பெண் மைய சினிமா – ஒரு தலைக் காதல்!! (மகளிர் பக்கம்)
இந்தியா எவ்வளவுதான் முன்னேறினாலும் கூட இன்னமும் பெண்களின் மீதான வன்முறையும் ஈவ்டீசிங்கும் குறையவே இல்லை. சொல்லப்போனால் முன்பைவிட இப்போதுதான் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பிறந்த பெண்கள், ஆண்களால் எப்படி பார்க்கப்படுகிறார்கள்; அணுகப்படுகிறார்கள் என்பதை மிகுந்த நகைச்சுவையுடன் பதிவு செய்கிறது ‘சமன் பஹார்’.அதே நேரத்தில் முதன் முதலாக காதல் வயப்பட்ட இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதையும் சித்தரிக்கிறது இந்தப் படம்.
சட்டீஸ்கரில் உள்ளது லோர்மி என்ற குக்கிராமம். அங்கே சிறிய அளவில் ஒரு பீடா கடையை நடத்தி வருகிறான் பில்லு என்ற இளைஞன். தந்தையுடன் வசித்துவரும் அவனுக்கு வியாபாரம் பெரிதாக இல்லை. இருந்தாலும் கடையை மூடிவிட்டு வேறு ஒரு வேலை பார்க்கலாம் என்று அவன் ஒருபோதும் நினைக்கவில்லை. ஒரு நாள் பில்லுவின் கடைக்கு எதிரே உள்ள வீட்டுக்கு அதிகாரி ஒருவர் புதிதாக குடி வருகிறார். அந்த அதிகாரிக்கு ரிங்கு என்ற பதின்பருவத்தில் ஒரு மகள் இருக்கிறாள். ரிங்குவால் பில்லுவின் வாழ்க்கையே முற்றிலும் மாறுகிறது. ஆம், பார்த்த முதல் பார்வையிலே ரிங்குவின் மீது காதலில் விழுகிறான் பில்லு. அவன் மட்டுமல்ல; உள்ளூர் அரசியல்வாதி, அவள் படிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் முதல் ஊரிலுள்ள எல்லா இளசுகளுக்கும் ரிங்குதான் கனவுக்கன்னி.
ரிங்கு காலையில் வீட்டிலிருந்து பள்ளி செல்லும்போதும் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போதும் அவளைப் பின் தொடர்ந்து பத்து பேராவது போகிறார்கள். ஆனால், யாருமே அவளிடம் பேசக்கூட முயற்சி செய்வதில்லை. பிறகு மாலை நேரத்தில் தனது நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போவதற்காக வீட்டைவிட்டு ரிங்கு வெளியே வருவாள்.
அப்போது நவீன உடையில் இருப்பாள். அந்த ஊரிலேயே ரிங்கு மாதிரியான உடையை வேறு யாரும் அணிவதில்லை. ரிங்குவை மாடர்ன் உடையில் பார்ப்பதற்காக மட்டுமே அவளின் வீட்டை நோக்கி நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பட்டாளம் தினந்தோறும் படையெடுக்கிறது. ரிங்குவைக் காணவரும் பட்டாளம் பில்லுவின் கடையில்தான் தஞ்சமடைகிறது. அதனால் அவன் கடையில் வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது.
தன்னைப் போலவே மற்றவர்களும் ரிங்குவிற்கு ரூட் விடுவது தெரிய வர, பில்லு உடைந்து போகிறான். மற்றவர்களின் பார்வையில் இருந்து ரிங்குவைக் காப்பாற்ற போராடுகிறான். அதனால் வியாபாரத்தில் சரியாக அவனால் ஈடுபட முடியவில்லை. வருமானம் இல்லாமல் கடன்காரனாகிறான். இருந்தாலும் தினம் தினம் காதலை வளர்த்து கனவுலகில் மிதக்கிறான்.
இந்நிலையில் வீட்டுக்கு எதிரே இளைஞர்கள் கூடுவது ரிங்குவிற்காகத்தான் என்பது அவளின் தந்தைக்கு தெரிய வருகிறது. காவல்துறையிலிருக்கும் நண்பரிடம் விஷயத்தை ரிங்குவின் தந்தை சொல்ல, பில்லுவின் கடை அடித்து நொறுக்கப்படுகிறது. அங்கே ரிங்குவைக் காண இருந்தவர்கள் அடித்து துரத்தப்படுகிறார்கள். பில்லு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையிலிருந்து வெளியே வரும் பில்லு, ரிங்குவிடம் தன் காதலைச் சொன்னானா… ரிங்குவும் பில்லுவும் இணைந்தார்களா… அல்லது அந்த ஊர் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் ரிங்கு குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஊருக்குக் கிளம்பி போனாளா… என்பதே யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
ரிங்குவைப் பின் தொடர்வது, அவளைக் காண இளைஞர்கள் வருவது என திரும்பத் திரும்ப சில காட்சிகள் தொடர்ந்து வந்தாலும் கூட எந்த இடத்திலும் நிற்காமல் படுவேகமாக பறக்கிறது திரைக்கதை. பீடா கடை நடத்தும் இளைஞனைப் போலவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் பில்லுவாக நடித்த ஜிதேந்திரா குமார். லோர்மி என்ற சிறு நகரத்தில் வாழும் இளைஞர்களின் ஆணாதிக்க மனநிலை, அவர்களின் அன்றாட வாழ்க்கை, பெண்களைப் பார்க்கும் விதம், அந்த ஊரின் நிலப்பரப்பு, கலாசாரம், அரசியல் என அனைத்தையும் அருகில் இருந்து பார்ப்பதைப் போல படமாக்கியிருக்கிறார் இயக்குநர் அபூர்வா தார் பட்கய்யான்.
Average Rating