவர் விடைபெற்ற 1989 வரை நான் அதிகம் ஊடாட்டம் கொண்ட ஆளுமையாக அவர் இருந்தார். சாதியம் குறித்தும் அதனைத் தகர்க்கும் போராட்டங்களுக்கான கருத்தியலையும் எந்தவொரு புத்தகத்தில் இருந்து கற்றுக்கொண்டதை விட அதிகமாக அவரிடம் இருந்தே அறிந்துகொண்டேன். அவற்றின் ஒழுங்கமைக்கப்பட்ட திரட்சியே திணை அரசியல் சார்ந்த கோட்பாடுகள்.
இதனைச் சரிதான் என நான் உறுதிகொண்டது தோழர் நீர்வை அவர்களுடனான தொடர்பாடலின் வாயிலாக. இரு தோழர்களுடைய இறுதிப் பதினைந்து வருடங்களில் அவர்களுடன் நெருங்கி ஊடாடி இருக்கிறேன். அவர்களது செயற்துடிப்பு அனுபவங்களை அசைபோட்டசைபோட்டு அறிவுத் திரட்சியாக எனக்குள் கடத்த ஏற்ற பக்குவப்பட்ட முதிர்ச்சி நிலைகளின் வழங்கல்கள் அவை!
நீர்வை பொன்னையன் எழுத்துப் பதிவுகள் வாயிலாக பலவற்றை எமக்கு வழங்கி உள்ளார். எழுதித் தீராத பக்கங்களாக நடைமுறை ஊடாக அவர் கற்றுத் தந்தவை இருந்தன. இடதுசாரி இயக்கம் சாதித்தவை குறித்த தெளிவு இன்றைய தலைமுறைகளுக்கு தெரிவதில்லை. போதிய பதிவில்லை, பிற்போக்கு வாத அலை உண்மைகளை மறைத்துப் பொய்களைப் பரப்புரை செய்ய இடமளித்திருப்பது என்ற காரணங்களுக்கு அப்பால், சாதனைகளை நிகழ்த்திய ஆளுமைகள் ஒருவர் மீது மற்றவர் சுமத்திய குற்றப்பத்திரிகைகள் ஒட்டுமொத்த இயக்கத்தையே குறை மதிப்பீடு செய்ய வழிவகுத்திருந்தது என்பதும் கவனிப்புக்கு உரியது.
இதனைத் திருத்திக்கொண்டு சமூகமாற்ற சக்திகள் வல்லமை பெறவும் கடந்தகால வரலாற்றுச் சாதனைகளைக் கோட்பாடாக்கவும் ஏற்ற தெளிவை ஏற்படுத்துவதாக நீர்வையிடம் இருந்து பெற்ற தொடர்பாடல்கள் அமைந்திருந்தன!
Average Rating