மண் குளியல் குளிக்க வாரீகளா! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 50 Second

நமக்கென நாம் ஒதுக்கும் நேரங்களில் மிக முக்கியமான ஒன்று சாப்பிடும் வேளை மற்றும் குளிக்கும் வேளை மட்டுமே. ஆனால் நம்மில் எத்தனைப் பேர் உலகின் அத்தனை பிரச்னைகளையும் மறந்து அந்த ஒரு சில நிமிடங்கள் முழுமையாக நமக்காக அர்ப்பணிக்கிறோம் என்றால் கேள்விக்குறியே. ஆனால் நல்ல உணவும், முறையான குளியலும் இருந்தால் உடலில் பல பிரச்னைகளை சரி செய்துவிடலாம். சில பிரச்னைகளுக்கு குளியலே நல்ல தீர்வு என்கிறார் கோவையை சேர்ந்த இயற்கை மருத்துவர் மருதராஜ்.

‘‘இயற்கை மருத்துவ முறையிலே ஒரு பகுதிதான் இந்த குளியல் வைத்தியம். நான் அரசாங்க அங்கீகாரம் பெற்ற இயற்கை மருத்துவர். எப்படி எம்.பி.
பி.எஸ் படிப்புக்கு 5 வருடங்கள் படிப்பார்களோ அதே பாணியில் நாங்களும் 5 வருடங்கள் படித்துதான் இந்தத் துறைக்கும் வந்திருக்கோம். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையே பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு. இந்த ஐந்தையும் மையமா வைத்துதான் சிகிச்சைகள் இருக்கும். இதுல ஒரு பகுதிதான் நீர் சிகிச்சை. குடிக்கற நீர், குளிக்கற நீர் இவை இரண்டையும் கொண்டே உடலில் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் இந்த சிகிச்சை முறை.

ஹைட்ரோதெரபி என ஒரு முறை இருக்கு, அதாவது ஒவ்வொரு பிரச்னைக்குமான தனித்துவமான குளியல் முறைகள். தொட்டிக்குளியல், தண்டுவடக் குளியல்… என அவரவர் தேவைக்கு ஏற்ப நிறைய குளியல் முறைகள் உள்ளது. ஏழு நாட்கள் முதல் 21 நாட்கள் வரை எங்களின் சிவாலயத்திலேயே தங்கி நாங்கள் கொடுக்கும் சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் குடல் கழுவுதல். அதாவது உடல் உறுப்புகளில் சேர்ந்த நாள்பட்ட கழிவுகளை சுத்தம் செய்வது. முதல் ரெண்டு நாட்கள் வெறும் எலுமிச்சை சாறு, புதினா ஜூஸ் உள்ளிட்ட திரவ உணவுகள்தான் கொடுக்கப்படும்.

அதன் பிறகு அவரவர் தேவைக்கு ஏற்ற சிகிச்சைக்கு ஏற்ப குளியல் இருக்கும். சருமத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான குளியலும் உண்டு. மற்றொன்று தண்டு வடக் குளியல். மூலிகைகள், எண்ணெய் இதெல்லாம் கலந்து தண்டுவடக் குளியல் கொடுப்போம். இதிலே நாள்பட்ட முதுகு வலி, தண்டுவட பிரச்னை எல்லாம் குணமாகும்.

அதுமட்டுமில்லாமல் கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட வலிகளும் தீரும். இடுப்புக் குளியல், இது தொட்டியிலே இடுப்பளவு சுடுநீரில் உட்கார வைத்து கொடுக்கற குளியல். பெண்கள் மாதவிடாய் பிரச்னைகள் துவங்கி, உடல் பருமன், கருமுட்டை பிரச்னைகள், ஆண்களுக்கு பிறப்புறுப்பு பிரச்னைகள் கூட இதிலே குணப்படுத்தலாம். உடல் எடை குறைப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குதான் நிறைய மக்கள் எங்களிடம் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்’’ என்ற மருதராஜ் வீட்டில் குளிக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய சில முறைகளையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘முதலில் குளிக்கப் போகும் முன், சிறிது நேரம் உங்களை நீங்களே தயார் செய்து கொண்டு மனதை அமைதிப்படுத்திக்கொண்டு செல்லுங்கள். என்ன வேலை என்றாலும், ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், காலை 7 மணியில் இருந்து அதிகபட்சம் 9 மணிக்குள் குளித்துவிடுவது நல்லது. இது உடலில் ஏற்படும் அத்தனை பிரச்னைகளுக்கும் நல்லது. குளிக்கும் போது எந்த சிந்தனையும் இல்லாமல் மன அமைதியுடன் குளிக்க வேண்டும். விரும்பினால் உங்களுக்கு பிடித்த சந்தோஷமான பாடல்களைக் கேட்டுக்கொண்டோ, பாடிக்கொண்டோ கூட குளிக்கலாம். முந்தைய நாளின் அத்தனை பிரச்னைகளுக்கும், மனப் போராட்டங்களுக்கும் தீர்வு இந்தக் குளியல்தான்.

அதே போல் அரப்பு, சீகக்காய் உள்ளிட்டவை தினம் போட்டுக் குளிப்பது முடியாத காரியம். வாரம் ஒருமுறையேனும் அதை தேய்த்து குளிக்க வேண்டும். முடிந்தவரை அதிக நுரையில்லாத சோப்புகளை பயன்படுத்தவும். நம் உடலில் இயற்கையிலேயே ஒரு எண்ணெய் சுரந்து குளிக்கையில் திரள் திரளாக வருவதைக் கண்டிருப்பீர்கள். அது அழுக்கு என நினைக்க வேண்டாம். நம் தோலின் துளைகளை பாதுகாக்கும் கவசமே அதுதான். சோப்பைத் தேய்த்து அவற்றை நீக்கினால் வெளிப்புற தூசிகள், அழுக்குகள் படிந்து தோலுக்குள் இறங்கி பருக்கள், மரு உள்ளிட்டவற்றை உண்டாக்கும்.

எப்போது தலைக்கு குளித்தாலும் தலையில் தேங்காய் அல்லது நல்லெண்ணை தேய்த்துக் குளிக்கணும். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி தரும். தேங்காய் எண்ணெய் சரும பளபளப்பு மற்றும் வனப்புக்கு உதவும். இவ்விரண்டு எண்ணைகளுமே நிறைய பிரச்னைகளுக்குத் தீர்வுக் கொடுக்கும். குறிப்பாக குளிக்கும் போது அவசரம் கூடவே கூடாது. சிலரெல்லாம் குளிக்க போனதே தெரியாது. போன வேகத்தில் குளிச்சிட்டு வெளியே வந்திடுவாங்க. பொறுமையா உங்கள் தலையிலே தண்ணீர் ஊற்றி அதை உணர்ந்து குளிக்கணும். முடிந்தால் ஒரு நாளைக்கு இருமுறை குளியல் ரொம்ப நல்லது.

அதே போல் உங்களின் தோலின் குணம் குறித்து முழுமையாக ஒவ்வொருவரும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதற்கேற்ப அழகு சாதன பொருட்களான சோப்பு, ஷாம்பூ உள்ளிட்டவைகளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு சிலர் குளியலையே தண்டனையா நினைப்பாங்க. மற்ற உயிர்களையெல்லாம் பாருங்க, வெறும் குளிக்கவும், குடிக்கவும் பல மைல்கள் கூட பிரயாணம் பண்ணும். ஒரு சட்டி நீர் வைத்தால் போதும் பறவைகள் எல்லாம் குளிச்சு, குதிச்சு கும்மாளமிடும். அப்படியான ஆர்வம் நமக்குள்ளேயும் வர வேண்டும்.

முடிந்தவரை ஸ்கரப்பர் மாதிரியான நார்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தோலை எப்போதும் மென்மையாகத்தான் கையாளணும். தினமும் ஒருமுறை மனநிம்மதியுடன் குளித்தாலே மன அழுத்தங்கள் துவங்கி நரம்புப் பிரச்னைகள் வரை கூட சரியாகலாம். முடிந்தால் வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுப்பது உடல் வலி நீக்கி, புத்துணர்ச்சிக் கொடுக்கும்’’ என்று ஆலோசனை அளித்தார் இயற்கை மருத்துவர் மருதராஜ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடைக்கானல் உருவான கதை ‘ – இப்படிக்கு காலம்!! (வீடியோ)
Next post சாம்பலில் பூத்து உயிர் பெற்றவர்கள் !! (மகளிர் பக்கம்)