சாம்பலில் பூத்து உயிர் பெற்றவர்கள் !! (மகளிர் பக்கம்)
கண்களுக்கு புலப்படாமலேயே, மறைவில் வாழும் பெண் சமுதாயமும் இந்நாட்டில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதுவும் இருட்டின் மறைவில், வறுமையின் கோரப்பிடியால் தளர்ந்து, பாலியல் தொழிலாளர்களாக, இந்தியாவின் பெரும் நகரங்களான மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில், சிவப்பு விளக்குப்பகுதி என்ற போர்வையில் அவர்களும் வாழ்கிறார்கள். இவர்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட தொடங்கியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தங்களின் வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றி, சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.
யாரும் இங்கு பாலியல் தொழிலாளியாக மாறுவதற்கு விரும்புவதில்லைதான். வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுதல், அவர்களின் சூழ்நிலை, பணத்தேவை போன்ற காரணங்களே ஆண்களின் இச்சைக்கு பெண்களை இரையாக்குகிறது. அப்படித் தவறி விழும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நிலை இங்கே என்னவாக இருக்கிறது. விடை தேடினார் ஊர்மிபாசு!? உதயமானது அவரின் ‘நியூ லைட்’ அமைப்பு. இந்த அமைப்பின் வழியே விலைமாதர்களின் குழந்தைகளுக்கு புது வாழ்வு அளித்து வருகிறார் இவர்.
தான் ஓவியர் ஆகவேண்டும் என்பதே குழந்தையில் ஊர்மிபாசுவின் கனவாக இருந்தது. பெரியவரானதும் படித்து வாங்கியதோ டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் வொர்க் (TISS) கல்வி நிறுவனத்தில் பொது சேவையில் முதுகலை பட்டம். கல்வி தொடர்பாக மும்பை காமாத்திபுரா பகுதியில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு அவர் போக நேர்ந்தது. இந்தியாவின் கோர முகத்தையும் அங்கே அவர் நேரில் காண நேர்ந்தது. பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் குப்பைகளாக பெண்கள் நடத்தப்பட்ட காட்சிகளைக் கண்டு மனம் பதறினார்.
பாலியல் தொழில் செய்யும் பெண்களின் குழந்தைகள், தன் தகப்பன் யாரெனத் தெரியாத நிலையில், உண்ண உணவின்றி, உடுத்த உடையற்று, ஒடுக்கப்பட்டவர்களாய் பாசத்திற்கு பரிதவிப்பதை நேரிலே கண்டார். அவரின் கண்கள் கண்ணீரில் தத்தளிக்க, இந்தக் குழந்தைகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தோன்றத் தொடங்கியது. சொந்த மாநிலமான கொல்கத்தாவிலும் இதே அவல நிலையினை அவர் காண நேர்ந்தது.
8 குழந்தைகளோடு ரூபாய் பத்தாயிரத்தில் தன் நண்பர்களுடன் இணைத்து ‘நியூ லைட்’ தொண்டு நிறுவனத்தை 2000ல் தொடங்கினார் ஊர்மி பாசு. ஊர்மியின் செயலில் அவரின் குடும்பமே மொத்தமாய் வெகுண்டெழுந்து எதிர்த்தது. இருந்தாலும் தன் முடிவில் அவர் பின்வாங்கவில்லை. உள்ளூர் ரெளடிகளின் மிரட்டல்களும் இணைய, பல தடைகளை தொடர்ந்து அவர் சந்திக்க நேர்ந்தாலும், ஊர்மி மனம் தளரவில்லை. ‘எதிர்ப்பு கிளம்பினால் நாம் நல்லது செய்கிறோம் என்று அர்த்தம்’ என்கிறார், பாலியல் தொழிலில் முகவரி இல்லாத குழந்தைகளை அரவணைத்து.
ஆணும் பெண்ணும் ஒன்றே என்ற நிலைப்பாட்டிலும் உறுதியாக நின்று இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி வருகிறது இந்த அமைப்பு. சேவையாற்ற பலர் தன்னார்வலர்களாக இங்கு முன் வருகிறார்கள். ஆனால் சிவப்பு விளக்குப் பகுதிக்கு சென்று பணிபுரிய வேண்டும் என்றால் பின்வாங்குகிறார்கள் என்கிறார் புன்னகை மாறாமல்.
மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் பெண்களின் மறுவாழ்விற்காக பாடுபடுகிறது ‘கிராந்தி’. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ராஃபின் சௌராசியா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கிராந்தி என்னும் சொல்லுக்கு புரட்சி என்று பொருள். திசைமாறி பாலியல் தொழிலில் சிக்கிய இளம்பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கண்டெடுத்து, மனச் சிதைவை போக்கி, சிந்தனைகளை சரிசெய்து, அவர்களை வெளிக்கொண்டுவந்து வாழ வழிவகை செய்கிறது இந்த அமைப்பு.
துவக்கத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்தபோதும், தொடர் செயல்பாட்டால், சிவப்பு விளக்குப் பகுதிக் குழந்தைகள் பலர், பள்ளிப் படிப்பை மேற்கொண்டுள்ளதுடன், தங்களுக்குப் பிடித்த துறைகளில் வெற்றிகரமாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்வேதா
மும்பை சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திப்புராவில் பிறந்து அந்தச் சூழலிலேயே வளர்ந்த ஸ்வேதா இன்று அமெரிக்காவில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். வெளிநாடு சென்று படிப்பதற்காக முதல் முறையாக கல்வி உதவித்தொகையினைப் பெற்றவர் இவர். இவருக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக இல்லாமல் போனது. அவரும் அவரது தாயும் விதி வசமாக காமாத்திப்புராவில் வசிக்கும்படி காலத்தால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நினைவு தெரியும் வரை சாதாரணமான ஒரு சிறுமியாகவே ஸ்வேதாவும் வாழ்ந்தார்.
தன்னைச்சுற்றிலும் முட்களே நிறைந்திருந்தது. சகிக்க முடியாத எத்தனையோ இடர்பாடுகளை எல்லாம் எதிர்கொண்டார். எதிர்த்து நின்றார். கண்ணீரும், கதறல்களும் நிறைந்த அவருடைய வாழ்க்கை மனித மிருகங்களால் நாசமாக்கப்பட்டது. அவற்றை எல்லாம் எதிர்த்து திடமான மனதோடு போராடினார். வாழ்ந்தே தீரவேண்டும் என்ற வெறியுடன் செயல்பட்டவர். சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்தவர்போல் சமூக ஆர்வலர்கள் மூலம் கண்டறியப்பட்டு, அவர்கள் கொடுத்த ஆதரவில் இன்று வெற்றிகரமான பெண்ணாய் வலம் வருகிறார். தன் கதையை இவரே எழுதியும் உள்ளார்.
ஷீத்தல்
இவர் ஒரு பாலியல் தொழிலாளியின் மகள் என்ற வெளிப்படையான அடையாளத்தோடு இசை உலகில் சாதித்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். தன் அம்மா பாலியல் தொழில் செய்வதால், பள்ளியில் தன் சக தோழிகளால் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும், இவரை பார்க்கும் சகவயது பெண்கள் எல்லாம், உன் அம்மா கெட்ட தொழில் செய்கிறார், அது உனக்கு தெரியுமா என்று எள்ளி நகையாடியதாகவும், இந்த வார்த்தைகளைக் கேட்டு தான் மிகவும் வேதனையடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தன் தாயிடம், ஏன் இதுபோன்று தொழிலை செய்கிறாய், எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது என்று சண்டைபோட்டதாகவும் கூறியுள்ளார். ஷீத்தலின் தாய் தன் மகளின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், மகளின் கல்விக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களை அணுகியதாகவும் கூறியுள்ளார். தொண்டு நிறுவனங்கள் ஷீத்தலின் படிப்பிற்கு உதவி செய்தாலும், ஷீத்தலைப் பற்றியும், அவரின் தாயின் தொழிலைப் பற்றியும் வெளி உலகிற்கு மூச்சுக்கூட விடக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் சிறுவயது முதல் தன்னை மறைத்துக்கொண்டு ஷீத்தல் வாழத் தொடங்கிஉள்ளார். இந்நிலையில் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்காக செயல்படும் அமைப்பின் உதவி ஷீத்தலுக்குக் கிடைக்க, அவர்கள் பாலியல் தொழில் குறித்தும், பாலியல் தொழிலால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் வெளிப்படையாக பேசியதால், தனது தாய் நிலை குறித்து ஷீத்தல் உணரத் தொடங்கினார். பாலியல் தொழிலாளர் குறித்த அவரின் பார்வை மாறியது. தன் தாய் மற்றும் தன் நிலை குறித்து மிகவும் வெளிப்படையாக பொதுவெளியில் பேசத் துவங்கினார். படிப்பையும் தாண்டி தமக்குப் பிடித்த இசைத்துறையிலும் கால்பதிக்க ஆரம்பித்தார்.
டிரம்ஸ் கருவியினை இசைப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விசயமாக இருந்தது. ராஜஸ்தானில் உள்ள இசைப் பள்ளியில் மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டவர், தொடர்ந்து அமெரிக்கா சென்று படிப்பதற்கு முழு உதவித் தொகையுடன் (scholarship) இசை பற்றி படிக்க வாய்ப்பையும் பெற்றார். அமெரிக்காவில் தங்கியிருந்தபோது பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் துவங்கினார். தற்போது புனேவைச் சேர்ந்த இசை நிறுவனம் ஒன்றில் இசை பயிற்சியாளராக(music intern) இருக்கிறார். டிரம்ஸ் இசை பிரியரான இவர் மற்ற இசைக் கருவிகளையும் இசைக்க கற்றுக்கொள்கிறார். தன்னைப் போன்ற பின்னணி கொண்ட பெண்களுக்காக காமாத்திபுராவில் நூலகம் ஒன்றை அமைப்பதே ஷீத்தலின் கனவு.
Average Rating