சாத்தியமே!! (மகளிர் பக்கம்)
‘வாய்ப்புகள் மறுக்கப்பட்டால்.. வாழ்க்கையும் மறுக்கப்படும்..’ எனத் தொடங்கும் குறும்படத்தில், பெற்றோருக்கு தங்கள் குழந்தை குறையின்றி பிறப்பது எத்தனை முக்கியம் என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உருவத்தின் முக்கியத்துவத்தை, குறையோடு பிறந்த பெற்றோர்களைக் கொண்டு உணர்த்தி இருப்பதோடு, மாற்றுத் திறனாளிகள் குறித்த ஒருசில மாற்றுச் சிந்தனைகளையும் விதைக்க முற்பட்டு இருக்கிறார் இயக்குநர் டேவிட் ஜீசன்.வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும் நாம், போகிற வழியில் பலரையும் பார்த்தே கடந்து செல்கிறோம். அதில் சிலர் வாய்ப்பை எதிர்பார்த்து, அலைபாயும் விழியோடு நம்மைக் கடக்கலாம். சில நிமிடம் நின்று.. நிதானித்து.. கவனித்து.. நாம் செய்யும் சின்னசின்ன உதவிகள்கூட, அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
‘பற்றக் கொம்பற்ற நிலையில்தான் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.’ நாம் தேரை கொடுக்கிறோமோ இல்லையோ, அவர்களின் தேவையை காது கொடுத்தாவது கொஞ்சம் கேட்கலாமே. இங்கே கவனிப்பாரற்று சாலையோரத்தில் வசிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குப் பின்னாலும் உயிர்ப்போடு வாழ்ந்த ரத்தமும் சதையுமான ஒரு வாழ்க்கை இருக்கும். நமது கரத்தை அவர்களுக்காகவும் நீட்டினால் இந்த பூமிப் பந்தில் அவர்களும் வாழ்வது சாத்தியமே என்கிறார் இயக்குநர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்ப்பு என்பது ரொம்பவே முக்கியம். வாழ்வதற்கே வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால்? அதுவும் மாற்றுத் திறனாளியாக இருந்து வாழ வாய்ப்பில்லை எனில் அவர்கள் நிலை. வாய்ப்பற்றவர்கள் நான்கு சுவற்றுக்குள் முடங்கத்தான் வேண்டுமா? அவர்களுக்கும் மனசென்று ஒன்று உண்டு. அதில் உணர்ச்சிகள் உண்டு. ஆசைகளும் உண்டு. கனவுகளும்.. கற்பனைகளும்.. அதில் அடக்கம். கூடவே காதலும் அவர்களுக்கு நிறைந்திருக்கும் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
வாழ்வதற்கே வாய்ப்பில்லை எனும்போது, கூரை கீற்று வழியே லேசான ஒளி தென்பட்டால் எப்படி இருக்கும், அப்படித்தான் இந்தப்படத்தில் நடக்கவே முடியாத மாற்றுத் திறனாளி நாயகனும், நாயகியும் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பசியின்றி பாதுகாப்பாய் வாழ்தல் வேண்டுமே? கரம் நீட்டி உதவுகிறார் சிறிய அளவில் துரித உணவகம் ஒன்றை நடத்தும் முதலாளி ஒருவர். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிப் பெண் தாய்மையுற, தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையும் தங்களைப்போல குறையோடு பிறந்துவிடுமோ என்ற தயக்கத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள்.
மரபணு சார்ந்த பிரச்சனைகளுக்கே மருத்துவம் வழங்கி ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் சூழலில், சரியான மருத்துவ ஆலோசனை, சத்தான உணவு, முறையான மருந்துகளை எடுக்கும்போது குழந்தை நூறு சதவிகிதம் குறையின்றி பிறக்கும் என்ற நம்பிக்கையை மருத்துவர் அவர்களுக்கு வழங்குகிறார்.மேலும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆண்கள் ஜீனில் இருக்கும் XY குரோமோசோம்கள்.
தாயிடம் இருக்கும் 23 குரோமோசோமுடன், தந்தையிடம் இருக்கும் 23 குரோமோசோமும் இணைவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் குழந்தை குறையோடு பிறக்கிறது என்றும், உதாரணத்திற்கு 23 ஜோடி குரோமோசோமில் 21 ஜோடி மட்டும் இருந்தால் அந்த கருவில் உருவாகும் குழந்தை டவுன் சின்ட்ரோம் எனும் குறைபாட்டோடு பிறக்கும். XY குரோமோசோம் குறைபாட்டால்தான் வளர்ச்சிக் குறை, இதயம் தொடர்பான பிரச்சனை, மூளை வளர்ச்சி குறை, ஆட்டிசம் என்னும் அறிவுசார் குறை, உறுப்பு வளர்ச்சியில் குறை என பல்வேறு மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பிறக்கின்றனர். ஒரு குழந்தை பிறந்து வளரும்போதே பாலினம் சார்ந்த குளறுபடிகளில் சிக்குவதும் பெற்றோரிடம் இருந்து வரும் குரோமோசோம் குளறுபடிகளால்தான்.
ஆண்கள் போதைப் பழக்கம் உடையவர்களாக இருந்தால், அவர்களின் உயிரணுக்களில் வீரியம் குறைந்து குழந்தை ஊனமாய் பிறக்க வாய்ப்புண்டு. உயிரணு குறைபாட்டால் குழந்தைப்பேறு இன்மையும் நிகழும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்,குழந்தை வேண்டாம் என தள்ளிப் போடபயன்படுத்தும் மாத்திரைகள் உருவான கருவை வேண்டாமெனக் கலைக்க பயன்படுத்தும் வீரியம் மிக்க மாத்திரைகளாலும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் ஆரோக்கியத்தோடு பிறக்க பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும். பெற்றோர் சந்தோசம் என்பது இதில் கொஞ்சநேரமே. ஆனால் குறையோடு குழந்தை பிறந்துவிட்டால், அது குழந்தையின் வாழ்க்கை முழுமையும் பாதிக்கும். தொடர்ந்து அவர்களின் வாழ்வில் வேதனையையும், சோகமுமே நிறைந்திருக்கும்.
குறையோடு பிறந்த குழந்தையை வீட்டுக்குள் பூட்டி வைக்காமல், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அவர்களின் திறமையைக் கண்டறிந்து, இந்த உலகிற்கு வெளிக் கொண்டுவர வேண்டும். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் கடமை. மாற்றுத் திறனாளிகளில் சாதித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கால்கள் இன்றி, நடக்க முடியாத பெற்றோருக்கு குழந்தை பிறந்ததுமே, அப்பாவாக நடித்திருக்கும் டேவிட், குழந்தையின் இருகால்களும் முழுமையாக சரியாக இருக்கிறதா எனத் தடவிப் பார்ப்பதும்.. முதல் முறை குழந்தை தத்தி தவழ்ந்து, தன் குட்டிப் பாதங்களால் சின்ன சின்ன அடி எடுத்து வைத்து நடக்க முயலும்போது.. வார்த்தையற்று உணர்ச்சிகளை நடிப்பில் வெளிப்படுத்திய விதமும் சிறப்பு.
‘சாத்தியமே’ குறும் படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்கள் நடிப்பை மிகவும் சிறப்பாகவே தந்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதம். குறிப்பாக சிறிய அளவில் துரித உணவகம் நடத்தும் முதலாளியாக வருபவர், மருத்துவராக வரும் டி.என் சுரேந்தர் போன்றோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.
மாற்றத்திற்கான நல்ல விசயங்களை முன்வைத்து, சமூக சிந்தனையோடு ஒரு சிலர் மட்டுமே தன் படைப்புகளை உருவாக்குகிறார்கள். டேவிட் ஜீசனும் அதில் ஒருவர். சாத்தியமே குறும்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்..!!
Average Rating