பதின்பருவ காதலால் வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாகலாம்! (கட்டுரை)

Read Time:4 Minute, 7 Second

பிஞ்சில் பழுத்துப் போகும் விடலைப் பயல்களின் காதலை கேலி செய்யும் விதமாக மறைந்த நடிகர் முத்துராமன் – கலைச்செல்வி ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘சூரியகாந்தி’ படத்தில் மனோரமா ஆச்சி தனது சொந்தக் குரலில் ஒரு தத்துவப் பாடலை பாடியிருப்பார்.

‘தெரியாதோ.., நோக்குத் தெரியாதோ.., சின்னப் பருவத்திலே காதலிப்பது, பைத்தியமா போகுமுன்னு தெரியாதோ.,,’ என்ற பல்லவியுடன் தொடங்கும் அந்தப் பாடல் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள பட்டித்தொட்டிகளில் எல்லாம் சக்கைப்போடு போட்டது.

அது என்னவோ, படத்தின் காட்சியமைப்புடன் தொடர்புடைய பாடல், கவிஞர் வாலியின் கற்பனையில் உதித்த சூழ்நிலைக்கேற்ற சினிமாப் பாட்டு மட்டும்தான் என பலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், அது வெறும் சினிமாக்காரன் கற்பனை அல்ல. பின்னாளில் இந்த கருத்து அறிவியல் ரீதியாகவும் ஒருகாலத்தில் நிச்சயமாக நிரூபணமாகும் என்று அவர்களில் பலர் எண்ணியிருக்க முடியாது.

பதின்பருவத்தில் காதல் வருவது இயற்கை என முன்னர் அடித்துச் சொன்ன அறிவியல் தற்போது அது வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பதினாறு வயதுடைய இருநூறு பேர் சுமார் ஒன்பது ஆண்டுகள் பங்குபெற்றனர். அவர்களது, காதல் விவகாரங்கள், பதற்றம், மனஅழுத்தம் மற்றும் சமூகத்திலிருந்து விலகியிருத்தல் பற்றிய கேள்விகளுக்கு பதில் தேடும் விதமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குடிப்பழக்கம் மற்றும் இதர போதைப் பழக்கங்கள், காதல் உறவால் அவர்களுக்கு ஏற்படும் இன்பம் மற்றும் அந்த உறவால் ஏற்படும் மனநிறைவு போன்றவற்றைப் பற்றியும் அறியும் விதமாக இந்த ஆய்வு அமைந்தது.

இதன்மூலம், பதின் பருவத்திலேயே காதலில் விழுபவர்களில் பலரும், அந்த வயதில் காதலிக்காதவர்களைக் காட்டிலும், அதிகப்படியாக குடிப்பது, சமூகத்திலிருந்து விலகியிருப்பது மற்றும் உணர்ச்சிவயமான சிக்கல்களில் கட்டுண்டுத் தவிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால், அந்த வயதில் காதல் சார்ந்த எண்ணங்களை புறக்கணித்துவிட்டால், பதின் பருவத்தினருக்கு மன அமைதியான வாழ்க்கை அமையும் வாய்ப்பு கிட்டும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதற்காக காதலே தவறு என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு காதல் உறவில் கிடைக்கும் மனநிறைவுதான், அவர்களது வாழ்வை சீராக்க உதவியுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிகிறது.

எனினும், அனைவருக்கும் இது ஒத்துப்போகாது. பதின்பருவத்தில் காதலிக்கவில்லை என்றால் என்ன? இன்னும் கொஞ்ச காலம் கழிந்த பின்னர், வாழ்க்கையின் மீது நேசமும், நம்பிக்கை வரும்வேளையில் தனக்கென பிறந்த துணையை அவர்களுடன் காதல் நிச்சயமாக சேர்த்து வைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)
Next post ‘ கொடைக்கானல் உருவான கதை!! (வீடியோ)