பெண்களை மிரட்டுவது வன்கொடுமைக்கு சமம்!! (மகளிர் பக்கம்)
‘தனிமையில் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டுவது சமூக குற்றம்’ என்றும் ‘பெண்களை மிரட்டுவது வன்கொடுமைகளுக்கு சமமானது’ என்றும் பாலியல் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் கருத்து ஒன்றை முன் வைத்திருக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து கொள்வதற்கும், தங்களது ஒவ்வொரு அசைவுகளையும் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தும் போதைக்கு அடிமையாகியுள்ள ஆபத்தான சூழலில் இருக்கிறோம். விழிப்போடு இருக்க என்னதான் தொடர்ந்து முன் நடவடிக்கைகள் எடுத்தாலும் அதை பின்பற்றுவது அன்று ஒரு நாளாக மட்டுமே இருக்கிறது.
இவ்வாறான சூழலின் அடிப்படையிலேயே சில மாற்றங்களை முன் வைக்கவேண்டும் என்பதைக் காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஒரு ஆண் வளரவளர அவன் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை விட ஒரு பெண் வளரும் பருவத்தில் அவள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் தன்மை வேறுபட்டதாக இருக்கிறது. அந்த விஷயங்களை குடும்பம் இருட்டு அறைக்குள் சந்திக்கிறது. இதனால் ஒரு பெண் வளரும்போது தனிமையில் சிந்திக்கவேண்டும் என்கிற நிலைமைக்கு தள்ளப்படுகிறாள். அம்மாவிடமோ, சகோதரர்களிடமோ பேசுவதற்கு இயல்பாகவே மனதடையினை நாம் அவளுக்கு உருவாக்குகிறோம். எனவே உடல் பற்றிய உரையாடல்கள் பேசக் கூடாததாக இருக்கிறது. இங்கிருந்துதான் மொத்த பிரச்னையும் ஆரம்பமாகிறது.
ஒரு பெண் குழந்தை வளரும் போது மாற்றங்கள் பற்றி தாய்மார்கள், அதன் பிறகு வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள்; இவர்களையும் விட முக்கியமாக அந்த வீட்டில் உள்ள ஆண்களும் உடல் மாற்றம் குறித்து சகஜமாக பேசுவார்கள் என்கிற நிலைமை ஏற்படும்போது தான் உடலை ரகசியமாக பார்த்துக் கொள்ள கூடிய மனோநிலை பெண்ணுக்கு இருக்காது.
ஆனால், பருவம் எய்துதல் என்று உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களால் அந்த குழந்தை ஒரு தனிமையை சந்திக்கிறது. அந்த தனிமைதான் நிறைய விஷயங்களுக்கு அந்த குழந்தையை கைபிடித்து அழைத்து செல்கிறது. பெண்ணுக்கு ஏற்படக்கூடிய இந்த தனிமை குறித்து குடும்ப உறுப்பினர்கள் அதிகம் சிந்திப்பதோடு, இது போன்ற உளவியல் சிக்கல்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
தொலைக்காட்சிகளில், செய்தித்தாள்களில் பாலியல் வன்முறை குறித்தான செய்திகள் வருவதை வீட்டிலிருக்கும் ஆண் குழந்தைகளிடம் ‘இது குறித்து என்ன நினைக்கிறாய்?’ என்ற கேள்வியினை ஒவ்வொரு தாயும் முன் வைக்கவேண்டும். குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்பதை தவிர்த்து அவர்கள் உலகம் விசாலமானது என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.
அதேவேளையில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் என்னென்ன செய்கிறார்கள்? யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்?…போன்ற விஷயங்களை கண்காணிக்கக் கூடிய பெற்றோர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் மனதடையில்லாமல் பேசும் சூழலை குடும்பம் உருவாக்கி கொடுக்கும்போது தான் அந்த குழந்தை சுதந்திரமாக இருப்பதோடு, எல்லா விஷயங்களையும் பகிர்வதற்கும் தயாராகிறது.
பொதுவாக ஒரு ஆண், பெண் இருவரிடமும் பரஸ்பர நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, சமூகவலைத் தளங்களில் வெளியிடுவது, சில ரகசியமான விஷயங்களை அவர்களுக்குள் பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். அதை அந்த உறவுக்கு பின்னால் வெளியே போய் இதை வைத்து மிரட்டுவது, பொதுதளத்தில் பகிர்ந்து உன்னை அசிங்கப்படுத்துவேன் போன்ற செயல்கள் பெண்களை பெரிதும் பாதிக்கிறது. மிரட்டலுக்கு பணிந்துபோகக்கூடிய சமூகமாகத்தான் இன்றளவும் பெண்கள் இருக்கிறார்கள். மிரட்டப்படும் பெண் உண்மையில் அனுதாபத்துக்கு உரியவள் என்று எல்லோருக்கும் புரிந்திருந்தாலும் கூட அந்த பெண்ணை மட்டுமே தண்டிக்கக்கூடிய சமூக சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இணைய வழியாக சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களுக்கான சட்டங்களில் இன்றும் நாம் பூஜ்ய அளவில் தான் இருக்கிறோம். எது குற்றம் என்பதை தீர்மானிப்பதில் சட்டத்தின் வரையறை முக்கியம். மக்களுக்கும் தெரியும் எது குற்றம்? எது குற்றமில்லை? ஆனால் ஒரு நீதிமன்றத்திற்கு சட்டபுத்தகத்தின் வரையறை தேவைப்படுகிறது.
ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளின் நிர்வாணம் வெளியே வருகிறது என்றால் குடும்பம் அவளை தாங்கி பிடிக்கக்கூடிய தூணாக இருப்பதோடு, உடல் என்பது அவமான சின்னம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தவும் வேண்டும். இதை விட சமூகம் செய்யவேண்டிய மிகப் பெரிய விஷயம் இது போன்ற போர்னோ வீடியோக்களை கண்ணை மூடி ஃபார்வேர்டு செய்வதை நிறுத்த வேண்டும்.
Average Rating