பாகிஸ்தான் பெண்களின் நம்பிக்கை முகம் – முனிபா மஸாரி!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 24 Second

இவரின் ஓவியங்களில் பெண்களே பிரதானம். ‘உங்கள் சுவர்கள் வண்ணங்களை உடுத்தட்டும்’ (Muniba’s Canvas – Let your wall wear colors) என்கிற அறிவிப்புடன் இணையதளத்தில் இவரின் ஓவியங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன.

சாலை விபத்தில் கால்களை இழந்த முனிபா மஸாரி பாகிஸ்தானின் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். அடர் வண்ணங்களில் இவரின் ஓவியங்கள் சட்டென்று அனைவர் கவனத்தையும் ஈர்ப்பதோடு, மிக வேகமாக விற்றுவிடுகின்றன. வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட வலிகளைத் தன் ஓவியங்களில் கடத்திவிட்டு, இதமான புன்னகையோடு மேடைகளில் வலம் வருகிறார் இந்தப் புன்னகைப் பூ.

முனிபா மஸாரி ஓவியர் மட்டுமல்ல, ஒரு மாடல், தொலைக்காட்சி தொகுப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர், பாடகர், உணவு, சுகாதாரம், ஏழை மாணவர்களின் ஆரோக்கியம், கல்வி, பெண்கள் சுதந்திரம், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளிலும் தொடர்ந்து கால்பதித்து வருபவர். 2015ம் ஆண்டு அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கான நல்லெண்ணத் தூதராய் ஐக்கிய நாடுகள் அமைப்பு முனிபா மஸாரியை நியமித்தது. அதே ஆண்டு பிபிசி வெளியிட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் முனிபா மஸாரியும் இடம் பெற்றார். 2016ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ‘30 அன்டர் 30’ என்ற பட்டியலில் மீடியா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இடம்பிடித்தார் இவர்.

மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முனிபா, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள் நான். அப்போது ஓவியக் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தேன். கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற எனக்கு 18 வயதிலேயே திருமணமானது. பெண்களுக்கு தங்கள் திருமணம் பற்றிய கருத்துகளைப் பகிரும் சுதந்திரம் இல்லை என்பதால் என் திருமணமும் பெற்றோரின் விருப்பப்படியே நடந்தது. மறுப்பேதும் தெரிவிக்காமல் நானும் திருமணத்திற்கு சம்மதித்தேன்.

ஆனால் என் திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாய் இல்லை. திருமணமாகி சில காலமே ஆகியிருந்த நிலையில், 2007ல் என் கணவருடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மிக மோசமான விபத்தை சந்திக்க நேர்ந்தது. அந்த விபத்து என் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது என்கிறார்.

ஓட்டுநர் எதிர்பாராதவிதமாகத் தூங்கிவிட, நான் பயணித்த கார் கால்வாய் ஒன்றில் நிலைதடுமாறி வீழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. என் கணவர் கார் கதவைத் திறந்து குதித்து தப்பிவிட்டார். தப்பியவர், என்னைக் காப்பாற்ற முயற்சிக்காமல் அப்படியே அம்போவென விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான் அங்கேயே தனிமையில் நீண்ட நேரமாக காருக்குள் கிடந்தேன். நொறுங்கிப்போன காரின் தோற்றம் நான் பிழைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லியது. என் கால்களும் முதுகுத்தண்டும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்க, எனக்கு கால்கள் இருக்கிறது என்பதையே அப்போது என்னால் உணரமுடியவில்லை.

எல்லாமே இனி அவர்தான் என நம்பிய உறவு என்னை விட்டுச் சென்றது மிகுந்த வலியைத் தந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகே ஆட்கள் வந்து உதவினார்கள். உணர்ச்சிகள் இன்றி, பாதி உடல் முடங்கிவிட்டது. லேசாக நினைவிருந்த நான் தொலைந்துபோன என் கால்களைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். வெகுநேரமாக ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் ஜீப்பில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.

இரண்டு மூன்று மருத்துவமனைக்கு மாற்றிய நிலையில், என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘சற்று நேரத்தில் நான் இறந்துவிடுவேன்’ எனச் சொல்ல, அங்கிருந்து கராச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

பிழைக்க வாய்ப்பில்லையென மருத்துவர்களே நினைத்துக்கொண்டிருக்க, அதிசயமாக உயிர் பிழைத்தேன். நான் இனி வாழ்நாள் முழுவதும் நடக்கவே முடியாது என்பதை மருத்துவர்கள் என்னிடத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டனர். விபத்து நடந்த சில நாள்களிலேயே கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவருக்கு எனது வாழ்த்துகளைக் குறுஞ்செய்தியாக அனுப்பினேன் என்கிறார் முனிபா மஸாரி புன்னகைத்து.

பல மாதங்களாக மருத்துவமனையின் நான்கு சுவர்கள், படுக்கை விரிப்பு, திரைச் சீலை என என்னைச் சுற்றி இருந்த எல்லாமே வெள்ளை நிறத்தில் தென்பட, என் வாழ்வில் வண்ணங்கள் என்ற வசந்தம் இனி இல்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தியது. ஒரு கட்டத்தில் என்னை இங்கிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள் என கத்தத் தொடங்கினேன். என் அம்மாவும் உடன் பிறந்த என் சகோதரனும் இல்லாவிட்டால் நான் அப்போதே காணாமல் போயிருப்பேன்.

என் கை ஓரளவு இயங்க ஆரம்பித்தபோது, நான் ஓவியம் பயின்றிருப்பதால் அதைத் தொடரச் சொன்னார்கள். ஒரு பேப்பரைத் தூக்குவதற்குக்கூட என் கைகள் நடுங்கின. அம்மாவும் மருத்துவர்களும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். என் வாழ்க்கை வண்ணமயமாக மாற ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம். தூரிகையைத் தொட்டதுமே என் உடல் வலிகள் மட்டுமல்ல, மன வலிகளும் காணாமல் போயின. ஓர் அற்புதமான கலை, மிகவும் கசப்பான அனுபவங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் உருவாகிறது என்கிறார் முனிபா மஸாரி நினைவுகளில் மூழ்கி.

நான் வரைந்து குவித்த ஓவியங்களை கண்காட்சியில் வைப்பதாகச் சொன்னார் என் சகோதரர். எனக்காக அவர் அப்படிச் சொல்கிறார் என்றே அப்போது நினைத்தேன். ஆனால் இணையதளம் ஒன்றில் எனக்கு அப்போது வேலையும் கிடைக்க, நான் வரைந்து வைத்திருந்த 25 ஓவியங்களையும் அந்த இணையதளமே வாங்கிக்கொண்டது. ஒரே நேரத்தில் வேலை, எனது ஓவியங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் என நிகழ்ந்த தொடர் அதிசயங்கள் என்னை வாழ்க்கை மீது நம்பிக்கைகொள்ளச் செய்தன. நாளுக்கு நாள் என்னுடைய மன உறுதி அதிகரித்துக்கொண்டே வந்தது என்கிறார் புன்னகை மாறாமல்.

எனக்குள்ளே இருக்கும் தீ என்னைச் சுற்றி இருக்கும் தீயைவிடப் பிரகாசமாக இருப்பதால்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனும் முனிபாவின் பேச்சைக் கேட்டவர்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் பேசுவதற்கு அவரைத் தொடர்ந்து அழைக்கத் தொடங்கினர். ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வோர் இடத்திலும் உரையாற்றி முடிக்கும்போதும், பெண்கள் ஓடிவந்து முனிபாவைக் கட்டிப் பிடித்துக்கொள்கிறார்கள். அவரைப் பார்த்ததில் அவரின் பேச்சைக் கேட்டதில் தங்கள் பிரச்னைகள் காணாமல் போனதாகச் சொல்கிறார்கள். இன்று தான் பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியப் பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும், ரோல் மாடலாகவும் இருக்கிறேன் என்கிறார் அந்த புன்னகை மாறாமல்.

வசதிகள் உள்ளவர்களே குழந்தைகளைத் தத்தெடுக்கத் தயங்கும்போது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்ளும் முனிபா, இந்த உலகில் எத்தனையோ பிள்ளைகள் அடையாளம் இல்லாதவர்களாய், பெற்றோர் இல்லாமலே வளர்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளை என்னை அம்மாவென அழைக்கலாமே என நினைத்து, முறைப்படி பதிவு செய்து, பிறந்து இரண்டு நாட்களே ஆன பாகிஸ்தானிய ஆண் குழந்தை ஒன்றையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

உடல் உறுப்புகள் செயலிழப்பு, புறக்கணிப்புகள், தாய்மை அடைவதில் சிக்கல், விவாகரத்து என எல்லாவற்றையும் எதிர்கொண்ட நான் விபத்தைக் காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருந்தால் என் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறியிருக்கும். என் கதை எப்படி முடியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதில் ஒருமுறைகூட ‘நான் தோற்றுவிட்டேன்’ என்ற வாக்கியத்தைப் படிக்க முடியாது என்கிறார் இந்த இரும்புப் பெண்மணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது மகரந்தச் சேர்க்கை அல்ல!!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்!! (மருத்துவம்)