ஒரு டாக்டர் ஆக்டரான கதை!! (மருத்துவம்)
நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற படங்களில் நடித்திருக்கும் சேதுராமன் உண்மையில் ஒரு சரும நல மருத்துவர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அவரிடம் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்.
சரும நல மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?!
‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மருத்துவர்கள். அதனால் இயல்பாகவே என்னையும் மருத்துவருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதுதான் நான் மருத்துவரானதற்கான அடிப்படை காரணம். அமைதியாக, பரபரப்பு இல்லாமல் தொழில் செய்ய வேண்டுமே என்று நினைத்தபோதுதான் சரும நலம் பற்றி யோசனை வந்தது.
இது அவசர கால சிகிச்சைமுறை இல்லை. அது மட்டுமல்லாமல் சின்ன வயதில் இருந்தே சரும நலன் குறித்த ஆர்வமும் நிறைய இருந்தது. ஹேர்ஸ்டைல், முகத்தில் தாடி மீசை ஸ்டைலாக வைத்திருப்பது, முகத்தை பொலிவாகப் பராமரிப்பது தொடர்பான அக்கறை அதிகம் இருந்தது.
என்னைப் போலவே அழகு மற்றும் சரும நலன் குறித்த விருப்பம் பரவலாக எல்லோருக்குமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட உடன் இந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தேன்.’’ மருத்துவத்துறையில் உங்களுக்கென்று முன் உதாரணம் யாரேனும் இருக்கிறார்களா?
‘‘என்னுடைய அப்பாதான் என்னுடைய முதல் ரோல் மாடல். அவர் ஒரு அரசு மருத்துவர். தன்னுடைய பணிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டதைப் பற்றி பலரும் கூறியிருக்கிறார்கள். நானும் அவரிடம் இருந்த அந்த தொழில்பக்தியையும், சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையையும் கவனித்து வளர்ந்திருக்கிறேன். தனியாக ஒரு மருத்துவமனை தொடங்கி செயல்படக் கூடாது என்று அவர் பிடிவாதமாகவே இருந்தார். நானும் அவரைப் போல மக்கள் பணியாற்றும் மருத்துவராக செயல்படவே விரும்புகிறேன்.’’
சினிமாவிற்கு எப்படி வந்தீர்கள்?
‘‘நான் கல்லூரியில் படித்தபோது சந்தானம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். எங்கள் கல்லூரிக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அப்போதிலிருந்து அவர் எனக்கு நல்ல பழக்கம். அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் என்னுடன் நட்பாக இருந்தார்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தயாரிப்பு தொடங்கிய நேரத்தில், நடிக்க வரவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சந்தானத்தின் மீது கொண்ட நட்பு காரணமாக நடித்தேன். அதன்பிறகு அவருடைய ‘வாலிப ராஜா’ படத்தில் சேர்ந்து நடித்தேன். இப்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடுராஜா’ படத்தில் நடித்திருக்கிறேன். 50/50 என்கிற இன்னொரு படமும் அடுத்து வரவிருக்கிறது.’’
உங்களுக்கு பிடித்தது எது மருத்துவமா? சினிமாவா?
‘‘சினிமாவில் நடிப்பது எனக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்குதான். அது சுவாரஸ்யமான தொழிலாக இருக்கிறது. ஆனால், நான் மனதார விரும்பி செய்வது மருத்துவத் தொழில்தான். மருத்துவராக பணிபுரிவதில் ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது. உடல்நலக் கோளாறுகளோடு வரும் பலரையும் இதில் சந்திக்கிறோம். அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்பதில் ஒரு சந்தோஷம்.
சினிமாவில் நடிக்கும்போது எல்லா நாளும் படப்பிடிப்பு இருக்காது. பல நாள் சும்மாவே இருக்க வேண்டியிருக்கும். எனக்கு பரபரப்பு பிடிக்காவிட்டாலும், எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது பிடிக்கும். அதனாலும் மருத்துவம்தான் எனக்குப் பிடித்த தொழில்.’’
சினிமா பிரபலமாக இருப்பது உங்கள் மருத்துவத் தொழிலுக்கு உதவுகிறதா?
‘‘சினிமா பிரபலம் என்பதால் என்னிடம் யாரும் சிகிச்சைக்கு வருவதில்லை. இன்றைக்கு மக்கள் அந்த அளவுக்கெல்லாம் மாயையோடு இல்லை. ஒரு மருத்துவர் தகுதியானவரா, கைராசிக்காரரா, குறைவான கட்டணம் வாங்குகிறவரா என்று பல விஷயங்களையும் நன்றாக அறிந்துகொண்ட பிறகுதான் சிகிச்சைக்குச் செல்கிறார்கள். ‘அந்த சினிமாவில் உங்களைப் பார்த்தேன்’ ‘இந்த படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள்’ என்று சிலர் பாராட்டும்போது அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கும். அவ்வளவுதான்.’’
இப்போது அழகு சாதனப்பொருட்கள் விளம்பரங்கள் நிறைய வருகின்றனவே…‘‘மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த அழகு சாதனப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. இன்று சருமம் சார்ந்த பல பிரச்னைகள் அதிகரித்திருப்பதற்கு இந்த விளம்பர கவர்ச்சி முக்கிய காரணம். பொதுமக்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் போதுமான விழிப்புணர்வு வேண்டும்.’’
ஹேர் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் பற்றி குழப்பமான கருத்துகள் இருப்பது பற்றி…‘‘ஹேர் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் இன்றைய அபாரமான மருத்துவ வளர்ச்சியடைந்த சூழலில் சாத்தியம்தான்.
ஆனால், அதற்கு முன்பு அவருடைய வயது, நீரிழிவு போன்ற உடற்கோளாறுகள், உடலின் வெப்ப நிலை போன்றவற்றை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே அவருக்கு இந்த சிகிச்சையை செய்ய முடியும். இது முழுக்க முழுக்க தகுதிபெற்ற மருத்துவரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அழகு நிலையங்களிலோ, அரை குறை மருத்துவர்களிடமோ செய்துகொள்ளக் கூடாது. அதுதான் ஆபத்து.’’
சருமப் புற்றுநோய் சமீபகாலமாக அதிகரித்துவருகிறதே…
‘‘சருமப் புற்றுநோய் உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இது குறைவுதான் என்பதால், நாம் பயப்பட வேண்டியதில்லை. இந்தியர்களின் சருமத்தில் இயற்கையாகவே மெலனின் தேவையான அளவு இருப்பதால் சருமப் புற்றுநோய் வரும் அபாயம் நமக்குக் குறைவுதான்.’’
இப்போது மக்கள் என்ன பிரச்னைக்காக அதிகம் சரும நல மருத்துவரைத் தேடிப் போகிறார்கள்?
‘‘முடி உதிர்தல் மற்றும் வெயிலால் ஏற்படும் சருமத் தொற்றுகள், முகப்பரு, கண்ணின் கருவளையங்கள் போன்ற பிரச்னைகளுக்குதான் அதிகமாக வருகிறார்கள். குறிப்பாக, முகப்பரு போன்றவற்றை அகற்றுதல் என்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை. அதில் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைப் பார்த்து அதற்கும் சிகிச்சை அளித்து அந்த பருவை முற்றிலுமாக நீக்கவும் செய்கிறோம்.’’
ஒருவர் தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ள சிகிச்சை உள்ளதா?
‘‘ஒருவரின் நிறத்தை முழுமையாக மாற்ற முடியாது. நிறத்திலுள்ள தன்மையை சற்று அதிகரிக்கலாம்; அவ்வளவுதான். 100 சதவீதம் நிறமாற்றம் என்பது சாத்தியமற்றது. ஒருவரின் தோற்றத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும், இயற்கையில் உள்ள சருமத்தின் நிறத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் சரும நல மருத்துவம் வழிகாட்டுகிறது.’’
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமா?
‘‘சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது சூரியனின் புற ஊதாக்கதிரில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க உதவும். அதனால் வெயிலில் பணியாற்றுகிறவர்கள் சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லதுதான். சினிமாவில் மேக்கப் போடுவதால் தோல் அலர்ஜிகள் வரும். அதனால் மேக்கப் போடுவதற்கு முன் சன்ஸ்கிரீன் முதலில் தடவிய பிறகே மேக்கப் போடுவார்கள்.’’
தோல் மாற்று சிகிச்சை பற்றி சொல்லுங்கள்?
‘‘தீக்காயங்கள், அமிலம்(Acid) போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தோல் மாற்று சிகிச்சை அளித்து வருகிறோம். இதற்காக தோல் தானம் போன்ற புதிய முறையையும் பின்பற்றுகிறோம்.
இதற்காக தோல் வங்கி ஒன்றை அரசே ஆரம்பித்து வைத்திருக்கிறது. தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அமிலத்தால் உடல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்னொருவரிடமிருந்து தோலை எடுத்து சிகிச்சை செய்யும் முறையாகும்.’’
சருமம் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்…
‘‘ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், வைட்டமின் சி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வெயிலில் செல்லும்போது சன் ஸ்கிரீன் உடலில் தடவிக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனிகள், சர்க்கரை, பால் சம்பந்தமான பொருட்கள் உணவுகளில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. நம்முடைய முகம் பொலிவாக இருப்பதற்கு ரத்த ஓட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சீரான ரத்த ஓட்டத்தைத் தர வல்ல உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.’’
Average Rating