இலங்கை ஹபரணை தாக்குதலில் குறைந்தபட்சம் 100 இலங்கைப் படையினர் பலி
(இரண்டாவது இணைப்பு..) இலங்கையில் ஹபரணை பகுதிக்கு அருகில் கடற்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டு 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் சிவிலியன்கள் என்றும் கூறப்படுகிறது. வடமத்திய மாகாணத்தில், திருகோணமலையில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில், ஹபரணைக்கும் தம்புள்ளவுக்கும் இடையில் திஹம்பத்தான என்னும் இடத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், விடுமுறையில் தமது வீடுகளுக்கு சென்றுகொண்டிருந்த படையினர் மற்றும் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த படையினர் ஆகியோர் பயணித்த வாகனங்கள் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய டிரக் ஒன்று மோதியதாக இலங்கை இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திகம்பத்தான பகுதியில் இரு திசைகளிலும் இருந்து வந்த படையினரின் சுமார் 15 வாகனங்கள் தரித்து நின்று புறப்படவிருந்த தருணத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வெடிபொருள் நிரப்பப்பட்ட கண்டர் டிரக் வண்டி ஒன்றில் வந்த விடுதலைப்புலிகளின் தற்கொலையாளியே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இலங்கை படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காயமடைந்தவர்கள், தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தம்புள்ள, மாத்தளை மற்றும் அநுராதபுரம் மருத்துவ மனைகளுக்கும், மிகவும் மோசமாக காயமடைந்த சிலர் ஹெலிக்கொப்டர்கள் மூலம் கொழும்பு மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரின் சுமார் 15 வாகனங்கள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அவற்றில் 9 வாகனங்கள் முழுமையாகச் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்தவர்களின் தொகை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படும் அதேவேளையில், இலங்கையின் போர் வரலாற்றில், தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அதிக எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்ட சம்பவம் இது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நிராயுதபாணிகளான படையினர் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல், என்று இதனை வர்ணித்துள்ள இலங்கை இராணுவ அதிகாரிகள், இது ஒரு மோசமான போர் நிறுத்த மீறல் என்றும் கண்டித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சரும், அரசாங்கத்தின் இராணுவ விவகாரங்களுக்கு பேசவல்ல கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய தாக்குதல், விடுதலைப் புலிகளுக்கும், அவர்களுடைய தலைவர் பிரபாகரனுக்கும் சமாதானத்தில் நம்பிக்கை இல்லை என்பதினையே காண்பிக்கின்றது என்றார். எனினும் இந்த மாதத்தின் இறுதியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்து கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இநத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் இளந்திரையன், போர்களங்களுக்கு அப்பால் சுமார் 100, 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்கள் மீது இலங்கை அரசப்படைகள், விமானப் படைகள் தாக்குதல் நடத்தி, பொது மக்களுக்கு அதிக இழப்பு ஏற்படுத்தி கொண்டு இருக்கின்ற சுழ்நிலையில், இலங்கை தீவில் இருக்கின்ற ஏனைய இராணுவ இலக்குகள் மீது இலக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை என்றார்.
ஆனால் இன்றைய தாக்குதல் தொடர்பாக உடனடியாக தங்களால் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்த பின்னரே, இந்தத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கிஃபிர் வீழ்ந்தது
இதற்கிடையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை விமானப்படையின் கிஃபிர் குண்டுவீச்சு விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் உள்ள வாவி ஒன்றில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. அதன் விமானி பரசூட் மூலம் குதித்துள்ளார்.