அதிகரிக்கும் பெண் சிசுக் கொலை!! (மகளிர் பக்கம்)
பெண் குழந்தைகள் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் பெண் சிசு கொலை என்பது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அல்லது சிசுவிலேயே பெண் என தெரிந்தால் கருக்கலைப்பு செய்து கொன்றுவிடும் சம்பவம் இன்றளவும் இருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் சான்றாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றும் பதிவு செய்யப்பட்டாலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு நடந்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 2007-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 903 பெண் குழந்தைகள் இருந்தது, 2016-ல் அது 877 ஆகக் குறைந்துவிட்டது. நான்கு மாநிலங்களில் பாலின விகிதம் 840-க்கும் குறைவாகவே இருக்கிறது. ஆந்திரம், ராஜஸ்தான் இரண்டிலும் 806, பிஹாரில் 837, உத்தராகண்டில் 825, தமிழ்நாட்டில் 840. பிறந்த குழந்தைகளைக் கொல்வது குறைந்திருக்கிறது என்றாலும் கருவில் இருக்கும்போது ஸ்கேன் செய்து கண்டறிந்து, அது பெண் கரு என்று தெரிந்தால் அழித்துவிடுவது தொடரத்தான் செய்கிறது.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து தெரிவிக்கக் கூடாது. கருவில் இருக்கும் பெண் குழந்தையை அழிக்கக் கூடாது. மீறினால் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் இயற்றிய பிறகும்கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இந்தியாவில் இந்த சட்டத்தை மீறியதாக 2006ஆம் ஆண்டு ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டார். சட்டம் இருந்தாலும், அதனை கடுமையாக கடைபிடித்து இதற்கு உடந்தையாக இருக்கும் மருத்துவமனை, ஸ்கேன் மைய ஊழியர்களைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். மீறுபவர்களின் உரிமம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழகத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். பெண் குழந்தை
களுக்கு எதிரான இந்த மனநிலை வறுமையிலிருக்கும் குடும்பங்களில் மட்டுமில்லை. பாலின வேறுபாடு, வெறுப்பு தோன்ற சமுதாய விதிகளும் கலாச்சார நம்பிக்கைகளுமே காரணமாக இருக்கின்றன. சமுதாய விதிகளை மாற்றியமைப்பதன் மூலமாக மட்டுமே பெண் சிசுக் கொலை என்னும் நிலையை மாற்ற முடியும். இந்திய நாட்டில் பெண் குழந்தைகளை விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத நிலைக்குச் சமுதாயப் பொருளாதாரக் காரணங்களே முன்வைக்கப்படுகின்றன.
இந்திய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பொருளாதாரப் பயன்பாடு, சமுதாய கலாச்சாரப் பயன்பாடு மற்றும் மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கு போன்ற மூன்று செய்திகளைப் பெண் குழந்தைகளை ஒதுக்குவதற்குக் காரணங்களாகக் கூறுகின்றன. சமீப காலங்களாக தமிழகத்தில் பெண் சிசு கொலை பற்றி பரவலாக செய்திகள் வெளிவந்த பின், இருபது பெண் குழந்தைகளை மீட்டெடுத்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவிக்கிறது. பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி சுகன்யா சம்ரிதி திட்டம் கொண்டு வந்தது. இத்திட்டம் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காகவும், சேமிப்பு திட்டத்திற்காகவும் பார்க்கப்படுகிறது. இதேபோல் பெண்களுக்கான வரதட்சணை தடுப்பு சட்டத்தை கடுமையாக்குதல், கருவிலேயே குழந்தைகளை ஆணா, பெண்ணா என்ற பாலின முறையை கண்டறியும் சட்டத்தையும் கடுமையாக்கியது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் என்று ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்று பிரச்சாரமாக இத்திட்டத்தினை முன் வைத்துள்ளனர். ஆனால், இந்த திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியில் 80% விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது என்கிற குற்றச் சாட்டும் வைக்கப்படுகிறது. அவ்வாறு விளம்பரப்படுத்தியும் போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான சான்றுகளே இன்றும் நீடித்துக் கொண்டிருக்கும் பெண் சிசுக்கொலைகள். தமிழகத்தை பொறுத்தவரை ‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ மற்றும் ‘சிவகாமி அம்மையார் பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்று நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 மும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 மும் அந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வைப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.
இது போன்ற திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் கொண்டு வந்திருந்தாலும் அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்தியாவில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது. அதே நேரத்தில் உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 93க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் அரசு கொடுத்த அறிக்கையில், ஆண்டு ஒன்றுக்கு 5,000 பெண் குழந்தைகள் ஸ்கேன் சென்டர்கள் மூலம் கண்டறித்து கொல்லப்படுவதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர், நாமக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் 17 ஸ்கேன் சென்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. எப்போதும் அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள், வெறும் திட்டங்களாக மட்டுமின்றி அது நடைமுறைப்படுத்தி உரியவர்
களுக்கு சென்று சேரும் போது, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கும் என்பது பாதிக்கப்படுபவர்களின் தரப்புக் கோரிக்கையாக இருக்கிறது. எனவே அரசு, பெண் குழந்தைகளுக்கான நலத் திட்டங்கள் அவர்களுக்கு சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதை செயல்படுத்தவும் முன் வரவேண்டும்.
Average Rating