புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி? (கட்டுரை)

Read Time:14 Minute, 16 Second

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது.

2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம்.

கவலை தரும் இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் 1800-11-2356 என்ற தொலைபேசி உதவி எண்ணை எழுதுவதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் படி – இதை இன்றே விட்டுவிலக 1800-11-2356 என்ற எண்ணை அழையுங்கள் – என சிகரெட் அட்டைப்பெட்டியில் அச்சிடவேண்டும்.

புதிய சிகரெட் அட்டைப்பெட்டியில் இடம்பெற வேண்டிய புகைப்படங்களும் எச்சரிக்கைகளும் மாற்றப்பட வேண்டும். தொலைபேசி உதவி எண்ணுடன், ‘புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்’ அல்லது ‘புகையிலிருந்து கிடைப்பது வலிமிகுந்த மரணம்’ என்ற வாசகங்கள் சிகரெட் அட்டைப்பெட்டியில் எழுதப்பட வேண்டும்.

அரசின் புதிய உத்தரவின்படி, உதவி எண்களை சிகரெட் அட்டையில் வெளியிடுவதால் மட்டுமே புகைப்பிடிப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்களா? இது எந்த அளவு பயனளிக்கும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்கும் தேசிய மையத்தை (National Tobacco Addiction Services Center) நான் தொடர்பு கொண்டேன்.

2016ஆம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து செயல்படும் இந்த மையத்தில் உள்ள தொலைபேசி உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ‘புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட நினைக்கும் உங்கள் முடிவை வரவேற்கிறோம். எங்கள் ஆலோசகர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்’ என்று பதிவு செய்யப்பட்ட குரல் பதிலளித்தது

சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இறுதியில் நான்காவது முறை தொடர்பு கொண்டபோது, ஆலோசகரிடம் பேசமுடிந்தது. பேசியவர் பெண் என்பதால் ஆலோசகர் வியப்படைந்தார். அதற்கு காரணத்தையும் அவரே சொல்லி விட்டார். நம் நாட்டில் 3 சதவிகித பெண்களுக்கே புகைப்பழக்கம் இருப்பதாக சொன்னார்.

முதலில் புகைப்பிடிக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது, புகைபழக்கத்திற்கு அடிமையானது எப்படி, நாளொன்றுக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்பது போன்ற பல கேள்விகளை அவர் கேட்டார்.

இதுபோன்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களே, புகை அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வருவதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை முடிவு செய்யும்.

எத்தனை நாட்களுக்குள் புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறீர்கள் என்று ஆலோசகர் கேட்டார். இது புகைப்பழக்கத்தில் இருந்து வெளிவரவேண்டும் என்ற உறுதிக்காக கேட்கப்பட்ட கேள்வி.

இதன்பிறகு புகைப்பிடிக்கும் அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஆலோசனை தொடங்கியது.

காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகவேண்டும். அதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், “சிகரெட் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்” என்ற உங்கள் இலக்கை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

புகைப்பழக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்ற விருப்பம் உங்கள் உள் மனதில் ஏற்படவேண்டியது அவசியம். அத்துடன் கால வரையறையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் இச்சை அதிகமானால், அமைதியாக அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். தண்ணீர் குடிக்கவும், இப்படிச் செய்வதால் உங்கள் கவனமும், இலக்கும் ஒன்றிணையும்.

இஞ்சி மற்றும் நெல்லிக்காயை இடித்து காயவைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை ரசம் மற்றும் உப்பு சேர்த்து, அதை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். சிகரெட் புகைக்கவேண்டும் என்று தோன்றும்போது, இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை கலவையை சாப்பிடவும். இதைத்தவிர, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம் அல்லது அவற்றின் பழரசங்களை குடிக்கலாம். இது புகைப்பிடிக்கும் வேட்கையை அடக்கும்.

இதுபோன்ற ஆலோசனைகளை கொடுக்கும் ஆலோசகர், ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவார்.

தொலைபேசி உதவி எண்ணுக்கு தினசரி 40-45 அழைப்புகள் வருகின்றன. ஆலோசகரின் கருத்துப்படி, ஹெல்ப்லைன் எண்கள் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்படும் நாட்களில் தொலைபேசி அழைப்ப்புகள் அதிகம் வருகிறது.

காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை செயல்படும் இந்த ஹெல்ப்லைனில் பேசுவதற்கு 14 ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஹெல்ப்லைன் எண்ணில் கூறப்படும் ஆலோசனைகளை கேட்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது, ஆரம்ப நாட்களில், எரிச்சல், கவலை, படபடப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஒருவர் நாளொன்றுக்கு எத்தனை சிகரெட்டுகளை பயன்படுத்துகிறார், எவ்வளவு காலமாக பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறுவதாக கூறப்படுகிறது.

மேக்ஸ் இண்ஸ்டியூட் ஆஃப் கேன்சர் என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் ஹரித் சதுர்வேதியின் கருத்துப்படி, சிகரெட் அட்டையில் புதிய புகைப்படங்கள் மற்றும் எச்சரிக்கையால் இருவிதமான நன்மைகள் ஏற்படும்.

அவருடன் உரையாடியபோது, “இன்றைய சூழலில் புகைப்பிடிப்பவர்கள், அந்த பழக்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றே விரும்புகின்றனர். அரசின் அண்மை உத்தரவின்படி தொலைபேசி உதவி எண்ணும், புதிய எச்சரிக்கையும் சிகரெட் அட்டையில் அச்சிப்பட்டால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அதைத்தவிர, புகைப்பழக்கத்தை தொடங்குபவர்களுக்கும் இந்த அபாய எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

புகையிலை அட்டைகளில் அண்மையில் செய்யப்பட்ட அபாய எச்சரிக்கை மாறுதல்களினால் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசுதான் சிகரெட் அட்டைகளில் முதல்முறையாக உதவி எண்களை வெளியிட ஆணை பிறப்பித்தது. அதன் தாக்கம் 2009ஆம் ஆண்டு அறிக்கையில் வெளிப்பட்டது. அதுமட்டுமல்ல, புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புபவர்களின் எண்ணிக்கையும் முதல்முதலாக ஆவணப்படுத்தப்பட்டது.

சர்வதேச அளவில் 46 நாடுகள், புகையிலையை பொட்டலமிடும்போதே, உதவி தொலைபேசி எண்களை அச்சிடும் பழக்கத்தை பின்பற்றுகின்றன.

‘வாலண்ட்ரி ஹெல்த் அசோஷியேசன் ஆஃப் இண்டியா’ என்ற அமைப்பின் தலைவர் பாவ்னா முகோபாத்யாயா இவ்வாறு கூறுகிறார் – “2016-17ஆம் ஆண்டின் சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி, சிகரெட் புகைப்பவர்களில் 62%, பீடி புகைப்பவர்களில் 54 சதவிகிதத்தினர், அட்டைப்பெட்டிகளில் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் மற்றும் எச்சரிக்கைகளை பார்த்த்தால், மனம் மாறி, இந்த பழக்கத்தை கைவிட முடிவெடுத்துள்ளனர். இது உண்மையிலுமே மிகப்பெரிய விஷயம்.”

டாக்டர் சதுர்வேதியின் கருத்துப்படி, “ஒரு மாதம்வரை சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டால், மீண்டும் அந்த பழக்கத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவாகிறது. ஆனால் ஒருவர் புகைப்பிடிப்பதை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவிட்டால், மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு திரும்புவதில்லை.”

அரசின் உத்தரவு பற்றி பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

டெல்லியில் பட்ட மேற்படிப்பு பயிலும் சதஃப் கான் இவ்வாறு கூறுகிறார்: “சிகரெட் அட்டையில் இப்போதும் எச்சரிக்கை செய்தி இருக்கிறது. ஆனால் புகைப்பிடிப்பவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எனவே ஹெல்ப்லைன் எண் சிகரெட் அட்டையில் அச்சிடுவதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.”

மும்பையில் வசிக்கும் மல்கித் சிங் என்ன சொல்கிறார்? “குடும்பத்தினரின் அழுத்தம், நோய் பாதிப்பு இப்படி கட்டாய சூழ்நிலை ஏற்படாவிட்டால், யாரும் புகைப்பதை விட்டு விலக விரும்புவதில்லை. புகைபிடிக்க தொடங்குவதற்கு எப்படி வலுவான காரணங்கள் இல்லாமல் இருந்தாலும், அதை விட்டு விலக விரும்ப வேண்டுமானால் அதற்கு வலுவான காரணம் இருக்கவேண்டும்” என்று மல்கித் கூறுகிறார்.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படுகிறது என்பது, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக உள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

2014 ஆம் ஆண்டில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு சிகரெட் பாக்கெட்டுகளில், ‘புகைப்பிடிப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்’ என்ற எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் சிகரெட் தயாரிப்பாளர்கள் அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த வழங்கிய தீர்ப்பு அரசின் முடிவை உறுதி செய்தது.

புகைபிடிப்பதை தடுக்கும் விதமாக, பொது இடங்களில் புகைக்கத் தடை, குட்காவுக்குத் தடை, புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்குத் தடை, 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கத் தடை; பள்ளி, கல்லுாரிகள் அருகில் இந்த பொருட்களை விற்பனை செய்யக் கூடாது; என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிக்கு காலம்: மலைகள் வளர்கிறதா? மேற்கு தொடர்ச்சி மலையின் தோற்றம்…! (வீடியோ)
Next post ‘பெண்’… உனக்கு நீயே பாதுகாப்பு!! (மகளிர் பக்கம்)