நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)
மும்பையைச் சேர்ந்த சிறப்பு போஸ்கோ நீதிமன்றம், ஐந்து வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமி தாமாக குற்றவாளியின் வீட்டுக்கு விளையாடச் செல்வது வழக்கம். எனவே குற்றம் சாட்டப்பட்ட நபர் தவறாக நடந்திருக்க வாய்ப்பில்லை என வாதிட்டார்.
ஆனால் குழந்தை தன் வாக்குமூலத்தில், குற்றவாளி தன்னை முத்தமிட்டு மார்பு பகுதியைத் தொட்டதாகவும், இச்செயல் தனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் தெளிவாக கூறியிருக்கிறார். குட் டச் – பேட் டச் வேறுபாட்டைக் குழந்தைகள் 3-5 வயதிலேயே புரிந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே குழந்தையின் வாக்குமூலத்தை ஏற்று, குற்றவாளிக்கு நீதிபதி தண்டனை அளித்தார்.
நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுப்பு!
புதிய தொழிலாளர் சட்டத்தில் நிறுவனங்கள் இனி 4 நாட்கள் இயங்கி, மூன்று நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த நான்கு நாட்கள், 12 மணி நேரம் வேலை செய்து மீதி மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் வாரம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இந்த விதிகள் கட்டாயம் இல்லை என்றும் இதை அமல்படுத்த நினைக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
நிர்பயா நிதி சரியாகப் பயன்படுகிறதா?
2012ல் இந்தியாவையே உலுக்கிய டெல்லி பாலியல் வன்கொடுமையை அடுத்து, பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக நிர்பயா நிதி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலில் பல ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதிகள் சரியாக பயன்படுத்தப்படாமலே இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஒதுக்கப்படும் நிதிகள், பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தக்ஷாயினி வேலாயுதன் விருது
சட்டமன்றத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் மற்றும் ஒரே சட்டமன்ற உறுப்பினரான தக்ஷாயினி வேலாயுதத்தின் பெயரிலேயே இனி ஆண்டுதோறும் ஒரு விருது வழங்கக் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் கேரள பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும், ஒடுக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் ஒரு பெண்ணிற்கு இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
டிவிட்டரைப் புரட்டிப் போட்ட பெண்கள்
இந்தியாவில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தில்லி எல்லையில் போராடி வருகின்றனர். இதையடுத்து இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், அமெரிக்க பாப் பாடகி ரியானா, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ், நடிகை மியா கலிஃபா, ஹாலிவுட் மூத்த நடிகையும் சமூக ஆர்வலருமான சூசன் சரண்டன் போன்ற பிரபலங்கள் தங்கள் ஆதரவுகளைக் கடந்த வாரம் டிவிட்டரில் பதிவு செய்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மறுசுழற்சியாகும் சானிட்டரி நாப்கின்கள்
சானிட்டரி நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கும், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும் புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார் புனேவைச் சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரி அஜின்கியா தஹியா. பேட் கேர் எனப்படும் இந்த இயந்திரம் சானிட்டரி நாப்கின்களிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் செல்லுலோஸ் கழிவுகளை முதலில் பிரிக்கிறது. அதற்குப்பின் சானிட்டரி பேட்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1200 கோடி நாப்கின்கள் உபயோகிக்கப்பட்டு, அதில் 98% நாப்கின்கள் நிலப்பரப்புகளிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்பட்டு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இந்த பேட்கேர் இயந்திரம் மூலம் இனி இதை தடுக்கலாம்.
Average Rating