கோபானியின் புதல்விகள்: வீரம்மிகு பெண்களின் கதைகள் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 54 Second

பெண்விடுதலையை, சமூக விடுதலையின் கூறாகவும் சமூக மாற்றத்தின் தவிர்க்கவியலாத அம்சமாகவும் காணுவது அடிப்படையானது.

பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையைத் தரும் களங்கள், எம்முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே உண்டு.

மனதை நெகிழவைக்கும், ஆச்சரியத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும், வீரத்தைக் கண்டு வியக்கவைக்கும் உணர்ச்சிகளை ஒருசேரப் பெறுவது கடினம். இந்த வித்தையை நிகழ்த்திமுடித்த, ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த திருப்திக்கு அப்பால், அந்தப் புத்தகம் சொல்லுகிற செய்திகள், எழுப்புகின்ற கேள்விகள் ஏராளம்.நாம் வாழ்ந்த சமகாலத்தில், இந்தப் பூமிப்பந்தின் இன்னொரு மூலையில், வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த பெண்களின் கதைதான் எத்தனை அருமையானது.

கடந்த மாதம் வெளியான, ‘கோபானியின் புதல்விகள்: கிளர்ச்சி, துணிவு, நீதி பற்றியதொரு கதை’ (The Daughters of Kobani: A Story of Rebellion, Courage, and Justice) புத்தகம், சமகாலத்தின் முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றை ஆவணப்படுத்தி இருக்கின்றது.

சிரியாவில் யுத்தம் தொடங்கியதன் தொடர்ச்சியாக, ஐ.எஸ்.ஐ.எஸ் உருவெடுத்து மத்திய கிழக்கின் சில பகுதிகளைத் துவம்சம் செய்து கொண்டிந்த போது, வீரம்மிக்க குர்தியப் பெண்கள், தமக்காகவும் தமது நிலத்துக்காகவும் தமது அடையாளத்துக்காகவும் எவ்வாறு தொடர்ச்சியாகப் போராடினார்கள் என்ற கதையை, இந்தப் புத்தகம் சொல்கிறது.

2017 – 2020 வரையான காலப்பகுதியில் சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் மேற்கொண்ட களப்பணிகளின் விளைவாக உருவானதே இப்புத்தகம். இதை கெயில் சீமக் லீமன் எழுதியுள்ளார். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து எழுதிவரும் இவர், அமெரிக்காவில் இடம்பெறும் ‘கட்டாயத் திருமணங்கள்’ குறித்த ஆய்வின் மூலம் கவனம் பெற்றவராவார். அதேபோல, இவரது முன்னைய நூல், அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் பற்றியதாக இருந்தது.

இந்த நூலை நோக்கி, தான் நகர்ந்த கதையை முன்னுரையில் கெயில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: ‘2016ஆம் ஆண்டு, ஒருநாள் இரவு, என் தொலைபேசி அலறியது.நன்கு பழக்கமில்லாத ஒரு குரல், “கெயில், நீங்கள் இங்கே வரவேண்டும்; இங்கே நடப்பவற்றைப் பார்க்க வேண்டும்” என்று கூறியது. அந்தக் குரலுக்குரியவர், வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கப் படைகளில் பணியிலிருந்த ஒரு பெண். எனது, முன்னைய ஆய்வுக்காக, அவரை நேர்கண்டிருக்கிறேன். அந்தக் குரல் தொடர்ந்தது. ‘“சிரியாவில் பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிராகத் தீரம் மிக்க போராட்டங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்தில், ஆணும் பெண்ணும் சமம் என்ற சிந்தனையைப் பின்பற்றுபவர்கள். போரிலும் ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். இங்கே ஆண்களுக்குரிய வேலை, பெண்களுக்குரிய வேலை என்ற பிரிவினை இல்லை. பெண்கள் முன்னிலை பதவிகளை வகிப்பது குறித்து, ஆண்களுக்கும் பிரச்சினை இல்லை. அமெரிக்க இராணுவத்தில், பெண்கள் எதிர்நோக்கும் தடைகள் இவர்களுக்குக் கிடையாது. பல போர்க்களங்களுக்கு இவர்களே தலைமை தாங்குகிறார்கள். அவர்களின் கதைகளைக் கேட்க நீங்கள் வரவேண்டும்” இந்த அழைப்பே, என்னை அங்கு அழைத்துச் சென்றது’.

பத்து அத்தியாயங்கள், முன்னுரை, பின்னுரை என்பவற்றை உள்ளக்கிய இந்தப் புத்தகம், சிரியப் பெண்கள் பாதுகாப்புப் படைகள் (YPJ) என அறியப்பட்ட சிரியப் பெண் போராளிகளின் வாழ்க்கை, அவர்களது கதைகள், போராட்டக் களத்தில் அன்றாட வாழ்வியல் அனுபவங்கள் என்பவற்றைக் கதைபோல சித்திரித்து நிற்கிறது.

வன்புணர்வு, தொடர் சித்திரவதை, கொலை என்பவற்றை எதிர்கொண்ட பெண்கள், எவ்வாறு தீரத்துடன் அதை எதிர்த்துப் போராடி, ஐ.எஸ்.ஐ.எஸை வீழ்த்தினார்கள் என்பதை இந்தப் புத்தகம், பெண் போராளிகளின் கதைகளின் ஊடு, சொல்லிச் செல்கிறது.

இந்தப் பெண்களைப் பொறுத்தவரையில், இது வெறுமனே, வன்முறைக்கெதிரான போராட்டமல்ல; இது உரிமைக்கான போராட்டம்; அரசியல் போராட்டம். அதிகாரம் அவர்கள் கைகளில் வந்தபோது, அது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை; கடமையே முன்னின்றது. இதைக் காட்டும் ஏராளமான உதாரணங்கள், நூலெங்கும் பரவிக் கிடக்கின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் இருந்து நிலங்களை மீட்கும் போராட்டத்தின் போது, ‘மன்பிஞ்’ நகரை மீட்பதற்கு, ‘யுப்பிரடீஸ்’ நதியைக் கடந்து, போக்குவரத்துக் பாதையைக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியிருந்தது. நடுஇரவில், போராளிப் பெண்களே நதியைக் கடந்து, பாதையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ்யை, மத்திய கிழக்கின் களத்தில் இருந்து அகற்றிய வீரம்மிக்க பணியை, சிரியக் பெண் போராளிகளே செய்தார்கள். 2014ஆம் ஆண்டுவரை வெற்றிநடை போட்டு, பிரதேசங்களைக் கைப்பற்றி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் முதலாவது தோல்வி, கோபானியில் நிகழ்ந்தது. இந்தப் பெண்களின் வீரம்மிக்க போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது, அவர்களுடைய சித்தாந்தம் ஆகும்.

புரட்சிகர கட்சியின் சரியான சித்தாந்தமும் கொள்கையுமே, உருவாகும் பெண் தலைவர்களது தரத்தையும் பெண் விடுதலையின் பாதையையும் தீர்மானிக்கும். லெனினின் தலைமையிலான பொல்ஷெவிக் கட்சியின் சரியான அரசியல் பாதையே, அலெக்ஸாண்ட்றா கொல்லன்ராய், கிளாரா ஜெற்கின், இனெஸ்ஸா ஆர்மாண்ட், க்ரூப்ஸ்கயா போன்ற பெண் தலைவர்களை உருவாக்கியது.

மார்ச் எட்டாம் திகதியை சர்வதேச உழைக்கும் பெண்கள் நாளாக உலகெங்கும் கொண்டாடுவது என்ற கருத்தை, க்ளாரா ஜெற்கின், றோஸா லக்ஸம்பேர்க் போன்ற பெண்தலைவர்கள் விருத்தி செய்ய, சரியான அரசியல் பாதையே காரணமாக இருந்தது. அம்முடிவு, 1910ஆம் ஆண்டு, ஸ் ரொக்ஹோமில் நடந்த முதலாவது சர்வதேச சோஷலிஸப் பெண்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டது. அந்நாளே, இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

உழைக்கும் மக்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் சார்புடையதாக, பெண்களின் சக்திக்கும் ஒரு வெற்றி உண்டு. அவ்வாறே, புரட்சியும் புரட்சிமூலம் வெல்லப்பட்டவைவும், மேலும் பெண்கள் புரட்சியில் இணைந்து, தலைமை தாங்குவதன் மூலமே பேணப்படவும் வளர்க்கப்படவும் இயலும் என்பதையே, ‘கோபானியின் புதல்வி’கள் நூல் காட்டி நிற்கிறது.

இந்தப் புத்தகத்தை வாசித்த போது, இரண்டு நினைவுகள் வந்தன. முதலாவது, நேபாளத்தில் மாவோவாதிகள் முன்னெடுத்த மக்கள் யுத்தத்தில், பெண்களின் பங்களிப்புத் தொடர்பானது. அவர்களும் இதேமாதிரி, எதுவித சமரசமுமின்றிப் போராடியவர்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கான போராட்டத்தில் முன்னிற்று போராடியதும் அவர்கள்தான். 14 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களை நேர்கண்டபோது, அவர்களின் குரல்களில் ஒலித்த நம்பிக்கை, சமூக மாற்றத்தைப் பெண்களாலேயே நிகழ்த்த முடியும் என்பதை, ஆழமாக எனக்கு உணர்த்தியது; அதை அவர்கள் செய்தும் காட்டினார்கள்.

1996ஆம் ஆண்டு தொடங்கிய மக்கள் யுத்தத்தை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் பெண்களுக்கு முக்கிய பங்குண்டு. இதற்கு சில நிகழ்வுகளை இங்கு கோடிட்டுக் காட்டலாம்.

மேற்கு நேபாளத்தின் ‘கலிகோட்’ மாவட்டத்தில் தலித் பெண்களே முதன்முதலாக, நேபாள இராணுவப் படையினரிடமிருந்து றைபிள் துவக்குக்களைப் பறித்தெடுத்து, மாவோயிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தனர். இது மேற்கு நேபாளத்தில், மக்கள் யுத்தத்தை விரைவுபடுத்த ஊக்கியாக செயற்பட்ட காரணிகளில் பிரதானமானது. இராணுவம் எதிர்க்கப்படக் கூடியது; வெல்லப்படக்கூடியது என்ற நம்பிக்கையை, இந்தப் பெண்களே உருவாக்கினார்கள்.

2001 மார்ச் மாதம், நேபாளத்தின் மிகவும் பாதுகாப்பான சிறையாகக் கருதப்பட்ட கோர்க்கா மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து ஆறு மாஒவாதிப் பெண்கள் வெற்றிகரமான சிறையுடைப்பை மேற்கொண்டார்கள். அதேயாண்டு ஒக்டோபரில், முழுநாட்டையும் உலுக்கிய வெற்றிகரமான மதுஒழிப்பு இயக்கத்தை பெண்களே தலைமையேற்று நடத்தினார்கள். றொல்பாவைச் சேர்ந்த பெண்கள், தமது நகைகளை கட்சிக்குத் தானமாக வழங்கி, கட்சி உறுப்பினர்கள் சொத்துகளை, கட்சிக்கு வழங்குவதற்கு முன்னுதாரணமாக இருந்தார்கள்.

இரண்டாவதாக, இந்தப் புத்தகம் ‘சன்டீனோவின் புதல்விகள்: போராட்டத்தில் நிகரகுவாப் பெண்களின் வாக்குமூலங்கள்’ (Sandino’sDaughters: Testimoniesof Nicaraguan Women in Struggle) என்ற நூலை நினைவுபடுத்தியது. நிகராகுவாவில் சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்த்து, சான்டனிஸ்டாக்களின் ஆட்சியை உருவாக்கிய போராட்டத்தில் பங்காற்றிய பெண்களின் கதைகளை உள்ளடக்கிய இப்புத்தகம், 1981ஆம் ஆண்டு வெளியானது. கோபானியின் புதல்விகள் போலவே, ஒரு நீண்ட நெடிய புரட்சிகரப் போராட்டத்தில், சன்டனிஸ்டாப் பெண்களின் பங்களிப்பை இந்நூல் காட்டி நின்றது. அந்த நூல், மரியா லீடியா என்ற 68 வயதான பெண்மணியின் வாக்குமூலத்தோடு தொடங்குகிறது.

‘செய்தி பரிமாறுபவளாக நான் சான்டனிஸ்டாக்களுக்கு வேலை செய்தேன். அங்கு தலைவர் கிடையாது; ஜெனரல் கிடையாது; நாமெல்லோரும் சுதந்திர நிககுவாவுக்காகப் போராடுகிறோம். இந்தப் போராட்டத்தில் ஒரு கணம்கூட, நான் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. எனது வயதைப் புறந்தள்ளிப் போராட்டத்தில் என்னை ஈடுபடுத்தினேன். ஒருநாள் இரவு எனக்குச் செய்தி வந்தது. எனது பிள்ளைகள் வென்றுவிட்டார்கள் என்று! கனவு நனவான மகிழ்ச்சி. இனியும் கனவுகாண இயலாது. இன்னும் வெல்வதற்கு எவ்வளவோ உண்டு’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிக்கு காலம்: மின்சாரம் ஒரு சரித்திரம்!! (வீடியோ)
Next post நாம் தமிழர் கட்சி உருவான கதை! (வீடியோ)